தேடித் தேடி... - Page 21
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6636
அன்று நான் ஏற்றிக் கொண்டு போன அதே பெண்தான். பிறகு எத்தனையோ தடவைகள் அதே பெண்ணை நான் பெரிய முதலாளிக்காவும், சின்ன முதலாளிக்காகவும் கொண்டு சென்றிருக்கிறேன். பெரிய முதலாளி சொல்லும்போது கடைவீதியில் இருக்கும் பங்களாவிற்குக் கொண்டு செல்ல வேண்டும்.
அவள் பெயர் கொச்சு மரியம். பெரிய முதலாளி அவளைத் தனக்கென வைத்துக் கொண்டிருக்கிறார். ஒருநாள் நான் கொச்சுமரியத்தை வண்டியில் ஏற்றிக் கொண்டு போனேன். யாருக்காக கொண்டு போனேன் தெரியுமா? ஒரு போலீஸ்காரருக்குத்தான். அந்தப் போலீஸ்காரர் என்னை அழைத்து என்னைப் பற்றி விசாரித்தார். யாரிடமும் இந்த விஷயத்தைச் சொல்லக் கூடாது என்று என்னைக் கேட்டுக் கொண்டார்.
இப்படி எவ்வளவு எஜமான்மார்களை எனக்குத் தெரியும் என்று நினைக்கிறீர்கள்? எவ்வளவோ முதலாளிமார்களை நான் இதன் மூலம் தெரிந்து வைத்திருக்கிறேன்!
மிளகு வியாபாரம் ஜரூராக நடக்கும் காலத்தில் எனக்கு நல்ல வருமானம் என்பதென்னவோ உண்மை. பாலாவில் இருந்தும் கோட்டயத்தில் இருந்தும் காரப்பள்ளியிலிருந்தும் பெரிய பெரிய முதலாளிகளெல்லாம் இங்கு வருவார்கள். இருபது மூடை, இருபத்தைந்து மூடை என்று மிளகை விற்பதற்காகக் கொண்டு வருவார்கள். மிளகு மொத்த வியாபாரிகள் மட்டும்தான் இங்கு வருவார்கள் என்றில்லை. தங்களின் சொந்த தோட்டத்திலிருந்து மிளகைக் கொண்டு வருகிறவர்களும்கூட வருவார்கள். அப்படி அவர்கள் இங்கு வரும் நேரத்தில் எனக்குக் கொண்டாட்டம்தான். ஒவ்வொரு நாளும் எனக்கு எவ்வளவு கிடைக்கும் என்பதைப் பற்றி உறுதியாக சொல்லவே முடியாது. அவர்கள் எல்லாமே அப்படித்தான். பணத்தைப் பெரிதாக நினைக்கவே மாட்டார்கள். அவர்களுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் நம்முடைய ஆலப்புழையில் இருக்கும் முதலாளிமார்கள் பிச்சைக்காரர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஒன்றிரண்டு பேர் திருமலைப் பகுதியில் செலவுக்குப் பணம் கொடுத்து பெண்களைத் தங்க வைத்திருந்தார்கள். அவர்களை வண்டியில் ஏற்றிக் கொண்டு போய் அங்கு விட வேண்டும். கள்ளோ, விஸ்கியோ வாங்கிக் கொண்டு போய் கொடுக்க வேண்டும். இதை நான் செய்தால் போதும். சில நேரங்களில் நான் செய்யும் வேலைக்கு கூலியாக ஐந்து ரூபாய் கிடைக்கும். சில நேரங்களில் பத்து ரூபாய் கிடைக்கும். ஆனால், உரிய நேரம் பார்த்து அவர்களைப் போய்ப் பார்க்க வேண்டும். அதுதான் முக்கியம். அந்தப் பெண்களுக்கான அனைத்துச் செலவுகளையும் ஏற்றுக் கொண்டு அவர்களை, முதலாளிமார்கள் தங்க வைத்திருந்தாலும் அந்தப் பெண்கள் அவர்களிடம் செல்லும்போது தங்களால் முடிந்த அளவிற்கு பணத்தைக் கறந்துவிட்டுத் தான் மறுவேலை பார்ப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு பெண் சொந்தமாக வீடே கட்டிவிட்டாள். ஒருவருடம் பாலாவைச் சேர்ந்த முதலாளி அவளிடம் போய் வந்து கொண்டிருந்தான். அதற்குப் பிறகு அந்த ஆள் வரவேயில்லை. வேறெங்கும் பார்க்க முடியவில்லை. அனேகமாக அவர் செத்துப் போயிருக்கலாம்.
அந்தப் பெண்களுக்கும் எனக்குமிடையே ஒருவித உடன்பாடு இருக்கும். அப்படி இருந்தால்தான் எல்லாவிஷயங்களும் சரியாக வரும். முதலாளி வராத நாட்களில் வேறு யாராவது ஆட்களைக் கொண்டுபோய் நான் விடுவேன். சில நேரங்களில் பாலாவைச் சேர்ந்த ஒரு ஆள் அவளிடமிருந்து போய்விட்டால், அதே ஊரைச் சேர்ந்த இன்னொரு ஆளை நான் கொண்டு போய் அவர்களிடம் விட வேண்டும். அப்படி பலமுறை நடந்திருக்கவும் செய்கிறது.
மிளகு வியாபாரம் சுறுசுறுப்பாக நடக்கும் காலத்தில் மிளகு விற்றப் பணம் ஏராளமாக கையில் வைத்திருந்தால், வியாபாரி தன் பையிலிருந்து தாராளமாக பணத்தை வெளியே எடுப்பான். அவனை ஏதாவது ஒரு பெண்ணிடம் நான் அழைத்துச் செல்ல வேண்டும். ஆளிசேரியிலும், தும்போலியிலும் இருக்கிற பெண்கள் என்னைப் பார்த்துவிட்டால், எனக்கு ஒரே தொந்தரவுதான். அவர்கள் தங்கள் பிரச்சினைகளைச் சொல்லி புலம்பத் தொடங்கிவிடுவார்கள். ஆனால், இந்தப் பெண்களிடம் ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. அந்த முதலாளிமார்கள் அவர்களுக்கு வேண்டிய அளவு பணத்தை வாரிக் கொடுப்பார்கள். இருந்தாலும், அவர்கள் யாருக்கும் தெரியாமல் பணத்தைத் திருடுவார்கள்.
ஒருமுறை அப்படிப்பட்ட ஒரு சம்பவம் மிகப்பெரியதாகி விட்டது. போலீஸ்காரர்கள் வரை விஷயம் போய் விட்டது.
கிழக்கு திசையிலிருந்து வரும் முதலாளிகளைத் தெரிந்து வைத்திருப்பதில் இன்னொரு ஆதாயம் இருக்கிறது. நம்முடைய ஆலப்புழையில் இருக்கும் முதலாளிமார்களின் வியாபாரத்தில் அவர்களையும் இணைத்துவிட வேண்டும். இதையே மற்ற தரகர்கள் செய்தால், அவர்களுக்கு இவர்கள் கமிஷன் தரவேண்டும். நான் என்றால் அவ்வளவு தரவேண்டிய அவசியமில்லை.
இப்படித்தான் குன்னும்புறத்து முதலாளிக்கு நான் கிழக்கு திசையிலிருந்து வந்த ஒரு முதலாளியை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி வைத்தேன். நூற்றைம்பது மூடை மிளகு... அந்த மிளகு வியாபாரம் நடந்து முடிந்தது. மிளகைக் காயப் போட்ட போது, பெரிய அளவில் மிளகுக்கு விலை உயர்வு உண்டானது. பள்ளாத்துருத்தியில் இருக்கும் வீடும் நிலமும் அதில் கிடைத்த லாபத்தில் வாங்கியதுதான்.
அந்த நிலத்தை வாங்கிவிட்டு, முதல் தடவையாக அந்த நிலத்தில் விளைந்த தேங்காய்களைப் பறிப்பதற்காகச் சென்றபோது முதலாளி தன்னுடன் என்னையும் அழைத்துச் சென்றார். அப்போது அவர் சொன்னார்:
"டேய், நாய்க்குட்டி. நீ கொண்டு வந்த வியாபாரத்துல சம்பாதிச்ச காசுல வாங்கின இடம்டா இது..."
அதே போல் என்னை தேங்காய் தின்றதற்காக உதை தந்து வேலையிலிருந்து போகச் சொன்ன முதலாளிக்கு பாலாவிலிருந்து தேங்காய்கள் வந்து சேருமாறு செய்தேன். அப்போது தேங்காய் கிடைப்பதே படு கஷ்டமாக இருந்த காலம். அதைச் செய்ததற்காக அந்த முதலாளி எனக்குப் பத்து ரூபாய் தந்தார்.
அப்போது நான் அந்தப் பழைய கதையை அவரிடம் சொன்னேன். அதைக் கேட்டு முதலாளி விழுந்து விழுந்து சிரித்தார்.
பாலாவில் இருந்து மட்டுமல்ல, உல்லாசமாக இருந்துவிட்டுப் போகலாமென்ற சில வேளைகளில் கொச்சியிலிருந்தும் பல முதலாளிமார்கள் வருவார்கள். அவர்கள் வந்தாலும் எனக்கு நல்ல வேட்டைதான்.
ஒரு விஷயத்தை என்னால் சொல்லாமலிருக்க முடியவில்லை. இந்த முதலாளிமார்களுக்கு இரக்கம் என்பது மருந்துக்குக் கூட கிடையாது. குன்னும்புறத்து முதலாளி கொச்சு மரியத்தைக் கொண்டு வந்து வீடு எடுத்துத் தங்க வைத்தார். அவள் முதலாளியுடனும், அவருக்குத் தெரியாமல் சின்ன முதலாளியுடனும், பிறகு அவர்கள் சொல்லுகிற மற்றவர்களுடனும் மட்டுமே தொடர்பு வைத்திருந்தாள் என்ற உண்மை எனக்கு நன்றாகவே தெரியும். தனக்கென்று தனிப்பட்ட முறையில் அவள் யாரையும் வைத்துக் கொண்டதே இல்லை. சிறிது நாட்கள் கழித்து, அவர்கள் அவளை முழுமையாக மறந்து போனார்கள். பெரிய முதலாளி காண்ட்ராக்டரின் வீட்டைத் தேடியோ அல்லது வேறு எங்கேயோ போய்விட்டார்.