அறியாத பெண்ணின் அஞ்சல் - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 11053
புகழ் பெற்ற எழுத்தாளரான “ஆர்” சில நாட்களாக ஒரு சிறு பயணத்தில் இருந்தார். இந்த குளிர் நிறைந்த புலர்காலைப் பொழுதில் தான் அவர் வியன்னாவிற்குத் திரும்பி வந்தார். புகைவண்டி நிலையத்தில் பத்திரிகையை வாங்கிய போதுதான் அன்றைய தேதியே அவருக்கு ஞாபகத்தில் வந்தது. அன்று அவருடைய 41-ஆவது பிறந்த நாள். அதைப் பற்றி அவருக்கு சந்தோஷமோ வருத்தமோ எதுவும் தோன்றவில்லை. புகைவண்டி நிலையத்தில் வாடகைக் காரைப் பிடித்து அவர் நேராக வீட்டிற்கு வந்தார். குளித்து முடித்தவுடன், சூடான காப்பியுடன் வேலைக்காரன் அவருக்கு அருகில் வந்தான். நாளிதழ்களும் கடந்த நாட்களில் அவருக்கு வந்த அஞ்சல்களும் மேஜை மீது இருந்தன. அந்த நாட்களில் அவருக்கு வந்த தொலைபேசி அழைப்புகள் பற்றிய விவரங்களை அறிவித்து விட்டு வேலைக்காரன் அறையை விட்டு வெளியேறியவுடன், ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தவாறு நாற்காலியில் சாய்ந்தார்.
அஞ்சல்களை அலட்சியமாக அலசிப் பார்த்து, முக்கியம் என்று தோன்றியவற்றைப் பிரித்து கண்களை அவற்றில் ஓட்டினார். மீதி இருந்தவற்றை ஓரத்தில் வைத்து விட்டு பத்திரிகைகளை வாசிப்பதற்காகத் திரும்பினார். அலட்சியமான வாசிப்பிற்கு மத்தியில் தன்னை ஈர்த்த சில செய்திகளை முழுமையாக வாசித்தார். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு, அதற்குப் பிறகும் எஞ்சியிருந்த அஞ்சல்களை வாசிப்பதற்காக அவர் திரும்பி வந்தார். அந்தக் கடிதங்களின் கூட்டத்தில் சாதாரணமாக இருப்பதை விட கனமாக இருந்த ஒரு கவரை அப்போதுதான் பார்ப்பதைப் போல, கவனமே இல்லாமல் எடுத்துப் பிரித்தார்.
அது ஒரு சிறிய புத்தகத்தின் கையெழுத்துப் பிரதியைப் போல தோன்றியது. உள்ளே இருந்த விஷயங்கள் ஏராளமான பக்கங்களில் இருந்தன. ஒரே பார்வையிலேயே அந்த எழுத்துகள் பெண்ணால் எழுதப்பட்டவை என்பது தெரிந்தது. கவரை கீழே போடுவதற்கு முன்னால் அதற்குள் இருந்தவற்றை அவர் மீண்டும் சோதித்துப் பார்த்தார் - தகவல்களுடன் ஒரு “கவரிங் லெட்ட”ரும் இருக்கும் என்ற எண்ணத்துடன். ஆனால், அது “கவரிங் லெட்டர்” எதுவும் இல்லாமல் இருந்தது.
“எந்தச் சமயத்திலும் என்னை அறிந்திராத என்னுடைய உங்களுக்கு....” என்று ஆரம்பமாகும் அசாதாரணமான தொடக்கத்தை வாசித்தபோது அவருக்கு அந்தக் கடிதத்தில் ஒரு ஆர்வம் தோன்றியது. எனினும், தனக்குத்தானா....அப்படியென்றால் யார் எழுதியதாக இருக்கும் என்ற சந்தேகத்தைத் தீர்ப்பதற்காக அவர் குப்பைக் கூடைக்குள் எறிந்த கவரை திரும்பவும் எடுத்தார். பெறுநர் முகவரி அவருடையதுதான். ஆனால், அதில் எந்தவொரு இடத்திலும் அனுப்பிய ஆளின் பெயரோ முகவரியோ இல்லை.
மேலும் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்து விட்டு, அவர் வாசிப்பைத் தொடர்ந்தார்.
“அன்பிற்குரியவரே, துயரம் நிறைந்த மூன்று இரவு, பகல்களுக்குப் பிறகு நேற்று என்னுடைய மகன் மரணத்தைத் தழுவி விட்டான். அவனுடைய உயிருக்காக நான் தெய்வத்திடம் எவ்வளவோ கெஞ்சி மன்றாடினேன். எனினும்... இன்ஃப்ளூவென்ஸா என் தங்கச் செல்லத்தை சுட்டெரித்து விட்டது. அவன் நடுங்கும்போது, பனிக்கட்டிகளால் அவனுடைய நெற்றியைக் குளிரச் செய்ய முயற்சித்தவாறு நீளமான நாற்பது மணி நேரங்கள் கண்களை மூடாமல் நான் அவனுக்கு அருகிலேயே உட்கார்ந்திருந்தேன். அந்த இரவு, பகல் வேளைகளில் நடுங்கிக் கொண்டிருந்தபோதிலும், அவனுடைய மென்மையான கைகளை நான் என்னுடைய உள்ளங்கைகளுக்குள் வைத்துக் கொண்டு அவனுக்கு அருகிலேயே உட்கார்ந்திருந்தேன். மூன்றாவது இரவு ஆகும் போது நான் மிகவும் களைத்துப் போயிருந்தேன். என்னுடைய கண் இமைகள் கனமாகி, என்னையே அறியாமல் மூடிக் கொண்டிருந்தன. அவனுடைய படுக்கைக்கு அருகில் “சொறசொற”வென்று இருந்த ஸ்டூலில் உட்கார்ந்தவாறு நான் தூங்கி விட்டிருக்க வேண்டும். மூன்று நான்கு மணி நேரங்கள்... இதற்கிடையில் எப்போதோ இரக்கமே இல்லாத மரணம் அவனை என்னிடமிருந்து தட்டிப் பறித்துவிட்டது... என் உயிராக இருந்த என்னுடைய அன்பான தங்கச் செல்லக் குழந்தையை...
இதோ... நான் இதை எழுதும்போதுகூட அவன் அந்தக் கட்டிலில் அதே கிடப்பில் கிடக்கத்தான் செய்கிறான். ஒளிவீசிக் கொண்டிருக்கும் அந்த சின்னஞ்சிறிய கண்களை மெல்ல மூடிக் கொண்டு, கைகளை மார்பில் கோர்த்து வைத்துக் கொண்டு அமைதியாகத் தூங்கிக் கொண்டிருப்பதைப்போல... அந்தக் கட்டிலின் நான்கு மூலைகளிலும் எரிய வைக்கப்பட்டிருந்த மெழுகுவர்த்திகளின் நெருப்பு நாக்குகள் அறைக்குள் இருந்த சிறிய காற்றில் அசைந்தாடும்போது உண்டாகும் நிழலாட்டத்தில், அவனுடைய உடலுறுப்புக்கள் அசைவதைப் போல தோன்றின. தேவையில்லாமல் நினைக்கிறேன் என்று தோன்றினாலும், அவன் இறக்கவில்லை, தூங்கிக் கொண்டிருக்கிறான் என்று அப்போது நினைத்தேன். இந்த உறக்கம் முடிந்தபிறகு அவன் சாதாரணமாக கண் விழித்து எழுந்து என்னைக் கொஞ்சிக்கொண்டே அழைப்பான் என்று...
தேவையில்லாமல்கூட இப்படி எதிர்பார்ப்பதற்காகவும் கடுமையான ஏமாற்றத்தால் மூச்சடைத்துப் போவதற்காகவும் நான் இனிமேல் அந்தப் பக்கம் பார்க்கமாட்டேன்; அப்படி எதுவும் நடக்காது என்பதும் அவன் என்றென்றைக்குமாக என்னை விட்டுப் பிரிந்து சென்று விட்டான் என்பதும் எனக்குத் தெரியும்.