சந்தன மரங்கள் - Page 10
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6471
"எந்தச் சமயத்திலும் நீ இதைச் செய்திருக்கக்கூடாது. உன்னுடைய ஒரு நோயாளியான அந்த மனிதரின் மனைவியை நினைத்தாவது நீ அவரைக் காட்ட மாட்டாய் என்று நான் நினைத்தேன். அவள் இந்த விஷயத்தைத் தெரிய நேர்ந்தால், அழுது அழுது படுக்கையில் விழுந்து விடுவாள். உன்னுடைய இளம் வயது சினேகிதியின் கவர்ச்சி ஒரு ஏழைப் பெண்ணுக்கு இருக்காதே!"
"எனக்கு கல்யாணிக்குட்டி மீது இருக்கும் அக்கறை வேறு யாரிடமும் கிடையாது. அதை நீங்க புரிஞ்சிக்கணும்"- நான் சொன்னேன்.
"அப்படின்னா அவள் சுதாகரனை அபகரித்து தன்னுடன் ஆஸ்திரேலியாவுக்குக் கொண்டு போனால் நீ சந்தோஷப்படுவே. அப்படித்தானே?அந்த அப்பிராணிப் பெண்ணும் அவளுடைய ஒரே மகனும் ஆதரவு இல்லாமல் போவது குறித்து உனக்கு எந்தக் கவலையும் இல்லை. சுதாகரனின் மகளைப் பற்றி நீ எத்தனை முறை புகழ்ந்து பேசியிருக்கிறாய்! அவளுக்கு ஒரு தந்தை இல்லாமல் போவதில் உன்னுடைய பங்கு எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை நீ நினைத்துப் பார்த்திருக்கிறாயா?"- அவர் கேட்டார்.
"நான் என்ன செய்ய வேண்டுமென்று எனக்குத் தெரியும். தேவைப்பட்டால் சுதாகரனின் மனைவியையும் மகள் அம்மிணியையும் பார்த்துக் கொள்கிற பொறுப்பை நானே ஏற்றுக் கொள்வேன். அவளைப் படிக்க வைத்து ஒரு நல்ல வேலையைத் தேடித் தருவதில் எனக்கு எந்த பிரச்சினையும் இருக்காது. அவசியமென்றால் நான் அம்மிணியை ஒரு டாக்டராக ஆக்குவேன். நமக்குப் பிள்ளைகள் இல்லை எனற குறையை அவள் தீர்த்து வைக்கட்டும்."
அவர் அதற்குப் பிறகு எதுவும் கூறாமல் போய்விட்டார்.
சுதாகரனின் பத்தொன்பது வயது கொண்ட மகள் எங்களுக்கு மிகவும் பிரியமுள்ளவளாக இருந்தாள். உண்மையாக சொல்லப்போனால் அவளுக்கு கல்யாணிக்குட்டியின் சாயல் இருந்தது. கல்யாணிக்குட்டியைப் பார்க்கக்கூட செய்திராத திருமதி சுதாகரனால் அவளுடைய நிறத்தையும் அவளுடைய கன்னக் குழிகளையும் கொண்ட ஒரு பெண் குழந்தையை எப்படிப் பெற்றெடுக்க முடிந்தது என்ற கேள்விக்கு பதில் கூற யாரால் முடியும்? சுதாகரனுக்கு கல்யாணிக்குட்டிமீது இருக்கும் ஈர்ப்பு காரணமாக, அப்படிப்பட்ட ஒரு மகள் அவருடைய மனைவிக்குப் பிறந்திருக்கலாம் என்று என்னுடைய கணவர் சொன்னார். சுதாகரனும் குடும்பமும் இரண்டோ மூன்றோ மாதங்கள் ஆகும்போது, எங்களை வந்து பார்ப்பதுண்டு. அந்தச் சந்திப்பு வேளைகளில் என்னுடைய கணவர் அம்மிணியிடம் உரையாடுவதையும் அவளுடைய பொழுதுபோக்கான பேச்சுக்களைக் கேட்டு சிரிப்பதையும் நான் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருப்பேன்.
சுதாகரனின் மனைவி நவ நாகரீகமானவள் இல்லை என்றாலும், அவள் நல்ல ஒரு குடும்பப் பெண் என்று அவர் பல முறை கூறியிருக்கிறார். என்ன காரணத்தாலோ எனக்கு அந்தப் பெண்ணைப் புகழ்ந்து கூற முடியவில்லை. கல்யாணிக்குட்டியை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அவளுடைய தோற்றம் பிரகாசம் குறைந்ததாக இருந்தது. எனக்கு அவள் மீது அன்பு செலுத்த முடியவில்லை. ஒரு நோயாளியிடம் டாக்டருக்குத் தோன்றக்கூடிய சாதாரண உணர்வுகள் மட்டுமே அவளுக்காக எனக்குள் தோன்றின. அந்த உறவின் முக்கிய விஷயம் இரக்கம் தான். இரக்கத்துடன் கலந்திருந்த ஒரு வெறுப்பும் இருந்தது. அந்தக் காரணத்தால் இருக்க வேண்டும், கல்யாணிக்கட்டி சுதாகரனுடன் நாட்களையும் இரவுகளையும் செலவழித்துக் கொண்டிருக்கிறாள் என்பது தெரிந்தும் எனக்கு கோபமே வரவில்லை. அவளுக்கு முப்பது வருடங்களுக்குப் பிறகு அந்த மனிதருடன் ஒரு தேனிலவு தேவைப்படுகிறது என்றால் நான் எதற்கு அவளுக்கு சமூக சட்டங்களை ஞாபகப்படுத்த வேண்டும்? கல்யாணிக்குட்டி வந்து சேர்ந்து கிட்டத்தட்ட ஒரு வாரம் கடந்த பிறகுதான் சுதாகரனின் மனைவி மீண்டும் என்னைப் பார்ப்பதற்காக க்ளினிக்கிற்கு வந்தாள். ஒரு காலின் பெருவிரலை நான் நீக்கிவிட்டிருந்தேன். ஆனால், மற்ற கால்களிலும் பழுப்பு ஆரம்பித்திருக்கிறது என்று அவள் குறைபட்டாள்.
"விரலை நீக்கியதை நான் பெருசா எடுக்கலை டாக்டர் ஷீலா. பழுப்பும் வேதனையும் இருக்கு..."- அவள் சொன்னாள்.
நான் அவளுடைய கால்கள¬ சோதித்துப் பார்த்தபோது, அவள் வேதனைப் படுவதைப் போல் எனக்குத் தோன்றியது. அவளுடைய கண்கள் நீரால் நிறைந்திருந்தன.
"என்ன ஆச்சு?"- நான் கேட்டேன்.
"என் மனதில் கொஞ்சம் கூட அமைதி இல்லை."
"என்ன நடந்தது?"
"அவள் என் கணவரையும் மகளையும் வசீகரித்துவிட்டாள். என் மகளைத் தன்னுடன் ஆஸ்திரேலியாவிற்கு அழைத்துக் கொண்டு போகப் போவதாக அவள் என்னிடம் சொன்னாள். அம்மிணி சின்னக் குழந்தை. அவளுக்கு எது சரி எது தவறு என்பதெல்லாம் தெரியாது. நான் உயிருடன் வாழ்வதே அம்மிணிக்காகத்தான். அவளை அந்தப் பெண் ஆஸ்திரேலியாவிற்கு அழைத்துக் கொண்டு போனால், நான் கவலையில் செத்தே போவேன்."
"சுதாகரன் அம்மிணியின் செயலைப் பற்றி என்ன சொல்கிறார்?"
"அவர் அதை ஏற்றுக் கொள்கிறார். ஒருவேளை, தாமதமாகாமல் அவரும் அங்கே போனாலும் போகலாம். அவளுடைய இரண்டாவது கணவர் இறந்துவிட்டதாகக் கேள்விப்பட்டேன். அதனால், அவள் என் கணவரைத் தேடி இந்தியாவிற்கு வந்திருக்கலாம்."
"ச்சே... அழக்கூடாது. சுதாகரன் உங்களை விட்டு எங்கும் போக மாட்டார். சுதாகரனும் கல்யாணிக்குட்டியும் இரண்டு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தவர்கள். ஒருவருக்கொருவர் ஒத்துப் போகவில்லை என்று நினைத்துப் பிரிந்தவர்கள். இனி அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து வாழப் போவது இல்லை. கல்யாணிக்குட்டிக்குப் பிள்ளைகள் இல்லை. அதனால் உங்களுடைய மகளை அழைத்துக் கொண்டு போய் காப்பாற்ற வேண்டுமென்று அவள் விரும்பியிருக்கலாம். உங்களுக்கு அம்மிணியைப் பிரிந்து வாழ முடியாது என்று நான் அவளுக்குப் புரிய வைக்கிறேன். போதுமா?"- நான் கேட்டேன்.
"அவளுக்கும் நல்லதைச் சொல்லி அறிவுறுத்துங்க..."-அவள் சொன்னாள்.
"நீங்கள் பயப்பட வேண்டாம். நான் சின்ன பிள்ளையா இருந்த போதிருந்தே கல்யாணிக்குட்டியை எனக்குத் தெரியும். அவள் அறிவு இல்லாதவளா இருக்கலாம். ஆனால் இரக்கம் இல்லாதவள் இல்லை. நான் அவளிடம் பேசுகிறேன்."
அன்று மாலை நேரத்தில் கல்யாணிக்குட்டி என்னைப் பார்ப்பதற்காக வந்தாள். அவள் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டாள். அம்மிணியை ஆஸ்திரேலியாவிற்கு அழைத்துக் கொண்டு போகக்கூடாது என்று நான் சொன்ன போது அவளுடைய முகம் சிவந்து விட்டது.
"இந்த மாதிரியான விஷயங்களில் தலையிடாமல் இருப்பதே நல்லது. என்னுடைய சொந்த வாழ்க்கையில் யாரும் தேவையில்லாமல் நுழைவதை நான் விரும்பவில்லை." அவள் சொன்னாள்.
"அம்மிணி உன்னுடைய சொந்த வாழ்க்கையா?"
"அம்மிணி என்னை விரும்புகிறாள். அவளுக்கு என்னுடன் வாழ்வது பிடிக்கிறது. அந்த விருப்பத்தை நிறைவேற்றித் தர என்னால் முடியும்."