சந்தன மரங்கள் - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6471
"ஷீலா, நீ ஒரு ஆண் பிள்ளையாக இருந்திருந்தால், நீ என்னைக் காதலித்திருக்கலாம். என் தந்தை உனக்குப் பாடம் சொல்லித் தந்திருக்கிறார். அதனால் நான் உன்னுடைய குருவின் மகள். குருவின் மகளைக் காதலித்த இளவரசர்களைப் பற்றி நீ கேள்விப்பட்டிருக்கேல்ல? நீ ஏன் ஒரு ஆணாகப் பிறக்கவில்லை?"
நாங்கள் இருவரும் குளத்தில் நீந்திக் குளித்துக் கொண்டிருந்தோம். அவளுடைய பார்வைக்கு முன்னால் திடீரென்று நான் வெட்கப்பட்டேன். என்னுடைய இடையும் மார்பகமும் அவளுடைய இமைக்காத பார்வையில் சிக்கி நடுங்குவதைப் போல் நான் உணர்ந்தேன்.
"ஏன் இப்படி உற்றுப் பார்க்குறே? எனக்கு உன்னுடைய பார்வை கொஞ்சமும் பிடிக்கல"- நான் வாயிலிருந்த நீரைத் துப்பியவாறு சொன்னேன். அவள் நீரிலிருந்து வெளியே வந்து சலவை செய்யும் கல்மீது உட்கார்ந்து கொண்டு மீண்டும் தன்னுடைய இமை மூடாத கண்களால் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு அசைவுகளையும் அந்தக் கண்கள் பின்பற்றிக் கொண்டிருந்தன. நான் கழுத்து வரையில் நீருக்குள் மறைந்து நின்றுகொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
"கல்யாணிக்குட்டி, நீ இப்படி என்னை எதற்காகப் பார்க்குறே? எனக்கு உன்னுடைய பார்வை கொஞ்சமும் பிடிக்கவில்லை"- நான் அவளைப் பார்த்து மீண்டும் சொன்னேன். கன்னத்தில் குழிகள் தெரிய அவள் சிரித்தாள்.
"உன்னுடைய அழகு இந்த அளவிற்கு அதிகமாகி இருப்பதை நான் இப்போது தான் பார்க்கிறேன். கோவிந்தன் குட்டியும் வேறு சிலரும் உனக்குப் பின்னால் எல்லா நேரங்களிலும் பாடல்களை முணுமுணுத்துக் கொண்டே திரிவதைப் பற்றிக் குறை கூறுவதற்கில்லை"- அவள் சொன்னாள்.
"வாய்க்கு வந்தபடி பேசாதே. எனக்குப் பின்னால் யாரும் பாட்டுப்பாடி நடப்பதில்லை. எனக்குப் பின்னால் பாட்டுப் பாடி நடப்பதற்கு இந்த ஊரில் யாருக்கும் தைரியம் வராது"- நான் சொன்னேன்.
"நீ பணக்காரியாக இருப்பதாலா?"- கல்யாணிக்குட்டி கேட்டாள்.
அதற்கு நான் பதில் எதுவும் கூறவில்லை. தொடர்ந்து நீரில் நீந்துவதற்கு எனக்கு ஆர்வம் இல்லாமல் போய்விட்டது. வேகமாக நீரிலிரந்து கரையில் ஏறியபோது, அவள் என்னை இறுகக் கட்டிப் பிடித்துக்கொண்டு என்னுடைய முகத்திலும் கழுத்திலும் மார்பகங்களுக்கு நடுவிலும் முத்தம் கொடுக்க ஆரம்பித்தாள். அவள் மேல்மூச்சு கீழ்மூச்சு விட்டுக் கொண்டிருந்தாள். "நிறுத்து கல்யாணிக்குட்டி... இந்த மாதிரி ஏன் முட்டாள்தனமா நடக்குறே? இந்த நிமிடமே இதை நீ நிறுத்தணும். இல்லாவிட்டால் நான் இனிமேல் எந்தச் சமயத்திலும் உன்னுடன் பேசமாட்டேன்."
நான் குரலைத் தாழ்த்திக் கொண்டு சொன்னேன். குளத்திற்கு முன்னால் இருந்த மணல் பாதையில் யாருடைய காலடிச் சத்தத்தையோ நான் கேட்டேன். என் தாயாக இருப்பாளோ? கல்யாணிக்குட்டி என்னை முத்தமிடுவதைப் பார்த்தால், பிறகு எந்தச் சமயத்திலும் அவளை என் வீட்டுக்குள் அவள் நுழைய விடமாட்டாள் என்ற விஷயம் எனக்கு நன்றாகத் தெரியும்.
"வெளியே யாரோ நிற்கிறார்கள்"- நான் மெதுவான குரலில் சொன்னேன்.
கல்யாணிக்குட்டியின் கண்களை நான் அப்போதுதான் பார்த்தேன். உயர்ந்த கருமணிகளுக்கு நடுவில் அவை இளம் நீல நிறத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தன. அவளுடைய மேலுதட்டில் வியர்வைத் துளிகள் அரும்பியிருந்தன. அவளுக்குத் தன்னுடைய கை, கால்கள் மீது சுய கட்டுப்பாடு சிறிதும் இல்லாமலிருக்கிறது என்பதை நான் கண்டுபிடித்தேன். அவள் தன்னுடைய சகல பலத்தையும் பயன்படுத்தி என்னைக் குளக்கரையின் அருகில் இருந்த சாணம் மெழுகிய தரையில் மெதுவாக விழச் செய்தாள். என்னுடைய உடல் சிலிர்க்கும் வண்ணம் அவள் எல்லா இடங்களிலும் வலியை உண்டாக்கும் முத்தங்களால் ஆக்கிரமித்தாள். நான் வெட்கத்தாலும் அவமானச் சுமையாலும் என்னுடைய கண்களை மூடிக் கொண்டேன். நான் உயிர் இருந்தும் பிணத்தைப் போல அவளுடைய ஆக்கிரமிப்பிற்கு அடிபணிந்து எவ்வளவு நேரம் அங்கு கிடந்தேன் என்று எனக்கே ஞாபகத்தில் இல்லை. நீண்ட நேரம் நான் அவளுடைய துடித்துக் கொண்டிருக்கும் கை, கால்களின் அடிமையாக இருந்தேன். அதற்குப் பிறகு நான் அவளுடைய காதலுக்கான பொருளாக மாறிவிட்டேன். அவளுடைய வாயின் ஈரமும் சுவையும் எனக்குச் சொந்தமாயின. அவளுடைய உடலின் மென்மையும் கடுமையும் எனக்குப் பழக்கமாகிவிட்டன. இறுதியில் எங்களைப் பிரிப்பதற்கு வேறு எந்த வழியும் தெரியாமல் என் தாய் என்னை நல்ல பண வசதி படைத்தவரும், நிறைய படித்தவருமான ஒரு உறவினருக்குத் திருமணம் செய்து கொடுத்து விட்டாள். திருமணம் நடப்பதற்கு முந்தைய நாள் கல்யாணிக்குட்டி என்னைத் தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டு சொன்னாள்:
"ஷீலா, நாம இந்த ஊரைவிட்டு வேறு எங்காவது போய் விடுவோம். நான் எந்த வேலையையாவது செய்து உன்னைக் காப்பாற்றுவேன்."
"நீ என்ன வேலை செய்வே? உன் படிப்பே இன்னும் முடியாமல் இருக்கு. நாம் பட்டினி கிடந்து தெருவுல செத்துக் கிடப்போம்"- நான் சொன்னேன்.
"இந்தச் சொந்தக்கார மனிதரை நீ காதலிப்பியா? என்னைக் காதலிக்கும் உன்னால் இந்த மனிதரை சந்தோஷப்படுத்த முடியுமா?"- கல்யாணிக்குட்டி கேட்டாள். உன் கணவருக்கு என்னைவிட இருபத்தோரு வயது அதிகம். காதுக்கு மேலே நரைக்க ஆரம்பித்திருந்த சுருட்டை முடியையும், சற்று பருமனான உடலமைப்பையும் கொண்டிருந்த அவரை ஒரு அழகற்ற மனிதர் என்று கல்யாணிக்குட்டி நினைத்தாள்.
"உன்னைப் போன்ற ஒரு அழகான பெண்ணை ஒரு அழகற்ற மனிதருக்குத் திருமணம் செய்து கொடுத்தது மிகவும் பாவம் பிடித்த ஒரு விஷயம். உன் தாயை கடவுள் தண்டிக்கட்டும்"- அவள் என்னிடம் சொன்னாள்.
"என் கணவர் அழகற்றவர் அல்ல"- நான் சொன்னேன்.
அடுத்த நிமிடம் கல்யாணிக்குட்டி சிவந்த கன்னங்களுடன் என்னுடைய அறையை விட்டு வெளியேறினாள்.
தேனிலவு சமயத்தில் என் கணவர் என்னிடம் கேட்டார்:
"உன்னுடைய அந்தத் தோழி, கல்யாணிக்குட்டி... அவளுக்கு என்மீது ஏன் இந்தக் கோபம்? என்னுடன் ஒரு வார்த்தைகூட இதுவரை அவள் பேசியது இல்லை. நேற்று நாம் பேட்மின்டன் விளையாட அவளை அழைச்சப்போ, அவள் ஓடிட்டாள். என்மீது அவளுக்குப் பொறாமை இருக்குன்னு நான் நினைக்கிறேன். நான் சொல்றது உண்மைதானே?"
நான் அவரை அவளுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டேயிருந்தேன். பீரும் வெங்காயமும் சிகரெட்டும் மணக்கக்கூடிய அவருடைய வாயுடன் புற்களின் நறுமணத்தைக் கொண்ட அவளுடைய வாயை நான் ஒப்பிட்டுப் பார்த்தபோது, அவர் தோற்றுப் போனார். எனக்கு சந்தோஷத்தைத் தரவேண்டும் என்ற நோக்கத்துடன் அவள் தடவியதையும் விரல்களால் அழுத்தியதையும் உதடுகளால் மகிழ்ச்சி கொள்ளச் செய்ததையும் எவ்வளவு முயற்சித்தும் என்னால் மறக்க முடியவில்லை.