சந்தன மரங்கள் - Page 5
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6471
மருத்துவப் படிப்பில் முதலிடத்தைப் பெற்ற கல்யாணிக்குட்டிக்கு தன்னுடைய இல்லற வாழ்க்கையை வெற்றிகரமான ஒன்றாக ஆக்கிக் கொள்ள முடியவில்லை.
பிறகு அவள் விவாகரத்து பெற்ற பெண்ணாக ஆஸ்திரேலியாவிற்குப் போவதற்கு முன்னால் என்னிடம் விடைபெறுவதற்காக வந்தாள். எனக்கும் ஆஸ்திரேலியாவில் ஒரு வேலை வாங்கித் தருவதாக அவள் சொன்னாள்.
"வேண்டாம் கல்யாணிக்குட்டி. நான் இங்கேயே இருந்துடுறேன்"- நான் சொன்னேன்.
"வா ஷீலா. நான் உன்னைக் காப்பாத்துறேன். என்னுடைய மரணம் வரை நீ என்னுடைய உயிரா இருப்பே"- அவள் மெதுவான குரலில் சொன்னாள்.
"என் கணவரை விட்டுட்டு நான் எங்கேயும் வரமாட்டேன்"- நான் சொன்னேன்.
"உன் கிழட்டுக் கணவர்! அவருக்கு உன்மீது உண்மையிலேயே பிரியம் இருக்குன்னு நான் நம்பல. நல்ல வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்த உன்னைத் திருமணம் செய்தால், மேலும் கொஞ்சம் விவசாய நிலங்களும் தென்னந்தோப்புகளும் தனக்கு வரதட்சணையாகக் கிடைக்கும் என்று நம்பித்தான் அவர் உன்னைக் கல்யாணம் பண்ணியிருக்காரு."
"போ பெண்ணே... வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசாதே..."- நான் சொன்னேன். அதைக் கேட்டு கல்யாணிக்குட்டி குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள்.
"அந்தக் காலத்துல நீ என்னை எப்பவும் பெண்ணே என்றுதான் அழைப்பே... அது ஞாபகத்துல இருக்குதா?"- அவள் கேட்டாள். "அந்த அழைப்பை மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் நான் ஆணாக நடித்தேன். உன்னுடைய பெண்ணும் உன்னுடைய ஆணும் நானே என்றாகிவிட்டேன்."
ஒரு வருடம் கழித்து இந்தியாவிற்கு வருவதாக சத்தியம் பண்ணி விட்டுத்தான் அவள் விமானத்திலேயே ஏறினாள். அவள் வரவும் இல்லை. எனக்கும் கணவருக்கும் பிள்ளைகள் பிறக்கவில்லை. மற்ற பெண்களைத் தாய்களாக ஆக்க முடிந்த வரையில் உதவிய எனக்கு கர்ப்பம் தரிப்பதற்கான அதிர்ஷ்டம் ஒருமுறை கூட உண்டாகவில்லை. ஆனால், என்னுடைய கணவர் அதற்காகக் கவலைப்படவில்லை. அணு ஆயுதப் பெருக்கத்தை நினைக்கும்போது இந்த உலகத்திற்கு குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்கள் மிகப்பெரிய பாவத்தைச் செய்பவர்கள் என்று அவர் பலமுறை கூறினார். இறுதியில் நான் அவர் கூறுவது உண்மைதான் என்று நம்ப ஆரம்பித்தேன். குழந்தைகளை மிகவும் வாஞ்சையுடன் நெருங்கி அவர்களைக் கொஞ்சக்கூடிய நான் அவர்களை விலக்கப் பழகிக் கொண்டேன். க்ளப்பில் தங்களுடைய வளர்ந்த பிள்ளைகள் உண்டாக்குகிற பிரச்சினைகளைப் பற்றி மற்ற பெண்கள் விவாதிக்கும் போது, இரக்கத்தையும் பரிதாப உணர்வையும் எதிர்பார்த்து தாராளமாகக் கண்ணீர் விடும்போது, நான் எனக்குள் கூறிக் கொள்வேன்: 'ஷீலா, நீ அதிர்ஷ்டக்காரி. உன்னுடைய வயதான காலம் அமைதியானதாக இருக்கும்.'
2
அன்று நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகளைச் சோதனை செய்து பார்க்க வேண்டிய நிலை எனக்கு உண்டானது. என்னுடன் பணியாற்றும் டாக்டர் வர்கீஸ் மூன்று நாட்களுக்கு விடுமுறை எடுத்துக் கொண்டு சங்ஙனாச்சேரியில் இருக்கும் தன்னுடைய வயதான தாயைப் பார்ப்பதற்காகப் போய்விட்டிருந்தார். சிறிதும் ஓய்வே இல்லாமல் கஷ்டப்பட்டு வேலை செய்யும்போது சாதாரணமாகவே எனக்கு வரக்கூடிய தலைவலி மதியத்திற்கு முன்பே வந்து என்னைப் பாடாயப் படுத்திக் கொண்டிருந்தது. அதனால் மதிய உணவு சாப்பிட நான் வீட்டிற்குப் போக வேண்டாம் என்று முடிவெடுத்து, டிரைவரிடம் கூறி காப்பியும் ஒரு மசாலா தோசையும், ஒரு மூன்று நட்சத்திர ஹோட்டலில் இருந்து வாங்கிவரச் செய்தேன். நான் வரவில்லை என்று தொலைபேசியில் கூறியபோது, வரவேண்டும் என்று அவர் வற்புறுத்தவும் இல்லை. முன்பெல்லாம் நான் வரமாட்டேன் என்று கூறும்போது, அவர் கூறுவார்:
“தலைவலி இருந்தால் இங்கே வந்து கொஞ்சம் ஓய்வு எடு. பிறகு தேநீர் அருந்திவிட்டு மருத்துவமனைக்குத் திரும்பப் போகலாம்.’’
“எனக்கு தலைவலி இருக்கு. நான் இன்னைக்கு சாப்பிடுவதற்கு வீட்டுக்கு வரல... இங்கேயே ஏதாவது சாப்பிட்டுக் கொள்கிறேன்.’’
அவர் வழக்கத்திற்கு மாறாகச் சொன்னார்:
“சரி... சாயங்காலம் நீண்ட நேரம் தாமதிக்க வேண்டாம். நமக்கு இன்னைக்கு அந்த ரோட்டரி வரவேற்பு இருக்கே...! ஏழு மணிக்கு..."
நான் பலவீனமான ஒரு குரலில் சொன்னேன்: "சரி... சாயங்காலம் நான் சீக்கிரமே வீட்டுக்கு வர முயற்சிக்கிறேன்."
டிரைவர் கொண்டு வந்த மசாலா தோசைக்கு ரேஷன் அரிசியின் சுவை இருந்தது. நான் அதைத் திறந்து உருளைக் கிழங்கும் வெங்காயமும் மிளகாயும் கலந்து செய்யப்பட்ட கலவையை மட்டும் தின்றேன். காப்பிக்கும் சுவை எதுவும் இல்லாமலிருந்தது. இறுதியில் தலைவலிக்காக ஒரு நோவால்ஜினை விழுங்கி, நீரைக் குடித்துவிட்டு, நான் மீண்டும் என்னுடைய க்ளினிக்கிற்கு வந்தேன். அப்போதுதான் அந்தப் பெண்ணைப் பார்த்தேன். நல்ல உடலமைப்பைக் கொண்ட நவநாகரீகமான தோற்றத்தைக் கொண்ட ஒரு நடுத்தர வயதைக் கொண்ட பெண்... இளமையின் வெளிப்பாடுகள் முகத்திலும் முடியிலும் பொய்யாகவாவது தெரியும் வண்ணம் விளங்கச் செய்து கொண்டிருக்கும் அழகான பெண்... அவள் தயங்கியவாறு என்னை நெருங்கி வந்தாள். அவளுடைய உதட்டில் மெல்லிய ஒரு புன்னகை மரப்பாலத்தில் பாதியைக் கடந்த ஒரு ஆளிடம் இருப்பதைப் போல வெளிப்பட்டது.
"என்னைத் தெரியலையா?"- அவள் கேட்டாள்.
"யார்? உங்களுடைய உடம்புக்கு என்ன?"- நான் கேட்டேன்.
"நாம் ஒருவரையொருவர் பார்த்து இப்போது இருபத்தாறு வருடங்கள் ஆகிவிட்டன. அதனால் உனக்கு என்னை யாருன்னு தெரியாமல் இருக்கலாம். நான்தான்... கல்யாணிக்குட்டி... சுதாகரனின் மனைவி..."
"கல்யாணிக்குட்டி! நீ முற்றிலும் மாறிட்டியே! முதல்ல உன் நிறம்... நீ முழுசா வெள்ளை ஆயிட்டே. நீ அப்போ தடியா இருப்பே. இப்போ நீ மெலிஞ்சிட்டே. தலைமுடியோ? முழங்கால் வரை தொங்கிக் கொண்டிருந்த உன்னுடைய கூந்தலை நீ குறைச்சிட்டே... உன் பற்களுக்கும் மாற்றம் உண்டாகியிருக்கு."
"என் பற்களுக்கு அப்போதும் அழகு இருந்தது இல்லை. என் முன்பக்க பற்கள் கொஞ்சம் முன்னோக்கி நீட்டிக் கொண்டு இருந்தன. அவற்றை நான் கம்பி கட்டி உள்ளே போறது மாதிரி செய்தேன். உனக்கு என்னை அடையாளம் தெரிஞ்சிக்க முடியலையே! அப்படின்னா சுதாகரனுக்கும் என்னைப் பார்த்தால் யாருன்னு புரியாது... அப்படித்தானே?"
அவள் தன்னுடைய 'குச்சி' பேக்கில் இருந்து ஒரு கருப்பு நிற கண்ணாடியை எடுத்து முகத்தில் அணிந்து கொண்டாள்.
"இப்போ என்னைப் பார்த்தால் அப்போ இருந்த நண்பர்களுக்கெல்லாம் அடையாளம் தெரியாது. அப்படித்தானே ஷீலா? நான் இப்போ முன்பு இருந்த கல்யாணிக்குட்டி இல்லை. உள்ளேயும் வெளியேயும் முற்றிலும் மாறிவிட்டேன். உண்மையைச் சொல்லு... உனக்கு இப்போ இருக்குற என்னைப் பிடிச்சிருக்கா? இல்லாவிட்டால் பழைய என்னையா?"- கல்யாணிக்குட்டியின் கேள்விக்கு பதிலாக நான் வெறுமனே சிரித்தேன். அவள் என்னை நெருங்கி வந்து என்னுடைய காதிலும் கழுத்திலும் முத்தமிட்டாள்.