சந்தன மரங்கள் - Page 9
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6471
அவர் என்னைப் படுக்கையிலேயே படுக்க வைக்க ஒரு முயற்சி செய்தார். நான் கைகளை விலக்கியபோது, அவருடைய கண்ணாடி தரையில் விழுந்து உடைந்தது. அதை அவர் தேடி எடுத்தபோது எந்தவொரு இரக்கமும் இல்லாமல் நான் அந்த மெதுவான அசைவுகளைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். அவருடைய வேட்டிக்கு அடியில் தெரிந்த கோவணம் எனக்குள் வெறுப்பை உண்டாக்கியது. வேட்டி சிறிது விலகிய போது, வாரிக்கோஸ் நரம்புகள் பலாவின் வேர்களைப் போல வீங்கியும் பின்னியும் தெரிந்தன. 'கிழவன்... படு கிழவன்...'- என் மனம் முணுமுணுத்தது. ஆனால் என்னுடைய உதடுகள் அசையவில்லை.
"இன்னைக்கு ஒரு சுவாரசியமான சம்பவம் நடைபெற்றது. ரோட்டரி க்ளப்பைச் சேர்ந்தவர்கள் தொலைபேசி மூலம் சொன்னார்கள். மாதிரி தம்பதிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக ஒரு போட்டியை அவர்கள் நடத்தப் போகிறார்களாம். நானும் நீயும் அந்தப் போட்டியில் பங்கு பெற வேண்டுமென்று அவர்கள் கட்டாயப்படுத்துகிறார்கள். முதல் பரிசு உலகப் பயணத்திற்கான இரண்டு விமான டிக்கெட்டுகள். மாதிரி தம்பதிகளாக உலகம் முழுவதும் பயணம் செய்யலாம். உனக்கு அது பிடிச்சிருக்குல்ல டாக்டர் ஷீலா?"- அவர் கேட்டார்.
"என் நோயாளிகளை விட்டு நான் எந்தப் பயணத்திற்கும் வர்றதா இல்ல"- நான் சொன்னேன்.
"வெற்றி பெற்றால்தானே உலகப் பயணத்திற்குப் போக முடியும். நாம் இந்தப் போட்டியில் வெற்றி பெற முடியுமா?"- அவர் கேட்டார்.
"ஏன் வெற்றி பெற முடியாது? மிகவும் அதிக வருடங்கள் நீடித்திருக்கும் ஒரு குடும்ப வாழ்க்கைதானே நம்முடைய குடும்ப வாழ்க்கை? நான் உங்களுக்கு துரோகம் செய்தது இல்லை. நீங்கள் எனக்குத் துரோகம் பண்ணியது இல்லை. ஒரு இரவு நேரத்தில் கூட நாம் பிரிந்து படுத்து உறங்கியதில்லை. உண்மையிலேயே அந்தப் போட்டியில் நாம் வெற்றி பெறுவோம்"- நான் சொன்னேன்.
அவர் என்னுடைய முகத்தையே சோர்வடைந்துபோய் காணப்பட்ட கண்களால் ஆராய்ந்தார்.
"நீ உண்மையாகத்தான் பேசுகிறாயா? சில நேரங்களில் என்னை நீ கேலி செய்கிறாயோ என்று எனக்கு சந்தேகம் வந்திடுது"- அவர் சொன்னார்.
"கேலி செய்வதா? எதற்கு? உண்மையாகவே நம்முடைய குடும்ப வாழ்க்கையைப் பற்றி எல்லோரும் புகழ்ந்து சொல்லியே ஆக வேண்டும். நாம் மற்ற தம்பதிகளைப் போல அல்ல. என்னுடைய சினேகிதி கல்யாணிக்குட்டி திருமணம செய்து இரண்டரை வருடங்கள் கடந்தபோது, விவாகரத்து வாங்கிவிட்டாள். அவளுடைய குடும்ப வாழ்க்கை தோல்வியில் முடிந்துவிட்டது என்று எல்லோரும் சொன்னாங்க. இன்னைக்கு அவள் என்னைப் பார்ப்பதற்காக வந்தாள். அவள் தன்னுடைய கணவரைப் பற்றி விசாரிப்பதற்காகத்தான் திரும்பவும் இந்த நகரத்திற்கே வந்திருக்கிறாள். முப்பது வருடங்களுக்கு முன்னால் தான் உதறி விட்டுப்போன மனிதரைப் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்வதற்காக அவள் என்னைத் தேடி வந்தாள்"- நான் சொன்னேன்.
"பிறகு?"
"சுதாகரனின் இரண்டாவது மனைவி என்னுடைய சிகிச்சையில் இருக்கிறார் என்று நான் சொன்னேன். அவளுடைய குடும்ப வாழ்க்கை ஒரு பெரிய வெற்றியாக இருந்தது என்று அவள் சொன்னாள். அந்த மனிதரைப் பற்றிய இனிய நினைவுகள் மட்டுமே இப்போது அவளிடம் இருக்கின்றன. ஒருவரையொருவர் வெறுப்பதற்கு முன்பே அவர்கள் பிரிந்து விட்டார்களே!"
"அப்போது நீ என்ன சொன்னாய்?"
"நான் என்ன சொல்றது? எனக்கு அவள் மீது பொறாமை தோன்றியது. அவ்வளவுதான்."
"நீ எந்தச் சமயத்திலும் என்னை விரும்பினது இல்லையா டாக்டர் ஷீலா?"- அவர் கேட்டார். அந்தக் கிழட்டுக் கண்களில் ஈரம் படர்ந்தபோது நான் வெட்கப்பட்டு தலையைக் குனிந்து கொண்டேன்.
"உன் அழகான முகத்தைக் கூட என்னால் பார்க்க முடியவில்லை. நாளைக்கே நான் ஒரு புதிய கண்ணாடிக்காக ஏற்பாடு செய்யிறேன்."
மறுநாள் காலை பதினோரு மணிக்கு அவர் க்ளப்பிற்குப் போயிருந்த நேரத்தில் கல்யாணிக்குட்டி வீட்டிற்கு வந்தாள். என்னுடைய வீட்டிற்கு முன்னாலிருந்த பூந்தோட்டமும் வரவேற்பறையில் இங்குமங்குமாக வைக்கப்பட்டிருந்த உலோகத்தாலான சிலைகளும் மிகவும் அழகாக இருப்பதாக கல்யாணிக்குட்டி சொன்னாள்.
"நீ கலை உணர்வு கொண்ட ஒரு பணக்காரி"- அவள் சொன்னாள்: "உண்மையிலேயே நீ எப்போதும் இப்படி இருந்தே- கலை உணர்வு கொண்ட பணக்காரியா..."
"கலை உணர்வு உண்டாவதும் பணம் உண்டாவதும் ஒரு குற்றம் என்ற தவறான எண்ணத்துடன் நீ பேசுகிறாய் என்று நான் நினைக்கிறேன்."
"அதெல்லாம் வெறும் தோணல்.அவ்வளவுதான். உன் மீது எனக்கு எப்போதும் பொறாமை மட்டுமே தோணியிருக்கு. இருபது வயது அதிகமாக இருக்கும் ஒரு மனிதரை நீ கணவராக ஏற்றுக் கொண்டபோது நான் பொறாமைப்பட்டேன். காரணம்- உன் கணவர் என் சுதாகரனைப் போன்ற ஒருவராக இல்லை. உன் கணவர் தன்னுடைய நீலநிற ட்ரெஸ்ஸிங் கவுனை அணிந்து வெளியே வராந்தாவில் அமர்ந்து செய்தித்தாள்களைப் படிக்கிறப்போ நான் உன்னுடைய அதிர்ஷ்டத்தை நினைத்து பொறாமைப்பட்டிருக்கேன். என்னுடைய சுதாகரன் இளைஞரா இருந்தார். ஆண்மைத்தனம் கொண்டவராக இருந்தார். ஆனால், தன்னுடைய குற்ற உணர்வு அவரை ஒரு மிருகமாக மாற்றியது. பழகும் விஷயங்களில் எப்படி நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டும் என்று அவருக்குத் தெரியவில்லை. பெரிய மனிதர்கள் இருக்கும் அரங்கில் அவரை அழைத்துக் கொண்டு செல்ல நான் தயங்கினேன். அவர் என்னை அடியே பெண்ணே, தேவடியாள் என்றெல்லாம் அழைப்பார். அவருக்கு என் மீது மதிப்பு இல்லை என்பதை நான் உறுதியாகத்தான் தெரிந்து கொண்டேன். பாசத்துடன் இருக்கும் ஒரு கணவரைத் தேடி நான் சுதாகரனை விட்டுப் பரிந்து சென்றேன். ஆனால், எப்போதும் சுதாகரனை மட்டுமே நான் என்னுடைய படுக்கையில் எதிர்பார்த்திருக்கிறேன்... உன்னையும்..."
கல்யாணிக்குட்டி அழ ஆரம்பித்தபோது, எனக்கு அவள் மீது இரக்கம் உண்டானது. அவளுக்கு சுதாகரனை மீண்டும் பார்ப்பதற்கான சந்தர்ப்பத்தை உண்டாக்கிக் கொடுக்க நான் தயாராக இருப்பதாகச் சொன்னேன்.
"வேண்டுமென்றால் நான் அவரை இங்கு உணவுக்கு அழைக்கிறேன். மனைவியுடன்..."- நான் சொன்னேன்.
"அய்யோ! மனைவியை அழைக்க வேண்டாம். எனக்கு அவருடைய மனைவியைப் பார்க்க சிறிதும் விருப்பமில்லை..."- அவள் சொன்னாள்.
மறுநாள் நான் வேண்டிக் கேட்டுக் கொண்டதால் சுதாகரன் வந்தார். என்னுடைய தோட்டத்தில் ஒரு ஃபெமினா இதழை வாசித்துக் கொண்டு கல்யாணிக்குட்டி அமர்ந்திருந்தாள். அவர்கள் இருவரும் மவுனமாக இருந்து கொண்டு ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டார்கள். ஏங்கிக் கொண்டிருக்கும் கண்களுடன் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். நான் உள்ளே போனேன்.
அன்று இரவு அவர்கள் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து ஒரு வாடகைக் காரில் போன பிறகு, அதுவரையில் அவர்களிடம் விருந்தினருக்கான மரியாதைகளைக் காட்டிய என்னுடைய கணவர் என்னைத் திட்ட ஆரம்பித்தார்.