Lekha Books

A+ A A-

அறியாத பெண்ணின் அஞ்சல் - Page 10

Ariyatha Pennin Anjal

முந்தைய நாட்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அப்படி யெல்லாம்தோன்றியதற்குக் காரணம் உண்மையிலேயே எனக்குத் தெரியும். உங்கள்மீது எனக்குஇருக்கும் உணர்வின் அடுத்த கட்ட வளர்ச்சியே அது. அந்தக் காட்சி உண்டாக்கியகாயத்தின் எதிர் விளைவு என்பதைப்போல, சாயங்காலம் நான் போய் நிற்பதைஒருநாள் வேண்டாம் என்று தீர்மானித்தேன். ஆனால், அந்த எதிர்ப் பைக்காட்டியது என்னை எந்த அளவிற்கு நொறுங்கச் செய்தது தெரியுமா? அங்கு நான்போய் நிற்காத அந்த மாலைநேரம் என்னிடம் உண்டாக்கிய வெறுமை அந்த அளவிற்குஇதயத்தைப் பாதிக்கக் கூடியதாக இருந்தது. தாங்கிக் கொள்ள முடியாத அந்தசாயங்கால நேரத்திற்குப் பிறகு மீண்டும் அடுத்த நாள் வழக்கம்போல நான் அங்குசென்றேன். முந்தைய நாள் நான் வெளிப்படுத்திய எதிர்ப்பையொட்டி எனக்குள் ஒருவகையான குற்றவுணர்வு உண்டானது.

அன்றும் வழக்கம்போல் ஏமாற்றங்கள் மட்டுமே பதிலுக்கு கிடைக்கக்கூடிய அந்த”நின்று கொண்டிருத்தலில்” நான் நின்று கொண்டிருந்தேன். தூரத்திலிருந்துநீங்கள் நடந்து வருவதைப் பார்த்தேன். அந்த நேரத்தில் மனதில் உண்டானசலனங்களைக் கடப்பதற்கு நான் மிகவும் சிரமப்பட வேண்டியதிருந்தது. என்றாலும், நான் அங்கிருந்து நகராமல் நின்றிருந்தேன். என்னுடைய மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு வாகனம் சாலையை அடைத்துக் கொண்டுநின்றிருந்த காரணத்தால், எனக்கு மிகவும் அருகில் கடந்து செல்ல வேண்டியசூழ்நிலை உங்களுக்கு உண்டானது. அப்போது இயற்கையாகவே உங்களுடைய கண்கள்என்மீது சற்று திரும்பின. அது எந்தச் சமயத்திலும் நீங்கள் என்னை அடையாளம்கண்டு கொண்டதால் நடந்த ஒன்றல்ல. மாறாக, மற்ற பெண்களை நீங்கள்பார்க்கக்கூடிய விதத்தில், சதைக்குள் ஆழமாக இறங்கக்கூடிய ஒரு பார்வை-அவ்வளவுதான். ஆனால், எனக்குள் அந்தப் பார்வை பழைய நினைவுகளின் மின்னல்வெளிச்சத்தை உண்டாக்கியது.

சில வருடங்களுக்கு முன்பு, உங்களுடைய ஒரு பார்வைதான் ஒரு பதின்மூன்று வயதுகொண்ட சிறுமியின் மனதைத் தொட்டு எழச் செய்து, அவளை ஒரு பெண்ணாகவும்காதலியாகவும் ஆக்கியது. பெண்ணின் மென்மையான உணர்ச்சிகளைத் தட்டி எழச்செய்து, அவளை இறுக அணைத்துக் கொண்டு, அணிந்திருக்கும் ஆடைகள்ஒவ்வொன்றையும் மெதுவாக... மெதுவாக... அவிழ்த்தெடுப்பதைப் போன்ற இன்பஉணர்வை வாரி இறைக்கக்கூடிய பார்வை.

உங்களுடைய அந்த பொன்னென ஒளிர்ந்து கொண்டிருந்த கண்கள் சற்று என்னைப் பார்த்துக் கொண்டிருக்க, நான் என்னு டைய கண்களை பின்னோக்கி இழுக்க முயற்சித்துக் கொண்டிருந்தேன். குறிப்பிட்டுக் கூறக்கூடிய வகையில் எதுவும் நடக்காததைப் போல நீங்கள் நடந்து மறையும்போதும் என்னுடைய இதயம் வேகமாகத்துடித்துக் கொண்டிருந்தது. அதனால் நான் என்னுடைய வேகத்தைக் குறைக்கவேண்டியதிருந்தது. எனினும், திரும்பிப் பார்க்காமல் இருக்க என்னால் முடியவில்லை. பார்க்கும்போது, நீங்கள் அங்கே நின்றவாறு என்னையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தீர்கள். அந்த முக வெளிப்பாட்டிலிருந்து நான் ஒருவிஷயத்தைப் புரிந்து கொண்டேன். உங்களுக்கு என்னை அடையாளம் கண்டு பிடிக்கமுடியவில்லை. அப்போது மட்டுமல்ல. பிறகு எந்தச் சமயத்திலும் நீங்கள் என்னைஅடையாளம் காணவே இல்லையே!

எனக்கு அப்போது தோன்றிய கடுமையான ஏமாற்றத்தின் ஆழத்தைப் பற்றி இப்போதுநான் என்ன கூறுவது? அந்த அளவிற்கு அது ஆழமாக இருந்தது. எப்போதும் என்னுடைய வாழ்வின் போக்குகளின் கிடைக்கும் பலவகைப்பட்ட அனுபவங்களின், எண்ணற்ற ஏமாற்றங்களின் வெறுமொரு ஆரம்பம்.

நான் இன்ஸ்ப்ரக்கில் இருந்தபோது உங்களைப் பற்றி மட்டுமே உள்ள சிந்தனைகளில் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தேன் என்று கூறினேன் அல்லவா? அப்போதைய என்கனவுகளில் முக்கியமானது வியன்னாவில் நடைபெற்ற நம்முடைய சந்திப்பைப்பற்றியதுதான். மனதின் அவ்வப்போதைய நிலைகளுக்கு ஏற்றாற்போல சிந்தனைகளும்மாறிக் கொண்டே இருந்தன. சில நேரங்களில் பைத்தியக் காரத்தனமானசிந்தனைகள்... வேறு சில நேரங்களில் எதிர்பார்ப்புகள் மலர்ந்துநின்றிருக்கும். மனம் முழுக்க சந்தோஷம் நிறைந்த சிந்தனைகளும் கனவுகளுமாகஇருக்கும்.

மிகவும் கவலை நிறைந்த சில நேரங்களில் நாம் ஒருவரையொருவர் சந்திக்கும் நிமிடத்தில் நீங்கள் என்னை வெறுப்புடன் அடித்து விரட்டி விடுவீர்கள் என்றுநான் நினைத்தேன். இல்லாவிட்டால் என்னுடைய அழகில் திருப்தி அடையாத காரணத்தாலோ, நான் மிகவும் சாதாரணமாக இருப்பதாலோ நீங்கள் என்னைப் பொருட்படுத்தாமல் இருப்பீர்கள் என்று நினைத்தேன். ஆனால், அப்படிப்பட்டநேரங்களில் என் இதயத்தை நூறு துண்டுகளாக அறுத்து எறியக் கூடிய ஒருவிஷயம்... நான் என்ற ஒருத்தியை நீங்கள் ஏற்றுக் கொண்டதில்லை என்ற உண்மைஎன் மனதில் தோன்றவேயில்லை. என்னை ஏற்றுக் கொண்டிருந்தால், நீங்கள் என்னைஎந்தச் சமயத்திலும் அடையாளம் தெரிந்து கொள்ளாமல் போயிருக்க மாட்டீர்களே!

அந்த அடையாளம் தெரியாத தன்மை இன்று... இப்போது... இந்த கடிதத்தைவாசிக்கும் நிமிடத்திலும் உங்களுடன் சேர்ந்து இருக்கும். எந்தச்சமயத்திலும் உங்களால் அடையாளம் தெரிந்து கொள்ளப் படாமலேயே, நான் மரணத்தைத்தழுவுவேன்.

ஒரு ஆணைப் பொறுத்தவரை ஒரு இளம்பெண்ணின் முகம், அவள் ஒரு முழுப்பெண்ணாகஆவதற்கு இடையில் பல வகை களிலும் மாறுபட்டுக் கொண்டே இருக்கும். நிலைக் கண்ணாடியிலிருந்து பிம்பம் மறைந்து போவதைப்போல அது மாறிக் கொண்டேயிருக்கும். அது மட்டுமல்ல- அந்த மாற்றம் மிகவும் வேகமாகவும் நடக்கும்.இப்போது எனக்குத் தெரியும். ஆணின் மனதிலிருந்து பெண் மிகவும் வேகமாக மறைந்து விடுவாள். அவள் அணிந்திருக்கும் ஆடைகள்கூட அவளுடைய உடலை வேறுமாதிரி காட்டும்- வேறு ஏதோ பெண்ணைப் போல... அந்தச் சமயத்தில் பக்குவப்பட்டஅறிவுடன் அவள் செய்ய வேண்டியது- அனைத்தும் விதியின்படி நடக்கின்றன என்பதைநம்புவது மட்டுமே.

நீங்களும் இடையில் அவ்வப்போதாவது என்னைப் பற்றி சிந்தித்துப் பார்க்கவும்நினைக்கவும் எனக்காகக் காத்திருக்கவும் செய்வீர்கள் என்று என்னுடையகுழந்தைத்தனமான மனம் நினைத்துக் கொண்டிருந்தது. ஆனால் என்ன காரணத்திற்காகநீங்கள் என்னை மறந்து போய் விட்டீர்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை. நீங்கள் என்னை ஒரு நிமிடம்கூட நினைத்துப் பார்ப்பதே இல்லைஎன்பதையும், அதற்கான தகுதி எனக்கு இல்லை என்பதையும், உங்களைப் பொறுத்தவரையில் நான் உங்களுக்கு யாருமே இல்லை என்பதையும் அன்றே நான் புரிந்து கொண்டிருக்கும் பட்சம், ஒருவேளை இந்த வாழ்க்கையை என்னால் தாங்கிக் கொண்டிருக்க முடியும்.

அன்றைய சாயங்காலத்தின் அந்தப் பார்வை எனக்கு ஒரு விஷயத்தைப் புரியவைத்தது. நம்முடைய வாழ்வை இணைத்து வைக்கக்கூடிய எதுவும், ஒரு அணுவின் அளவிற்குக்கூட உங்களுடைய பக்கம் இல்லாமலிருந்தது என்ற உண்மையே அது. அந்தவிஷயம் உண்மைகளின் கடினமான யதார்த்தத்திற்குள் என்னை மூழ்கச் செய்தது.உங்களின் அந்தப் பார்வையில் என்னுடைய தலைவிதியின் ஒரு முன்னறிவிப்புவெளிப்பட்டது என்பதே பின்னால்தான் எனக்குத் தெரிந்தது.

எனக்குள் வேதனை உண்டாக்கியதும் நீங்கள் என்னை அடையாளம் கண்டு பிடிக்காமல்போனதுமான அந்த மாலை நேரத்திற்குப் பிறகு இரண்டு நாட்கள் கழித்து மீண்டும்நாம் சந்தித்தோம். ஆனால், அப்போது ஒரு அறிமுகத்தை ஆரம்பிப்பதற்கு விருப்பப் படுவதைப்போல நீங்கள் என்னைப் பார்த்தீர்கள். மெதுவாக சற்று சிரித்தீர்கள். அந்தப் பார்வையும் புன்சிரிப்பும், உங்களுடைய பார்வையால் வயதிற்கு வந்த பெண்ணாக ஆக்கப்பட்ட அந்தப் பழைய சிறுமியை அடையாளம் தெரிந்துகொண்டதன் வெளிப்பாடு அல்ல என்ற விஷயம் அப்போதும் எனக்குத் தெரியும்.அதற்கு மாறாக நேற்று பார்த்த அந்த அழகான ஒரு பெண்ணை நீங்கள் நினைத்தீர்கள்.

பாதி வெளிப்படையாகவும் பாதி திருட்டுத் தனமாகவும் இருந்த ஒரு சிரிப்புடன்,நீங்கள் எனக்கு அருகில் கடந்து சென்றீர்கள். எனினும், கடந்து சென்ற நாளைப் போலவே நடையின் வேகத்தைக் குறைத்தீர்கள். அப்போது விலகிச் செல்ல முயற்சிக்காமல், நானும் என்னுடைய நடையை மெதுவாக ஆக்கினேன். வெளியே ஒருநடுக்கம் இருந்தாலும், என் மனதிற்குள் சந்தோஷம் அலையடித்துக் கொண்டிருந்தது. வாழ்க்கையில் முதல் முறையாக நீங்கள் என்னை கவனித்ததாக எனக்குத் தோன்றியது. நீங்கள் எதையாவது என்னிடம் கூறுவதைக் கேட்பதற்கு என்மனம் ஏங்கியது.

எதிர்பார்த்திராத ஒன்று என்று கூற முடியுமா என்று தெரிய வில்லை. எனக்குப் பின்னால் உங்களுடைய காலடிச் சத்தம் கேட்பதை நான் உணர்ந்தேன். துடித்துக் கொண்டிருந்த மனதுடன் நான் காத்திருந்தேன். உங்களுடைய அந்த இனிமையானகுரல்... இதயத்தின் துடிப்பு அதிகமானதன் காரணமாக நடக்க முடியாமலிருந்த நான் நிற்கும் இடத்திலேயே நிற்கவேண்டிய சூழ்நிலை வந்துவிடுமோ என்றுபயந்தேன்.

உண்மையாகக் கூறப்போனால் நான் யார் என்பதையும் என்னுடைய வாழ்க்கைக் கதைஎன்ன என்பதையும் நீங்கள் எந்தச் சமயத்திலும் தெரிந்து கொண்டிருக்கவில்லை. எனினும், நீண்ட காலமாக நன்கு தெரிந்த ஒரு சினேகிதியுடன் உரையாடுவதைப்போலநீங்கள் என்னுடன் நட்புணர்வுடன் பேசினீர்கள்.

மிகுந்த சாதுர்யத்துடன் எளிமையாகவும் ஈர்க்கக்கூடிய விதத்திலும் நீங்கள்உரையாடினீர்கள். அதனால் பதைபதைப்பு இல்லாமல் என்னால் உங்களுடன் உரையாடமுடிந்தது. அப்படியே நாம் அந்த பெரிய பாதையின் வழியாகப் பேசிக் கொண்டேநடந்தோம்.

“இன்று நாம் இருவரும் சேர்ந்து இரவு உணவைச் சாப்பிட்டா லென்ன?” நீங்கள்என்னிடம் கேட்டீர்கள். நான் அதை சந்தோஷத் துடன் ஏற்றுக் கொண்டேன்.அதுவல்ல... நீங்கள் எதைக் கேட்டா லும், எதையும் என்னால் மறுக்க முடியாதே!

அன்று நாம் ஒரு சிறிய ரெஸ்ட்டாரென்டில் அமர்ந்து உணவு சாப்பிட்டோம்.உங்களுக்கு அது ஞாபகத்தில் இருக்காது. உங்களின் வாழ்க்கையில் அப்படிப்பட்டஒன்று அபூர்வமானது இல்லையே! ஆனால், எனக்கு அப்படியில்லை. வாழ்கையில் அபூர்வமானதும் இனியதுமான ஒரு சம்பவம் அது. நான் கொஞ்சமாகவே பேசினேன். வெறுமனே எதையாவது பேசியும் கேட்டும் அந்த விலை மதிப்புள்ள பொன்னான நேரத்தைவீணாக்க நான் விரும்பவில்லை. ஆனந் தத்தின் எல்லையில், உங்களுக்கு அருகில்அமர்ந்து கொண்டு அந்த இனிய குரலை நான் கேட்டுக் கொண்டிருந்தேன்.

நீண்ட ஐந்து வருடங்களாக நான் என்னுடைய மனதில் வைத்துக் காப்பாற்றியகனவுகளுக்கு மலர் அணிவித்த அந்த நிமிடங்களுக்காக நான் என்றென்றைக்கும்உங்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறேன். அப்போதைய என்னுடைய அந்த சந்தோஷத்தின்பரப்பைப் புரிந்து கொள்ள உங்களால் முடியுமா?

உங்களுடைய பேச்சிலும் நடவடிக்கைகளிலும் அவசரமோ பதைபதைப்போ இல்லை. சபலங்கள்எதையும் வெளிப்படுத்தாமல், நீங்கள் முழுமையான நட்புணர்வுடன் பேசிக்கொண்டிருந்தீர்கள். பல வருடங்களாக நான் உங்களுக்கு சொந்தமானவளாக இல்லாமற்போயிருந்தாலும் ஒருவேளை என்னை வசீகரிப்பதற்கு, ஈர்க்கக் கூடியவார்த்தைகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் இயன்றிருக்கும் என்று எனக்குத்தோன்றியது.

நாம் சிறிது நேரம் அந்த ரெஸ்ட்டாரெண்டில் இருந்தோம். இரவு மிகவும் இருட்டிவிட்டிருந்தது. திரும்பவும் வெளியே வந்தபோது நீங்கள் சற்று தயங்கிக்கொண்டே என்னிடம் சொன்னீர்கள்:

“போவதற்கு அவசரமில்லையென்றால், நாம் மேலும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்திருக்கலாம்.” ஒரு நிமிடம் நிறுத்தி விட்டு, என்னைச் சற்றுபார்த்தவாறு உங்களின் வீட்டிற்கு வருவதற்கு ஆட்சேபணை உண்டா என்றுகேட்டீர்கள். முற்றிலும் அறிவை இழந்துவிட்ட அந்த நிமிடத்தில், நான்என்றென்றைக்கும் உங்களுக் குச் சொந்தமானவள் என்பதை உங்களிடம் எப்படித்தெரிவிப்பது என்று தெரியாமல் மூச்சை அடக்கிக் கொண்டிருந்த என் மனம் எனக்கேதெரியாமல் வெளியே குதித்தது.

“எனக்கு அவசரமொன்றுமில்லை... நான் வருகிறேன்!”

உண்மையாகச் சொல்லப் போனால் உடனடியாக நான் வருவதற்கு ஒப்புக் கொண்ட விஷயம் உங்களிடம் ஆச்சரியத்தை உண்டாக்கியது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. உங்களுடைய மனதில் அப்போது இருந்த சிந்தனையை இன்று என்னால் புரிந்து கொள்ள முடியும். என்னவென்றால், ஒருத்தி தன்னை ஒரு ஆணுக்கு சமர்ப்பித்து சந்தோஷம் அடைவதற்கு தானே மனதில் ஏங்கிக் கொண்டிருப்பவளாக இருந்தால்கூட, அப்படிப் பட்ட ஒரு சந்தர்ப்பத்தில் சற்று குழப்ப மடையாமல்இருக்க மாட்டாள். மன எதிர்ப்பையும் சில நேரங்களில் உரிமை கலந்தகோபத்தையும் அவள் இயல்பாகவே வெளிக் காட்டினாலும் காட்டலாம். அவளைவ சீகரிப்பதற்கு அன்பான வார்த்தைகளும் புகழுரைகளும் மட்டும் போதாது. சிலநேரங்களில் அந்த மனதைச் சரி செய்வதற்கு தொடர்ச்சியான கெஞ்சல்களும் கபடம் நிறைந்த வாக்குறுதிகளும்கூட தேவைப்படும். அப்படி எதுவும் இல்லாமல் ஒருபெண் எந்தவொரு தயக்கமும் இல்லாமல் அழைப்பை ஏற்றுக் கொள்ளத் தயாராகிறாள் என்றால், ஒன்று- அவள் பக்குவம் அடைந்திராத ஒருத்தியாக இருக்க வேண்டும்.இல்லாவிட்டால் விலை மாதுவாக இருக்க வேண்டும் என்பதுதான் பொதுவான கருத்தாகஇருக்கும்.

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel