சந்தன மரங்கள்
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6470
விமான நிலையத்திற்கு நானே காரை ஓட்டிக் கொண்டு சென்றபோது, நான் எனக்குள் நினைத்துக் கொண்டேன். அவளை அனுப்புவதற்காக நான் போவது என்பது என்னுடைய இரக்க குணத்தின் மிகையான வெளிப்பாடு என்பதே உண்மை. அவள் இறுதியில் தன்னுடைய உண்மையான வடிவத்தையும் வண்ணத்தையும் காட்டிவிட்டாள். என்னையும், இறந்தவர்களும் உயிருடன் இருப்பவர்களுமான என்னுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களையும் முழுமையாக வெறுக்கக்கூடிய ஒரு எதிரியின் உருவம்...
ஆனால், காரைத் திருப்பிக் கொண்டு வீட்டிற்குத் திரும்பி வரவேண்டும் என்றும்; சிறகற்ற கழுகைப் போல அங்கு ஒடுங்கிப் போய் உட்கார்ந்திருக்கும் என்னுடைய வயதான கணவரை வார்த்தைகளாலும் விரல்களாலும் சமாதானப்படுத்த வேண்டும் என்றும் ஒரு தனிப்பட்ட தயக்கம் என்னை அனுமதிக்கவில்லை.
ப்ளாஸ்டிக் வாளிகளும் பல வண்ணங்களில் இருந்த லுங்கிகளும் வேறு பல பொருட்களும் இருந்த கடைகளைத் தாண்டி மூன்று சாலைகள் ஒன்று சேரக்கூடிய சந்திப்பை அடைந்த போது, நான் திடீரென்று என்னுடைய வண்டியை நிறுத்தினேன். பின்னால் வந்து கொண்டிருந்த ஒரு ஆட்டோ ரிக்ஷா என் காரில் வந்து மோதி, ஒரு அழுகையுடன் நின்றது. அதன் டிரைவர் கைகளை ஆட்டுவதையும், உதடுகளை அசைப்பதையும் நான் கண்ணாடி வழியாகப் பார்த்தேன். மீண்டும் நான் என்னுடைய பயணத்தைத் தொடர்ந்தேன். ஆவி படர்ந்த கண்ணாடித் துண்டுகளைப் போல என்னுடைய கண்ணீர் வழிந்த கண்கள் ஆகிவிட்டிருந்தன. சாலையில் நடந்து போய்க் கொண்டிருந்தவர்களின் முகங்கள் எனக்குத் தெளிவில்லாமல் தெரிந்தன. அவர்கள் அணிந்திருந்த ஆடைகளின் நிறங்கள் என்னுடைய கண்களை நோகச் செய்தன. நான் கல்யாணிக் குட்டியை நினைத்துப் பார்த்தேன். பழிவாங்கும் துர்க்கையாக மாறிவிட்ட கல்யாணிக் குட்டியை... ஆனால், என்னுடைய மனதில் தெளிவாக வந்து நின்றது பழைய கல்யாணிக் குட்டிதான். என்னை இறுகக் கட்டிப் பிடித்துக் கொண்டு, என் கழுத்திலும் தோளிலும் சூடான கண்ணீரை விழச் செய்த உயிருக்குயிரான தோழி... அப்போது அவள் கிராமத்துப் பெண்ணாக இருந்தாள். சந்தன நிறத்தில் இருந்த இளம்பெண். என் வீட்டு எல்லைக்குள் இருந்த மாமரத்தின் உயரமான கிளையில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில், அந்த மெலிந்து காணப்படும் இளம்பெண் மிதித்துக் குதித்துக் கொண்டிருப்பாள். சேகரன் மாஸ்டரின் ஒரே மகள். என்னுடைய பழைய பாவாடைகளையும் ரவிக்கைகளையும் அணிந்து என்னை எப்போதும் பின்பற்றிக் கொண்டிருந்தவள். என் நெருங்கிய தோழியாக இருந்தாலும், என்னுடைய உணவு அறைக்குள்ளோ படுக்கையறைக்குள்ளோ நுழைவதற்கு அவளுக்கு அனுமதியில்லை. ஒருமுறை என்னுடைய வற்புறுத்தலுக்கு சம்மதித்து அவள் என் கட்டிலில் வந்து உட்கார்ந்தாள். அதைப் பார்த்து அறைக்குள் வந்த என்னுடைய பாட்டி அவளை கடுமையாகத் திட்டி வெளியேற்றி விட்டாள்.
"இந்தப் பொண்ணுக்கு அம்முவின் படுக்கையில் வந்து உட்காரும் அளவிற்கு எப்படி தைரியம் வந்தது?"- பாட்டி கேட்டாள். அதற்குப் பிறகு மூன்றோ நான்கோ வாரங்களுக்கு கல்யாணிக் குட்டி என்னைப் பார்ப்பதற்கே வரவில்லை. அவளைப் பார்க்காமல் வாழ்க்கையே மிகவும் வெறுப்பான ஒன்றாகத் தோன்றியது. இறுதியில் நான் அவளுக்காக வாதம் செய்தேன். அவள் என்னுடைய ஜாதியைச் சேர்ந்தவள்தானே! படிப்பில் என்னைவிட திறமைசாலி அவள். பிறகு... அவளுடைய வறுமை- அது ஒரு தொற்றுநோய் இல்லையே! பாட்டி என்னுடைய வார்த்தைகளை மிகவும் கவனமாகக் கேட்டாள். முன் பிறவியில் செய்த பாவச் செயல்களுக்குத் தண்டனையாக சிலருக்கு இந்தப் பிறவியில் மிகப் பெரிய அளவில் வறுமையை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும் என்று அவள் சொன்னாள். போன பிறவியில் நடந்த நல்ல செயல்களின் விளைவாக நானும் என்னுடைய தாய்- தந்தையும் மாமாமார்களும் பாட்டியும் சுகத்தையும் அமைதியையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்று பாட்டி சொன்னாள். கல்யாணிக் குட்டிக்குத் தொடர்ந்து படிப்பதற்கு பண உதவி செய்ததுகூட என்னுடைய குடும்பம்தான். அவள் படித்து டாக்டராக ஆனதும், என்னுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் கருணையால்தான்.
ஆனால், என் தந்தை மரணத்தைத் தழுவியபோது, அவள் என்னுடன் சேர்ந்து கண்ணீர் விட்டு அழவில்லை. என் தந்தையின் இறந்த உடல் தெற்குப் பக்கம் இருந்த நிலத்தில் கிடந்து குளிர்ந்து மரத்துப்போய் கெட்ட நாற்றத்தைப் பரப்பிக் கொண்டிருந்தபோது, அவள் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் காணப்பட்டாள். நான் அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதவாறு, என்னுடைய கெட்ட நேரத்தைப் பற்றிக் குறைகூறிப் பேசியபோது, அவள் தன்னுடைய கையை உயர்த்தி என்னுடைய முதுகைத் தடவவில்லை. பிறகு ஒருமுறை நான் அவளிடம் அன்றைய உணர்ச்சியற்ற சூழ்நிலையைப் பற்றிப் பேசினேன்.
"உனக்கு ஃபீஸ் கட்டியது என்னுடைய தந்தைதானே! உனக்கு ஆடைகள் வாங்குவதற்கும் ஹாஸ்டலில் தங்குவதற்கும் என்னுடைய தந்தையின் பண உதவி தேவைப்பட்டது அல்லவா? எனினும், என் தந்தை மறைந்தபோது, நீ அழவே இல்லை. நீ கொஞ்சம் கூட நன்றி இல்லாதவள் என்று அன்று பார்த்தவர்கள் எல்லாருமே சொன்னாங்க."
"யார் என்ன வேண்டுமானாலும் கூறட்டும். எனக்கு என்ன நட்டம்? அவ்வப்போது என்னிடமிருந்து நன்றியை எதிர்பார்த்து எனக்கு பண உதவி செய்த உன் தந்தையை நான் வெறுத்தேன். பயன்படுத்தாத ஆடைகளை எனக்குத் தருவதற்கு உன் தாய் தயாராக இல்லை. நான் உன்னுடைய நிழலாக, உன்னை கவனமாகப் பார்த்துக் கொள்ளும் தோழியாக உன்னைப் பின் தொடர வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள்"- கல்யாணிக்குட்டி சொன்னாள்.
"நிறுத்து... நீ இப்படி பேசுவேன்னு நான் கனவில் கூட நினைத்தது இல்லை. நீ உண்மையில் யார்? என்னுடைய விரோதியா?"- நான் கேட்டேன்.
அடுத்த நிமிடம் அவளுடைய முகத்தில் இருந்த சதைகள் அசைந்தன. அவள் மற்றவர்களைத் தன்பக்கம் இழுக்கப் பயன்படும் அந்த புன்சிரிப்பை மீண்டும் உதட்டில் வெளிப்படுத்தினாள்.
"என் வார்த்தைகளுக்குத் தேவையில்லாத ஒரு கம்பீரம் இருக்கு... ஆனால்..."
நான் அவளை இறுக அணைத்துக் கொண்டு என்னுடைய முகத்தை அவளுடைய தோளில் இளைப்பாறச் செய்தேன். கல்யாணிக்குட்டியின் நட்பு இல்லாத வாழ்க்கையைத் தொடர என்னால் முடியாது. என்னுடைய அனைத்து ரகசியங்களையும் நான் அவளிடம் மனம் திறந்து கூறியிருக்கிறேன். அவளோ? அவள் தன்னுடைய சிந்தனைகளை மறைத்து வைத்தாள். அவள் சிரிக்கும்போது, அந்தச் சிரிப்பு மகிழ்ச்சியிலிருந்து பிறந்தது இல்லை என்று நான் சந்தேகப்பட்டேன். அதேபோல அவளுடைய கண்ணீர் கவலையிலிருந்து உருவானது இல்லை என்றும் நான் நினைத்தேன். நான் மற்ற இளம் பெண்களுடன் நெருங்கிப் பழகுவதை அவள் விரும்பவில்லை. ஏதாவதொரு தோழியுடன் நான் நெருக்கமாகப் பழகினால், உடனே அவள் அந்தப் பெண்ணைப் பற்றி மோசமான முறையில் பேசத் தொடங்கிவிடுவாள். உறவுகளை இல்லாமல் செய்வதற்கு அவளிடம் பல வித்தைகளும் இருந்தன. ஒருமுறை அவள் சொன்னாள்: