அறியாத பெண்ணின் அஞ்சல் - Page 12
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 11053
அந்த மனதில், உங்களுடன் நெருங்கிப் பழகி உங்களுக்குக் கீழ்ப்படிந்த பெண்களில், நீங்கள் அதிகமாக இனிமையாகவும் காதல் உணர்வுடனும் நினைத்துப் பார்க்கப்படுபவர்களில் நான் இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய எப்போதும் உள்ள பிரார்த்தனைகளாக இருந்தன. ஆனால், எந்தச் சமயத்திலும்...எந்தவொரு நேரத்திலும்... என்னைப் பற்றி நீங்கள் சிறிதும் நினைத்துப் பார்த்ததில்லையே. அன்பிற்குரியவரே... அந்த மனதில், மறதியின் ஆழத்திற்குள் நான் ஆழ்ந்து போய் விட்டதுதானே நடந்தது!
என்னை மன்னிக்க வேண்டும். நான் குற்றம் கூறவோ புகார் கூறவோ இல்லை. சபிக்கப்பட்ட சில நிமிடங்களில் என்னுடைய வார்த்தைகள் கோபத்துடன் இருக்கும்பட்சம், நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். நான் இங்கு நம்முடைய மகனின் அசைவற்ற உடலுக்கு அருகில் அமர்ந்து கொண்டு எழுதும்போது, தெய்வத்தையே வாய்க்கு வந்தபடி திட்டிவிடக் கூடிய என்னுடைய மன நிலையை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது அல்லவா?
உங்களை எனக்குத் தெரியும்- எப்போது வேண்டுமானாலும் உதவி செய்யக் கூடிய உங்களின் குணத்தை. அறிமுகமே இல்லாதவர்கள் கேட்டாலும் முடியும்வரை நீங்கள் உதவி செய்வீர்கள். ஆனால், அந்த உதவிகளும் தாராளங்களும் உங்களுடைய மனதில் இருக்கும் குற்ற உணர்வால் உண்டானவைதானே! அதைத் தாண்டி இரக்கத்தாலோ உதவிசெய்வதால் உண்டாகக் கூடிய மன சந்தோஷத்தாலோ அல்லவே நீங்கள் யாருக்கும் உதவிசெய்வது? அன்று ஒருநாள் உங்களுக்கு அருகில் நான் வசித்தபோது, ஒருபிச்சைக்காரனுக்கு நீங்கள் பிச்சை போடுவதை நான் பார்த்திருக்கிறேன். கஞ்சத்தனம் இல்லாமல் பிச்சை போட்டீர்கள் என்றாலும், அந்தச் செயல் மிகவும்வேகமாக நடந்தது. பிச்சைக்காரன் முன்னால் நின்றிருந்ததை எவ்வளவு வேகமாக இல்லாமற் செய்ய முடியுமோ, அவ்வளவு அவசரம் அந்த வேகமான நடவடிக்கையில் வெளிப்பட்டது. அதனால் அந்த மனிதனை சரியாகப் பார்ப்பதற்குக் கூட நீங்கள் முயற்சிக்கவில்லை.
இந்தக் காரணங்களால்தான் நான் உங்களிடம் உதவி கேட்கத் தயாராக இல்லாமலிருந்தேன். என்னுடைய மகன் உங்களுக்குச் சொந்தமானவன் என்பதில் சந்தேகம் எஞ்சி நின்றால்கூட, சில நேரங்களில் நீங்கள் எனக்கு உதவிசெய்தாலும் செய்யலாம். ஆனால், அது அன்பு கொண்டதாகவோ மன்னிப்பு கேட்டோ இருக்காது. அதற்கு மாறாக, ஒரு பிரச்சினையில் சிக்கிக் கொள்ளாமல் தப்பிக்கும் ஆர்வத்துடன் அதைச் செய்வீர்கள். நான் உங்களின் குழந்தையைக் கர்ப்பம் தரித்திருக்கிறேன் என்ற உண்மையை நீங்கள் அறிந்திருந்தால், அந்தகர்ப்பத்தை அழித்து விடும்படி நீங்கள் கூறியிருப்பீர்கள் என்ற விஷயம் எனக்குத் தெரியும். நான் அதற்கு மிகவும் பயப்படவும் செய்தேன். காரணம்-நீங்கள் எதைக் கேட்டாலும் நான் அதற்கு சம்மதிக்கவே செய்வேன். ஆனால்,எனக்கு உங்களிடமிருந்து கிடைத்த என்னுடைய சொத்து- என் மகன். அவன் என்னுடையஅனைத்துமாக இருந்தான். எனக்கு அவன் யாரென்றால், என்னுடன் சேர்ந்து நிற்காதஉங்களுக்கு பதிலாக- உங்களின் அதே முகச் சாயலில் நீங்களே எனக்குள் மறுபிறவி எடுத்திருக்கிறீர்கள். அதனால் அதே நிலையில் ஏற்றுக் கொண்டு, எனக்குள் பத்திரமாகக் காப்பாற்றி வளர்த்ததில் நான் வெற்றி பெற்றேன். அந்த விஷயத்தில் நான் ஆனந்தம் அடையவும் செய்தேன்.
என்னுடன் வந்து சேர்ந்த நீங்கள்... உங்களால் நான் கர்ப்பிணியாக ஆன சந்தோஷம், என்னை காலிலிருந்து தலைவரை உணர்ச்சி வசப்படச் செய்தபோதும் நான்அந்த ரகசியத்தை உங்களிடமிருந்து மறைத்துக் காப்பாற்றி வைத்ததற்குக் காரணம் கூட அதுதான்.
உங்களை முழுமையாக எனக்குச் சொந்தமாக ஆக்கிவிட்டாலும், என்னுடைய அந்த நாட்கள் சந்தோஷத்தில் திளைத்துக் கொண்டிருந்த வையாக இருந்தன என்று நினைத்து விடாதீர்கள். காத்திருந்த அந்த மாதங்களில், குறிப்பாக இறுதி மாதங்களில் எனக்குள் குழப்பங்களும் பதைபதைப்பும் அளவுக்கும் அதிகமாகஇருந்தன. என்னுடைய வயிறு, கர்ப்ப ரகசியத்தை வெளியே காட்டக் கூடிய நிலை வந்ததிலிருந்து நான் வேலைக்குச் செல்வதை நிறுத்திக் கொள்ளவேண்டியதிருந்தது. காரணம்- அங்கிருந்த சித்தப்பாவின் உறவினர்கள் விவரத்தை வீட்டிற்குக் கூறி விடுவார்கள் என்று எனக்கு பயமாக இருந்தது. வேலையும் கூலியும் இல்லாமலிருந்த அந்த காலத்தில் நான் என்னுடைய தாயிடமிருந்துகூடஒரு பைசா உதவியை எதிர்பார்க்கவில்லை. என்னுடைய நகைகளை விற்று அந்தவிடுமுறைக் காலம் முதல் பிரசவம்வரை அதை செலவுக்கு வைத்துக் கொண்டேன்.
பொதுவாகவே கவலைகள் நிறைந்த அந்தக் காலத்தின் இறுதிப் பகுதி என்னுடைய தலைவிதியால் மேலும் துயரம் நிறைந்ததாக ஆனது. பிரசவத்திற்கு ஒருவாரத்திற்கு முன்பே, எனக்கு வீட்டு வேலைகளில் உதவுவதற்காகவும் துணிகளைச் சலவை செய்வதற்கும் இருந்த பெண், என் கையில் எஞ்சியிருந்த பணத்தைச் சிறிது கூட மீதம் வைக்காமல் திருடிக் கொண்டு ஓடிவிட்டாள். உதவிக்கு யாருமில்லாமல் பொது மருத்துவமனையில் அழுக்கடைந்த பொது வார்டில், கெட்ட நாற்றங்களுக்கும் ஆதரவற்ற சில ஏழைகளுக்கும் நடுவில் நம்முடைய மகன் பிறந்துவிழுந்தான். அந்த மருத்துவமனை நாட்கள் கவலைகளும் நரக வேதனைகளும் நிறைந்தவையாக இருந்தன. நெருங்கி நிறைந்திருந்த ஆட்களும் வெறுப்பை உண்டாக்கக் கூடிய சூழலுமாக அந்த இடம் இருந்தது. மனிதர்களை ஒருவரையொருவர் இணைத்தவை ஒரே மாதிரி இருந்த இல்லாமைகளும் துயரங்களும்தான். கெட்ட இரத்தம், க்ளோரோஃபார்ம் ஆகியவற்றின் வாசனை நிறைந்து நின்ற சூழ்நிலையில், அடக்கிவைத்திருந்த வேதனைகளுக்கு நடுவில், பெரும்பாலும் கூப்பாடுகளால் அந்த இடம் நிறைந்திருந்தது. பெரும்பாலானவர்கள் தனிமையில் இருப்பவர்களாகவும் அதே மாதிரி யாருடனும் பழகாதவர்களாகவும் இருந்தார்கள். இன்னும் சொல்லப்போனால், அந்த மருத்துவமனையின் பதிவேட்டில் பெயர்களை நீக்கி விட்டுப்பார்த்தால் பெரும்பாலானவர்கள் சொந்தமென்று கூற ஒரு தனித்துவம்கூடஇல்லாதவர்களாக இருந்தார்கள். டாக்டர்களை எடுத்துக் கொண்டால், ஒவ்வொருபடுக்கையிலும் இருந்த நோயாளிகளும், அவர்களுடைய சோதனைப் பாடங்களுக்கானவெறும் மாமிசத் துண்டுகளாக இருந்தார்கள் என்று தோன்றும்.
என்னுடைய கவலைகளையும் துயரங்களையும் வேதனை களையும் பற்றிக் கூறியதுஉங்களுக்கு வெறுப்பை உண்டாக்கினால், என்னை மன்னிக்க வேண்டும். நீண்டபதினோரு வருடங்கள் மௌனமாக இருந்த நான் இனியும் எதையும் கூறப்போவதில்லை. யாருமற்ற அனாதையான நான் என்றென்றைக்கும் மௌனியாக இருப்பதற்கு இனி அதிகநேரம் ஆகாது. எனினும், இப்போது கையை விட்டுப் போய்விட்ட நம்முடைய இந்த தங்க மகனைப் பெறுவதற்கு வாழ்க்கையில் நான் கொடுத்த விலை அதிகம். மீண்டுமொருமுறை நான் கூறுகிறேன்.
என் அருமையான குழந்தையின் விளையாட்டுச் சிரிப்பும் கொஞ்சலும் அந்த துயரம் நிறைந்த காலம் பற்றிய நினைவுகளை என்னிடமிருந்து விரட்டியடித்தன. ஆனால், அவன் என்னுடைய வாழ்க்கையிலிருந்தும், இந்த உலகத்திலிருந்தும் விடைபெற்றபோது அந்த கடந்த காலத்தின் வலியும் வேதனையும் என்னிடம் திரும்பவும்வந்து சேர்ந்திருக்கின்றன.
எந்தவித காரணத்தைக் கொண்டும் நான் என்னுடைய அன்பிற்குரியவரான உங்களை எதிர்க்கவோ குற்றம் செய்தவன் என்று கூறவோ இல்லை. என்னை இப்படிப் படைத்து,தாங்க முடியாத அளவிற்கு கவலைகளையும் வேதனைகளையும் என்மீது கொண்டு வந்து சுமத்திய தெய்வத்தின் மீதுதான் எனக்கு எதிர்ப்பு. சொல்லப் போனால் உங்கள் மீது சிறிதளவுகூட எனக்கு கோபம் உண்டாகவில்லை. பொறுத்துக் கொள்ளமுடியாத பிரசவ வலியின் உச்சத்தில்கூட காதலின் முதல் இறுதி நிலைகளின் இனிமையை அனுபவிக்க சந்தர்ப்பம் அளித்த உங்கள்மீது அன்பு மட்டுமே இருந்தது. இப்போதும் அன்பு மட்டுமே இருக்கிறது, என் உள்ளம் முழுவதும்.
உங்களைச் சந்தித்து, உங்களுடன் சேர்ந்து வாழ்ந்து, வாழ்க்கையில் கிடைத்தவசதிகளைத் திரும்பவும் பெற்று, அந்த வாழ்க்கையிலும் இப்படித்தான் நடக்கும்என்ற புரிதல் இருந்தாலும், நான் அதற்கு சந்தோஷத்துடன் தயாராகவே இருப்பேன்-எவ்வளவு முறைகள் வேண்டுமானாலும். அவ்வளவுதான். அன்பிற்குரியவரே, அந்தஅளவிற்கு நான் உங்களைக் காதலிக்கிறேன்.
பிரசவத்திற்குப் பிறகு நான் உங்களைப் பார்க்காமல், அதற்காக முயற்சிக்காமல் வாழ்ந்தேன். பார்க்க வேண்டும் என்ற அடங்காத மோகத்தின் அளவு சற்று குறைந்துவிட்டிருந்தது. முன்பைப் போல உணர்ச்சி வசப்படாமலேயே நான் உங்களைக் காதலித்தேன். அப்படித்தான் நான் அதைப் புரிந்து கொண்டிருந்தேன்.
அப்போது உங்கள்மீது கொண்டிருந்த காதல் வேதனையாகத் தோன்றவில்லை. ஆறுதலாக இருப்பதற்கு என்றால், என்னுடன் உங்களுடைய குழந்தை இருந்தான் அல்லவா? தந்தை, மகன் என்று பிரிக்க நான் விருப்பப்படவில்லை. அதனால்தான் உங்களுக்கு கீழ்ப் படிவதற்கும் வசீகரிக்கப்படுவதற்கும் எனக்குத் தயக்கமே தோன்ற வில்லை.
நம்முடைய மகன் வாழ வேண்டுமென்றால் நான் இல்லாமல் முடியாதே! நீங்களோ சுதந்திரமானவராகவும் சந்தோஷத்தில் திளைத்திருப்பவராகவும் இருந்தீர்கள். நான் அவனைக் கொஞ்சியும் செல்லம் கொடுத்தும் வாழ்ந்தேன். அவனுக்காக வாழவேண்டிய வாழ்க்கை. அப்போது உங்களுக்காக எனக்குள் இருந்த அடங்காததாகத்திலிருந்து நான் விடுபட்டு விட்டதைப் போல எனக்குத் தோன்றியது. உங்களை எனக்குள்ளேயே மறுபிறவி எடுக்கச் செய்ததைப்போல எனக்கு அவன் பிறந்ததைத்தொடர்ந்து, நடக்க இருந்த பல அழிவுகளில் இருந்தும் எனக்கு விடுதலை கிடைத்துவிட்டதைப்போல நான் உணர்ந்தேன். பிறகு அபூர்வமாக மட்டுமே நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த வீட்டைப் பற்றியும் உங்களைப் பற்றியும் என்னுடைய சிந்தனைகள் இருந்திருக்கின்றன.
எனினும், என்றென்றைக்கும் என்னுடைய அன்பிற்குரியவரான உங்களுடைய ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் மறக்காமல் ஒரு கொத்து ரோஜா மலர்களை உங்களுக்கு அனுப்பிவைப்பேன். அன்று நம்முடைய அந்தக் காதல் சங்கமத்தின் நினைவாக நீங்கள் எனக்குத் தந்த வெள்ளை நிற ரோஜா மலர்களைப் போல. ஆனால், கடந்த பதினோருவருடங்களாக ஒரு பிறந்த நாளைக்கூட விடாமல் உங்களுக்கு இந்தப் பரிசைஅனுப்பிக் கொண்டிருப்பவள் யார் என்று எந்தச் சமயத்திலாவது விசாரித்திருக்கிறீர்களா? சிந்தித்திருக்கிறீர்களா? அது எனக்குத் தெரியாது. அந்த விஷயத்தைப் பற்றி நினைத்து கலங்காமலேதான் அந்த மலர்களை ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் உங்களுக்கு அனுப்பி வைத்துக் கொண்டேயிருந்தேன்.அது எனக்கு மகிழ்ச்சியை அளித்த விஷயமாக இருந்தது.
நம்முடைய மகன் இன்று இங்கே அசைவே இல்லாமல் கிடக்கிறான். நம்முடைய இந்த தங்கக் குழந்தையை உங்களிடமிருந்து மறைத்து வைத்ததற்காக இப்போது நான் என்னையே சபித்துக் கொள்கிறேன்.
நம்முடைய பிஞ்சுக் குழந்தை... அவன் இப்போது இதோ எனக்கு அருகில் சலனமற்றுக் கிடக்கிறான். இங்கு படுத்திருக்கும்போதும் உயிர் இருப்பதைப்போல....நீங்கள் அவனை ஒருமுறைகூட பார்த்தது இல்லையே! என்ன ஒரு செல்லப் பிள்ளைதெரியுமா? நம்முடைய மகனைப் பார்த்தால், யாருக்கும் சற்று கொஞ்ச வேண்டும்என்று தோன்றும். அவனிடம் உங்களைத்தான் பிரதி பிம்பமாக நான் பார்த்தேன்.அதே சிரிப்பு, அதே குரல்... நீங்களே ஒரு குழந்தையாக வடிவமெடுத்ததைப் போல,அவனுடைய ஒவ்வொரு சிறிய வெளிப்பாடுகளிலும்கூட அந்த ஒற்றுமை துடித்துநின்றது.
நீங்கள் வாழ்க்கையைச் சந்திக்கும் லாவகத்துடன் அவன் விளையாட்டுகளில் ஈடுபட்டான். விளையாட்டு முடிந்தால், உங்களைப் போல அவனும் புத்தகங்களை வாசிப்பான். உங்களுடைய தனித்துவமான அந்த குணம் இருக்கிறதே, விளையாட்டுஎது- காரியம் எது என்று வித்தியாசம் பார்க்கத் தெரியாத குணம்... அதேகுணத்தை நம்முடைய மகனிடமும் நான் பார்த்திருக்கிறேன். உங்களின் பலகுணங்கள் அவனிடம் இருப்பதைப் பார்த்தபோது, எனக்கு அவன் மீது இருக்கும்அன்பின் அளவு பல மடங்குகள் அதிகமாகிவிட்டது என்றுகூட கூறலாம். படிப்பிலும்அவன் முதல் ஆளாக இருந்தான். அவனுடைய அழகான கையெழுத்தைப் போலவோ சுத்தமாக வைக்கப்பட்டிருக்கும் நோட்டுப் புத்தகங்களோ அவனுடைய நண்பர்களில் யாரிடமும்இல்லை.
நாங்கள் கோடை காலங்களில் கடற்கரையில் இருக்கும் ஓய்வு மையங்களிலும் குளிர்காலங்களில் ஸெம்மரிங்கிலும் தங்கினோம். அங்கு இருக்கும்போது நம்முடையமகனையும் அவனுடைய விளையாட்டுக்களையும் பார்ப்பவர்கள், குறிப்பாகக் கூறவேண்டுமானால் பெண்கள், ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டு நிற்பார்கள். பெரும்பாலானவர்கள் அவனை இறுக அணைத்துக் கொண்டு கொஞ்சுவார்கள். அந்த அளவிற்கு அவனிடம் சுறுசுறுப்பும் அழகும் இருந்தன. எனினும், அவன் உங்களைப்போல ஒரு அமைதியான குணம் கொண்டவனாகவே இருந்தான்.
சென்ற வருடம்தான் மேற்கொண்டு படிப்பதற்காக போர்டிங் பள்ளிக் கூடத்தில்போய் அவன் தங்கினான். அங்கு அவன் அரச குடும்பத்தினர் அணியக்கூடிய ஆடைகளை ஞாபகப்படுத்தக் கூடிய விதத்தில் இருந்த சீருடைகளை அணிந்திருப்பான்.அவனுக்குத் தேவையான அனைத்தையும், ஒரு செல்வந்தரின் மகனுக்குகிடைப்பதைப்போல கிடைக்கும்படி செய்திருந்தேன். அவனுக்கு நான் எப்படி இந்தஅளவிற்கு எல்லாவற்றையும் வாங்கிக் கொடுக்க முடிந்தது என்று நீங்கள்இப்போது சிந்திக்கலாம். நான் அதைக் கூறும்போது, உயிர் நாயகனே... என்னைநீங்கள் எந்தச் சமயத்திலும் வெறுக்கக் கூடாது... எனக்கு வேறு வழிகள்எதுவுமே தெரியவில்லை. அவனுக்காக... நம்முடைய மகனுக்காக நான் என்னையேவிற்று விட்டேன். எனினும், அன்பிற்குரியவரே... நான் எந்தச் சமயத்திலும் ஒரு தெரு விலை மாதுவாக இருந்ததில்லை. வசதி படைத்த காம வயப்பட்டமனிதர்களுக்கு நான் என்னுடைய உடலை மட்டும் கொடுத்தேன். முதலில் நான் அவர்களைத் தேடிச் சென்றேன். பிறகு, அவர்கள் என்னைத் தேடி வந்தார்கள்.