பப்பு - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6527
சுதந்திரமான, போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கையையே அவன் விரும்பினான். மக்கார் அந்த வேலையில் இருந்து விடுபட்டு வர மறுத்ததால், பப்பு அவனிடம் விடைபெற்றுக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டான்.
அதற்குப் பிறகு பப்புவிற்கு சோடா தொழிற்சாலையில் வேலை கிடைத்தது. சோடாவை நிறைப்பது, வாடிக்கையாளர்களுக்கு சோடாவைக் கொண்டு போய் கொடுப்பது - இதுதான் அவனுக்குக் கொடுக்கப்பட்டிருந்த வேலை. அது பப்புவிற்கு விருப்பமான வேலையாக இருந்தது. ஆனால், மேனேஜர் மிகவும் கருமியாக இருந்ததால் சம்பளம் குறைவாகவே கிடைத்தது. மிகவும் சிக்கனமாக இருந்தால்தான் வாழ்க்கையையே நடத்த முடியும் என்றொரு நிலை அங்கு இருந்தது. எனினும், ஏழு மாத காலம் அங்கு அவன் தாக்குப் பிடித்தான்.
அந்தச் சமயத்தில் சணல் தொழிற்சாலையில் பணியாற்றும் ஒரு தொழிலாளியின் உதவியால் அவனுக்கு அந்தத் தொழிற்சாலை மேஸ்திரியின் அறிமுகம் கிடைத்தது. அந்த ஆள் சிபாரிசு செய்ததன் பலனாக அவனுக்கு அந்தத் தொழிற்சாலையில் ஒரு தொழிலாளியாகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. வேலை செய்து மிகவும் அடக்க ஒடுக்கமான ஒரு வாழ்க்கை வாழலாம் என்ற எண்ணத்துடன்தான் அவன் தொழிற்சாலைக்குள் நுழைந்தான். ஆனால், முதலாளியிலிருந்து மேஸ்திரி வரை அவர்கள் செய்த கொடுமைகள் அவனுக்குள் ஒளிந்திருந்த எதையும் எதிர்த்து நிற்கும் மனிதனை உசுப்பேற்றி விட்டன. மற்றவர்களை நசுக்க முயல்பவனின் காற்பாதத்தை நக்கும் கோழைத்தனத்தைப் பார்த்து அவன் வெகுண்டெழுந்தான்.
ஒருநாள் சிறுநீர் கழிப்பதற்காகச் சென்ற ஒரு தொழிலாளி திரும்பி வருவதற்குச் சற்று நேரமாகிவிட்டது என்ற காரணத்தை வைத்துக் கொண்டு அந்த மனிதனை மேஸ்திரி அடித்து விட்டான். அவன் அடி வாங்கிவிட்டு வெறுமனே அழுது கொண்டு நின்றிருந்தான். அடிமைத்தனத்தின் அந்தக் கண்ணீரைப் பார்த்து பப்புவின் குருதி கொதித்தது. அவன் அந்தத் தொழிலாளியை மேஸ்திரிக்கு முன்னாலேயே கடுமையான வார்த்தைகளால் திட்டினான். பப்பு உரத்த குரலில் சொன்னான்: ‘‘நீங்க எல்லாரும் நாய்கள்டா. மிதிக்கிற கால்களை நக்குகிற நாய்கள்டா நீங்க.”
அடுத்த நிமிடம் மேஸ்திரி பப்புவைப் பார்த்து கத்தினான்: ‘‘உன்னை மிதிச்சா, நீ என்ன செய்வேடா நாயே?”
‘‘நான் என்ன செய்வேன்றதை மிதிக்கறப்போ பார்க்கலாம்டா, நாயே!”
ஒவ்வொரு நாளும் ஏராளமான தொழிலாளிகளை வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசக் கூடிய நாக்கு மேஸ்திரியின் நாக்கு. அந்த நாக்கு பப்புவிற்கு முன்னால் செயலற்று நின்றுவிட்டது. அவன் சிறிது நேரம் பப்புவையே வெறித்துப் பார்த்தவாறு அதே இடத்தில் நின்றிருந்தான். பிறகு அவன் மேனேஜரின் அறையை நோக்கிச் சென்றான்.
அடுத்த நாள் சம்பளம் கொடுக்கும் நாள் தொழிலாளிகள் ஒவ்வொருவராகச் சம்பளத்தை வாங்கிக் கொண்டு போனார்கள். எல்லோரையும் விட கடைசியாகத்தான் பப்புவிற்குச் சம்பளம் கிடைத்தது. அவனுடைய கணக்குப்படி வாரத்திற்கு நான்கே முக்கால் ரூபாய். அவனுக்கு சம்பளம் வரவேண்டும். அவனுக்கு இரண்டே முக்கால் ரூபாய்தான் சம்பளமாகத் தரப்பட்டது.
அவன் க்ளார்க்கைப் பார்த்துக் கேட்டான்: ‘‘இது என்ன? எனக்கு முழு சம்பளத்தையும் தரணும்.”
‘‘முழுசையும் தந்தாச்சே!”
‘‘எனக்கு வரவேண்டிய சம்பளம் நாலே முக்கால் ரூபாய். இதுல ரெண்டே முக்கால் ரூபாய்தான் இருக்கு.”
‘‘ரெண்டு ரூபாய் அபராதம் போட்டிருக்கு.”
‘‘எதுக்கு?”
‘‘எதுக்குன்னு மேனேஜர்கிட்ட போயி கேளு.”
‘‘சரி... நான் கேக்குறேன்” - அவன் மேனேஜரின் அறையை நோக்கி வேகமாக ஓடினான்.
அவனை காவலாளி தடுத்தான்.
‘‘தள்ளி நில்லு... எனக்கு ஏன் அபராதம் போட்டாங்கன்னு கேட்கணும்”- அவன் அறைக்குள் நுழைய முயன்றான். காவலாளி அவனுடைய கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினான். அடுத்த நிமிடம் பப்பு காவலாளியை ஓங்கி ஒரு அடி அடித்தான். அவ்வளவுதான் - மேஸ்திரிமார்களும் க்ளார்க்குகளும் அங்கு ஓடி வந்தார்கள். அவர்கள் எல்லோரின் கைகளும் பப்புவின் உடம்பை ஒரு வழி பண்ணின. அவன் சுயநினைவை இழந்து கீழே விழுந்தான்.
சுயநினைவு திரும்ப வந்தபோது, தனக்கு முன்னால் ஒரு போலீஸ்காரன் நின்று கொண்டிருப்பதை அவன் பார்த்தான். அவன் பப்புவைப் பிடித்து இழுத்தவாறு அங்கிருந்து நகர்ந்தான்.
3
ஒரு வருடமும் இரண்டு மாதங்களும் கடந்த பிறகு பப்பு சிறையிலிருந்து திரும்பி வந்தான். அவனை வரவேற்பதற்கு யாரும் வரவில்லை. அவனுடைய சுதந்திர உணர்ச்சியை யாரும் பாராட்டவில்லை. அது எதையும் அவன் எதிர்பார்க்கவுமில்லை. கயிறு தொழிற்சாலையின் வாசலுக்கு சென்று அவன் கம்பீரமாகத் தலையை உயர்த்திக் கொண்டு சிறிது நேரம் நின்றிருந்தான். அவனுடைய நண்பர்கள் தொழிற்சாலைக்குள் போய்க் கொண்டிருந்த நேரமது. அவர்கள் யாரும் அவனிடம் எதுவும் கேட்கவில்லை. அவர்கள் யாரும் அவனை ஏறெடுத்துக்கூட பார்க்கவில்லை. ஆண்மைத்தனமும், அன்பும் வெளிப்படும் அந்தக் கண்களை நேருக்கு நேராகப் பார்ப்பதற்கான தைரியம் அவர்கள் யாருக்கும் இல்லை. ஒருவகை குற்ற உணர்வால் உந்தப்பட்ட அவர்கள் தலையைக் குனிந்துக்கொண்டே உள்ளே போனார்கள்.
அவன் அங்கிருந்து மெதுவாக நடந்தான். அடுத்த நேர உணவைப் பற்றிய சிந்தனை மட்டுமே அப்போது அவனுக்கு இருந்தது. வாழ்க்கை என்பது அவனுக்கு ஒரு பிரச்சினையே இல்லை. விரக்தியின் இருண்ட நிழல் அவனுடைய முகத்தில் எந்தச் சமயத்திலும் பட்டதில்லை. எதிர்பாலத்தைப் பற்றி அவனுக்கு மிகப்பெரிய ஆர்வம் எதுவும் இல்லை. வருத்தப்படக்கூடிய அளவிற்கு ஒரு கடந்த காலமும் அவனுக்கு இல்லை. அவனுடைய வரலாற்றில் ‘நேற்று’ம் ‘நாளை’யும் இல்லவே இல்லை. அவன் ‘இன்று’ வாழ்பவன். அவன் ஒரு ரிக்ஷா வண்டியை வாடகைக்கு எடுத்தான். அதை எடுத்துக் கொண்டு அவன் நேராகப் படகுத் துறையை நோக்கிச் சென்றான். அன்று முதல் அவன் ஒரு ரிக்ஷாக்காரனாக ஆனான்.
பப்புவின் ரிக்ஷா வண்டிக்குச் சிறிதும் ஓய்வு என்பதே இல்லை. அது எல்லா நேரங்களிலும் நகரத்தின் சாலைகளில் காற்றின் வேகத்தில் வேகமாகப் போய்க் கொண்டிருப்பதை யாரும் பார்க்கலாம். ரிக்ஷாவை இழுத்துக்கொண்டு ஓடுவதைப் பார்த்தால், அவனுடைய கால்கள் தரையில் படுகின்றனவா, இல்லையா என்று நமக்கே சந்தேகம் வந்துவிடும். பப்புவிற்கு நடக்கவே தெரியாது என்று பொதுவாக மற்ற ரிக்ஷாக்காரர்கள் கூறுவார்கள். அவர்கள் கூறுவது சரிதான். அவன் ஓடி ஓடி நடப்பது எப்படி என்பதையே மறந்து விட்டான்.
வண்டியில் ஆள் ஏறி உட்கார்ந்து விட்டால் வெடிச்சத்தம் கேட்ட போர்க்குதிரையைப் போல அவன் உற்சாகமாகி விடுவான். வெயில், மழை எதைப் பற்றியும் அவன் கவலைப்படுவது இல்லை.