சந்தன மரங்கள் - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6471
"உன்னுடைய தோலில் இருக்கும் நறுமணம் அப்போதும் இப்போதும் ஒரே மாதிரி இருக்கு. நீ முன்பு பயன்படுத்திய 'ஈவ்னிங் இன் பாரீஸ்'ஸத்தான் இப்பவும் பயன்படுத்துறியா?"
"அது இப்போ உலகத்தில் எங்கேயும் கிடைப்பது இல்லை. நான் வேறு பலவற்றையும் பயன்படுத்துறேன். ஏதாவது ஒரு வாசனைப் பொருளுடன் எனக்குத் தனிப்பட்ட ஈடுபாடு எதுவும் இல்லை. என்னுடைய நோயாளிகள் வெளிநாட்டுப் பயணம் முடிந்து ஊருக்குத் திரும்பி வர்றப்போ எனக்கு ஓப்பியம், ஜாய், சார்லி போன்ற வாசனைப் பொருட்களைப் பரிசாகக் கொண்டு வந்து தருவாங்க. என்னுடைய ஒப்பனை மேஜைக்கு மேலே பத்தோ பதினைந்தோ உடைக்காத சென்ட் புட்டிகள் இருக்கு. உனக்கு வேணுமா?"
கல்யாணி மீண்டும் என்னை முத்தமிட்டாள். தொடர்ந்து வரிசை தவறாமலும் வெள்ளை நிறத்தில் ஒளிர்ந்து கொண்டும் இருந்த பல் வரிசை தெரியும்படி உரத்த குரலில் சிரித்தாள்.
"உனக்கு எந்தவித மாற்றமும் உண்டாகவில்லை. என் ஷீலா. நீ இப்போதும் இரக்க குணம் கொண்ட பெண்ணாகவே இருக்கிறாய். உனக்கு கொடுப்பதற்குத் தெரியும். சின்ன வயதிலிருந்தே நீ கொடுக்கும் குணத்தை வளர்த்துக் கொண்டாய். அதோடு பொறுமை குணத்தையும். நீ பிறந்தது அப்படிப்பட்ட ஒரு குடும்பத்தில். கொடுக்கும் குணமும் தர்ம எண்ணங்களும் கொண்ட ஒரு பழமையான குடும்பம். நீ நல்ல வசதி படைத்த பெண்ணாகப் பிறந்தாய். அதனால்தான் உன்னால் மன அமைதியுடன் வாழ முடிஞ்சது. நான் அதைப் பார்த்து பொறாமைப்பட்டு என்ன பிரயோஜனம்? நான் விவசாயிகளுக்கு மத்தியில் பிறந்தவள். இரண்டு ரவிக்கைகளும் இரண்டு பாவாடைகளும் மட்டுமே என்னுடைய மொத்த ஆடைகளாக இருந்தன. என்னை நீ படித்த பள்ளிக்கூடத்திலும் பிறகு கல்லூரியிலும் சேர்த்தது என்னுடைய வறுமையில் உழன்று கொண்டிருந்த தந்தை அல்ல. எஜமானர்தான் என்னை அங்கு சேர்த்துப் படிக்க வைத்தார். அந்த எஜமானருக்கும் எங்களுடைய குடும்பத்திற்கும் இடையில் ரகசியமான வேறு ஏதாவது தொடர்பு இருந்திருக்குமோ என்று நான் பல நேரங்களில் எனக்குள் நானே கேட்டிருக்கிறேன். அந்த எஜமானரின் மூக்கைப் போல என்னுடைய மூக்கு இருக்குன்னு ஒரு காலத்தில் நான் சந்தேகப்பட்டிருக்கேன்."
கல்யாணிக்குட்டி திரும்பத் திரும்ப சிரித்தாள். சிரிக்கும்போது தோள்வரை தொங்கிக் கொண்டிருந்த தலைமுடி விடைபெறும் கை விரல்களை ஞாபகம் கொள்ளச் செய்தது.
"உனக்கு இப்போது என்னுடைய வயது என்று யாரும் கூற மாட்டார்கள். உன் தலைமுடியில் ஒரு நரையைக் கூட என்னால் பார்க்க முடியவில்லை"- நான் சொன்னேன்.
"நீ சொல்றது உண்மைதான் ஷீலா. எனக்கு ஐம்பத்தி இரண்டு வயது என்ற விஷயம் என்னுடைய புதிய நண்பர்களுக்குத் தெரியாது. நான் அவர்களுடன் தினமும் இரவில் டென்னிஸ் விளையாடுவது உண்டு. சாயங்காலம் நடப்பதற்காகச் செல்வேன். உடல் ஆரோக்கியத்தைப் பற்றி எனக்கு எந்தவொரு கவலையும் இல்லை."
தான் ஆஸ்திரேலியாவில் பார்த்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு, டில்லிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன என்றும்; தான் ஒரு ஆஸ்திரேலியாக்காரரின் விதவை என்றும் கல்யாணிக்குட்டி என்னிடம் சொன்னாள்.
"நல்ல பண வசதியும் சந்தோஷமும் கொண்ட ஒரு விதவை"- அவள் ஒரு உரத்த சிரிப்புடன் சொன்னாள்.
"சந்தோஷத்துடன் இருப்பதாக இருந்தால், நீ எதைத் தேடி சொந்த ஊருக்குத் திரும்பி வந்திருக்கே?"- நான் கேட்டேன்.
அவள் தன்னுடைய கருப்பு நிறக் கண்ணாடியை மெதுவாகக் கழற்றி என்னுடைய மேஜைமீது வைத்தாள். பிறகு தன்னுடைய கண்களை விரல் நுனியால் தடவினாள். அவளுடைய முகத்திலிருந்து புன்னகை முழுமையாக மறைந்துவிட்டிருந்தது.
"நீ கேட்பது வரை நான் இந்த திரும்பி வந்த பயணத்திற்கான காரணங்களை என்னிடமே கேட்டுப் பார்த்ததில்லை. வறுமையின் பிடியில் சிக்கிக் கிடந்த சிறுமியாக இருந்த நான் இப்போது நல்ல பண வசதி கொண்டவளாகவும் வெற்றி பெற்றவளுமாக இருக்கிறேன் என்ற விஷயத்தை, இறக்காமல் இப்போதும் உயிருடன் இருக்கும் ஊர்க்காரர்களுக்குத் தெரியும்படிக் காட்ட வேண்டும் என்பதற்காக நான் வரவில்லை. உன்னைப் பொறாமைப்படச் செய்ய வேண்டும் என்பதற்காகவும் அல்ல. ஒருவேளை, நான் சுதாகரனை மீண்டும் காண்பேன் என்ற எதிர்பார்ப்பு இருக்கலாம். திரும்பவும் அவருடன் சில நாட்களின் இரவுகளைப் பங்கிட வேண்டும் என்பதும்... சொல்லு ஷீலா... அவர் இங்கே எங்கேயாவது இருக்கிறாரா? அவர் மீண்டும் திருமணம் செய்து கொண்டாரா? அவர் என்னை நினைக்கிறாரா?"
"சுதாகரன் இந்த நகரத்தில்தான் இருக்கிறார். அவருடைய இப்போதைய மனைவிக்கு நான்தான் சிகிச்சை செய்யறேன். போன மாதம் நீரிழிவு நோய் சிகிச்சைக்காக இந்த மருத்துவமனையில் ஒரு வாரம் அவள் இருந்தாள். அவளுக்கு புத்திசாலியான ஒரு மகன் இருக்கான். இந்த வருடம் ரேங்க் வாங்கி போபாலில் இருந்து வந்திருக்கிறான்- ஒரு ஆர்க்கிடெக்ட்."
மீண்டும் நோயாளிகள் என்னைப் பார்ப்பதற்காக வந்தபோது, கல்யாணிக்குட்டி என்னிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டாள். மறுநாள் ஞாயிற்றுக் கிழமையாக இருந்ததால், என்னுடைய வீட்டிற்கு வருவதாக அவள் சொன்னாள். சுதாகரனை மீண்டும் சந்திக்க வேண்டும் என்ற தன்னுடைய விருப்பத்தை அவள் பல தடவை என்னிடம் வெளியிட்டாள்.
"வேண்டாம் கல்யாணிக்குட்டி. அந்த அப்பாவி மனிதர் வாழ்ந்து விட்டுப் போகட்டும். அவருடைய மனைவி ஒரு நோயாளி. அவளுக்கு இனிமேல் கவலைகளைத் தாங்கிக் கொள்ள சக்தி இல்லை. நீ போய் சுதாகரனுக்கு ஆசை வலை விரித்தால், அந்தக் குடும்ப வாழ்க்கை ஒட்டு மொத்தமாக நாசமாயிடும்."
"அந்தக் குடும்ப வாழ்க்கை நாசமானால் எனக்கு என்ன இழப்பு?"- கல்யாணிக்குட்டி கேட்டாள். அவளுடைய உரத்த சிரிப்பு என்னிடம் வெறுப்பை மட்டுமே உண்டாக்கியது.
3
பல வருடங்களாக நீடித்திருக்கும் ஒரு குடும்ப வாழ்க்கை நவநாகரீகமான வாழ்க்கை வாழ்பவர்களால் உண்மையாகவே சகித்துக் கொள்ள முடியாததுதான். ஒரே கட்டிலில் அருகருகே படுத்துக் கொண்டு ஒருவரோடொருவர் வியர்வை நாற்றத்தைப் பரிமாறிக் கொள்வது, சூரியன் உதிக்கும் நேரத்தில் கழிவறையில் நீர் ஊற்ற மறந்த ஜோடியின் மறதித் தன்மையைப் பார்ப்பது, அருள் தருவதற்காக என்றே உண்டாக்கப்பட்டவை என்று தோற்றம் தரும் அழகான கண்களால் சுய இன்பம் நடப்பதைப் பார்த்தவாறு அதன் தாளத்தை கவனித்துக் கொண்டு தூங்குவதைப் போல் நடிப்பது.... வேண்டாம்... எனக்கு வேண்டாம்... பெரிய மனிதர்களால் புகழப்பட்ட இல்லற ஆசிரமம் எனக்கு வேண்டாம். வேண்டவே வேண்டாம். இன்னொரு ஆளின் வாயிலிருந்து வழியும் எச்சில் என்னுடைய வாய்க்குத் தேவையில்லை. வேலை செய்து சோர்ந்து போன என்னுடைய உடலால் காமத்தின் கொடிய சுமையைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நான் எனக்குள் கூறிக் கொண்டேன்.