பப்பு - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6527
எவ்வளவு பெரிய தவறான செயலுக்கும் மன்னிப்பு தரும் ஒரு நீதிமன்றம் இருக்கத்தான் செய்கிறது. அது - தாயின் இதயம்.
வீட்டிற்கு வராமல் ஒளிந்து திரிந்த பப்புவிற்கு அவனுடைய தாய் யாருக்கும் தெரியாமல் சோறு தருவாள். இரவில் அவன் பதுங்கியவாறு சமயலறை வாசலில் வந்து நிற்பான். அவன் தாய் அவனுக்குச் சாதம் கொடுப்பாள். அவன் சாப்பிட்டு முடிந்தவுடன் அங்கிருந்து கிளம்பி விடுவான். சில நாட்கள் கடந்த பிறகு, அவனுடைய தந்தைக்கு இந்த விஷயம் தெரிய வந்தது. ஆனால் அவன் அதைத் தெரிந்துகொண்ட மாதிரி காட்டிக் கொள்ளவில்லை. வீட்டிற்குள் நுழையவிடாமல் தண்டிக்கப்பட்ட மகனுக்குத் தாய் யாருக்கும் தெரியாமல் உணவு கொடுத்தால், அதற்காக எந்த ஒரு தந்தையும் சந்தோஷப்படத்தான் செய்வான்.
பள்ளிக்கூடத்திலிருந்து ஓடிப்போன பப்பு தன் நண்பர்கள் ஒவ்வொருவரையும் பார்த்து அறிவுரைகள் சொன்னான்.
பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் பாகுபாடாக நடந்து கொள்வதைப் பற்றி அவன் ஒரு சொற்பொழிவே ஆற்றினான். அவர்களில் சிலரின் மரியாதையை அதன் மூலம் அவன் பெற்றான். தொடர்ந்து நான்கைந்து நாட்கள் முயற்சி செய்ததில் அவன் ஏழு பேர்களின் மனதை மாற்றினான். அவர்கள் ஏழு பேரும் அதற்குப் பிறகு பள்ளிக்கூடம் பக்கமே போகவில்லை. அவர்களும் வீட்டை விட்டு விரட்டப்பட்டார்கள். அவர்களுக்கும் அவர்களின் அன்னைமார்கள் இருந்ததால், சாப்பாட்டிற்குப் பிரச்சினைகள் எதுவும் உண்டாகவில்லை.
அந்தக் கிராமத்திலிருந்த மலையின் உச்சியில் அடுத்தடுத்து இரண்டு மாமரங்களும், நடுவில் ஒரு பாறையும் இருந்தது. பப்புவும் அவனுடைய ஏழு நண்பர்களும் பகல் நேரம் முழுவதும் அங்குதான் இருப்பார்கள். அந்தச் சிறுவர்கள் கூட்டத்தில் ஆடு, மாடுகள் மேய்க்கும் பையன்கள் சிலரையும் கூட உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொண்டார்கள்.
பப்புதான் தலைவன். அவன் பாறையில் ஏறி இடது காலின் மீது வலது காலை வைத்துக் கொண்டு அமர்ந்திருப்பான். மற்றவர்கள் புற்களின் மீது உட்கார்ந்திருப்பார்கள்.
ஒரு நாள் பப்புவின் நண்பர்களில் ஒருவனான கொச்சுநாணு அவனுடைய வீட்டிலிருந்த மாமரத்திலிருந்து யாருக்கும் தெரியாமல் கொஞ்சம் மாங்காய்களைத் திருடி எடுத்துக் கொண்டு வந்தான். சிறிது உப்பும், மிளகாய் பொடியும் சேர்த்து அந்த மாங்காய்களை அவர்கள் எல்லாரும் ஒன்றாக அமர்ந்து தின்றார்கள். அடுத்த நாளும் மாங்காய் கொண்டுவர வேண்டுமென்று பப்பு உத்தரவிட்டான். கொச்சு நாணு யாருக்கும் தெரியாமல் மாங்காய் பறிக்கச் சென்றபோது அவனுடைய தந்தை அவனைப் பார்த்து பலமாக அடித்து விட்டார்.
அந்தச் சம்பவம் சிறுவர்கள் கூட்டத்தில் பெரிய கோபக் கனலை உண்டாக்கியது. அடி உண்டாக்கிய தடங்களை பப்புவிடம் காட்டியபோது, கொச்சுநாணு வாய் விட்டு அழுதுவிட்டான். அதற்குப் பதிலடி கொடுப்பது மாதிரி ஏதாவது செய்தே ஆகவேண்டுமென்று எல்லோரும் ஒருமித்த குரலில் கருத்துச் சொன்னார்கள். பப்பு கேட்டான்: ‘‘கொச்சு நாணு, உன் வீட்டுல எத்தனை மாமரங்கள் இருக்கு?”
‘‘ஆறு”
‘‘எல்லா மரங்கள்லயும் மாங்காய்கள் இருக்கா?”
‘‘ஆமா...”
‘‘அப்பிடியா? அந்த மாங்காய்கள் எல்லாவற்றையும் இன்னைக்கு ராத்திரி நாம பறிச்சிடணும்” - அதுதான் பப்புவின் கட்டளையாக இருந்தது.
அன்று இரவே அந்தக் கட்டளை நிறைவேற்றப்பட்டது. கொச்சு நாணுவின் தந்தைக்கு எல்லா விஷயங்களும் புரிந்தன. அவன் பப்புவின் வீட்டிற்குச் சென்று அவனுடைய தந்தையிடம் சொன்னான்: ‘‘உன் மகனை ஒழுங்கா இருக்கச் சொல்லு. இல்லாட்டி அவனோட கழுத்தை நான் ஒடிச்சிடுவேன்.”
‘‘என்ன? என்ன விஷயம்?” - பப்புவின் தந்தை கேட்டான்.
‘‘மரத்துல இருந்த மாங்காய்கள் முழுவதையும் அவனும் அவனோட நண்பர்களும் சேர்ந்து பறிச்சிட்டுப் போயிட்டாங்க. என் மகனைப் பாழாக்கினதே அவன்தான்!”
“அவன் விஷயமா என்கிட்ட எதையும் பேச வேண்டாம். புகையிற விறகை வீசி தெருவுல எறிஞ்சிடணும்ன்றது என் கொள்கை. அவனை நான் வீட்டுக்குள்ளே நுழைய விடுறதே இல்ல. எதையும் தர்றதும் இல்ல” - அவன் பொறுப்பேற்றுக் கொள்வதிலிருந்து முழுமையாக விலகிக் கொண்டான்.
பப்புவின் சிறுவர்கள் கூட்டம் அந்தக் கிராமத்தில் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகிவிட்டது. அவர்களைப் பிரிப்பதற்கும், பப்புவை அடிப்பதற்கும் பல முயற்சிகள் நடந்தன. ஆனால் ஒன்று கூட பலிக்கவில்லை.
ஜமீந்தாரின் மூத்த மகன் இரவு நேரங்களில் இங்குமங்குமாய் அலைந்து கொண்டிருப்பான். இளம் பெண்கள் இருக்கக் கூடிய வீடுகள் அவனுக்குக் கோவில் மாதிரி. பப்புவின் சிறுவர்கள் கூட்டம் அவனுக்கு ஒரு தொந்தரவான விஷயமாக இருந்தது. அவன் இரவு நேரங்களில் எந்த வீட்டுக்குள் நுழைந்தாலும் அந்தக் குறும்புக்காரச் சிறுவர்கள் கூட்டம் வெளியே நின்று கூக்குரல் எழுப்பி அந்த இடத்தையே ஒரு வழி பண்ணி விடுவார்கள். இல்லாவிட்டால் கற்களை எடுத்து எறிவார்கள். அவனுடைய இரவு நேர நடமாட்டத்திற்கு மிகப் பெரிய தடையாக இருக்கக் கூடிய அந்தச் சிறுவர்கள் கூட்டத்தை அடக்கியே ஆக வேண்டும் என்று அவன் முடிவெடுத்தான். இரண்டு வேலைக்காரர்களும் அவனும் சேர்ந்து அதற்கான வேலைகளை ஆரம்பித்தார்கள். அந்தக் கூட்டத்திலிருந்த ஒவ்வொரு சிறுவனையும் தனித்தனியாக பிடித்து நன்றாக உதைத்தார்கள். சில சிறுவர்களை வீட்டில் கட்டி வைக்கும்படி அவர்களின் பெற்றோர்களிடம் அவர்கள் சொன்னார்கள். மலைமீது இருந்த இரண்டு மாமரங்களையும் அவர்கள் வெட்டி விட்டார்கள்.
கடைசியில் பப்புவிற்கு வேறு வழியில்லை என்றாகிவிட்டது. அவனுடைய நண்பர்களில் சிலர் வீட்டில் கட்டப்பட்டுக் கிடந்தார்கள். வேறு சிலர் பயந்து போய் வீட்டை விட்டு வெளியிலேயே வரவில்லை. எனினும், அவன் தான் மட்டும் தனியே தலையை உயர்த்திக் கொண்டு ஒற்றையடிப் பாதைகள் வழியாகவும் வயலின் வரப்புகளிலும் நடந்து திரிந்தான். அவன் மலையின்மீது ஏறி சுற்றிலும் பார்த்தவாறு நின்றிருப்பான். அந்தக் கிராமத்தில் தனக்கு ஒத்துவராத பல விஷயங்களையும் அவன் பார்க்கத்தான் செய்தான். அவற்றை எதிர்த்து நிற்க அவன் துடிப்பான். அந்த நேரங்களில் முஷ்டியை மடக்கி வைத்துக் கொண்டு காற்றில் வேகமாக வீசுவான்.
ஒரு காலை நேரத்தில் வயலின் கரை வழியாக அவன் அலட்சியமாக நடந்து கொண்டிருந்தான். காலை வேளையின் பொன் நிறமும் காற்றில் சாய்ந்தாடிக் கொண்டிருந்த நெற்கதிர்களும் பறவைகளின் பாடல்களும் பப்புவின் மனதில் சந்தோஷமான ஒரு சூழ்நிலையை உண்டாக்கின. அவனுடைய அன்னை பாடக்கூடிய ஒரு பாடலைப் பாடியவாறு அவன் மெதுவாக நடந்து கொண்டிருந்தான். ஜமீந்தாரின் மூத்த மகன் அப்போது எதிரில் வந்து கொண்டிருப்பதை அவன் பார்க்கவில்லை. அந்த ஆள் வயலின் கரையிலிருந்த ஒரு பலா மரத்திற்குப் பின்னால் ஒளிந்து கொண்டான். பப்பு அருகில் வந்ததும அவன் சடாரென்று அவனுக்கு முன்னால் வேகமாக வந்து நின்று அவனை ஓங்கி ஒரு அடி அடித்தான்.