சந்தன மரங்கள் - Page 7
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6471
"டாக்டர் ஷீலா, நீ தூங்கவில்லை. அப்படித்தானே?"- அவர் தன்னுடைய வயதான குரலில் என்னைப் பார்த்துக் கேட்டார். நான் அதற்கு பதில் சொல்லவில்லை. என்னை டாக்டர் என்று அழைக்கும் வழக்கத்தை அவர் பதினேழு வருடங்களுக்கு முன்னால் ஆரம்பித்து வைத்தார். அவர் தன்னுடைய அரசாங்க வேலையிலிருந்து ஓய்வூதியம் வாங்கி விலகிய பிறகு அது நடந்தது. குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக வீட்டிற்குப் பணம் கொண்டு வந்திருந்த காலத்தில் அவர் என்னை ஷீலா என்றோ அம்மு என்றோ அழைப்பார். நான் ஒரு டாக்டர் என்ற விஷயத்தில் அவர் பெருமைப்பட்டுக் கொண்டதும் இல்லை. என்னுடைய மருத்துவமனையில் நடக்கும் சம்பவங்களைப் பற்றி அப்போது அவர் ஒருமுறை கூட என்னிடம் கேட்டதும் இல்லை. அது காரணமாக இருக்கலாம். சமீப காலமாக அவருடைய கேள்விகள் என்னை அமைதியற்றவளாக ஆக்குகின்றன. முன்பே அவர் என்னுடைய வாழ்க்கை விஷயங்களில் ஈடுபாடு காட்டியிருந்தால், நான் இப்போது ஒரு கருங்கல் சிலையைப் போல உணர்ச்சியற்றவளாக மாறியிருக்க மாட்டேன். அமைதியாக இருந்திருக்க மாட்டேன். நான் மவுனமாக இருக்க பழகிக் கொண்டேன். எனக்கும் என் கணவருக்கும் நடுவில் ஒரு சந்தன மரத்தைப் போல- சந்தோஷ சின்னத்தைப் போல அது வளர்ந்து நின்றது.
"நீ தூங்கவில்லை அப்படித்தானே? இன்னைக்கு ஆப்பரேஷன் நடந்த நாளாச்சே! இன்னைக்கு நீ என்ன ஆப்பரேஷன் பண்ணினே?"- அவர் கேட்டார். தூக்கக் கலக்கம் இல்லாத அந்தக் குரல் ஒரு சாட்டை வாரைப் போல என் மீது விழுவதை நான் உணர்ந்தேன்.
"இன்னைக்கு பெரிசா ஒண்ணும் நடக்கல. சாதாரண ஒரு அப்பென்டிக்ஸ்... வயிற்று வலியும் இருப்பதாக புகார். அப்பென்டிசைட்டீஸாக இருக்கும் என்று நினைத்தேன். ஆப்பரேஷன் செய்தபோது, அதற்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை. இருந்தாலும், அதை எடுத்து நீக்கிட்டேன்."- நான் சொன்னேன்.
"டாக்டர்களைப் பார்த்து பயப்படணும். அவர்களின் தவறுதலுக்கான விலையை நோயாளிதான் தரவேண்டியதிருக்கு."
"தவறு செய்யாதவர்கள் இந்த உலகத்தில் இருக்கிறார்களா?"
நான் முகத்தைத் திருப்பிக் கண்களை மூடிக் கொண்டேன். தூக்கம் வரவில்லையென்றாலும், அவருடன் பேசிக் கொண்டு படுத்திருக்க விருப்பம் உண்டாகவில்லை. அவர் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு உறுப்பைப் போல் ஆகியிருந்தார். என்னிடமிருந்து அறுத்து நீக்கப்பட வேண்டிய ஒரு உறுப்பு. விவாகரத்து செய்ய அவர் எந்தச் சமயத்திலும் தயாராக இருக்க மாட்டார் என்ற விஷயம் எனக்கு நன்றாக தெரியும். அவரைப் பற்றி நீதிமன்றத்தில் புகார் கூற எனக்கும் கஷ்டமாக இருந்தது. அவர் எந்தச் சமயத்திலும் உடல் ரீதியாக எனக்குத் துன்பங்கள் உண்டாக்கவோ, பிற பெண்களுடன் உறவு கொள்ளவோ இல்லை. என்னை இறுகக் கட்டிப் பிடித்தார் என்பதை ஒரு குற்றமாக நீதிமன்றத்தில் கூற முடியாதே! அன்பால் ஆதிக்கம் செய்வது என்பது சட்டப்படி ஒரு குற்றமல்ல. அன்பை வெளிப்படுத்துவதும் குற்றமல்ல.
ஒருமுறையாவது அவர் என்னிடம் கோபப்பட்டு நடக்கவோ, என்னைத் தாக்கவோ செய்தால் நான் விடுதலை பெற்ற பெண்ணாக ஆகிவிடுவேன் என்ற விஷயம் எனக்கு நன்றாகத் தெரியும். கோபப்பட வைக்கப் பல முயற்சிகளையும் நான் செய்தேன். என்னுடன் சேர்ந்து பணியாற்றும் ஒரு டாக்டரை நான் வீட்டிற்கு வரவழைத்தேன். என் கணவரை முன்னால் வைத்துக்கொண்டு அந்த மனிதரைக் கண்களால் பார்த்துக் கொண்டே அவருக்கு அருகில் உடல்கள் ஒன்றோடொன்று தொடுவது மாதிரி உட்காரவும் செய்தேன். அவர் சொன்னார்: "இனி இரண்டு பேரும் டி.வி.யில் திரைப்படம் பாருங்க. நான் தூங்குகிறேன். என் வயதில் இருப்பவர்களுக்கு தூங்காமல் இருப்பது என்பது மிகவும் சிரமமான ஒரு விஷயம்."
அவரை அவமானப்படுத்துவதற்காக நான் குறுக்கு வழிகளைத் தேடினேன். நான்தான் வீட்டை ஆட்சி செய்கிறேன் என்ற விஷயத்தை அவர் மறக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக நான் பல நேரங்களில் கூறினேன்: "செலவுகளைக் குறைக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் தேவைப்படும் பணத்தை நான் தான் சம்பாதிக்கணும். அதை மறந்துவிடக்கூடாது."
அந்தக் காரணத்தால்தான் இருக்க வேண்டும்- க்ளப்பின் உறுப்பினர் என்ற தகுதியை மீண்டும் அவர் புதுப்பித்துக் கொள்ளவில்லை. ஒரு மாலை நேரத்தில் புல்வெளியில் பிரம்பு நாற்காலியில் உரோம சால்வையை மூடிக் கொண்டு அவர் உட்கார்ந்திருப்பதை நான் பார்த்தேன்.
"என்ன இன்னைக்கு க்ளப்பிற்குப் போகலையா?"- நான் கேட்டேன்.
"இல்லை... நான் க்ளப்பின் உறுப்பினர் தகுதியைப் புதுப்பிக்கவில்லை."
"ஏன் இப்படி கஞ்சத்தனமா இருக்குறீங்க? க்ளப்பிற்கு மட்டும்தான் நீங்க போறதே... அந்த போக்குவரத்தையும் வேண்டாம்னு ஒதுக்கிட்டா, உங்களுக்கு வாழ்க்கையே வெறுப்பானதா தோணிடும்."
"நான் எதற்குப் போகணும்? என்னுடைய டென்னிஸ் விளையாட்டு அந்த அளவுக்கு சிறப்பானது ஒண்ணுமில்லை. என்னைக்காவது இதைவிட நன்றாக விளையாடுவேன் என்று நினைத்துக் கொண்டு இந்த விளையாட்டைத் தொடர்ந்து கொண்டிருப்பதில் எந்தவொரு அர்த்தமும் இல்லை. அவனவனைப் பற்றிய வீணான எதிர்பார்ப்புகளை விட்டெறிய வேண்டிய காலம் எனக்கு வந்துவிட்டது."
"அப்படியென்றால், நீங்க எப்படிப் பொழுதைக் கழிப்பீங்க? உங்களுக்கு வெறுப்பு தோணிடாதா? புத்தகங்கள் வாசிக்க விருப்பம் இருக்கா? நான் நூலகத்திலிருந்து நான்கு புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு வர்றேன். கிருஷ்ணமூர்த்தியின் நூல்கள் வேணுமா?"
"நான் எதற்கு கிருஷ்ணமூர்த்தியின் நூல்களைப் படிக்கணும்? எனக்கு அப்படிப்பட்ட நூல்கள் சந்தோஷத்தைத் தராது. எனக்கு நேரத்தைப் போக்குவதற்கு சாதாரண கதை புத்தகங்கள் போதும். குற்ற விசாரணைக் கதைகள்..."
தன்னுடைய அனைத்து நடிப்புகளையும் விட்டெறியும் முயற்சியில் அவர் இருக்கிறார் என்பதை நான் உணர்ந்து கொண்டேன். இனம் புரியாத ஒரு கவலை என்னுடைய உடலைச் சோர்வடையச் செய்தது. ஆன்மிக சார்பு கொண்ட ஒரு ஆயுதத்தை எடுப்பதற்கு அவர் தன்னைத் தயார் பண்ணிக் கொண்டிருந்தார். நான் முதல் தடவையாக பதறிப் போய்விட்டேன். என்னுடைய கண்களுக்கு முன்னால் ஒரு முறை தெளிவாகத் தெரிந்த பாதைகள் தெளிவில்லாமல் தெரிந்தன. படிப்படியாக அவை பார்வையிலிருந்து மறைந்து போயின.
இளமையை இழந்த ஆண்கள் வெட்கமில்லாதவர்களாக ஆகிறார்கள் என்று அவர்களுடைய மனைவிமார்கள் குறைப்பட்டுக் கொள்வதுண்டு. பெண்களுக்கு அந்த வயதில் வெட்கம் அதிகரிக்கும். தங்களுடைய உடலின் அழகற்ற விஷயங்கள் அதிகரிக்கத் தொடங்கியவுடன், அதை வெளியில் காட்ட அவர்கள் தயங்குவார்கள். அதே நேரத்தில், தையல் பிரிந்து தளர்ந்து கிடக்கும் மறைவு உறுப்புகளை வயதானவர்கள் முட்டாள்தனமாக வெளியே தெரியும்படி காட்டுவது சாதாரணமாக நடக்கக்கூடிய ஒன்றுதான். அப்படிப்பட்ட மோசமான காட்சிகள் பெண்களிடம் உண்டாக்கக்கூடிய வெறுப்பை ஆண்கள் உணர்வதில்லை.