பூவினும் மெல்லிய பூங்கொடி! - Page 8
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 6816
8
மனதைக் கொடுத்த குணாவுடன் ஓருயிராகக் கலந்த சில நிமிடங்கள், ஈரைந்து மாத பந்தமாக மீராவின் வயிற்றில் உதயமானது. தைரியமாக இருந்த மீரா, இதை அறிந்து நொந்து போனாள்.
அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாய் மகளின் நிலைமை அளித்ததன் விளைவு? வனஜா, மாரடைப்பால் மரணம் அடைந்தாள்.
காதல் கைகூடாத வேதனை, தாயின் மறைவு! அடுக்கடுக்கான துன்பங்கள் மீராவின் பெண்மைக்கு வலிமையை அளித்தன. காதலும் கைகூடாமல், பெற்றவளும் இல்லாமல் மனம் சோர்ந்திருந்த மீரா, அந்த ஊரை விட்டுக் கிளம்பினாள். வயிற்றில் வளரும் குணாவின் சின்னஞ்சிறு உயிருடன் வாழ்க்கை எனும் போராட்டத்தில் நீச்சல் போடத் தயாரானாள். பசி, தாகம் தாங்காமல் ஒரு சர்ச் வாசலில் மயங்கி விழுந்தாள்.
மயங்கிக் கிடந்த அவளுக்கு அடைக்கலம் கொடுத்த மதர் சுப்பீரியரிடம் தன் சோகக் கதையைக் கூறினாள். அவளது பரிதாபக் கதையினால் இரக்கப்பட்ட மதர் சுப்பீரியர், அவளுக்கு அங்கேயே ஒரு வேலையும் கொடுத்துத் தங்கிக் கொள்ளும் வசதியையும் செய்துக் கொடுத்தார். மீரா, மதர் சுப்பீரியரிடம் தன் வேண்டுகோளை விடுத்தாள். தனக்குப் பிறக்கப் போகும் குழந்தையை நல்லவர்கள் யாராவது கேட்டால் அவர்களுக்குக் கொடுத்து விடும்படி கேட்டுக் கொண்டாள்.
இயற்கை அன்னையின் இயல்பான செயலால் மீரா, அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். மனதைக் கல்லாக்கிக் கொண்டு, பிறந்த குழந்தையைத் திரும்பிக் கூட பார்க்காமல் சலனமற்று இருந்தாள். குழந்தையின் அதிர்ஷ்டம், சிங்காரம்பிள்ளை, விஜயா தம்பதிகளுக்கு தத்து கொடுக்கப்பட்டாள்.
அன்று தன் சோகக் கதையைப் பற்றி பேசிய மீரா, அதன்பின் பேசுவதையே குறைத்துக் கொண்டாள். தானுண்டு தன் வேலை உண்டு என்றிருந்தாள். கர்த்தரின் காலடிகளில் பிரார்த்தனை, பைபிள் படிப்பது, சர்ச் வேலைகளில் ஈடுபடுவது போன்ற காரியங்களில் மனதை செலுத்தினாள். மௌனம் எனும் விலங்கு பூட்டி சலனம் என்ற உணர்வு சிறிதும் இல்லாமல் இளம் பெண் துறவியாக ஒரு வேள்வி போன்ற வாழ்வை நடத்தி வந்தாள். மதர் சுப்பீரியருக்கு மட்டும், குணாவின் விலாசத்தைக் கொடுத்திருந்தாள்.
குணாவிற்கு, மீரா அந்த சர்ச்சில் இருப்பதை தெரிவித்தார் மதர் சுப்பீரியர். ஆனால் எந்தக் காரணத்தைக் கொண்டும், மீராவை சந்திக்க அனுமதி இல்லை என்பதை தெளிவுபடுத்தி இருந்தார். குணாவிற்கு அங்கே வருவதற்கு அனுமதி வழங்கவில்லை. ஓரிரு முறைகள் முயற்சித்த குணாவும் அதன்பின் மீராவின் பிறந்தநாளுக்கு மட்டும் வாழ்த்து அட்டை அனுப்பத் தவறுவது இல்லை.
தன் மரணத்திற்குப்பின் தன்னை அடக்கம் செய்யும்பொழுது குணா வர வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் அவளது இருப்பிடமான சர்ச் பற்றிய தகவலைக் கொடுத்திருந்தாள். மற்றபடி பிறந்த நாளன்று அவளுக்கு தபாலில் வரும் குணாவின் வாழ்த்துக்களுக்குக் கூட அவள் பதில் போடுவது இல்லை.
'எங்கேயோ நன்றாக இருக்கிறான். இருக்கட்டும்.’ என்கிற ரீதியில் மௌனமெனும் துடுப்பால் தன் வாழ்க்கைப் படகை ஓட்டிக் கொண்டிருந்தாள். அமைதியான நதியினில் செல்லும் ஓடம் போல் அவளது வாழ்வு இவ்விதம் ஓடிக் கொண்டிருக்கையில் புயல் போல் நுழைந்தாள் கவிதா.
புயலாய் மாறிப்போன பூப்போன்ற கவிதாவை மறுபடியும் பூவாய் மலரவும், மாறவும் தன் சோகக் கதையை பொறுமையாக அவளிடம் கூறினாள் மீரா. 'தன் உதிரத்தில் உதித்தவள் இவள் என்ற எண்ணம் அவளது இதயத்தில் தோன்றி மறைந்தது. அவளும் மனித இனம்தானே? பெண்தானே? அவளது இதயமும் ரத்தமும் சதையுமாய் ஆனதுதானே? இரும்பால் செய்யப்படவில்லையே? என்றாலும் தன்னை உணர்ந்த அவள், கவிதாவிடம் தன் மனதில் தோன்றிய எந்த சலனத்தையும் வெளிப்படுத்திக் கொள்ளாமல் சர்வ ஜாக்கிரதையாகப் பேசினாள். இருபது வருடங்களுக்கு முன்பு மதர் சுப்பீரியரிடம் தன் கதையைக் கூறியவள், இன்று பெற்ற பிள்ளையிடம், சொல்லி முடித்தாள். பெற்ற பொழுது முகத்தைக் கூட சரியாக பார்க்காத மீரா, இன்று இருபது வயது இள நங்கையாக தன் மகளைப் பார்க்க நேர்ந்தது ஏன்?...
'எதற்காக இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இவளைப் பார்க்க வைத்தீர்கள் இயேசுவே... என் குணா... என்னை நேருக்கு நேர் பார்க்காமலே என்னைப் புரிந்துக் கொண்ட என் குணா... அவர் கூட என்னைப் பார்க்க முயற்சிப்பதில்லை. அவரது மகள்... இந்தக் கவிதாவை ஏன் என்னை சந்திக்க வைத்தீர்கள் கர்த்தரே....’மீராவின் உள்ளம் இயேசுவிடம் மன்றாடியது. ஆனால் அவளது தூய்மையான வாழ்வு தந்த கட்டுப்பாடு, அவளை திடப்படுத்தியது.
"இப்ப என்னோட அப்பா எங்கே இருக்கார்? நான் அவரைப் பார்க்கணும்."
"அவரை நீ சந்திக்கக் கூடாது. சீதைக்கு லஷ்மணன் போட்ட கோடு மாதிரி, அவரோட அப்பா தன் மகனோட வாழ்க்கைப் பாதைக்கு தண்டவாளம் போட்டிருக்காரு. அவரோட வாழ்க்கைத் தடம் புரளாம போகணும்னுதான் நான் என் வாழ்வை வேள்வியாக்கி, உன்னையும் தத்துக் குடுத்துட்டு தவம் இருக்கேன். அதைக் கலைச்சிடாதே. நீ அவரைச் சந்திச்சா அவர் குடும்பத்துல குழப்பம் வரும். குருவிக் கூட்டை கலைக்கற மாதிரி ஆயிடும். குருவிக் கூட்டை கலைக்கறது பாவம். அந்தப் பாவம் உனக்கு வேண்டாம்."
"உங்க தவம் கலையற மாதிரியோ அவர் குடும்பத்துல குழப்பம் ஏற்படற மாதிரியோ நான் எந்தக் காரியமும் பண்ண மாட்டேன். அவர் எங்கே இருக்கார் சொல்லுங்க."
"சூழ்நிலைகள்தான் மனிதர்கள் குணத்தை மாத்திடுது. உன்னோட இந்த மாறுபட்ட மனநிலையும், சூழ்நிலையும்தான் உன் குணத்தை நிச்சயமா மாத்தி இருக்கு. அப்பிடி இல்லைன்னா இங்கே வந்து இப்படி பேச மாட்ட. உங்க அப்பாவைப் பத்தியும் விசாரிக்க மாட்ட..."
"என்னை நம்புங்க. நான் கெடுதல் எதுவும் செய்யறதுக்காக கேட்கலை. நான் இந்த உலகத்துல பிறக்கறதுக்குக் காரணமா இருந்த அவரை ஒரே ஒரு தடவை பார்க்கணும். அதுக்காகத்தான் கேட்கறேன். அட்ரஸ் மட்டும் குடுங்க ப்ளீஸ்."
"தரேன். ஆனா அவர்கிட்ட உன்னை நீ யார்னு அடையாளம் காட்டிக்கக் கூடாது. இதுக்கு நீ கட்டுப்படணும்."
"சரி."
மீரா, மதர் சுப்பீரியரைப் பார்க்க, அவளது சம்மதத்தைப் புரிந்துக் கொண்ட மதர், குணாவின் அட்ரஸை ஒரு பேப்பரில் எழுதிக் கொடுக்க, அதை கவிதா எடுத்துக் கொண்டாள்.
"கவிதா மை சைல்ட், உன் அம்மா மீரா சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவ. அவளைப் போல நீயும் உண்மையா இருக்கணும். மீராவை எப்படி நம்பறேனோ அதுபோல உன்னை நம்பி இந்த அட்ரஸ் தரேன். கவனம்..." அன்பையும் மீறிய ஒரு கண்டிப்பு தென்பட்டதைப் புரிந்துக் கொண்ட கவிதா, "ப்ராமிஸ் மதர். வேறு யாருக்கும் இதை சொல்ல மாட்டேன்."