சந்தன மரங்கள் - Page 4
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6471
"என்னுடைய கர்ப்பப்பை அசுத்தமாகிவிட்டது என்று ஒரு தோணல் என்னைப் பாடாய்ப் படுத்துகிறது. சுதாகரனை நான் எந்தச் சமயத்திலும் மதிப்புடன் நினைத்தது இல்லை. அவரைப் போன்ற ஒரு சாதாரண மனிதனின் குழந்தையை நான் பத்து மாதங்கள் என்னுடைய உடலில் வளர்க்க மாட்டேன். அவருடைய குழந்தையை நான் எந்தச் சமயத்திலும் பெற்றெடுக்க மாட்டேன்"- அவள் சொன்னாள்.
"பிறகு யாருடைய குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டுமென்று ஆசைப்படுறே?"- நான் வெறுப்புடன் கேட்டேன்.
அடுத்த நிமிடம் எழுந்திருந்த அவள் என்னுடைய உதடுகளில் முத்தமிட்டாள். அவளுடைய தோலில் இருந்த அந்த தனிப்பட்ட வாசனை என்னைக் கீழடங்கச் செய்தது- புதிய மழையை ஞாபகப்படுத்தும் நறுமணம்.
"உன்னுடைய குழந்தையை மட்டுமே நான் பெற்றெடுக்க ஆசைப்படுறேன்"- அவள் தழுதழுத்த குரலில் சொன்னாள்.
"அது முடியாத விஷயமாயிற்றே!"- நான் முணுமுணுத்தேன்.
சுதாகரனின் சம்மதம் இல்லாமல் அவருடைய குழந்தையை அழிக்க நான் தயாராக இல்லை. கர்ப்பக் கலைப்பு செய்து சட்டங்களை மீற எனக்கு மனம் வரவில்லை என்று நான் அவளிடம் கூறினேன்.
"சரி... நான் வேற எங்காவது போறேன். தாராளமா பணம் கொடுத்தால், இதைச் செய்யக் கூடிய பலரும் இந்த நகரத்தில் இருக்கத்தான் செய்வாங்க"- அவள் சொன்னாள். திகைத்துப் போய் ஒரு சிலையைப் போல நான் என்னுடைய நாற்காலியில் உட்கார்ந்திருந்தபோது, விடைகூட பெற்றுக் கொள்ளாமல் கல்யாணிக்குட்டி என்னை விட்டுப் போய்விட்டாள். அதற்குப் பிறகு நான் அவளைப் பற்றி நினைத்துப் பார்க்காமல் இருகக முயற்சித்தேன். எனக்கு குற்ற உணர்வை மட்டுமே பரிசாக தரும் அவளை மறந்துவிட வேண்டும் என்று நான் முடிவெடுத்தேன். அவள் என்னைப் பார்ப்பதற்காக வந்திருந்தாள் என்ற விஷயத்தை நான் என்னுடைய கணவரிடம் கூறவேயில்லை.
இரண்டு நாட்களுக்குப் பிறகு நள்ளிரவு நேரத்தில் என்னுடைய தொலைபேசி ஒலிக்க ஆரம்பித்தது. அது சிறிதும் அறிமுகமில்லாத ஒரு குரலாக இருந்தது. என்னுடைய சிநேகிதி ரத்தப் போக்கால் தளர்ந்து போய் ஒரு இடத்தில் படுத்திருக்கிறாள் என்று அந்த ஆள் சொன்னான். முகவரியை வாங்கிய நான் வேகமாக காரில் ஏறினேன். என்னுடைய கணவர் தூக்கக் கலக்கத்துடன் எழுந்து வந்தார்.
"ஒரு பிரச்சினைக்குரிய கேஸ்... நான் திரும்பி வர தாமதமானாலும் கவலைப்பட வேண்டாம்"- நான் காரில் ஏறும்போது அவரைப் பார்த்துச் சொன்னேன். நகரத்தின் எல்லையில் அழுக்கடைந்து போயிருந்த ஒரு தெருவில் இருந்த ஒரு வீட்டில் கல்யாணிக்குட்டி படுத்திருந்தாள். சுய உணர்வற்ற நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த அவள், என்னுடைய குரலைக் கேட்டு கண்களை மிகவும் சிரமப்பட்டுத் திறந்தாள். அவள் படுத்திருந்த இடத்தில் இரத்தம் படிந்த விரிப்புகள் இருந்தன. நான் வீட்டின் தலைவி நீட்டிய டார்ச் வெளிச்சத்தில் அவளைச் சோதித்துப் பார்த்தேன். பாதியாக முடித்திருந்த ஒரு கர்ப்பக் கலைப்பு.
"இதை நீங்களா செஞ்சீங்க?"- நான் கேட்டேன். அந்தப் பெண் தலையை ஆட்டினாள்.
"டாக்டர், வேணும்னா இவங்களை மருத்துவமனைக்குக் கொண்டு போங்க. ஏதோ பிரச்சினை இருக்குற மாதிரி தெரியுது. என்ன செய்தும் ரத்தம் நிற்கல"- அந்தப் பெண் சொன்னாள்.
"நீ எதற்காக இதைச் செய்ய வச்சே?"- நான் கல்யாணிக்குட்டியிடம் கேட்டேன். என்னுடைய கண்ணீர் வழிதலின் காரணமாக நான் அவளுடைய முகத்தைத் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. அவள் கண்களைத் திறந்தாளா? அவள் கன்னக் குழிகள் தெரியுமாறு புன்சிரிப்பைத் தவழ விட்டாளா? எனக்குத் தெரியவில்லை. அந்த வீட்டில் எந்த இடத்திலும் அலசிப் போட்ட துணிகளோ, பனிக்கட்டியோ எதுவும் இல்லை. நான் அந்த வீட்டுப் பெண்ணின் உதவியுடன் அவளைத் தூக்கிக் கொண்டு வந்து என்னடைய காரில் படுக்க வைத்தேன். அவளுடைய ரத்தம் என் காருக்குள் ஒழுகிக் கொண்டிருந்தது.
கல்யாணிக்குட்டியை வீட்டில் தங்க வைத்து கவனித்த விஷயம் என் கணவரைக் கோபம் கொள்ளச் செய்தது.
"அவள் எங்காவது இறந்து விட்டிருந்தால் போலீஸ்காரர்கள் என்னைக் கம்பிக்குள் இருக்க வைத்து விட்டுத்தான் வேறு வேலையைப் பார்ப்பார்கள்" என்றார் அவர்.
"உனக்கு ஆபத்தை வரவழைக்கக்கூடிய ஒரு நட்பு இது..."- அவர் முணுமுணுத்தார்.
இரவிலும் பகலிலும் சிறிதும் ஓய்வே இல்லாமல் நான் அவளை மிகவும் கவனித்துப் பார்த்துக் கொண்டேன். சுதாகரனைத் தொலைபேசியில் அழைத்து வரவழைத்தாலும், உண்மையான நிலைமையை நான் அவரிடம் கூறவில்லை. கருக்கலைப்பு அவளே விரும்பி வரவழைத்துக் கொண்ட ஒரு செயல் என்பதை நான் வெளிப்படுத்தவில்லை. சுதாகரன் எத்தனையோ தடவை எனக்கு நன்றி கூறினார்.
"நீங்க இல்லாமல் போயிருந்தால், அவளுக்கு ஏதாவது ஆபத்து உண்டாகியிருக்கும்"- அவர் தன்னுடைய தூங்கிக் கொண்டிருந்த மனைவியைப் பார்த்துக் கொண்டே சொன்னார்.
"இளம் வயதில் ஆரம்பித்த நட்பு இது"- நான் சொன்னேன்.
"எனக்குத் தெரியும். உங்களைப் பற்றி ஒருமுறையாவது குறிப்பிடாத நாட்கள் இருந்ததில்லை. அவளுக்கு உங்கள் மீது அந்த அளவிற்கு பிரியம்"- சுதாகரன் சொன்னார். நான் நிலை கொள்ளாத மனதுடன் முகத்தைத் திருப்பிக் கொண்டேன். சுதாகரன் அவளைத் தங்களுடைய வீட்டிற்குக் கொண்டு போன பிறகு, நான் அவளை விட்டு விலகி விட்டேன். அவள் எழுதிய கடிதங்கள் எதற்கும் நான் பதில் எழுதவில்லை. அவள் சுதாகரனுடன் சண்டை போடுகிறாள் என்றும்; அவள் விவாகரத்திற்கு முயற்சிக்கிறாள் என்றும் அவளுடைய மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டிருந்த ஒரு டாக்டர் என்னை வந்து பார்த்தபோது சொன்னார்.
"நீங்க அவங்களுக்கு அறிவுரை சொல்லணும். நீங்க சொன்னால், அவங்க இந்த சண்டைகளை நிறுத்திடுவாங்க"- அவர் சொன்னார்.
"நான் எதற்கு இந்த மாதிரியான விஷயங்களில் தலையிட வேண்டும்? அவளுக்கு அந்த மனிதருடன் சேர்ந்து வாழ முடியவில்லையென்றால், அவள் விவாகரத்து செய்துவிட்டு வேறு எங்காவது போய் வேலை பார்க்கட்டும்"- நான் சொன்னேன்.
"சுதாகரனுக்கு அவங்க இல்லாமல் வாழ்வது என்பது மிகவும் சிரமமான ஒர விஷயம். அவர் அவங்கமேல் அந்த அளவுக்கு அன்பு வச்சிருக்காரு"- அவர் சொன்னார்.
"தகுதியில்லாதவர்களுக்கு அன்பை வாரிக் கொடுத்து என்ன பிரயோஜனம்?"- நான் கேட்டேன். என்ன காரணத்தாலோ அவளுடைய திருமண முறிவைப் பற்றித் தெரிய வந்தபோது, எனக்கு எந்தவொரு கவலையும் உண்டாகவில்லை. அவளுடைய குடும்ப வாழ்க்கை தகர்ந்துவிட்டது. என்னுடைய குடும்ப வாழக்கை நன்றாக இருக்கிறது. நான் பெருமையுடன் நினைத்துப் பார்த்தேன். உணர்ச்சிவசப்படும் குணத்தைக் கொண்ட சுதாகரனும் கல்யாணிக்குட்டியும் ஒருவரோடொருவர் சண்டை போட்டுத் தங்களுடைய வாழ்க்கையை நாசமாக்கிக் கொண்டபோது, நானும் என்னுடைய கணவரும் மதிப்புடன் இன்பமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.