
"ஆனால், அம்மிணிக்கு இப்போது பத்தொன்பது வயது நடக்கிறது. அவளை நோயாளியான தாயிடமிருந்து பிரித்து ஆஸ்திரேலியாவிற்கு அழைத்துக் கொண்டு போவது என்ற விஷயம்... அவளுக்கு சிகிச்சை செய்யும் டாக்டர் என்ற நிலையில் நான் கூறுகிறேன்- கொஞ்சம் கூட சரியில்லாதது. அவளால் தன்னுடைய மகளைப் பிரிந்து வாழ முடியாது."
"அம்மிணி திருமணம் செய்து வீட்டை விட்டுக் கிளம்பிவிட்டால் அவளுடைய அம்மா என்ன செய்வாள்? திருமணம் நடக்கும்போது எனக்கும் அவளுக்கும் இடையில் இருக்கும் உறவு காணாமல் போய்விடும்."
"இந்த விஷயத்தைப் பற்றி இனிமேலும் பேசுவதற்கு நான் விரும்பவில்லை. நீ அவளைக் கெடுப்பதற்கு முயற்சி பண்ணுறே."
"ஷீலா, நீ பொய்யான விஷயங்களைத் திரும்பத் திரும்ப சொல்றே. இறுதியில் நீதான் உன் பொய்களை நம்புறே. நீயாக இருக்க உனக்கு தைரியம் இல்லை. என்னை விரும்புகிறேன் என்று மனம் திறந்து கூறுவதற்கு உனக்கு எந்தச் சமயத்திலும் தைரியம் வந்ததில்லை. என்னுடன் சேர்ந்து வாழும்போது மட்டுமே உனக்கு ஓய்வும் மன அமைதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும் என்று உனக்கும் தெரியும். எனினும், நீ பரம்பரை பரம்பரையாக பின்பற்றப்பட்டு வரும் அந்த வழியை உனக்காகத் தேர்ந்தெடுத்துவிட்டாய். சிதிலமடைந்த வழி. உன்னுடைய அவலட்சணமான கணவரையும் அவருடன் படுப்பதையும் அவருடைய கிழட்டுத் தனமான வார்த்தைகளையும் விரும்புவதாக நீ நடித்தாய். இறுதியில் நீ யாருமே இல்லாதவளாக ஆகிவிட்டாய். யாருக்கும் தேவையில்லாதவளாக ஆகிவிட்டாய். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு பழுத்து அழுகிய உறுப்புகளை அறுத்து நீக்குவதற்கும், கர்ப்பப்பையிலிருந்து அறுவை சிகிச்சை செய்த குழந்தையை வெளியே எடுப்பதற்கும் சிலருக்கு நீ தேவைப்பட்டாய். அவர்களுக்குத் தவிர வேறு யாருக்கு இப்போது நீ வேண்டும்?"- கல்யாணிக்குட்டி கேட்டாள். சலவைக்குப் போகாத புதிய வேட்டியின் சத்தத்தைப்போல இருந்தது அவளுடைய குரல். அதில் தன்னம்பிக்கை துடித்து நின்று கொண்டிருந்தது. என்னுடைய கண்களில் நீர் நிறைந்து விட்டது.
"என்னுடைய கணவருக்கு நான் வேண்டும். அவர் என்மீது உண்மையாகவே அன்பு வைத்திருக்கிறார்"- நான் சொன்னேன்.
"அவர்- உன்னுடைய படு கிழவரான அவர் உன் மீது அன்பு வைத்திருக்கிறார் என்றால், எதற்காக நேற்று மதியம் முழுவதும் என்னுடைய ஹோட்டல் அறையில் அவர் இருக்க வேண்டும்? என்னிடம் காதல் மொழிகளை அள்ளி வீசிக் கொண்டு அந்த முட்டாள் என் அறையில் நான்கு மணி நேரங்கள் இருந்தார். உன்னுடைய கணவராக இருந்ததால் மட்டுமே நான் அந்த மனிதரை மிதித்து வெளியே அனுப்பாமல் இருந்தேன்."
"அய்யோ! நீ இப்படிப்பட்ட கதைகளைக் கற்பனை பண்ணிச் சொல்லாதே. கல்யாணிக்குட்டி உனக்குத் தெய்வம் தண்டனை தரும். எந்தச் சமயத்திலும் வேறொரு பெண்ணைப் பார்க்காத என்னுடைய கணவர் உன்னைக் காதலிப்பதா? இந்தக் கதையை யார் நம்புவார்கள்?"- நான் கேட்டேன்: "உன்னைப் போன்ற ஒரு முட்டாளை நான் பார்த்ததே இல்லை."
"ஷீலா, அவர் உன்னை எந்தச் சமயத்திலும் காதலித்தது இல்லை. உன்னுடன் நடந்த திருமணம் அவருக்கு சமூகத்தில் ஒரு மரியாதையை உண்டாக்கித் தந்தது. மதிப்புமிக்க மனிதராக நடிப்பதற்கு அப்போது அவர் முடிவு எடுத்தார். அந்த நடிப்பு ஏமாற்றியது உன்னை மட்டுமல்ல; இந்த நகரத்திலுள்ள பெரிய மனிதர்கள் எல்லோரையும் அது ஏமாற்றியது. ஒரே ஒரு பார்வையில் நான் அந்த மனிதரின் இதயத்தின் அடித்தளத்தில் இருக்கும் மோசமான ஆசைகளைத் தெரிந்து கொண்டுவிட்டேன் என்பதை அவர் புரிந்து கொண்டுவிட்டார். நடிப்பை நிறுத்திவிட்டு, சிறிது நேரம் எனக்கு அருகில் இருக்க பாவம், அந்த மனிதர் ஆசைப்பட்டார். ஆனால், எனக்கு இப்படிப்பட்ட ஆண்கள் தேவையே இல்லை. இவர்கள் மோசமான மிருகங்கள் ஷீலா. நான் உன்னை வேதனைப்படுத்திவிட்டேன். ஒரு காலத்தில் நீ என்னை வேதனைப்படச் செய்தாய். தொடர்ச்சியாகவும் வேதனை கொள்ளச் செய்தாய். இனி அந்த விளையாட்டை நான் விளையாடப் போகிறேன் ஷீலா"- கல்யாணிக்குட்டி சொன்னாள்.
என்னுடைய கணவர் க்ளப்பிலிருந்து திரும்பி வந்ததால் எங்களுடைய உரையாடல் வேறு விஷயங்களை நோக்கிப் போக ஆரம்பித்தது. எனக்கு அவள் மீது உடல் ரீதியான ஒரு ஈர்ப்பு முன்பு உண்டாகியிருந்தது. அது பிரமை என்று நினைத்துக் கொண்டு வாழ்வதற்கு நான் பல வருடங்களாக முயற்சித்தேன். ஆனால், அது பலிக்கவில்லை. ஆனால், அவள் என்னுடைய கணவரின் காதல் வெளிப்பாட்டைப் பற்றி என்னிடம் கூறிய நிமிடத்திலிருந்து நான் அவளுடைய காந்த வட்டத்திற்கு வெளியே வந்துவிட்டேன். பல வருடங்களாக இருந்த மனப்போராட்டங்களில் இருந்தும் குற்ற உணர்வுகளில் இருந்தும் நான் விடுதலை அடைந்து விட்டதைப் போல் எனக்குத் தோன்றியது.
விமான நிலையத்தை அடைந்தபோது நான் கல்யாணிக்குட்டியைப் பார்த்தேன். அவள் ஒரு வாடகைக் காரிலிருந்து தலையைக் குனிந்து கொண்டு இறங்கிக் கொண்டிருந்தாள். அவளுடைய சுதாகரனோ அம்மிணியோ யாரும் இல்லை. நான் காரை நிறுத்திவிட்டு வந்தபோது, அவள் உள்ளே நுழைந்து விட்டிருந்தாள். நான் உரத்த குரலில் அழைத்தேன்: "கல்யாணிக்குட்டி..."
அவள் நடப்பதை நிறுத்திவிட்டுத் திரும்பிப் பார்த்தாள். தொடர்ந்து தன் கடிகாரத்தில் கண்களை ஓட்டினாள்.
"எனக்கு நேரம் ஆகவில்லை. வா, ஷீலா... நாம் பத்தோ பதினைந்தோ நிமிடங்கள் வெளியே இருந்து தேநீர் அருந்தலாம்"- அவள் சொன்னாள். பிறகு சக்கரங்கள் கொண்ட தன்னுடைய தோல் பெட்டியை உருட்டியவாறு என்னுடைய தோளில் கை வைத்துக் கொண்டு அவள் நடந்தாள். அவளை எல்லோரும் விரிந்த கண்களால் பார்த்தார்கள். அவளுடன் சேர்ந்து நடக்கும்போது என்னுடைய வயதான அடையாளங்கள் முன்பு இருந்ததைவிட அதிகமாக வெளியே தெரிவதைப்போல் நான் உணர்ந்தேன். என்னுடைய நரை ஏறிய முடி, என்னுடைய மெதுவான நடை என் தோள்களுக்கு முன்னாலிருந்த வளைவு... ஒருவேளை எங்களைப் பார்த்தவர்கள் நான் அவளுடைய தாயாக இருக்க வேண்டும் என்று தவறுதலாக நினைத்திருக்கலாம்.
"நான் உன்னுடைய தாய் என்று எல்லோரும் நினைத்திருப்பார்கள்"- நான் சொன்னேன்.
"உருவ ஒற்றுமை இருக்கிறது என்று எனக்கு எப்போதிருந்தோ தெரியும். உன்னுடைய தந்தையின் மரணத்திற்குப் பிறகுதான் அதற்கான காரணம் எனக்குத் தெரிய வந்தது."
-"நீ என்ன சொல்ற?"- நான் தாங்க முடியாமல் கேட்டேன்.
"உன் அப்பாவின் மரணத்திற்குப் பிறகு அவர் எழுதி வைத்த ஒரு கடிதத்தையும் கொஞ்சம் பணத்தையும் உங்களுடைய கணக்குப் பிள்ளை என்னிடம் தனிப்பட்ட முறையில் கொண்டு வந்து கொடுத்தார். எந்தச் சமயத்திலும் நான் உன்னுடைய தந்தை என்று கூறத் தயங்கிய அந்த மனிதரை நான் அந்த நிமிடத்தில் மிகவும் கடுமையாக வெறுத்தேன்"- கல்யாணிக்குட்டி பேச்சை நிறுத்திவிட்டு தேநீர் அருந்துவதில் மூழ்கினாள்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook