Lekha Books

A+ A A-

அறியாத பெண்ணின் அஞ்சல் - Page 14

Ariyatha Pennin Anjal

அன்று அந்த நடன அரங்கில் இருந்தபோது நான் ஒயின் குவளைகளை பல முறைகள் காலிபண்ணினேன். போதை தலைக் கேறி ஆடியவர்களுக்கு மத்தியில் அன்று நானும்பாடவும் ஆடவும் செய்தேன். சோர்வே தெரியாமல் நான் நடனமாடினேன். திடீரென்று என்னுடைய இதயத்தை ஒரு சிற்பத்தைப்போல அசைவே இல்லாமல் ஆக்கி விட்டு, அந்தக்காட்சி கண்களில் பட்டது. நான் நடனம் ஆடிக் கொண்டிருந்த இடத்திற்கு அதிக தூரத்தில் அல்லாத மேஜைக்கு அருகில் நீங்கள் ஒரு நண்பருடன்உட்கார்ந்திருந்தீர்கள். அந்தக் கண்கள் என்னையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தன. ஆமாம்... முதன் முதலாக நான் பார்த்த அதே பார்வை. என்னை காம உணர்ச்சிக்கு ஆளாக்கி, ஆடைகளை அவிழ்த்து இறுக அணைத்துக் கொள்வதைப் போன்ற அந்தப் பார்வையில் காலிலிருந்து தலை வரை நான் புத்துணர்வு பெற்றதைப் போலஉணர்ந்தேன். அப்போது என்னுடைய உணர்ச்சி வசப்பட்ட வெளிப்பாடுகளை வேறுயாராவது பார்த்து விடுவார்களோ என்ற பதைபதைப்பு எனக்கு உண்டானது. ஆனால்,மற்ற எல்லாரும் பாட்டிலும் ஆட்டத் திலும் மூழ்கிப் போய் விட்டிருந்தனர்.

எனக்குள் நெருப்பு படர்வதைப்போல பார்வைகள் பற்றி எரிந்து கொண்டிருந்தன. நீங்கள் என்னை யார் என்று அடையாளம் கண்டு பிடிக்கவில்லை. அதற்கு மாறாகஎன்னுடைய உடலின் வடிவமும் உடலமைப்பும் உறுப்புக்களின் முழுமையும் உங்களிடம் காமத்தைக் கிளர்ந்தெழச் செய்திருக்க வேண்டும் என்ற விஷயம் எனக்கு அப்போதே தெரியும். துடித்துக் கொண்டிருந்த அந்த நிமிடங்கள் உங்களுக்குப் புரியாமல் இருக்காது. உங்களுடைய கண்கள் என்னிடம் உண்டாக்கிய மோகம்...

அப்போது நீங்கள் வேறு யாருடைய கவனத்திலும் படாமல் தலையை ஆட்டிக் கொண்டே என்னிடம் ஒரு சைகை காட்டியவாறு, நண்பரிடம் விடைபெற்று விட்டுவெளியேறினீர்கள். அந்த தலை ஆட்டலின் மவுன மொழி “கொஞ்சம் வெளியே வரமுடியுமா?” என்பதாக இருந்தது என்பதை நான் யூகித்தேன். கதவைக் கடக்கும்போதுமீண்டும் திரும்பிப் பார்த்த உங்களின் கண் அசைவுகளில் என்னை எதிர்பார்த்து காத்து நிற்பீர்கள் என்ற ஒரு அறிவிப்பு வெளிப்பட்டது.

அங்கிருந்து வெளியேறி உங்களை எப்படிப் பின் தொடர்வது என்ற ஒருதர்ம சங்கடமான நிலை எனக்கு முன்னால் நின்று கொண்டிருக்கும் போது, அதிர்ஷ்டத்தின் பார்வைபட்டது. எல்லாருடைய கவனத்தையும் ஈர்த்துக் கொண்டுஇரண்டு கறுப்பினத்தைச் சேர்ந்தவர்கள் கரடுமுரடான குரலில் ஏதோ பழமையான பாட்டைப் பாடியவாறு நடனமாட ஆரம்பித்தார்கள். உடனே திரும்பி வருவதாக என்னுடைய பண வசதி படைத்த ப்ரன்னன் காதலரிடம் கூறிவிட்டு, நான் வேகமாக உங்களைப் பின் தொடர்ந்தேன்.

என் மனம் துடித்துக் கொண்டிருந்தது. ஒருவேளை, நீங்கள் என்னை யார் என்று அடையாளம் கண்டு பிடித்து விட்டீர்களோ? அப்படியென்றால், கதை எப்படிஇருக்கும்?

நான் வெளியே வந்தபோது, நடன அரங்கிற்கு வெளியே இருந்த வராந்தாவில் பணிவுடன், அதே நேரத்தில் பொறுமை இல்லாமல் நீங்கள் என்னை எதிர்பார்த்துக்கொண்டு நின்றிருந்தீர்கள். என்னைப் பார்த்தவுடன் அந்த முகம் சாதாரணமாக இருப்பதைவிட பிரகாசமாக ஆனது. பிறகு என்னைப் பார்த்து வசீகரமும் மெல்லியதுமான அந்தச் சிரிப்பைச் சிரித்தார்கள். அப்போதும் நீங்கள் என்னை யார் என்று அடையாளம் தெரிந்து கொண்டிருக்கவில்லை. உங்களைப் பொறுத்த வரையில் அந்த இணை சேரல் புதிய ஒரு காதலியுடன் உள்ள முதல் சங்கமம் மட்டுமே. உங்களுடன் சேர்ந்து சிறிது நேரத்தைச் செலவழிப்பதற்கு எனக்கு ஆட்சேபணை இருக்கிறதா என்று தயங்கி நின்று கொண்டிருக்காமல் என்றாலும், ஒரு ரகசியத்தைக் கூறுவதைப் போல நீங்கள் அப்போது என்னிடம் கேட்டீர்கள்.

நான் எப்போதும் காதுகளைத் தீட்டி வைத்துக் கொண்டிருக்கும் அந்தக் கேள்விக்குச் சாதகமாக அல்லாமல் நான் என்ன பதில் கூறுவேன்? அப்போது நான்வேறு என்ன செய்ய முடியும்? எனினும், அப்போது நீங்கள் என்னை வெறுமொரு விலைமாதுவாக நினைத்து விட்டீர்கள் என்ற விஷயம் எனக்குள் தாங்க முடியாத வேதனையை உண்டாக்கியது. கேள்வி கேட்ட அடுத்த நிமிடமே வந்த என்னுடைய சம்மதத்தை வெளிப்படுத்திய பதில், அன்று நம்முடைய முதல் சந்திப்பின்போது ஒருஎதிர்ப்பும் கூறாமல் என்னுடைய சம்மதத்தைச் சொன்னபோது உங்களிடம் அதுஉண்டாக்கிய அதே ஆச்சரியமும் சந்தோஷமும் அந்தக் கண்களில் தெரிவதை என்னால் பார்க்க முடிந்தது. எனினும், எனக்கு எப்போது வசதியாக இருக்கும் என்று நீங்கள் மரியாதையுடன் கேட்டீர்கள்.

“உங்களுடைய விருப்பம்போல... எப்போது வேண்டுமானாலும்...”

அந்த திகைப்பின் அலைகள் முழுவதும் மறையாமலே, நீங்கள் எப்போது நடக்கவேண்டும் என்ற மனக் குழப்பத்தில் மூழ்கி விட்டதைப்போல சிறிது நேரம் நின்றுவிட்டீர்கள். பிறகு, கேட்டீர்கள்:

“இப்போது முடியுமா?”

“நிச்சயமாக...” நான் எந்தவொரு தயக்கமும் இல்லாமல் சம்மதித்தேன்.

என்னுடைய வெளியே அணியும் ஆடையை என்னுடன் வந்திருந்த காதலர், நண்பர்கள் ஆகியோர்களின் கோட்டுகளுடன் ஆடைகள் வைக்கப்படும் அறையில் ஒன்றாக இருக்கட்டும் என்று அவர் ஒப்படைத்திருந்தார். அதற்கான டோக்கன் அவருடைய கையில் இருந்தது. அப்போது அதைச் சென்று வாங்க முடியாதே! உங்களுடன் வராமல் இருக்க என்னால் சிறிதும் முடியாது. காரணம்- நான் ஆசைப்பட்டு மோகம் கொண்டுகாத்திருந்த செல்வம்... பல வருடங்களாக உள்ள என்னுடைய காத்திருப்பின் பலன்... அதை நான் இழந்துவிடக் கூடாது.

அந்தச் சூழ்நிலையில் நான் உங்களுடன் வரும் பட்சம், என்மீது கொண்ட அளவற்றகாதலால் மூச்சு விட முடியாமல் இருக்கும் ப்ரன்னனைச் சேர்ந்த என்னுடையஅந்தக் காதலரை நான் அவமானப் படுத்தியவளாக ஆவேன். என் செயலின் விளைவாக அவர் மற்றவர்களுக்கு முன்னால் அவமானப்பட்டு நிற்பார். யாருடன் வேண்டுமானாலும்எப்போது வேண்டுமானாலும் வெளியேறிப் போகக்கூடிய ஒருத்தியைத்தான் இதுவரை தன்னுடன் வைத்துக் கொண்டு நடந்து திரிந்திருக்கிறார் என்று நிச்சயமாக அவர் கிண்டல் செய்யப்படுவார். அது மட்டுமல்ல- என்னுடைய நன்றி கெட்ட அந்தச் செயல், அவர் என்னை என்றென்றைக்குமாக உதறி விடுவதற்கும் காரணமாக இருக்கும். அது என்னுடைய வாழ்க்கையையும், நம்முடைய மகனின் வாழ்க்கையையும் மோசமான விதத்தில் பாதிக்கவும் செய்யும். இந்த விஷயங்கள் அனைத்தையும் புரிந்திருந்தாலும், நான் முன் வைத்த காலை பின்னால் எடுக்கத் தயாராக இல்லை. உங்களுடன் இருக்கக் கிடைத்திருக்கும் பேரதிர்ஷ்டம் சிறிது நேரத்திற்குத்தான் என்றாலும் கூட என்னால் அதை நிராகரிக்க முடியவில்லை. எதை இழக்க நேரிட்டாலும், அதற்கு இணையாக வேறெதுவும் வராது- வாழ்க்கை கூட.

உங்கள் மீது எனக்கு இருக்கும் காதலின் ஆழமும் பரப்பும் எந்த அளவிற்குப் பெரியவை என்பதை உங்களுக்குப் புரிய வைக்கக்கூடிய தயார் நிலையின் பகுதியான ஒரு முயற்சியாக இந்த விளக்கத்தை கணக்கில் எடுத்துக் கொண்டால் போதும். என்னுடைய மரணப் படுக்கையில் இருக்கும்போது நீங்கள் என்னை அழைத்தாலும், உயிரின் துடிப்பு எஞ்சியிருந்தால், நான் உங்களின் விருப்பத்தை நிறைவேற்றக்கூடியவளாக இருப்பேன். அதற்கான தைரியம் எனக்கு என்ன காரணத்தாலோ எனக்குள் இருக்கிறது என்று எனக்குத் தெரியும்.

அப்படித்தான் ஒரு வாடகைக் காரில் நாம் உங்களின் வீட்டை அடைந்தோம். பயணத்திற்கு மத்தியில் உங்களுக்கு அருகில் உட்கார்ந்து கொண்டு நான் அந்த இனிய பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அந்த சமீப இருத்தலும் பேச்சும் சேர்ந்து இருந்ததால் நான் அதிகமாக உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தேன். பத்து வருடங்களுக்கு முன்பு நான் உங்களுடன் சேர்ந்து ஏறிய அந்தப்படிகள்... கடந்த காலமும் நிகழ்காலமும் எனக்குள் ஒரு இந்திர ஜாலத்தைஉண்டாக்கிக் கொண்டிருந்தன. நான் இரண்டு காலங்களிலும் ஒரே நேரத்தில் வாழ்வதைப் போல எனக்கு அப்போது தோன்றியது. சுவரில் சில புதிய படங்களையும்மேலும் சில புத்தகங்களையும் தவிர, கடந்து சென்ற பத்து வருடங்கள் அந்த அறைக்குள் பெரிய அளவில் மாறுதல்கள் எதையும் உண்டாக்கியிருக்கவில்லை. அந்த வீட்டிற்குள் எனக்கு மிகுந்த நெருக்கமும் நன்கு பழகிய உணர்வும் உண்டாயின.

மேஜை மீது இருந்த பூப்பாத்திரத்தில் முந்தைய நாள் நான் உங்களுக்குப் பிறந்தநாள் பரிசாக அனுப்பி வைத்திருந்த வெள்ளை நிற ரோஜா மலர்கள் இருந்தன.அப்போதும் வாட்டத்தின் நிழல் படியாமல், சிரித்துக் கொண்டிருப்பதைப்போல அவைஇருந்தன. எப்போதும் உங்களை வழிபடும், உங்களுக்கு மட்டுமே சொந்தமான, அந்தநிமிடத்தில் நீங்கள் காதல் வசப்பட்டு கட்டிப் பிடித்துக் கொண்டுநின்றிருந்த இந்த நான்தான் அந்த மலர்களை உங்களுக்கு அனுப்பிவைத்திருக்கிறேன் என்ற விஷயமே உங்களுக்குத் தெரியாதே! எனினும், என்னுடையஅந்தப் பரிசுப் பொருட்களை நீங்கள் கவனம் செலுத்திப் பாதுகாத்துவைத்திருப்பதைப் பார்த்த வுடன், எனக்கு அந்த மலர்களை உங்களுக்கு அனுப்பிவைப்பதற்கு முன்பே, அதிலிருக்கும் ஒவ்வொன்றின் இதழ்களையும் எத்தனை முறைகள்நான் முத்தமிட்டிருப்பேன் தெரியுமா?

அந்த இரவு முழுவதும் நாம் உடலோடு உடல் சேர்ந்து உடலுறவில் கிடைக்கும் சொர்கங்களைத் தேடிக் கொண்டிருந்தோம். என்னுடைய ஒவ்வொரு உறுப்பிலும் நீங்கள் உதட்டை வைத்து அழுத்தி முத்தமிட்டீர்கள். உணர்ச்சிப் பெருக்கில் எனக்குள் காமத்தின் நெருப்பு படர்ந்து பிடித்தது. ஆனால், உங்களுடைய காம இச்சைகளுக்கு ஒரு விலைமாதுவையும் காதல் வசப்பட்டு பரவச நிலையில் இருக்கும் காதலியையும் வேறுபடுத்திப் பார்க்கத் தெரியவில்லையே என்பதைப் பற்றி அப்போது கூட நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். உங்களுடைய இரண்டு மாறுபட்ட குணநிலைகள் என்னை ஆச்சரியப்படச் செய்தன. என்னுடைய இளம் வயதில் உங்கள் மீது என்னை ஈடுபாடு கொள்ள வைத்த அந்த சிறப்புத் தன்மை.... அறிவுப்பூர்வமாகவும் உடல் ரீதியாகவும் உள்ள உணர்ச்சி களின் காமக் கலக்கல்... வாழும் நிமிடங்களின் சந்தோஷத்தில் மூழ்கி, அதன் அனைத்து சுகங்களையும் அனுபவிக்கக்கூடிய சிறப்புத் தன்மை உங்களிடம் இருந்த அளவிற்கு வேறு யாரிடமும் நான் பார்த்ததில்லை அந்த நிமிடங்களில் மட்டுமே மனதை முழுமையாகக் கரைந்து இருக்கும்படி செய்து, மீதி எல்லா விஷயங்களையும் மறந்து விடுவது... அந்த சுகமான நிமிடங்கள் முடிந்து விட்டால், அதையும் மனிதத் தன்மை சிறிதும்இல்லாமல் மறந்து விடுவது... ஒரு நூலிழையின் தொடர்புகூட இல்லாமல்!

உண்மையாகக் கூறப்போனால், நானும் அப்போது அதே மாதிரியான ஒரு நிலையில்தான் இருந்தேன். உங்களுடைய அந்த உடலை இறுகக் கட்டிப் பிடித்துக் கொண்டு, உடலின் வெப்பத்தையும் உணர்ச்சிப் பெருக்கையும் ஏற்றுக் கொண்டு, ஒரு களைப்பு நிறைந்த உச்ச நிலையில் கண்களை மூடிப் படுத்திருக்கும்போது நானும் மறந்து விட்டேன். என்னுடைய நேற்றுகள், இளைமைக் காலம், உங்களின் குழந்தையின் தாய்என்ற விஷயம்... இப்படி அனைத்தையும். ஆனந்தத்தின் அலை மோதலில் வேகமாக நடக்கும் போது, அந்த இரவு எந்தச் சமயத்திலும் முடியவே முடியக்கூடாது என்று நான் என் மனதிற்குள் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன். ஆனால், காலத்தைக் கயிறால் கட்டி வைப்பதற்கு யாரால் முடியும்? எவ்வளவு வேகமாக இரவு முடிவடைந்து விட்டது என்று மனதில் வருத்தம் உண்டானது.

இன்ப விளையாட்டுகள் இரவின் பிற்பகுதியிலும் நீண்டு நின்றதாலோ, சுகமான அந்த இரவின் மந்திரத் தன்மையாலோ நன்றாக உறங்கி விட்டேன். காலையில் சற்றுதாமதமாகவே கண் விழித்தேன். நான் புறப்படுவதற்காகத் தயார் பண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால், காலை உணவு சாப்பிடாமல் போகக் கூடாது என்ற உங்களின் வற்புறுத்தலுக்கு, பிற தேவைகளுக்கு “சரி” சொன்னதைப் போல சம்மதிப்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லையே! காலை உணவு சாப்பிடுவதற்கு மத்தியில் நீங்கள் சர்வசாதாரணமான முறையில் தமாஷான உரையாடலில் ஈடுபட்டீர்கள். ஒருவிஷயம் என்னவென்றால் என்னுடைய விளக்கங்களை முன்பு ஒன்றாக இருந்தபோது உள்ளதைப்போலவே, அதிகமாகத் தெரிந்து கொள்வதற்கு நீங்கள் ஆர்வம் காட்டவில்லை. வீட்டைப் பற்றியோ ஊரைப் பற்றியோ எதுவும் கேட்கவில்லை.உங்களுக்கு அப்போது கூட நான் ஒரு ஊரும் பெயரும் இல்லாத பெண்ணாகவே இருந்தேன். அந்த உரையாடலுக்கு மத்தியில் என்னை சோர்வடையச் செய்யக் கூடிய ஒருசெய்தியை நீங்கள் என்னிடம் சொன்னீர்கள். பல மாதங்கள் நீடித்திருக்கும் ஒருஆஃப்ரிக்க பயணத்திற்கான ஏற்பாட்டில் நீங்கள் இருப்பதாகக் கூறினீர்கள். என்மனம் அந்த செய்தியைக் கேட்டவுடன், துடித்துப் போய்விட்டது.எல்லாவற்றையும்கூறி அந்த கால்களுக்கு கீழே விழுந்து குலுங்கிக் குலுங்கிஅழ வேண்டுமென்று நான் மிகவும் ஆசைப்பட்டேன். அதற்குப் பிறகு உங்களிடம்கூறவேண்டும்:

“என் அன்பிற்குரியவரே, இனியாவது நீங்கள் இங்கு இருப்பவளை யார் என்றுதெரிந்து கொள்ள வேண்டும். பல வருடங்களாக நீடித்தி ருக்கும் இந்தக்காத்திருத்தலுக்கும் சோதனைகளுக்கும் இறுதியிலாவது நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும்!”

ஆனால் எனக்குள் இருந்த சுய மரியாதையும் கோழைத்தனமும் என்னை எதுவும் கூறவிடவில்லை. அதற்கு பதிலாக நானே அறியாமல் என்னுடைய உதட்டிலிருந்து வெளியேவந்தது “கஷ்டம்...” என்ற வார்த்தையாக இருந்தது.

“என்ன வருத்தமாக இருக்கிறதா?” -வசீகரமான ஒரு புன்சிரிப்புடன் காதல்உணர்வு மேலோங்க நீங்கள் என்னிடம் கேட்டீர்கள். உண்மையாகக் கூறப்போனால்,வருத்தத்தால் எனக்கு பைத்தியம் பிடித்து விடுவதைப்போல தோன்றியது. உங்களையே இமைகளை மூடாமல் பார்த்துக் கொண்டே நான் சொன்னேன்:

“என் அன்பிற்குரியவரே, நீங்கள் எப்போதும் பயணத்தில்தான்...”

சொல்லி முடித்தபோது, இதோ... இப்போது... இந்த நிமிடத்தில்... நீங்கள் என்னையார் என்று கண்டு பிடித்து விடுவீர்கள்... அதற்குப் பிறகு என்னை வாரிஅணைத்து முத்தங்களால் மூடப்போகிறீர்கள் என்று எனக்குத் தோன்றியது. நான்என்னுடைய இதயத்தை அடக்கிக் கொண்டு நின்றிருந்தேன்.

“சிறிது காலம் கடந்த பிறகு, திரும்பி வருவேன்.” என்னைசமாதானப் படுத்துவதைப்போல மெல்லிய ஒரு சிரிப்புடன் நீங்கள் சொன்னீர்கள். மனக் கவலையுடன், “வருவீர்கள். ஆனால், அந்தச் சமயத்தில் என்னை மறந்து விட்டிருப்பீர்கள். அவ்வளவுதான்” என்று நான் கூறிவிட்டேன். என்னுடைய வாக்குகளில் இருந்த தடுமாற்றத் தையும் முகத்திலிருந்த வேதனையையும் புரிந்து கொண்டோ என்னவோ கருணையுடன் என்னைப் பார்த்தவாறு நீங்கள் என்னுடையதோளைப் பிடித்தீர்கள்.

“இல்லை.... மனதில் அழகாகத் தோன்றும் எதையும் மறக்க முடியாது. எந்தச் சமயத்திலும் நான் உன்னை மறக்க மாட்டேன்.” அதைக் கூறியபோது அந்தக் கண்கள் என்னை காலில் இருந்து தலைவரை கூர்ந்து ஆராய்ந்து கொண்டிருந்தன. அந்தப் பார்வையின் மூலம், மனதிற்குள் என் உருவத்தை, என்னையே அள்ளி எடுப்பதைப் போல எனக்குத் தோன்றியது. ஒரு நிமிடம் நான் தவிப்புடன் இருந்தேன். நீங்கள்என்னை அடையாளம் கண்டு பிடிக்கிறீர்கள்... சுவாசத்தை அடக்கிக் கொண்டு நான்காத்து நின்றிருந்தேன். ஆனால், எதுவும் நடக்கவில்லை. அப்படி நின்று கொண்டிருக்கும் போது என்னை இறுக அணைத்துக் கொண்டு நீங்கள் என்னைஅடுத்தடுத்து விடாமல் முத்தமிட்டீர்கள். அது எறிந்து கொண்டிருக்கும் உணர்ச்சிகளின் வெப்பத்தை எனக்குள் பரவச் செய்தது.

உங்களுடைய அந்த அணைப்பின் வேகத்தில் அவிழ்ந்து தாறுமாறாகி விட்ட என்னுடையகூந்தலைக் கட்டி சீர் செய்வதற்காக நிலைக் கண்ணாடிக்கு முன்னால்போய் நான்நின்றேன். அப்போது கண்ணாடியில் நான் பார்த்த காட்சி இதயத்தை வேதனைப்படுத்துவதாக இருந்தது. கழற்றி வைத்திருந்த என்னுடைய மஃப்ளரில் நீங்கள்கொஞ்சம் பண நோட்டுக்களைத் திணித்து வைத்துக் கொண்டிருந்தீர்கள்- ஒரு விலைமாதுவின் இன்பப் பங்காளியாக இருந்ததற்கான கூலி? உங்கள்மீது எனக்குஎந்தவொரு நேரத்திலும் தோன்றாத வெறுப்பு எனக்குள் தோன்றி மேலே வந்தது. அணையை உடைத்துக் கொண்டு பாய்வதற்காக இருந்த அழுகையை அடக்கி நிறுத்துவதற்குநான் படாத பாடு பட்டேன். அந்தக் கன்னத்தில் ஓங்கி ஒரு அடி கொடுக்க வேண்டும் என்றுகூட நான் நினைத்தேன்.

நீங்கள் என்னை அவமானப்படுத்தி விட்டீர்கள். வாழ்க்கை முழுவதும் திரும்பஎதையும் எதிர்பார்க்காமல் உங்களுக்குச் சொந்த மானவளாக வாழ்ந்தவளும்,உங்களுடைய மகனைப் பெற்றெடுத்தவளுமான என்னை நீங்கள் அடையாளம் தெரிந்துகொள்ள வில்லை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். உங்களை உயிரைவிட அதிகமாகக்காதலித்தவளை ஒரு விலை மாதுவாக நினைத்து ஒரு இரவுக்கான கூலியைத் தருவதுஎன்பது...!

அதற்குப்பிறகு அங்கு ஒரு நிமிடம்கூட என்னால் நின்று கொண்டிருக்க முடியவில்லை. எவ்வளவு வேகமாக அங்கிருந்து புறப் பட முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அங்கிருந்து போய்விட வேண்டும் என்று நான் மனதில் நினைத்தேன். அதற்காக நான் என்னுடைய தொப்பியைத் தேடினேன். எங்கே இருக்கிறது என்று இங்குமங்கும் பார்த்தேன். மேஜைமீது ரோஜா மலர்கள் வைக்கப் பட்டிருந்த பூப்பாத்திரத்திற்கு அருகில் இருந்தது. அப்போது அந்த வெள்ளை நிற ரோஜா மலர்களைப் பார்த்தபோது, நினைவின் வெளிச்சத்தை நோக்கி உங்களைத் தட்டிஎழுப்பக் கூடிய இன்னொரு இறுதி முயற்சியைச் செய்து பார்க்க வேண்டும் என்றுஎனக்குத் தோன்றியது.

“இந்த மலர்களை எனக்குத் தருவதற்கு ஆட்சேபணை உண்டா?” நான் கேட்டேன். நீங்கள் அந்த மலர்களை ஒன்றாக எடுத்து என்னிடம் நீட்டினீர்கள்.”எடுத்துக்கோ...”

“இல்லை... உங்களுடைய காதலிகளில் யாராவது கொடுத்ததாக இருக்குமே! அப்போது...” நான் பாதியில் நிறுத்தினேன்.

“சில நேரங்களில் இருக்கலாம்... ஆனால், இதை யார் அனுப்பினார்கள் என்று தெரியவில்லை. அதனால்தான் இந்தப் பூக்கள்மீது எனக்கு ஒரு பிரியம்...”

“ஒருவேளை நீங்கள் மறந்துபோய் விட்ட ஏதோ அதிர்ஷ்டமில்லாத பெண்ணாக  இருக்கலாம்...” அந்த முகத்திலிருந்து கண்களை எடுக்காமலே நான் சொன்னேன்.

உங்களுடைய கண்களில் ஆச்சரியத்தின் நிழலாட்டம்... அப்போதாவது நீங்கள்என்னைப் புரிந்து கொள்வீர்கள் என்று நான் கருதினேன். என் மனம் அந்த நிமிடத்திற்காக காதுகளைத் தீட்டி வைத்துக் கொண்டு இருந்தது. ஆனால், அது நடக்கவில்லை. அதற்கு பதிலாக சற்று புன்சிரிப்புடன் நீங்கள் என்னை மீண்டும்அருகில் சேர்த்து வைத்துக் கொண்டு, அணைத்து என் உதட்டில் அழுத்தி முத்தமிடமட்டும் செய்தீர்கள். நிறையத் தொடங்கிய என்னுடைய கண்கள் ததும்புவதற்குமுன்பே உங்களிடமிருந்து அதை மறைக்க வேண்டும் என்பதற்காக, நான் வேக வேகமாக வாசலைக் கடந்தேன். திடீரென்று வேகமாக வந்ததில் வாசலுக்கு அருகில் உங்களின் அந்தப் பழைய பணியாள் ஜான்மீது நான் மோதி விட்டேன். ஜான் ஒரு நொடிப் பொழுதுஎன்னைப் பார்த்தார். பிறகு, வேகமாக விலகி நின்றார். கண்ணீர் திரைச் சீலையின் வழியாக என்றாலும், ஜான் என்னை அடையாளம் கண்டு கொண்டார்என்பதை அவருடைய முகத்தில் நீண்ட பல வருடங்களுக்குப் பிறகு நிமிட நேரத்தில்ஒரு மின்னலைப் போல கண்ட காட்சியில் அவர் என்னை யார் என்று தெரிந்து கொண்டார்! அவருடைய கண்களில் அப்போது இரக்க உணர்வு உண்டானதைப் போலதெரிந்தது. ஆனால், நீங்கள் என்னை அடையாளம் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்புகளில் ஆயிரத்தில் ஒரு பகுதிகூட இல்லாமலிருக்கும் அவர் என்னைச்சரியாக புரிந்து கொண்டதாக எனக்குத் தேன்றியது. என் மனம் ஜானின்மீது கொண்ட நன்றியால் நிறைந்து ததும்பியது. அவருக்கு முன்னால் முழங்காலிட்டு அமர்ந்து அந்த கைகளில் முத்தமிட வேண்டும்போல எனக்குத் தோன்றியது. என் இதயத்தைக் காயப்படுத்திக் கொண்டு நீங்கள் என்னுடைய மஃப்ளருக்குள் திணித்து வைத்தஅந்தப் பண நோட்டுகளை நான் ஜானின் கையில் ஒப்படைத்தேன்.

அன்பிற்குரியவரே, எனக்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்று அனைவரும் என் மீது கருணையைப் பொழிகிறார்கள். அன்பால் என்னை மூடுகிறார்கள். என்னை அடையாளம் தெரிந்து கொள்கிறார்கள். என்றும் எனக்கு விருப்பமான நீங்கள்மட்டும் ஒரு முறைகூட எனக்கு யார் என்று அடையாளம் கண்டு பிடிக்கவே இல்லையே!ஒருமுறைகூட என்னைப் புரிந்து கொள்ளவில்லையே!

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel