அறியாத பெண்ணின் அஞ்சல் - Page 13
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 11053
நீங்கள் என்றைக்காவது அப்படி நினைத்தீர்களா என்று எனக்குத்தெரியாவிட்டாலும், மற்றவர்களின் கண்களில் நான் ஒரு அழகியாக இருந்தேன். என்காதலர்களாக வந்தவர்கள் என்னை கண்ணை மூடிக்கொண்டு காதலிக்கவும். வழிபடவும் செய்தார்கள். அவர் களுக்கு என்மீது உணர்ச்சி வசப்பட்ட காதல் இருந்தது.
நான் என்னுடைய இந்தச் செய்திகளை வெளிப்படையாகக் கூறியவுடன், உங்களுக்கு என் மீது இப்போது என்ன தோன்றியது? நீங்கள் எந்தச் சமயத்திலும் என்னைவெறுக்க மாட்டீர்கள் என்றும், அதற்கு மாறாக ஏற்றுக் கொள்வீர்கள் என்றும்,என்னுடைய நிலைமைகளைப் புரிந்து கொள்வீர்கள் என்றும் நான் நம்புகிறேன்.நான் அப்படியெல்லாம் நடந்து கொண்டதற்குக் காரணம்- உங்களுடைய, நம்முடைய மகனுக்காக மட்டும்தானே!
நான் அப்படியெல்லாம் நடக்காமல் எப்படி இருக்க முடியும்? ஒரு நாள் அவனைப்பெற்றெடுப்பதற்காக நுழைந்த மருத்துவமனைக்குள் வறுமை மிகவும் மோசமான வடிவத்தில் அதன் அனைத்துபயங்கரத்தனத்துடனும் எனக்கு முன்னால் வந்து நின்றது. அதே நிலையில்தொடர்ந்தால் நம்முடைய மகன், நல்ல உணவு, வசதியான வீடு, ஆடைகள், கல்வி-இவற்றில் எதுவுமே கிடைக்காத வனாக ஆகிவிடுவான். அவனுடைய இளமையான உடலும்பிஞ்சு மனமும் நொறுங்கிப் போவதற்கும் சோர்வடைந்து போவதற்கும் வறுமைகாரணமாகிவிடும். உங்களுடைய மகன் அவன். பணத்தால் பெறக்கூடிய சுகங்களும்வசதிகளும் அவனுக்குக் கிடைத்தாக வேண்டும். உங்களைப்போல ஒரு பெரிய மனிதனாகவர வேண்டிய வன் அவன். என்னுடைய இந்த சிந்தனைகளுக்கு முன்னால் ஒழுக்கம்பற்றிய சிந்தனைகளும் மரியாதை உணர்வுகளும் எனக்கு அர்த்தமற்றவையாகத் தோன்றின.
நான், என்னுடைய உடலையும் மனதையும் சமர்ப்பணம் செய்த உங்களுக்கு மட்டுமே சொந்தமானவளாக இருந்தேன். ஆனால், நீங்கள் எந்தச் சமயத்திலும் அன்பு செலுத்தியிராத என் உடல் எப்படி ஆனால் என்ன? எனினும், என்னுடைய உடலைக்கட்டி யணைத்தவர்களின் கைகளுக்கோ முத்தங்களுக்கோ அவர்களுடைய அறிவு கெட்டகாதல்களுக்கோ எதனாலும் என் இதயத்தையோ மனதையோ சிறிது கூட தொட்டுப் பார்க்க முடியவில்லை. என்னுடைய அனுபவங்கள், அவர்களின் நிறைவேறாத காதல் செயல்களால் என்னை அவர்கள்மீது இரக்கம் கொண்டவளாக ஆக்கிய போதுகூட, மனதால் நான் எப்போதும் உங்களுக்கு மட்டுமே சொந்தமானவளாகவே இருந்தேன்.
என் காதலர்களாக வந்தவர்கள் எல்லாரும் என்னிடம் மிகுந்த அன்புடனும்ஆதரவுடனும் நடந்து கொண்டார்கள். அது மட்டு மல்ல- என்னுடைய எப்படிப்பட்டதேவைகளையும் நிறைவேற்றித் தருவதற்கு அவர்கள் எப்போதும் தயாராக இருந்தார்கள். அவர்கள் எனக்கு பரிசுப் பொருட்களை அள்ளித் தந்தார்கள்.
டைராலில் உள்ள வசதியான குடும்பத்தில் பிறந்த ஒரு மனிதரும் என்னுடைய காதலராக இருந்தார். அவருடைய மனைவி இறந்து போய் விட்டாள். அவருக்கு என்மீது ஆழமான காதல் இருந்தது. நம்முடைய மகனை தன் சொந்த மகனைப்போல அவர் பாசம்செலுத்தினார். உயர்ந்த குலத்தையும் ஜாதியையும் மட்டுமே சேர்ந்தவர்கள்படிக்கக் கூடிய பள்ளிக்கூடத்தில் அவனுக்குப் படிப்பதற்கு ஏற்பாடு செய்தவர்அவர்தான். அதற்காக எல்லாவிதமான செல்வாக்குகளையும் அவர் பயன்படுத்தினார்.அவர் என்னிடம் பல தடவைகள் திருமண விஷயமாகப் பேசினார். ஆனால், எந்தச்சமயத்திலும் நான் சம்மதிக்கவில்லை. நான் அவரைத் திருமணம் செய்திருந்தால்,செல்வங்களுக்குத் தலைவியாக இருக்கும் ஒரு வசதி படைத்த பெண்ணைப்போல நான்வாழ்ந்திருப்பேன். என் மகனுக்கு அன்பையும் பாசத்தையும் அள்ளித் தரக்கூடியஒரு தந்தையும் கிடைத்திருப்பார். ஆனால், நான் அதை மறுத்துவிட்டேன். அன்றுநான் அதை ஏற்றுக் கொண்டிருந்தால், பாதுகாப்பான ஒரு வாழ்க்கை எனக்கும் என்மகனுக்கும் கிடைத்திருக்கும். இப்போது நான் மகனை நான் இழந்திருக்கவேண்டியதில்லை.
நான் ஏன் அதை வேண்டாமென்று கூறினேன் என்று உங்களுக்குத் தெரியுமா? இந்தஇறுதி நிமிடத்தில் நான் அதை உங்களிடம் கூறுகிறேன். நான் எந்தச்சமயத்திலும் யாருக்கும் கீழே வாழ விரும்பியதில்லை. காரணம்- நான் என்னுடைய சுதந்திரத்தைக் காப்பாற்ற வேண்டியதிருந்தது. ஏனென்றால், உங்களை நினைத்துதான். என் மனதில் உங்களுடன் சம்பந்தப்பட்ட பழைய காலங்கள் மீண்டும் ஓடிக் கொண்டேயிருந்தன. அப்படிப்பட்ட நேரங்களில் நான் கனவு கண்டேன்.காத்திருந்தேன்- என்றாவது ஒரு நாள் நீங்கள் என்னைத் திரும்ப அழைப்பீர்கள்என்று. அது சிறிது நேரத்திற்கே என்றாலும்கூட, எந்தவித தடையும் இல்லாமல்உங்களுக்கு அருகில் ஓடி வருவதற்கு அன்று நான் என்னுடைய சுதந்திரத்தைப்பாதுகாத்து வைத்திருக்க வேண்டியதிருந்தது. அதற்காக நான் என்னுடையவாழ்க்கையை ஒரு பிணைப்பிலும் சிக்க வைத்துக் கொள்ளாமல் கவனமாக இருந்ததுடன்வேறு எதுவுமே தேவையில்லை என்பதிலும் உறுதியாக இருந்தேன்.
உண்மையாக சொல்லப் போனால், எனக்குள் பெண்மைத்தனம் என்ற ஒன்றுதோன்றியதிலிருந்து என் வாழ்க்கை முழுவதும் ஒரே ஒரு காத்திருப்புதானே!உங்களுக்கான நீண்ட காத்திருப்பு!
நாடக அரங்கங்கள், இசை அரங்கங்கள் ஆகியவற்றைப் போன்ற ஏராளமான இடங்களில்நான் உங்களைப் பல நேரங்களிலும் பார்த்திருக்கிறேன். பார்க்கும் நேரங்களில் என்னுடைய இதயம் வேகமாகத் துடித்துக் கொண்டிருந்தது. வீண்... வீண்.. என்றுதெரிந்து கொண்டே, நீங்கள் என்னை அடையாளம் தெரிந்து கொள்வீர்கள் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால், எந்தவொரு நேரத்திலும் அது அப்படி நடக்கவில்லை.முற்றிலும் யாரென்று தெரியாதவர் களுக்கு மத்தியில் நடந்து செல்வதைப் போல நீங்கள் கடந்து செல்வீர்கள். அப்படியே இல்லையென்றாலும், நீங்கள் எப்படி என்னை அடையாளம் தெரிந்து கொள்ள முடியும்? நான் தோற்றத் தில் எவ்வளவோமாறிப் போய் விட்டிருந்தேன். முன்பு சுற்றிலும் வட்டமிட்டுப் பறந்து கொண்டிருந்த ஆர்வம் நிறைந்த கண்களுடனும், பயம் கலந்த கூச்சத்துடனும் நின்றிருந்த அந்தச் சிறுமியாகவோ, பிறகு உங்களுக்காக கன்னித் தன்மையைச் சமர்ப்பணம் செய்த வெட்கப்படக் கூடிய இளம் பெண்ணாகவோ நான் அப்போது இல்லையே! வழிபாடு செய்யக் கூடியவர்களால் வழிபடப்பட்டு, நன்கு ஆடைகள் அணிந்து காட்சியளித்த ஒரு இளம் பெண்ணாயிற்றே நான்.
சில நேரங்களில் என்னுடன் உங்களுக்கு நன்கு தெரிந்தவர்களும் இருப்பார்கள். நான் உங்களையும், நீங்கள் அவர்களையும் வணங்குவதும், பதில் வணக்கம்பெறுவதும் நடக்கும். அபூர்வமாக பேசினோம் என்பதும் நடக்கும். அப்போதுஅவர்களுடன் இருக்கக் கூடிய என்னை நீங்கள் சாதாரணமாகப் பார்ப்பதுண்டு.ஆனால், அந்தப் பார்வைகள் எதிலும் என்னை யாரென்று தெரிந்து கொண்டதற்கான ஒருசிறு சலனம்கூட இருந்ததை நான் பார்த்ததே இல்லை. அப்படி நடக்கவே நடக்காதுஎன்று தெரிந்து கொண்டே நான் வெறுமனே ஓரக் கண்களால் அந்த முகத்தையேபார்ப்பேன். ஆனால், அந்தக் கண்களில் சிறிதும் யாரென்று தெரியாது என்றவெளிப்பாடு இருக்கும்.
ஒரு நாள் மிகவும் கடுமையான வேதனையை உண்டாக்கிய ஒரு சம்பவம் நடந்தது. ஆப்பரா ஹாலில் அன்றைய என்னுடைய காதலருடன் நான் அமர்ந்திருந்தேன். மிகவும்அருகில் இருந்த நாற்காலியில் அறிமுகமில்லாத மனிதரைப் போல நீங்கள் உட்கார்ந்திருந்தீர்கள். அப்போது என் மனம் துடிக்க ஆரம்பித்தது. ஆப்பராஹாலின் விளக்குகள் அணைந்தபோது, முகத்தைப் பார்க்க முடியாத இருட்டில் நான் உங்களுடைய மூச்சு சத்தத்தைக் கேட்டேன்- அன்று ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்த இரவு நேரத்தில் நடந்ததைப்போல எனக்கு முழுமையாக ஒரு இக்கட்டான சூழ்நிலையாக அது இருந்தது. அமர்ந்திருந்த இடத்தில், என் கையை வைத்திருந்த இடத்திற்கு மிகவும் அருகில்உங்களுடைய, என்னை இறுக அணைக்கவும் தழுவவும் செய்த அந்த அழகான கை இருந்தது. என்னுடைய கட்டுப்பாட்டை இழந்துவிட்டதைப் போல, அந்தக் கையில் சற்றுஅழுத்தி முத்தமிட என் மனம் துடித்தது. நான் என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள படாதபாடுபட்டேன். அதற்குப் பிறகும் எனக்குள் உங்கள் மீது இருந்தஅளவற்ற மோகங்கள் உணர்ச்சிகளுடன் வந்து மோதுவதை அறிந்தபோது, தாங்கிக்கொள்ள முடியாமல், ஆப்பராவின் முதல் காட்சி முடிந்தவுடன் நான் வெளியேறிவிட்டேன். என்றென்றைக்கும் என்னுடைய அன்பிற்குரியவரான நீங்கள் எனக்கு அருகில் ஒரு அறிமுகமில்லாத மனிதரைப்போல உட்கார்ந்திருக்கும் அந்த மோசமான சூழ்நிலையில் அங்கு உட்கார்ந்திருப்பதை என்னால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை.
அந்த வகையில் இறுதியில் ஒருநாள் என்னுடைய காத்திருத்தலுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் பலன் உண்டானதைப்போல அந்த இனிய நிமிடம் வந்து சேர்ந்தது. அன்றும் என்னை நீங்கள் யார் என்று அடையாளம் கண்டுபிடிக்கவில்லையென்றாலும்... அன்று மட்டுமில்லையே! வாழ்க்கையின் எந்தவொரு நேரத்திலும் உங்களுக்காக மட்டுமே வாழ்ந்த என்னை நீங்கள் யார் என்று தெரிந்து கொள்ளவே இல்லையே!
உங்களுக்குச் சொந்தமானது எதுவும் எனக்கு விருப்பமானதுதான். உங்களுடன் சேர்ந்து இருக்கும் நிமிடங்கள்கூட அளவில் பெரியவைதான். அப்படிப்பட்ட ஒருவிலை மதிப்புள்ள நிமிடம் என் இளம் வயதில் அந்த சங்கமத்திற்குப் பிறகு உண்டானது. அது நீண்ட காலத்திற்கு முன்பு நடந்த ஒன்றல்ல. உங்களுடைய கடந்துசென்ற பிறந்த நாளன்றுதான். ஒரு வருடத்திற்கு முன்புதான். சாதாரணமாக இருப்பதைவிட என் மனமும் சிந்தனைகளும் உங்களுடன் கலக்கக் கூடிய ஒருசந்தர்ப்பமாக அது இருந்தது. உங்களுடைய எல்லா பிறந்த நாட்களும் எனக்குத் திருவிழாக்களாக இருந்தன. அன்றும் எப்போதும்போல உங்களுக்கான பிறந்தநாள் பரிசாக வெள்ளை நிற ரோஜா மலர்களை வாங்கி அனுப்பினேன். சாயங்காலம் நம்முடைய மகனுடன் ஒரு சிறிய உல்லாசப் பயணத்திற்கும், இரவில் நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒரு நாடகம் பார்க்கவும் சென்றோம். என்ன விஷயம் என்று கூறாவிட்டாலும், வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நாள் என்று நான் அவனிடம்சொன்னேன்.
அந்தக் காலத்தில் நான் ப்ரன்னனில் மிகவும் வசதி படைத்த ஒரு இளைஞருடன் சேர்ந்து வாழ்ந்தேன். அவர் என்னுடன் இரண்டு வருடகாலம் சேர்ந்து வாழ்ந்தார். என்மீது கொண்ட ஆழமான காதல் காரணமாக, மற்ற பலரையும்போல,தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி அவர் என்னை வற்புறுத்திக்கொண்டிருந்தார். ஆனால், எப்போதும் செய்வதைப் போலவே அவருடைய வேண்டுகோளையும் நான் மறுத்து விட்டேன். எனினும், என்மீதும் நம்முடைய மகன் மீதும்அவர் காட்டிய அன்பும் ஆதரவுகளும் என்னுடைய பரிதாபத்திற்கு அவரைப் பாத்திரமாக ஆக்கின.
அன்று உங்களுடைய அந்த பிறந்த நாளன்று ஒரு இசை நிகழ்ச்சியைக் கேட்பதற்காகப் போயிருந்தோம். அங்கு எங்களின் சில நண்பர்களும் இருந்தார்கள். நாங்கள் எல்லாரும் சேர்ந்து ஒன்றாக உணவு சாப்பிட்டுக் கொண்டே உரையாடிக் கொண்டும் நேரத்தைச் செலவிட்டுக் கொண்டும் இருந்தபோது, நான் ஒரு கருத்தைச் சொன்னேன்:
“நாம் எல்லாரும் சேர்ந்து நடன அரங்கத்திற்குச் செல்வோம்!”
அது ஒரு கருத்தாக இல்லை. விருப்பமாக இருந்தது. சாதாரணமாகவே எனக்கு நடனஅரங்குகள் பிடிக்காது என்பது மட்டுமல்ல- தாங்க முடியாத மன அமைதிக் குறைவு அங்கு உண்டாகும். காரணம்- மூக்கு நுனி வரை மது அருந்திக் கொண்டும் புகைபிடித்து இழுத்துக் கொண்டும் மனிதர்கள் அந்த மாதிரியான இடங்களில் சுயஉணர்வே இல்லாமல்தான் ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் இருப்பார்கள்.போதையின் உச்சத்தை வெளிப்படுத்தும் அந்த சந்தோஷம் என்ன காரணத்தாலோ எனக்கு மிகுந்த வெறுப்பை அளிக்கக் கூடியதாக இருந்தது. அதனால் சூழ்நிலையின் கட்டாயம் உண்டாகும்போது மிகவும் அபூர்வமாக மட்டுமே நான் நடன அரங்கிற்குச் செல்வேன். ஆனால், அன்று என் மனதிற்குள் பலமான ஒரு உள் கட்டளை பிறந்ததைப் போல, அங்கு ஏதோ என்னை எதிர்பார்த்துக் காத்திருப்பதைப் போல எனக்குத் தோன்றியது. அதனால்தான் நானே அப்படிப்பட்ட ஒரு வேண்டுகோளை வைத்தேன். எப்போதும் என்னுடைய எப்படிப்பட்ட கருத்துக் களுக்கும் விலைகற்பிப்பதற்கும் எந்த விருப்பங்களாக இருந்தாலும் அவற்றை நிறைவேற்றிவைப்பதற்கும் என்னுடைய நண்பர்கள் அவசரப்படுவார்கள். எப்போதும் போல அன்றும் எல்லாரும் என்னுடைய கருத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்கள்.