உலக்கை - Page 5
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6791
கொச்சய்யப்பனின் கையில் விழுந்த அந்த உலக்கை, மீண்டும் காற்றில் உயர்ந்தது. அது அவனுடைய தலைமீது வந்து விழுந்தது.
உண்ணுலி வாயைத் திறந்தாள். ஆனால் சத்தம் வெளியே வரவில்லை. உலகம் ஒருமுறை சுற்றிவிட்டு, திடீரென்று அசைவே இல்லாமல் நின்றது. பனிக்காலத்தின் மாலை நேரத்தைப்போல ஒரு மங்கல்! கொச்சய்யப்பன் மெதுவாக... மெதுவாக ஆகாயத்தை நோக்கி உயர்ந்து கொண்டிருந்தான். உண்ணுலி தன் கணவனின் பாதங்களைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தாள். அந்தக் குறைவான வெளிச்சத்தில் கணவனும் மனைவயும் ஆகாயத்தின் வெட்டவெளியை நோக்கி அமைதியாக உயர்ந்தார்கள். திடீரென்று கொச்சய்யப்பனுடைய காலின் பெருவிரல் ஒன்று அசையவே, உண்ணுலியின் பிடி கைவிட்டுப்போனது. அவள் பூமியில் தலைகுப்புற விழுந்தாள்.
மாலை நேரத்தின் குளிர்ந்த காற்றில் உண்ணுலி கண்களைத் திறந்தாள். அவள் வாசலில் மல்லாந்து கிடந்தாள். அவள் கண்களைத் திறந்து சுற்றிலும் பார்த்தாள். அவள் மெதுவாக எழுந்து உட்கார்ந்தாள். அந்த இடம் யாருமே இல்லாமல் இருந்தது. ஒருவரையும் காணவில்லை. எந்தவொரு சத்தமும் கேட்கவில்லை.
அவள் எழுந்து தென்னை மரத்திற்கு அருகில் சென்றாள். கட்டப்பட்டிருந்த கயிறு அவிழ்க்கப்பட்டிருந்தது. அருகிலேயே உலக்கை கிடந்தது. தென்னை மரத்திலும் மண்ணிலும் ரத்தம் சிதறியிருந்தது.
மார்பில் கையை இறுகக் கட்டிக்கொண்டு அந்தோணி ஏரிக்கரையில் வந்து நின்றான்.
உண்ணுலி தலையை உயர்த்தினாள். அவள் கேட்டாள் : “எங்கே?”
“எரிந்து சாம்பலாக ஆயிட்டான்” - அந்தோணி மெதுவான குரலில் சொன்னான்.
உண்ணுலி அழவில்லை. அவளுடைய உடல் நடுங்கவில்லை. உலக்கையையும் கயிறையும் கையில் எடுத்துக்கொண்டு அவள் குடிசைக்குள் சென்றாள்.
குட்டனுக்கு வயது ஏழு முடிந்தது. அவன் தன் தாய்க்கு அருகில், அந்த கட்டிலில் படுத்துத்தான் தூங்குவான். அதிகாலையில் எழுந்தவுடன் தன் தாயுடன் சேர்ந்து அவனும் கட்டிலுக்கு மேலே நீளமாகக் கட்டப்பட்டுத் தொங்கிக் கொண்டிருக்கும உலக்கையைத் தொட்டு நெற்றியிலும் கண்களிலும் ஒற்றிக்கொள்வான். அவன் குழந்தையாக இருந்தபோது உண்ணுலி அவனைத் தூக்கியெடுத்து உலக்கையை தொடச் செய்வாள். பிறகு அவன் கட்டிலில் எழுந்து நின்று தன் கையை உயர்த்தி உலக்கையைத் தொட்டு நெற்றியிலும் கண்களிலும் ஒற்றிக்கொள்வான். அந்தச்செயல் அவனுக்கு வழக்கமான ஒன்றாகிவிட்டது. அது ஒரு நிரந்தர செயலாகிவிட்டது.
ஆனால், தான் ஏன் அதைச் செய்கிறோம் என்பதற்கான காரணம் அவனுக்குத் தெரியாது. ஒருநாள் அவன் உண்ணுலியிடம் கேட்டான்: “எதுக்கும்மா நாம உலக்கையைத் தொட்டு நெற்றியில ஒத்திக்கிறோம்?”
உண்ணுலி பதில் சொல்லவில்லை. அவளுடைய கண்கள் தானாகவே மூடிக்கொண்டன.
அதற்குப் பிறகும் குட்டன் கேட்டான் : “அது நம்ம தெய்வமா?”
“ம்... அது நம்ம தெய்வம்தான்” - அவள் எழுந்து சென்றாள்.
குட்டனின் ஆர்வம் நிற்கவில்லை என்பது மட்டுமல்ல- அது மேலும் அதிகரிக்கவும் செய்தது. அவன் அடிக்கடி உலக்கையைக் கூர்ந்து பார்ப்பான். சில நேரங்களில் தொட்டுப் பார்ப்பான். சில வேளைகளில் எட்டிப் பார்ப்பான். அவன் அதற்குப் பிறகும் கேள்விகளால் உண்ணுலியைத் தொந்தரவு செய்தான்.
ஒருநாள் ஏரியின் கரையில் கடந்து சென்ற அந்தோணியிடம் உண்ணுலி என்னவோ சொன்னாள். அந்தோணி சிறிது நேரம் சிந்தித்தவாறு நின்றுவிட்டு, மெதுவாக முனகியவாறு அங்கிருந்து நகர்ந்தான்.
உண்ணுலி குட்டனிடம் சொன்னாள் : “மகனே, நீ அந்தோணியின் வீட்டுக்குப் போ.”
“எதற்கும்மா?”
“அவர் உனக்கு தர்றதுக்காக என்னவோ வச்சிருக்காரு.”
குட்டன் வடக்குப் பக்கம் இருந்த வீட்டிற்குச் சென்றான். உண்ணுலி கட்டிலில் போய் படுத்தாள்.
சிறிது நேரம் கடந்த பிறகு, வெளியே ஒரு விசும்பல் சத்தம் கேட்டது. குட்டன் உள்ளே வந்தான்.
“என் அப்பாவை... என் அப்பாவை” - அவன் குலுங்கிக் குலுங்கி அழுதவாறு தன் தாயின் மார்பின்மீது சாய்ந்தான்.
உண்ணுலி அசையவே இல்லை. அவளுடைய முகத்தில் வெறுப்பு, கோபம் ஆகியவை நிழலாடிக் கொண்டிருந்தன.
“என் அப்பாவை அவர்கள் அந்த உலக்கையால் அடித்துக் கொன்னிருக்காங்க” - அவன் தேம்பித் தேம்பி அழுதான்.
“அந்தப் பக்கமா தள்ளி நில்லுடா” - உண்ணுலி உத்தரவிட்டாள்.
அவளுடைய உதடுகள் நடுங்கின. தன் மகனைத் தள்ளி நிற்குமாறு செய்துவிட்டு அவள் எழுந்தாள்.
“எதற்குடா நாயைப்போல ஊளையிடுறே” உலக்கையைச் சுட்டிக்காட்டிக் கொண்டு தொடர்ந்து அவள் சொன்னாள்: “அதை வச்சுத்தான் அவர்கள் அடிச்சுக் கொன்றார்கள்.” அவளுடைய உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. “நாயைப்போல ஊளையிடாதே. உன் அப்பா என்கிட்ட சொன்னாரு - நான் உன்கூட இருக்கேன்னு... என் வயிற்றில் இருக்குறதா.” அவளுடைய கண்கள் ஈரமாயின. அந்த ஈரம் வெகு சீக்கிரமே உலரவும் செய்தது.
அவள் வெளியே சென்றாள். சிறிது நேரம் கழித்து, உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு அவள் மீண்டும் குடிசைக்குள் வந்தாள். குட்டன் அப்போதும் உலக்கையையே எந்தவித அசைவும் இல்லாமல் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். உண்ணுலி மெதுவாக அவனுக்கு அருகில் சென்றாள். அவனுடைய தோளில் கையை வைத்துக்கொண்டு அவள் சொன்னாள்: “மகனே, உனக்குத் தருவதற்குத்தான் நான் அதை எடுத்து வச்சிருக்கேன்.”
குட்டன் எதுவும் பேசாமல் வெளியே சென்றான்.
அந்த உலக்கை உண்ணுலியின் அன்பு, பழிவாங்கும் எண்ணம் ஆகியவற்றின் சின்னமாக இருந்தது. அன்றைய அந்த சம்பவத்திற்குப் பிறகு அவள் எந்தச் சமயத்திலும் அந்த உலக்கையை விட்டு விலகி இருந்ததே இல்லை. கட்டிலில் அந்த உலக்கைக்குக் கீழே உட்கார்ந்து கொண்டும் படுத்துக் கிடந்தும் அவள் நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தாள்.
குளிர்ச்சியான அந்தக் கண்களில் சோகமயமான ஒரு குரூரம் நிழலாடிக் கொண்டிருந்தது. முகத்தில் இங்கும் அங்குமாக சுருக்கங்கள் விழுந்திருந்தன. அழகான அந்தக் கூந்தல் உதிர ஆரம்பித்திருந்தது.
அவளுடைய தந்தையும் தாயும் கிழக்குக் கரையில் தங்களுடன் வந்து வசிக்கும்படி அவளுக்கு அறிவுரை கூறினார்கள். அவள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அவள் உறுதியான குரலில் சொன்னாள்: “நான் இங்கே வசிப்பதற்காக வந்தவள். நான் இங்குதான் இருப்பேன்.”
தேங்காய் மட்டையை உடைத்தும், கயிறு திரித்தும் அவள் நாட்களை ஓட்டினாள். அவளுடைய தந்தையும் தாயும் எப்போதாவது அவளுக்கென்று எதையாவது கொடுத்தனுப்புவார்கள்.
குட்டனைப் பெற்றெடுத்த சமயத்தின்போது மட்டும் அவளுடைய தாய் அங்கு சில நாட்கள் தங்கியிருந்தாள்.