சந்தன மரங்கள் - Page 8
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6471
அவர் தன்னுடைய கோவணத்தை அவிழ்த்து, அழுகிப் போன பாகற்காயைப் போல இருந்த ஆண் உறுப்பை ஒரு பெண்டுலத்தைப் போல மெதுவாக ஆடுமாறு செய்து கொண்டு, என்னுடைய அறையில் இங்குமங்குமாக நடந்தபோது எனக்குப் பல நேரங்களில் வாந்தி எடுக்க வேண்டும் போல இருக்கும். ஒருமுறை அவர் கேட்டார்:
"டாக்டர் ஷீலா, நீ ஏன் வாந்தி எடுக்குறே? இரத்தப்போக்கு நின்று விட்ட பெண்களும் கர்ப்பம் தரிக்க முடியுமா?"
தன்னுடைய நகைச்சுவைப் பேச்சில் தான் மட்டுமே சிரிக்க முடியும் என்பது தெரிந்தும் அவர் மிகவும் உரத்த குரலில் சிரித்தார். ஆபாசம் தவிர, ஏதோ ஒன்று அந்தச் சிரிப்பில் இருந்தது. நான் மீண்டும் என்னுடைய விதியை நினைத்து நொந்து கொண்டேன். அழகான ஒரு ஆணின் அணைப்பில் இருந்து கொண்டு இரவு நேரத்தைக் கழிக்கும் பெண்களிடம் எனக்குப் பொறாமை உண்டானது. பொறாமை உடல் வேதனையைப் போல என்னை முற்றிலும் பாடாய்ப்படுத்தியது. என்னுடைய வாயில் எச்சில் வற்றியது.
ஒரு நாள் அவர் சொன்னார்:
"டாக்டர் ஷீலா, உன்னுடைய நோயாளிகளுக்கு மத்தியில் உன்னை வழிபடும் ஆண்கள் இருக்க வேண்டும். அவர்கள் தங்களுடைய உணர்ச்சிகளை வெளிக்காட்டினால், உன்னுடைய பதில் செயல் எப்படி இருக்கும்?"
"என்னிடம் உணர்ச்சியைக் காட்ட யாருக்கும் தைரியம் வராது. நான் யாரிடமும் நெருங்குவது இல்லையே! நோயாளிகளைப் பார்ப்பதும், அவர்களுக்குச் செய்ய வேண்டிய சிகிச்சையை முடிவு செய்வதும் என்னுடைய பார்வையில் வெறும் கடமையை நிறைவேற்றல் மட்டுமே. அவர்களைச் சோதித்துப் பார்க்குறப்போ, நான் அவர்களுடைய நோய்களை மட்டுமே பார்ப்பேன். அவர்களுடைய சொந்த வாழ்க்கைகளில் எனக்கு என்ன ஆர்வம்?"
"உன்னைப் போன்ற ஒரு பெண் வாழ்க்கையில் ஒருமுறையாவது உணர்ச்சிவசப்படுவது நடக்கத்தான் செய்யும். உனக்கு ஏற்ற ஆணை நீ இதுவரை பார்க்கல. அவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். எப்போது அவனை நீ சந்திப்பேன்னு சொல்ல மட்டும் என்னால் முடியாது."
"என்னிடம் இப்படி சொல்றதுக்கு உங்களுக்கே வெட்கமாக இல்லையா? மனைவி இன்னொரு ஆணுடன் உடலுறவில் ஈடுபடுவாள் என்று சொல்ல உங்களுக்கு வெட்கமாக இல்லையா? நான் இந்த மாதிரியான பேச்சுக்களை விரும்பவில்லை. செயலில் என்றல்ல- வெறும் வார்த்தைகளில் கூட அப்படிப்பட்ட உறவில் ஈடுபட நான் விரும்பவில்லை."
அவர் மீண்டும் சிரித்தார். சிரித்தபோது அந்த வாய்க்குள் அசிங்கமாக இருந்த பற்கள் வெளியே தெரிந்தன. சிவந்தும் உடைந்தும் தாறுமாறாக இருந்த பற்கள். என்னை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் அவர் தன்னுடைய பற்களைச் சுத்தம் செய்து பாதுகாக்காமல் இருக்கிறார் என்று எனக்குத் தோன்றியது. அவரை வெறுக்கிறேன் என்றால் அந்த வெறுப்பும் அவரே மனப்பூர்வமாக உண்டாக்குகிற ஒன்றுதானே?
அவரை வஞ்சிக்க, அந்த வகையில் என்னுடைய பதிவிரதத் தனத்தை விட்டெறிய நான் முயற்சிகள் செய்யாமலில்லை. ஆனால், என்னுடன் நெருங்குகிற ஒவ்வொரு ஆணிடத்திலும் நான் அவரை மட்டுமே கண்டேன். கண்டபோது நான் பின்னோக்கி விலகினேன். நடுக்கத்துடன் நான் பதிவிரதத் தன்மைக்குள்ளேயே வழுக்கி விழுந்தேன். விருப்பத்துடன் உணவு உண்பதைப் போல, விருப்பப்பட்ட உணவை எப்போதும் சாப்பிடுவதைப் போல நான் என்னுடைய மனைவி தர்மத்தை முறைப்படி செய்தேன். எனக்கு மன வேதனை உண்டானது. அவருடன் சேர்ந்து உணவு சாப்பிட உட்காரும்போதும், அவருடன் கட்டிலில் படுக்கும் போதும் நான் மனதில் வேதனைப்பட்டேன். நாங்கள் பேசியபோது, மருத்துவமனையின் சவக்கிடங்கின் அடுக்குகளிலிருந்து நழுவி விழும் பிணங்களைப் போல வார்த்தைகள் வந்து விழுவதாக நான் உணர்ந்தேன். அவற்றைவிட மவுனம் எவ்வளவோ மேலானது. ஒருவரையொருவர் தட்டி எழுப்ப மவுனத்தால் முடிந்தது. அது தட்டி எழுப்பியது. ஆனால் ஆறுதல் அளிக்கவில்லை. என்னைத்தேடி நான் அலைந்தேன். இறுதியில் தாழ்ந்துபோன தோள்களுடன் நான் மற்றவர்களை நோக்கித் திரும்பி நடந்தேன்.
"நமக்குக் குழந்தைகள் இருந்திருந்தால், ஒருவேளை நீ இப்பவும் சிரித்துக் கொண்டிருப்பாய். உன் சிரிப்பைப் பார்த்து எவ்வளவு நாட்களாச்சு டாக்டர் ஷீலா! உண்மையாகச் சொல்லப்போனால், அது எந்தச் சமயத்திலும் நடக்கவில்லை என்று நான் நினைக்கிறேன். உன் சிரிப்பு முன்பு ஒரு முறை நான் கனவில் கண்ட காட்சி மட்டும்தானா?"- அவர் கேட்டார்.
நான் ஆச்சரியத்துடன் அவருடைய முகத்தைப் பார்த்தேன். எவ்வளவு இனிக்க இனிக்க அவர் பேசுகிறார்! அவர் கோமாளி அல்ல என்ற சூழ்நிலை வந்துவிடுமோ? இறுதியில் ஒரு தத்துவஞானியாகவோ கவிஞராகவோ அவர் வடிவமெடுத்துவிடுவாரோ?
அந்தக் கண்களில் பனியின் மூடலை நான் பார்த்தேன். மூடிய பனிக்குப் பின்னால் எதுவுமே தெரிந்திராத ஒரு மனிதர் எனக்காகக் காத்து நின்றிருப்பாரோ? காமத்தை எடுத்துக் கையாள விருப்பமில்லாத காதலர்! என்னுடைய அழைப்புகளுக்கு அடிபணிந்து மனமில்லா மனதுடன் காமத்திற்குக் கீழ்ப்படியும் ஒரு மனிதர்! முன்பு நான் குழந்தைகள் இல்லாததைப் பற்றி நினைத்துக் கவலைப்பட்டிருக்கிறேன். இனி எனக்கு அந்த இழப்பைப் பற்றி சிந்திப்பதற்கு நேரமில்லை. ஒரு குழந்தையிடம் பாசத்தைக் காட்டுவதற்கு எனக்கு முடியுமா என்று நான் சந்தேகப்படுகிறேன். பாசத்தைக் காட்டுவதற்கும் ஒரு தனிப்பட்ட பயிற்சி தேவைப்படுகிறது. நான் நல்ல ஒரு டாக்டராக இருக்க முயற்சிக்கிறேன். வேறு எந்த பாத்திரத்தையும் நான் எதிர்பார்க்கவில்லை.
அவருடைய உதடுகள் மேலும் வெளிறிப்போய்க் காணப்பட்டதாக எனக்குத் தோன்றியது. பேசியபோது அந்தக் குரல் சற்று இடறியது.
"நல்ல மனைவியாக இருக்க நீ எப்போதாவது ஏங்கியது இல்லையா டாக்டர் ஷீலா?"- அவர் கேட்டார்.
நான் எதுவும் கூறாமல் படுத்துவிட்டேன். என்னுடைய மார்பகம் அதிகரித்த மூச்சின் அளவிற்கு ஏற்றபடி உயர்வதும் தாழ்வதுமாக இருந்தது. அவர் குனிந்து நின்று தன்னுடைய முகத்தை என்னுடைய முகத்துடன் நெருக்கமாக வைத்தார். நீரிழிவு நோயாளிகளின் மூச்சுக்கும் வியர்வைக்கும் பழுத்த வாசனை இருந்தது. இனிமையானதுதான் என்றாலும், மனதில் வெறுப்பை உண்டாக்கக்கூடிய வாசனை அது. நான் தாங்க முடியாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டேன்.
"என் கேள்விக்கு நீ ஏன் பதிலே கூறவில்லை டாக்டர் ஷீலா?"- அவர் கேட்டார்.
"உங்களுக்கு என்னைவிட இருபத்தோரு வயது அதிகம். நான் எந்தச் சமயத்திலும் உங்களை ஒரு கணவராக நினைத்ததே இல்லை"- நான் சொன்னேன்.
"நீ சொன்னது உண்மை அல்ல. நீயும் ஆர்வத்தை வெளிப்படுத்திய நாட்களை நான் நினைத்துப் பார்க்கிறேன்"- அவர் சொன்னார். அவருடைய குரலில் கலந்திருந்த காம உணர்ச்சி என்னைக் கோபம் கொள்ளச் செய்தது. நான் வேகமாக கட்டிலை விட்டு எழுந்திருக்க முயற்சித்தேன்.