உலக்கை - Page 7
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6791
உண்ணுலி எதுவும் சொல்லவில்லை. அவள் வெறுமனே புன்னகைத்தாள்.
தெற்குப் பக்க வீட்டில் வசிக்கும் மாதவனும் சண்டையில் பங்கெடுத்துக் கொண்டான். மறுநாள் மாதவன் குட்டனைப் பார்த்தபோது, சண்டையைப் பற்றி உரையாடுவதற்குத் தயங்கவில்லை. ஆனால் அவன் ஏமாற்றத்துடன் பேசினான்.
குட்டன் சொன்னான் : “நான் நினைச்சது நடக்கலையேடா?”
மாதவன் கேட்டான் : “நீ என்ன நினைச்சே?”
“இந்த நிலத்தின் முன்னாள் சொந்தக்காரனை உனக்குத் தெரியுமா?”
“ம்.... கேள்விப்பட்டிருக்கேன். உன் அப்பாவை உலக்கையால்...”
குட்டனின் முகம் கோபமானது.
“அந்த உலக்கையை எடுத்துக்கொண்டு நான் அங்கே போனேன். அவனை.. அவனை...” கோபம் அவனுடைய வார்த்தைகளைத் தடை செய்தது.
குட்டனின் தந்தையை உலக்கையைக் கொண்டு அடித்துக் கொன்ற கதையை மாதவன் ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்தான். ஆனால், அந்த உலக்கையை இப்போதும் பத்திரமாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற விஷயத்தையும், அந்தப் பழிக்குப் பழிவாங்க வேண்டும் என்ற நெருப்பு பயங்கரமாகக் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருப்பதையும் அவன் அப்போது மட்டுமே தெரிந்துகொண்டான்.
ஏரியின் கரையிலிருந்து மீன் வாங்கிக் கொண்டு வந்த பப்புவும் அந்த உரையாடலில் பங்கு கொண்டான். அவன் சொன்னான் : “இது ஒண்ணும் புதிய விஷயம் இல்லையடா குட்டா. என் பொண்டாட்டியின் மூத்த அண்ணன் பசி இருந்த காரணத்தால், ஒரு இளநீரைப் பறிச்சுக் குடிச்சிட்டாருன்னு தென்னை மரத்துல பிடிச்சுக் கட்டி, உலக்கையால அடிச்சே கொன்னுட்டானுங்க. அந்த மாதிரி தென்னை மரத்துல பிடிச்சுக் கட்டி வச்சு, உலக்கையால எவ்வளவு பேரை அடிச்சுக் கொன்னுருப்பாங்க தெரியுமா?”
அந்த உரையாடல் அப்படியே நீண்டு கொண்டு சென்றது. பணக்காரர்களின் கொடுமைகளைப் பற்றி பப்பு பற்பல கதைகளையும் சொன்னான்.
குட்டன் கேட்டான் : “அப்படியென்றால் அரசாங்கத்துக்கு இந்த விஷயங்களெல்லாம் தெரியாது. அப்படித்தானே பப்பு அண்ணே?”
பப்புவும் மாதவனும் அதைக்கேட்டு விழுந்து விழுந்து சிரித்தார்கள். மாதவன் சொன்னான்: “இந்த விஷயத்தை அரசாங்கம் தெரிந்து என்ன ஆகப்போகிறது? அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் வருவதற்கு முன்னாடியே, பிணத்தை எரித்து சாம்பலாக ஆக்கிடுவாங்க. தெரியுமா? அவர்கள் வர்றப்போ ஒரு விருந்தைக் கொடுத்து, பல விஷயங்களையும் பேசி, சிரிச்சு விளையாடி அனுப்பி வைப்பார்கள்; கை நிறைய கொடுத்தும் அனுப்புவாங்க.”
நகரத்திலிருக்கும் தொழிற்சாலைகளில் நடக்கும் கொடுமைகளைப் பற்றிக் கூறுவதற்கு மாதவனிடமும் சில கதைகள் இருந்தன. ஆனால், அவர்கள் எல்லோரும் அவற்றைவிடக் கொடுமைகளைத் தாங்கிக்கொண்டு வேலை செய்பவர்களாக இருந்ததால், நகரத்தின் கதைகள் எதுவும் அவர்களை ஆச்சரியப்படுத்தவில்லை. இறுதியில் மாதவன் சொன்னான்: “இப்போதைய கதைகள் வேறு... இப்போ உதைப்பது, காறித் துப்புவது, அடிப்பது, மிதிப்பது எல்லாம் குறைஞ்சிடுச்சு. வேலை செய்பவர்களுக்கென்று சங்கம் இருக்கு.”
அதற்குப் பிறகும் சிறிது நேரம் அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். அந்த உரையாடல் பக்கத்து வீடுகளில் உள்ள அவர்களை ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தியது. அவர்கள் ஒருவரோடொருவர் நெருங்கினார்கள். அதற்குப் பிறகு அவர்கள் ஒன்றாகச் சேர்ந்துதான் தொழிற்சாலைக்கு வேலைக்குச் செல்வார்கள். ஒன்றாகச் சேர்ந்தே திரும்பி வருவார்கள்.
இரவில் சாப்பிட்டு முடித்த பிறகு, அவர்கள் மூன்று பேரும் மாதவனின் வீட்டில் கூடுவார்கள். முதலாளிகள், பணக்காரர்கள் ஆகியோரின் கொடுமைகளைப் பற்றியும், குறைவான கூலியைக் கொடுப்பதைப் பற்றியும், வேலையின் கடுமையைப் பற்றியும், ஒவ்வொரு நாளும் வாழ்க்கையில் இருக்கக்கூடிய துன்பங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருப்பார்கள்.
மாதவன் கூறுவான்: “நகரத்தில் இருக்கும் தொழிலாளிகளைப் போல நமக்கும் சங்கம் வேணும்டா குட்டா.”
குட்டனின் நட்பு வட்டாரம் உண்ணுலிக்குப் பிடிக்கவில்லை. தன்னுடைய வாழ்க்கையைப்போல குட்டனின் வாழ்க்கையும் அந்த உலக்கையுடன் கலந்துவிட வேண்டும் என்றும்; தன் கணவனைக் கொன்றவர்களைப் பழிக்குப் பழி வாங்கிவிட்டு மரணமடைய வேண்டுமென்றும் அவள் விருப்பப்பட்டாள். அவளுடைய முகத்தில் சுருக்கங்கள் மேலும் அதிகமாகவே வெளியில் தெரிந்தன. தலையில் இருந்த முடி நரைக்க ஆரம்பித்தது. அந்தக் கண்களில் இருந்த மென்மைத்தனம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிட்டது. சில நேரங்களில் மட்டும் பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்பதைக் காட்டும் நெருப்புக் கொழுந்துகள் கண்களில் தெரியும். அவள் பெரும்பாலான நேரங்களிலும் அந்தக் கட்டிலிலேயே இருப்பாள். உலக்கைக்கு அடியிலேயே அவள் தன் நேரத்தைச் செலவிடுவாள்.
ஒருநாள் உண்ணுலி குட்டனிடம் அவன் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று சொன்னாள்.
“உனக்கு ஒரு பொண்ணு வேணும்” - அவள் சொன்னாள்.
குட்டன் வெறுமனே ‘உம்’ மட்டும் கொட்டினான்.
சில நாட்கள் கடந்த பிறகு, குட்டன் திருமணம் செய்வதற்கு தான் ஒரு பெண்ணைப் பார்த்து வைத்திருப்பதாகச் சொன்னான்.
“அம்மா நீங்க அவளைப் பார்க்கணும்.”
“நான் பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவள் இங்கே வந்த பிறகு, நான் பார்த்தாலே போதும்.”
திருமணம் முடிந்து, கல்யாணி தன் கணவனின் வீட்டில் வசிப்பதற்காக வந்தாள். ஒரு சாதாரணப் பெண்ணாக அவள் இருந்தாள். அழகி அல்ல; அழகற்றவளும் அல்ல. அவளுக்கு பெரிய ஆசைகளோ எதிர்பார்ப்புகளோ இல்லை. வெறுக்கத்தக்க அடியோ, உதையோ வாழ்க்கையில் இல்லாமல் இருக்க வேண்டும். கவலைகள் தாங்கிக் கொள்ளும் அளவிற்கு இருக்க வேண்டும். அவள் விருப்பப்பட்டது அவ்வளவுதான்.
இதற்கிடையில் தொழிற்சாலையில் பிரச்சினைகள் உண்டாயின.
முதலாளி கூலியைக் குறைத்தார். அதைத் தொழிலாளிகளில் யாரும் வெளிப்படையாக எதிர்க்கவில்லை. எல்லோரும் கவலையுடன் அதற்க சம்மதித்தார்கள். ஆனால், அந்தக் குறைந்த கூலிகூட உரிய நேரத்தில் கிடைக்காமல் இருந்தது. தொழிலாளர்களும் அவர்களுடைய குடும்பங்களும் பட்டினி கிடந்தன.
ஒருநாள் ஒரு தொழிலாளி பசி, துன்பங்கள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு பைத்தியம் பிடித்தவனைப்போல முதலாளியின் அறைக்குள் நுழைந்து சென்று, கூலியைத் தரவேண்டும் என்று சொன்னான். அந்த தைரியச் செயலுக்கு அப்போதே அவனுக்குத் தண்டனையும் கிடைத்தது. இரண்டு கன்னங்களிலும் அடியும் பிடறியில் ஒரு தள்ளும் கிடைத்தன.
எல்லோரும் கவலையுடன் அதைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்கள்; யாரும் எதிர்க்கவில்லை.
அன்று சாயங்காலம் முதலாளியின் பாதுகாவலனான ஒரு ரவுடி அந்தத் தொழிலாளியை மீண்டும் கடுமையாகத் தாக்கினான்.
மறுநாள் தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு இடையில் அழுத்தப்பட்ட ஒரு ‘முணுமுணுப்பு’ உண்டானது. சதுப்பு நிலத்திலிருந்து வெப்பமான நீராவி கிளம்பி மேலே வருவதைப்போல அந்த முணுமுணுப்பு படிப்படியாகக் கிளம்பி மேலே உயர்ந்தது. ஆனால், யாரும் வெளிப்படையாக எதுவும் சொல்லவில்லை.