தேடித் தேடி... - Page 20
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6636
முன்பு அவள் என்னுடைய நரம்புகளில் மின்சாரம் பாயச் செய்திருக்கிறாள். அவளின் பின்பக்கத்தைப் பார்த்து அடக்க முடியாத அளவிற்கு நான் உணர்ச்சி வசப்பட்டு நின்றிருக்கிறேன். பெஞ்சின் மேல் கையை ஊன்றிக் கொண்டு எனக்கு முன்னால் அவள் ஒயிலாக நின்றபோது, நான் அவளின் ப்ளவ்ஸுக்குள் பார்வையைச் செலுத்தி மெய்மறந்து அமர்ந்திருக்கிறேன். இப்போது? எனக்கே தெரியவில்லை.
ஒருவேளை அவள் தன்னுடைய ப்ளவ்ஸைக் கழற்றியதும் புடவையை அவிழ்த்து எறிந்ததும் என்னை உணர்ச்சி வசப்படச் செய்வதற்காக இருக்கலாம்.
எனக்கு மிகவும் நெருக்கமாக அவள் வந்து அமர்ந்தாள். தொடர்ந்து மெதுவாக சிரித்தபடி அவள் கேட்டாள்:
"ரூபாய் எங்கே?"
நான் என்னுடைய பெல்ட்டின் உறைக்குள்ளிருந்து இருந்த ரூபாய் முழுவதையும் எடுத்து அவள் கையில் தந்தேன்.
"இதுல எவ்வளவு இருக்கு?"
"இருபது..."
"இருபதா..."
அவள் எண்ணிப் பார்த்தாள். சரியாக இருந்தது. அடுத்த நிமிடம் அவள் என் கழுத்தில் தன்னுடைய கைகளால் சுற்றியவாறு எனக்கு ஒரு முத்தம் தந்தாள்.
அவள் அந்த விளக்கை வாயால் ஊதி அணைத்தாள்.
ஒரு பாயில் நானும் அவளும் படுத்திருந்தோம். அவள் என் உடம்பை தன் விரல்களால் தடவினாள். என்னுடைய முகத்துடன் தன்முகத்தைச் சேர்த்தவாறு அவள் கேட்டாள்:
"என்ன இது...?"
"ம்... என்ன?"
"இது ஒரு பெரிய விஷயம்தான். பயப்படாதே!"
சிறிது நேரம் கழித்து அவள் என்னைப் பார்த்துக் கேட்டாள்.
"ம்... பேரு என்ன?"
அவளின் அந்தக் கேள்வி எனக்குள் எங்கேயோ சென்றது. இப்படியொரு கேள்வியை இதற்கு முன்பு என்னிடம் யாரும் கேட்டதில்லை. அப்படியே யாராவது இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தாலும், என்னுடைய பெயரைச் சொல்வதில் எனக்கு எந்தவொரு தயக்கமும் இருந்திருக்காது. முன்பு ஹோட்டலுக்குப் பின்னாலிருந்தவாறு அந்த கறுத்துத் தடித்துப் போயிருந்த ஆள் பெயர் சொல்லி என்னை அழைத்ததை மனதில் இப்போதும் நினைத்துப் பார்த்தேன். அந்தக் குரல் இப்போது கூட என் காதுகளுக்குள் முழங்கிக் கொண்டே இருந்தது.
"நாய்க்குட்டி!"
அந்த ஆள் வேறு ஏதாவது பெயர் சொல்லி அழைத்திருந்தால்...! உண்மையாகவே நான் நாயின் மகனாக இருந்தாலும், எனக்கு அந்தப் பெயர் பிடிக்கவில்லை என்பதே உண்மை.
என்னுடைய பெயர் நாய்க்குட்டி என்று சொன்னால் அவள் என்னைப் பற்றி என்ன நினைப்பாள்? நாயின் மகனைத் திருமணம் செய்வதற்கு எந்தப் பெண் சம்மதிப்பாள்? நான் அந்தக்கதையை முழுமையாக அவளிடம் சொல்ல வேண்டுமா என்ன? அவ்வளவுதான்- அதற்குப் பிறகு அவள் எந்தக் காலத்திலும் என்னுடைய மனைவியாக வர ஒப்புக்கொள்ளவே மாட்டாள்.
நான் சொன்னேன்:
"எனக்குப் பேரே கிடையாது."
"என்ன? பேர் இல்லாம யாராவது உலகத்துல இருப்பாங்களா?"
"அது இருக்கட்டும்... உன்னோட பேர் என்ன?"
"இப்ப சொல்ல மாட்டேன்."
சில நொடிகள் அமைதி நிலவியது.
அவள் கேட்டாள்:
"ஆமா... நீ என்ன ஜாதி?"
சிறிது நேரம் கழித்து நான் சொன்னேன்:
"நான் எந்த ஜாதியும் இல்லை."
"நீ சொல்றது பொய்."
"இல்ல... நான் உன்கிட்ட ஒண்ணு கேட்கட்டுமா?"
"என்ன?"
"நீ என் மனைவியா இருக்க முடியுமா?"
அவள் அடுத்த நிமிடம் சொன்னாள்:
"முடியாது. நீ அந்த எண்ணத்தோடதான் இங்கே வந்திருக்கியா?" அதற்குப் பிறகு வேறெதுவும் கேட்க எனக்குத் தோன்றவில்லை.
அவள் சொன்னாள்:
"எனக்கு தூக்கம் வருது."
சிறிது நேரம் சென்றதும் அவள் சொன்னாள்:
"எனக்கு கண்களை மூடிக்கணும்போல இருக்கு..."
அதற்குப் பிறகு அவள் சொன்னதற்குப் பின்னாலிருக்கும் அர்த்தத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
அவள் சொன்னாள்:
"சொந்த வீட்டுல இருக்குறது மாதிரி இங்கே நீ ராத்திரி முழுவதும் படுத்து உறங்க முடியாது."
அந்தக் கிழவியின் குரல் அப்போது கேட்டது:
"அங்கே என்னடி? படுத்துத் தூங்கிட்டானா? காலைப் பிடிச்சு இழுத்து வெளியே போடு."
நான் எழுந்தேன். சிறிது நேரம் கழித்து அவள் மீண்டும் சொன்னாள்:
"என்ன கிளம்பிட்டியா? இது வீணாயிடுச்சே!"
நான் எழுந்து கிழவியைத்தாண்டி வெளியேறினேன்.
9
என்னுடைய வேலை பெரும்பாலும் இரவு நேரங்களில்தான் என்று காலப்போக்கில் ஆகிவிட்டது. பகலில் இந்த வேகாத வெயிலில் ஓடி ஓடி பெரிய அளவில் பிரயோஜனம் எதுவுமில்லை என்பதை நானே புரிந்து கொண்டேன். எட்டு அணா சம்பாதிப்பதற்காக நான்கு மைல்கள் வண்டியை இழுத்துக் கொண்டு போக வேண்டும். உண்மையிலேயே அது மிகவும் கஷ்டமான ஒரு விஷயம். பகல் நேரத்தில் நான் ஏதாவது நிழல் இருக்கும் இடமாகப் பார்த்து வண்டியை நிறுத்திவிட்டு தூங்குவேன். இரவில் வண்டியை ஓட்டுவது என்பது ஒரு சுகமான அனுபவம். நான் நினைத்திருப்பதற்கும் மேலாக சில நேரங்களில் நமக்குக் காசு கிடைக்கும். வெயிலின் தொந்தரவு இருக்காது. பெரிய அளவில் கஷ்டங்கள் எதுவும் இருக்காது. ஆனால், வண்டி ஓட்ட ஆரம்பித்தவுடன், நம்முடைய கையில் காசு வந்து சேர்ந்து விடும் என்று கூறிவிடுவதற்கில்லை. வெறுமனே ரிக்ஷா ஓட்டுவதால் மட்டும் அந்தக் காசு நமக்கு கிடைத்துவிடாது. அதற்கு சில தகிடுதத்த வேலைகள் எல்லாம் நாம் செய்தாக வேண்டும். இந்த விஷயத்தில் நல்ல பயிற்சி ஒரு ஆளுக்கு இருக்க வேண்டும். சில இடங்களில் மிகவும் ரகசியமாக வண்டியைக் கொண்டு போய் நிறுத்தவேண்டும். அதற்குப் பிறகு சவாரி நம்மைத்தேடி வரும். எல்லா மனிதர்களாலும் முடியக்கூடிய காரியமில்லை இது.
ஆலப்புழையில் இருக்கும் பெரும்பாலான முதலாளிமார்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். "நீதான் நாய்க்குட்டியாடா?" என்று சில முதலாளிமார்கள் அவர்களாகவே என்னிடம் வந்து பேசுவார்கள். ஒருநாள் இதேமாதிரிதான் ஒரு சம்பவம் நடைபெற்றது. நான் 'ஆமாம்' என்று சொன்னேன். மாலை நேரம் வந்ததும் அந்த முதலாளி தன்னுடைய தொழிற்சாலையின் வாசலில் வந்து நிற்கும்படி சொன்னார். நானும் அவர் சொல்லியபடி போய் நின்றேன். உண்மையிலேயே அன்று இரவு எனக்கு நல்ல வருமானம்தான் என்று சொல்ல வேண்டும். முதலாளிமார்கள் மட்டுமல்ல, பெரிய பெரிய அதிகாரிகளும் பதவியில் இருப்பவர்களும் கூட எனக்கு நல்ல நெருக்கமான தொடர்புடையவர்கள்தான். வழியில் என்னைப் பார்க்கும்போது அவர்கள் புன்னகைப்பார்கள்.
ஒருநாள் குன்னுப்புறத்து பெரிய முதலாளி என்னை அழைத்து ஒரு பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார். அதன்படி புலயன்வழியில் இருக்கும் வீட்டிலிருந்து முதலாளிக்கு ஏற்கனவே பழக்கமான அந்தப் பெண்ணைக் கொண்டுபோய் கடைவீதியில் உள்ள முதலாளிக்குச் சொந்தமான காலியாகக் கிடக்கும் பங்களாவில் விடவேண்டும். அப்படி நான் கொண்டுபோகும் பெண் வேறு யாருமல்ல.