பூவினும் மெல்லிய பூங்கொடி!
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 6817
"என்னோட அம்மா, அப்பா யாருன்னு எனக்குத் தெரிஞ்சாகணும்." கவிதாவின் குரல் இதுவரை இந்த அளவுக்கு உரக்க ஒலித்தது இல்லை.
பூஜை அறையில் இருந்த விஜயா திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள். 'சோழிகளை சுழற்றிப் போட்டது போல கலகலவென்று சிரிக்கும் கவிதா, வார்த்தைகளால் வெடிக்கிறாள். ஏன்?..’ என்ற கேள்வி நெஞ்சில் முள்ளாக உறுத்த, பாதி பூஜையிலேயே எழுந்தாள் விஜயா.
கவிதாவின் அருகே சென்றாள். கவிதாவின் சிவந்த நெற்றியில் புரண்டு கொண்டிருந்த சுருள் முடிக் கற்றையை தன் கையால் அன்புடன் ஒதுக்கினாள். அவளது கையைத் தட்டி விட்டாள் கவிதா.
"என்னம்மா கவி, என்ன இது புதுசா கேள்வி, புதுசா இத்தனை கோபம்? சொல்லுடா..."
"புதுசாத்தானே எனக்கும் ஒரு விஷயம் தெரிய வந்திருக்கு? சொல்லுங்க... என்னோட அம்மா, அப்பா யாரு?"
"நான்தான் உன் அம்மா. உங்க அப்பா மாடியில இருக்காரு."
"நான் என்னைப் பெத்த அம்மா, அப்பாவைப் பத்திக் கேக்கறேன்."
"கவிம்மா, நீ... உனக்கு... எப்பிடி..."
"எப்படியோ தெரியும். நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க."
"சொல்றேம்மா. எதிர்பார்க்காத நேரத்துல எதிர்பார்க்காத கேள்வியை கேட்டுட்ட. பதில் சொல்லித்தான் ஆகணும். நீ.. நீ.. எங்களோட வளர்ப்பு மகள். ஏராளமான சொத்து சுகங்களை தாராளமா அள்ளி வழங்கின அந்த தெய்வம் என் வயித்துல ஒரு வித்து விளைக்க மறந்துடுச்சு. அதனால சர்ச்லயும், அநாதை ஆசிரமங்கள்லயும் குழந்தைக்கு சொல்லி வச்சோம். சர்ச்ல இருந்து மதர் சுப்பீரியர், குழந்தை இருக்குன்னு தகவல் சொன்னாங்க. பச்சைக்குழந்தையா உன்னைப் பார்த்தப்ப, என் உடம்பு சிலிர்த்துப் போச்சு. அந்த நிமிஷமே நான் பெத்தெடுக்காத உன்னைத் தத்தெடுத்துக்கிட்டேன். விதை எங்கே முளைச்சாலும், உன்னோட விளைநிலம் இதுதான்மா."
"தனக்குப் பிறந்த குழந்தையை உங்களுக்குத் தூக்கிக் குடுத்த அந்த அம்மா இப்போ எங்கே இருக்காங்க?"
"எனக்குத் தெரியாதும்மா."
"என்னோட அப்பா யாரு?"
"அதுவும் தெரியாது. தத்து எடுக்கும்போது அந்த விபரம் எல்லாம் சொல்ல மாட்டாங்க. உன்னை எங்க மகளா, கையில தூக்கின நாள்ல இருந்து நீ சர்ச்ல இருந்து எடுத்துட்டு வந்த குழந்தைங்கற எண்ணத்தை நாங்க தூக்கிப் போட்டுட்டோம். உன்னை என் மடியிலயும், தன் தோள்ல உங்க அப்பாவும் சுமந்து வளர்த்தோம்."
"ஆனா வயித்துல சுமந்த அம்மா, சும்மா இருக்காங்களே?.."
"இப்பிடியெல்லாம் பேசக் கூடாது கவிம்மா. அவங்க எந்த நிலைமையில, எந்த சூழ்நிலையில இருந்தாங்களோ? யாருக்குத் தெரியும்?"
"யாருக்குத் தெரியாட்டாலும் எனக்குத் தெரிஞ்சாகணும்.."
"தெரிஞ்சு என்னம்மா செய்யப் போற? இருபது வருஷமா கண்ணுக்குள்ள வச்சு வளர்த்த எங்க கண்ணைக் குத்திடாதம்மா." விஜயா, பொங்கி வரும் கண்ணீரை அடக்க இயாமல் தவித்தாள். தொடர்ந்தாள்.
"என்னையும், அப்பாவையும் வெறுத்துடாதேம்மா." அதற்கு மேல் தாங்க முடியாதவளாய் கவிதாவை கட்டிப்பிடித்து அழுதாள்.
"அம்மா.. அழாதீங்கம்மா. நான் உங்களையோ அப்பாவையோ வெறுக்கலை. என்னை நானே வெறுக்கறேன்."
"வெறுமையா இருந்த இந்த வீட்டில தங்கப்பதுமையா நீ வந்த பிறகுதான்மா எங்க வாழ்க்கையில சந்தோஷம் வந்துச்சு. புது மழைத்துளி விழுந்த மண் எவ்வளவு குளிர்ச்சியா இருக்குமோ அந்தக் குளிர்ச்சியும், மலர்ச்சியும் உன் வரவாலதான் எங்களுக்குக் கிடைச்சது."
"உங்க சந்தோஷம் என்னால குறையாது, மறையாது. ஆனா என்னோட சஞ்சலம்? அது தீரணும். அதுக்கு ஒரே வழி, நான் என்னைப் பெத்தவங்களைப் பார்க்கணும். கருவில சுமந்த என்னோட உருவத்தைத் தன் கையில ஏந்தி வளர்க்காத காரணத்தைக் கேட்கணும்."
"அது கடந்த காலம். நடந்தது நடந்து போச்சு."
"உடைஞ்சு போன என் மனசு? என்னோட வளர்ப்பு வேணும்னா செல்வ ஸ்ரீமான் சிங்காரம் பிள்ளையோட செல்ல மகள்னு சொல்லலாம். என்னோட பிறப்பு? பாம்பு தன் சட்டையைக் கழற்றி எறியறது மாதிரி என்னை வீசி எறிஞ்ச அந்த அம்மாவைப் பார்க்கணும். பேர் வச்சு தாலாட்டி சீராட்டி வளர்க்க வேண்டிய மகளை, சர்ச்ல விட்டுட்டுப் போனாங்களே? இதைப் பத்தியெல்லாம் அந்த அம்மா கிட்ட நான் கேக்கணும். அப்பதான் என் மனசு ஆறும். உங்களை என்கிட்ட குடுத்த மதர் சுப்பீரியரை நான் பார்க்கணும்."
"பார்க்கலாம்மா. ஆனா.. இந்த உண்மை எல்லாம் உனக்குத் தெரிஞ்சுருச்சுன்னு அப்பாவுக்குத் தெரிஞ்சா அவரால இதைத் தாங்கிக்கவே முடியாதும்மா..."
"ஏன் விஜயா முடியாது? நம்ப கவிம்மா பேசினதை எல்லாம் கேட்டுக்கிட்டு நான் இன்னும் உயிரோடுதான் இருக்கேன்..." தளர்வான குரலில் பேசியபடி மாடிப்படிக்கட்டுகளில் இறங்கிக் கொண்டிருந்தார் சிங்காரம் பிள்ளை.
"அப்பா..." கவிதா அலறினாள். 'கம்பீரமான சிங்காரம் பிள்ளையின் கண்களில் கண்ணீரா?
"அப்பா..." கவிதாவின் கண்களிலும் கண்ணீர்!
"நீ ஏம்மா கண் கலங்கறே? இருபது வருஷகாலமா உன் கண்ணுல ஒரு சொட்டு கண்ணீர் வராம வளர்த்துட்டோம். உன் இஷ்டப்படியே மதர் சுப்பீரியரைப் பார்க்கலாம். நானே உன்னை கூட்டிட்டுப் போறேன்மா. எங்க மகள் கவிதா, கலங்கவே கூடாது. நீ எங்க உயிரின் உயிர். நீ விரும்பி கேட்ட எதையாவது மறுத்திருக்கோமா? இப்ப காலேஜுக்கு டைம் ஆச்சுல்ல? கிளம்பு. நாளைக்கு உனக்கு லீவுதானே? நாளைக்கு காலைல சர்ச்சுக்குப் போய் மதரைப் பார்க்கலாம்." கவிதாவின் தலையை அன்புடன் வருடிக் கொடுத்தார்.
2
ஏ.ஸி. அறையின் குளிர்ச்சியிலும், பட்டுத்துணி விரிக்கப்பட்ட பஞ்சு மெத்தையில் படுத்தும் கவிதாவின் கண்கள் உறக்கத்தைத் தழுவ மறுத்தது.
முந்தின நாள் ஊருக்குக் கிளம்பிக் கொண்டிருந்த அத்தை, புறப்படுவதற்கு முன் பேசியதைக் கேட்க நேரிடாமல் இருந்தால்...? என் பிறப்பின் ரகசியம் வெளிப்பட்டிருக்காது. நிம்மதியான என் மனசு நிலைகுலைஞ்சு போயிருக்காது. என்னைத் தங்கள் கண் போல வளர்க்கும் இந்த அம்மா, அப்பாவின் மனசு புண்படற மாதிரி நான் பேச வேண்டிய சூழ்நிலையும் வந்திருக்காது. கடவுளே, ஏன் எனக்கு இப்பிடி ஒரு சோதனை... வேதனை... அத்தை பேசிய வார்த்தை சவுக்குகள் இன்னமும் என் இதயத்தில் அடித்து, நோகின்றதே.’
கவிதா, அத்தை என்று குறிப்பிடுவது சிங்காரம் பிள்ளையின் தங்கை கௌரியை. கௌரியின் கணவர் தனபாலன் ஒரு அச்சகத்தை நிர்வகித்து வருகிறார். நல்ல வசதி நிறைந்த வாழ்க்கை. ஒரே மகன் அவினாஷ். சிங்காரம் பிள்ளை, தன் தங்கை கௌரிக்கு வீடு கட்டிக் கொடுத்திருந்தார். பண்டிகை நாட்களில் அவர், தன் தங்கைக்கு செய்யும் நிறைவான சீர்வரிசை ஏராளம் என்றாலும் கூட அவளது மனது, குறைகளைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கும்.