
எங்கு போகிறோம் என்று தெரியாமலே ஜானகி போய்க் கொண்டிருந்தாள். அவளுடைய தலைக்குள் நெருப்பு பிடிக்க வைத்துக் கொண்டிருப்பது அந்தச் சிந்தனையல்ல. பதினெட்டு வருடங்களுக்கு முன்பு... அப்போது அவளுடைய தாயும், தந்தையும் இருந்தார்கள். இந்த மாதிரியே ஒரு பதைபதைப்பான சூழ்நிலை அப்போதும் உண்டானது. அன்று பக்கத்து வீட்டைச் சேர்ந்த பப்பு மரியாதை கெட்டத்தனமாக நடந்து கொண்டான். அவளைக் காதலிப்பதாக அவன் சொன்னான். அவள் பல நாட்கள் அந்த நினைப்பு தந்த சுகத்துடன் திரிந்தாள். அப்போது ஜானகிக்கு இருபது வயது நடந்து கொண்டிருந்தது.
அந்த நாட்களில் பப்பு தன்னைக் காதலிக்கிறான், காதலிப்பான் என்ற எண்ணங்களுடனே அவள் இருந்தாள் என்பதைத் தவிர, வேறு எந்தப் பிரச்சினையும் உண்டாகவில்லை. எப்படியோ அப்போது அவள் தப்பித்து விட்டாள். பதினெட்டு வருடங்களுக்குப் பிறகு அப்படிப்பட்ட ஒரு ஆபத்து நடந்திருக்கிறது. ஆனால் மிகவும் மாறுபட்ட சூழ்நிலையில் என்பதுதான் வித்தியாசம். யாரும் அவளைக் காதலிக்கிறேன் என்று சொல்லவில்லை. அவள் சிந்தித்துப் பார்த்தாள்- முப்பத்து எட்டாவது வயதில் ஒருத்தி கர்ப்பிணியாவாளா என்ற விஷயத்தை.
ஜானகி ஒரு வீட்டில் கடந்த பத்து பதினைந்து நாட்களாக வேலைக்காரியாகப் பணியாற்றினாள். அங்கு போய்ச் சேர்ந்தஒரு வாரத்திலேயே அந்த வீட்டின் சொந்தக்காரர் தன்னை நோட்டமிடுகிறார் என்பதை அவள் தெரிந்து கொண்டாள். நேற்று இரவில் அது நடந்தது. அவளால் அந்த மனிதரை எதிர்க்க முடியவில்லை. அழவும் முடியவில்லை. பொழுது புலர்வதற்கு முன்னால் அவள் அந்த வீட்டை விட்டு வெளியேறி, எங்கு போகிறோம் என்று தெரியாமலே போய்க் கொண்டிருக்கிறாள்.
அவள் பயப்படுவதற்குக் காரணம் இருக்கிறது. அவள் தாலுகா நீதிமன்றங்களில் குமாஸ்தாவாகப் பணியாற்றிய பரமு பிள்ளையின் மூத்த மகள். பரமு பிள்ளைக்கு அவளையும் சேர்த்து மொத்தம் ஐந்து மகள்கள் மட்டும் இருந்தார்கள். ஐந்து மகள்களும் திருமண வயதைத் தாண்டிய பிறகும், யாருக்கும் திருமணம் செய்து வைக்க பரமு பிள்ளையால் முடியவில்லை. தந்தையும், தாயும் அதற்காக எவ்வளவோ முயற்சி பண்ணினார்கள். அப்படி இருக்கும்போதுதான் அவர் மரணத்தைத் தழுவினார். நிலைமை அப்படி இருக்க, ஒரு குழந்தை உண்டாவது, அதுவும் பெண் குழந்தை என்ற விஷயங்களை நினைத்தால் அவளுக்குப் பயம்தான். வீடும் கூடும் இல்லாத அவளுக்கு ஒரு குழந்தையும் பிறந்துவிட்டால்...? அவள் என்ன செய்வாள்?
அந்த வீட்டில் வேலைக்குச் சேர்வதற்கு முன்பு சிறிது நாட்கள் அவள் ஒரு ஹோட்டலில் வேலை பார்த்தாள். அங்கிருந்தும் அவள் யாருக்கும் தெரியாமல் ஓடவே செய்தாள். அங்கு வேலை செய்த நாட்களில் அவளால் இரவு நேரங்களில் தூங்கவே முடியாது. ஹோட்டலில் வேலை பார்ப்பவர்கள் அவளைத் தொந்தரவு செய்தார்கள். ஒரு பெண்ணாகப் பிறந்ததற்கான சிரமங்கள் இவ்வளவு இருக்கின்றனவா என்று அவள் அறிந்திருக்கவில்லை.
முடிவற்ற ஒரு பாதை வழியே அவள் போய்க் கொண்டிருந்தாள். உச்சிப் பொழுது வந்ததும், ஒரு மர நிழலில் அவள் உட்கார்ந்தாள். அந்த மர நிழலில் அமர்ந்து சிறிது நேரமானதும் வேறொரு தளத்தை நோக்கி அவளுடைய சிந்தனை சென்றது. அந்த வீட்டிலேயே தொடர்ந்து இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று அவள் சிந்தித்துப் பார்த்தாள். அந்த வீட்டின் சொந்தக்காரர் அதற்குப் பொறுப்பேற்றிருப்பார். அவர் எல்லா விஷயங்களைப் பற்றியும் சிந்திக்காமலா இருந்திருப்பார்? ஊரும் சொந்தக்காரர்களும் இல்லாத அவள் பெண்களின் புனிதத்தன்மையைப் பற்றி இந்த அளவிற்கு சிந்திக்கத்தான் வேண்டுமா? அந்த இரவில் தனக்கு என்ன நடந்தது என்பதைப் பற்றி அவளுக்கே தெளிவாகத் தெரியாது.
நீதிமன்ற குமாஸ்தா பரமுபிள்ளை தன்னுடைய ஐந்து மகள்களையும் தன் மனைவியிடம் ஒப்படைத்துவிட்டு இறந்தார். அதற்குப் பிறகு அதிக நாட்கள் அந்தப் பெண்ணால் அவ்வளவு பெரிய சுமையைச் சுமந்து கொண்டிருக்க முடியவில்லை. நான்கு மகள்களையும் மூத்த மகளிடம் ஒப்படைத்து விட்டு அவள் இறந்துவிட்டாள். அந்த மூத்த மகள்தான் ஜானகி. இப்படித்தான் நான்கு தங்கைமார்களையும் காப்பாற்றக் கூடிய பொறுப்பு ஜானகி மீது விழுந்தது.
இருபது சென்ட் உள்ள வீடும் நிலமும்தான் அவர்களின் ஒட்டுமொத்த சொத்து. ஐந்து பெண்கள் வாழ வேண்டும். அந்த வீட்டில் வாழ்வதற்காக ஒரு பெரிய போராட்டமே நடந்தது. சகோதரிகளில் தைரியசாலியாக இருந்தவள் பாரதி. ஒருநாள் காலையில் அவள் காணாமல் போய்விட்டாள். அவர்களின் வீட்டிற்குச் சற்று தூரத்திலிருந்த ஒரு பெரிய கிறிஸ்தவர்கள் வீட்டில் வேலைக்காரனாக இருந்தவனும் அதே நேரத்தில் காணாமல் போனான். இரண்டு பேரும் சேர்ந்து யாருக்கும் தெரியாமல் ஓடிவிட்டார்கள் என்று நினைப்பதற்கு நியாயங்கள் இருக்கின்றன. எப்படியென்றால் அந்த உறவைப் பற்றி ஜானகிக்கும் சந்தேகங்கள் இருந்தன. முதலில் அவள் அறிவுரைகள் சொன்னாள். பிறகு அவனைப் பார்க்காமல் அவள் இருக்கும்படி செய்தாள்.
எப்படி எங்கேயிருந்து கிடைத்தது என்று தெளிவில்லாத காசை அந்த வீட்டிற்காக பாரதி செலவழித்திருக்கிறாள். அந்தக் காசைக் கொடுத்து வாங்கிய அரிசியை வேக வைத்து உண்டான சோற்றை ஜானகியும் சேர்ந்து சாப்பிட்டு விட்டு, இல்லை என்று கூற முடியாது. எனினும் ஒரு நாள் ஜானகிக்கும் பாரதிக்குமிடையே ஒரு பெரிய சண்டை உண்டானது. அந்த மாப்பிள (கிறிஸ்தவன்)யுடன் கொண்டிருக்கும் உறவு ஜாதிக்கு ஒத்து வராது. வர்க்கியை இரவில் அந்த வீட்டிற்குப் போய் ஜானகி பார்த்து விஷயத்தைச் சொன்னாள். அதையெல்லாம் தாண்டி பாரதி தன்னுடைய தீர்மானம் என்னவென்று முடிவாகச் சொல்லிவிட்டாள்.
பிறகு பாரதியைப் பற்றி நம்புகிற செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை. சங்ஙனா சேரியிலோ வேறு ஏதோ ஒரு ஊரிலோ அவளை ஒரு பெண் குழந்தையுடன் பார்த்ததாக யாரோ சொன்னார்கள். தங்கை தங்களை விட்டு போய் விட்டாலும் பாரதி தப்பித்துப் போய்விட்டாள் என்று பல நேரங்களில் ஜானகிக்கும் பவானிக்கும்மெல்லாம் கூட மனதில் தோன்றும். ஆனால், அவள் உண்மையிலேயே தப்பித்து விட்டாளா? என்ன இருந்தாலும், பாரதி மிகவும் பிடிவாதக்காரிதான். தான் எங்கிருக்கிறோம் என்பதைப் பற்றியோ எப்படி வாழ்கிறோம் என்பதைப் பற்றியோ அவள் அவர்களுக்குத் தெரியப்படுத்தவேயில்லை. அவள் நிரந்தரமாக அவர்களை விட்டுப் பிரிந்து போய்விட்டாள் என்பது மட்டுமே உண்மை.
ஒருவேளை பாரதி நல்ல நிலைமையுடன் எங்கேயாவது வாழ்ந்து கொண்டிருக்கலாம். இல்லாவிட்டால் அந்த வாழ்க்கை தகர்ந்து போயிருக்கலாம். ஆரம்பத்தில் அவர்களைப் பற்றிய தகவல்கள் ஏதாவது வரும் என்று நான்கு சகோதரிகளும் காத்திருந்தார்கள். அது மட்டுமல்ல.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook