சந்தன மரங்கள் - Page 13
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6471
மகிழ்ச்சியுடன் இருப்பது கூட ஒரு பெரிய பாவம் என்று அவள் எங்களை நம்ப வைக்க முயற்சித்தாள். அவள் இறந்தால்கூட நான் அழமாட்டேன்."
அம்மிணியின் முகத்தை வருடுவதற்காக நீட்டிய கையை நான் அடுத்த நிமிடம் பின்னோக்கி இழுத்துக் கொண்டேன்.
"என் சந்தோஷத்தைக் கெடுப்பதற்கு என் தாய் முயற்சித்தாள். என் மீது டாக்டர் கல்யாணிக்குட்டி பிரியம் வைக்க ஆரம்பித்தபோது, அவள் ஹிஸ்டீரியாவால் பாதிக்கப்பட்டவளைப் போல ஆகிவிட்டாள். அந்த மதிப்புமிக்க பெண் என்னையும் என் தந்தையையும் வசீகரித்து தன்னுடைய ஆஸ்திரேலியாவிற்கு அழைத்துக் கொண்டு போக நினைத்திருக்கிறாள் என்று சொன்ன என் தாய், தன் தலையை நிலத்தில் மோத வைத்து உரத்த குரலில் அழ ஆரம்பித்து விட்டாள். அழகு இல்லாத பெண்களின் பொறாமையைப் போல அவலட்சணமான வேறொரு உணர்வு பூமியில் இருக்கிறதா? எனக்கும் டாக்டர் கல்யாணிக்குட்டிக்கும் இடையில் இருப்பது இயற்கைக்கு விரோதமான உறவு என்று கூட என் தாய் சொன்னாள். அவங்க மீது எனக்குத் தோன்றிய அன்பு இயற்கைக்கு விரோதமானதா? உண்மையைச் சொல்லுங்க."
திடீரென்று என்னுடைய முகத்தைப் பார்த்தவாறு என் கணவர் சொன்னார்: "நீ மிகவும் வெளிறிப் போயிட்டே. வீட்டுக்குப் போய் சிறிது நேரம் படுத்துத் தூங்கு. அதற்குப் பிறகு மருத்துவமனைக்குப் போ..."
நான் அவர் கூறியபடி நடந்தேன். எனக்கு அம்மிணியின் கண்களைச் சந்திப்பதற்கான தைரியம் இல்லாமல் போய்விட்டது. அவளுடைய இறுதிக் கேள்வி என்னுடைய மனக் குளத்தில் தூண்டில் விழுந்ததைப் போல நான் உணர்ந்தேன்.
காரில் இருக்கும்போது அவர் சொன்னார்: "போன மாதம் வரை மன அமைதியுடன் வாழ்ந்த குடும்பம்..." அவருடைய கன்னங்களுக்குக் கீழே வெள்ளை நிறத்தில் முடி வளர்ந்திருப்பதை நான் அப்போதுதான் பார்த்தேன்."
"நீங்க இன்னைக்கு சவரம் செய்யலையா?"- நான் கேட்டேன்.
"நான் சவரம் செய்தாலும் செய்யாவிட்டாலும் யாருக்குக் கேடு? என்னுடைய முகத்தை யாரும் பார்க்காமல் போய் எவ்வளவு காலம் ஆயிடுச்சு! இருக்கக்கூடிய வாழ்நாட்களை விட அதிக நாட்கள் வாழ்ந்துவிட்ட ஒரு கிழவன் நான். சொந்த மனைவியின் கண்களில் வெறும் ஒரு கோமாளியாக ஆகிவிட்ட அதிர்ஷ்டமில்லாதவன்."
எனக்கு அவருடைய கையைத் தொட வேண்டும் போல இருந்தது. முன்பு செய்ததைப் போல அந்தக் கண்களை உற்றுப் பார்க்க வேண்டும் போல இருந்தது. ஆனால், மன்னிக்கக்கூடிய பெரிய மனது எனக்கு இல்லை. என்னையே மன்னிக்கக்கூடிய மனதும் எனக்கு இல்லை. நான் நடந்து கொண்டிருக்கும் பிணமாக ஆகிவிட்டேன். கல்யாணிக்குட்டியின் வார்த்தைகளை நான் மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்தேன்.
"இருபத்து இரண்டு நாட்கள் விடுமுறையில் அவள் வந்தாள். திரும்பிப் போகும்போது அவள் எல்லோருடைய வாழ்க்கையையும் தாறுமாறாக ஆக்கிட்டா..."- நான் தாழ்வான குரலில் சொன்னேன்.
"பெண்கள் இரண்டு வகைப்பட்டவர்கள். ஒரு வகையைச் சேர்ந்தவர்கள் வெறும் தாய்மார்களாக மட்டும் இருப்பார்கள். அவர்களால் நிம்மதி அளிக்க முடியும். மன்னிப்பு தருவதற்கும். இன்னொரு வகையைச் சேர்ந்தவர்கள் கேடு உண்டாக்குபவர்கள். பத்ரகாளிகள். கேடு உண்டாக்காமல் இருக்க அவர்களால் முடியாது"- அவர் சொன்னார். கல்யாணிக்குட்டி கேடு விளைவித்த உறவுகளை ஒவ்வொன்றாக நான் நினைத்துப் பார்த்தேன். சிறு வயதிலிருந்து முதுமைக் காலம் வரை அவளால் நான் எத்தனையோ தடவை கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேன்!
"அவள் இனிமேல் இந்தியாவிற்கு வராமல் இருந்தால் போதும்"- நான் சொன்னேன்.
"அவள் வருவாள். உன்னை மறப்பதற்கு அவளுக்கு எந்தச் சமயத்திலும் முடியாது."
"என்னையா? அப்படியெல்லாம் இல்லை. இன்று விமான நிலையத்தில் இருக்கும்போது அவள் என்னுடன் ஒரு உற்சாகமற்ற நிலையில் இருந்துகொண்டுதான் பிரிந்து சென்றாள். இனி எந்தச் சமயத்திலும் அவள் என்னைப் பார்க்க வரமாட்டாள் என்பது மட்டும் உறுதி."
"நீ அவள்மீது பிரியம் வைத்திருக்கும் காலம் வரையில் அவள் உன்னை விட்டுப் போக மாட்டாள்"- அவர் சொன்னார்.
அவர் சிரிக்கிறாரோ என்று நான் சந்தேகப்பட்டேன். பார்த்தபோது ஒரு கம்பீரமான வெளிப்பாட்டை மட்டுமே என்னால் அந்த முகத்தில் காண முடிந்தது.
"நீங்கள் என்னை கேலி செய்கிறீர்களா?"
"விளையாடக்கூடிய குணம் எனக்கு இல்லையே டாக்டர் ஷீலா! ஒரேயொரு எதிரியை மட்டுமே நான் சந்தித்திருக்கிறேன்- டாக்டர் கல்யாணிக்குட்டியை. அவளால் மட்டுமே உன்னை என்னிடமிருந்து பிரிக்க முடியும் என்பதை நான் எப்போதோ புரிந்து கொண்டுவிட்டேன். தேன்நிலவு காலத்தில் கூட அவளுடைய நிழல் நம் இருவருக்குமிடையில் இடம் பிடித்திருந்தது. என்னுடைய ஒவ்வொரு காதல் வெளிப்பாட்டையும் அவளுடைய செயலுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறாய் என்பதை நான் புரிந்து கொண்டேன். அவளுக்குப் பின்னால் வந்தவன் நான். ஒரு சூறாவளி முடிந்தபிறகு, தயங்கித் தயங்கி வந்து சேர்ந்த வெறும் சாரல் மழையாக இருந்தேன் நான்."
அதற்குப் பிறகு அவருடைய முகத்தைப் பார்ப்பதற்கு எனக்கே வெட்கமாக இருந்தது. கண்ணாடியில் தெரிந்த என்னுடைய முகம் இதற்கு முன்பு நான் பார்த்திராத முகம் என்பதைப் போல எனக்கு அந்த நிமிடத்தில் தோன்றியது. அழியாமல் இருந்த செந்தூரப் பொட்டும் வெள்ளி இழைகள் ஓடிய தலைமுடியும் ஒளிர்ந்து கொண்டிருக்கும் கன்னங்களும் உள்ள அந்தப் பெண் நானா? நிச்சயமாக இல்லை. சினேகிதியைக் கட்டிப் பிடித்து அவளுடைய முகத்தில் நிம்மதி தேடும் ஒரு பெண்ணாக மட்டுமே நான் தோன்றினேன். பலமணி நேரங்கள் குளத்தில் நீந்திக் குளித்ததால் சேற்றின், பாசியின், இலையின், சருகின், ஆம்பலின் வாசனையையும் சுவையையும் கொண்டிருக்கும் காதலியின் உடல் தொடலில் சொர்க்க இன்பங்களைக் கண்டடைந்தவள்.
"ஓ... என் செல்லமே! நான் இனி எப்படி வாழ்வேன்?"- காரில் மெதுவாக நிறைந்து கொண்டிருந்த இருட்டை நோக்கி நான் முணுமுணுத்தேன்.
"என்ன? நீ என்னிடம் ஏதாவது சொன்னியா டாக்டர் ஷீலா?"- அவர் கேட்டார்.
"இல்லை. நான் உங்களிடம் எதுவும் கூறவில்லை"- நான் தலையை ஆட்டிக் கொண்டு சொன்னேன்.
சாலையின் இரு பக்கங்களிலும் நீல நிற விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. வாகனங்கள் ஓசைகளை உண்டாக்கியவாறு வேகமாக ஓடிக் கொண்டிருந்தன. பாலத்தைக் கடந்து ஃபோர்ட் கொச்சியை நோக்கி காரை ஓட்டும் போது, மீன் வாசனை காற்றில் கலந்து வந்தது. இருண்ட வெளிச்சத்திற்குள்ளிருந்து கல்யாணிக்குட்டியின் சிறுவயது சிரிப்புச் சத்தம் கேட்டது.