பப்பு - Page 5
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6527
எல்லாரும் சேர்ந்து பப்புவைத் தாக்குவதற்காகத் தயாரானார்கள்.
பப்பு தான் நின்றிருந்த இடத்தைவிட்டு சிறிதும் அசையவில்லை. அவன் தன் கையைச் சுருட்டிக் காட்டியவாறு சொன்னான்: ‘‘என்னைத் தொட்டா, உங்க எல்லாருடைய மூக்குகளையும் ஒரு வழி பண்ணிடுவேன்.”
அவன் அப்படிச் சொன்னதும் அவர்கள் ஒரு மாதிரி ஆகி விட்டார்கள். பப்புவிடம் அதற்கு மேலும் சண்டை போட்டுக் கொண்டிருக்க அவர்கள் யாரும் தயாராக இல்லை. அவர்கள் கிட்டத்தட்ட தோல்வியடைந்தவர்கள் மாதிரி ஆகிவிட்டார்கள். அதற்குப் பிறகு அவர்கள் யாரும் அவன் நின்று கொண்டிருக்கும் இடத்திற்குப் போகவில்லை. அவனை அவர்கள் பார்க்கவும் இல்லை. அவர்கள் அவனைக் கண்டுக் கொள்ளாமல் இருப்பது மாதிரி காட்டிக் கொண்டார்கள். அவனும் அவர்களைப் பார்க்காதது மாதிரி காட்டிக் கொண்டான்.
அதற்குப் பிறகும் புகை வண்டி வந்தது. பப்பு ப்ளாட்ஃபாரத்திற்குச் சென்று ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்றான். எல்லாரும் சுமைகளைத் தூக்கிக் கொண்டு சென்ற பிறகு அவனுக்கும் ஒரு சுமை கிடைத்தது. ஒவ்வொரு முறை வண்டி வரும்போதும் அவனுக்கு ஒரு சுமை கட்டாயம் கிடைத்தது. மதிய நேரம் அவன் ஹோட்டலுக்குச் சென்று உணவு சாப்பிட்டான். சாயங்காலம் தேநீர் அருந்தினான். இரவு நேரம் வந்ததும் புகை வண்டி நிலையத்திலேயே ஒரு பெஞ்சில் படுத்து அவன் தூங்க ஆரம்பித்தான்.
மறுநாள் கூலியாட்கள் ஒவ்வொருவராக பப்புவைத் தேடி வந்து அன்பு காட்ட ஆரம்பித்தார்கள். பப்பு அவர்களிடம் அன்புடன் நடந்தான். ஒவ்வொருவரும் தங்களைப்பற்றியும், தங்களின் ஊர்களைப் பற்றியும் அவனிடம் சொன்னார்கள். கடைசியில் தங்களில் ஒருவனாக பப்புவை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அன்று மாலை நேரம் ஆனபோது, பப்பு அவர்களின் தலைவனாக ஆனான்.
புகை வண்டி நிலையத்தில் கூலி வேலை செய்பவர்கள் எல்லாரின் மீது மற்றவர்கள் அதிகாரம் செலுத்துவார்கள். ஸ்டேஷன் மாஸ்டரிலிருந்து போர்ட்டர் வரை உள்ள இரயில் பணியாளர்கள், காவல் துறையைச் சேர்ந்தவர்கள், வெற்றிலைப் பாக்கு கடைக்காரர்கள் ஆகிய எல்லோரின் கட்டளைகளையும் ஏற்று நடக்க வேண்டியது சுமை தூக்குபவர்களின் கடமை என்பது பொதுவான நியதியாக இருந்தது. அது மட்டுமல்ல- அவ்வப்போது மற்றவர்களின் அடி - உதைகளையும், திட்டுதல்களையும் கூட அவர்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் நடைமுறையில் இருந்தது. பப்புவின் நரம்புகளில் அடிமைத்தனத்தின் ஒரு சிறு அணுவிற்குக் கூட இடமில்லாமல் இருந்தது.
மற்ற கூலி வேலை செய்பவர்கள் யார் என்ன திட்டினாலும் கேட்டுக்கொள்வார்கள். மற்றவர்கள் அடி, உதை கொடுத்தால் கூட வாங்கிக்கொள்வார்கள். அவை எல்லாம் அவர்களுக்கு ஒரு சாதாரண விஷயமாக இருந்தது. அதை அவர்கள் பொறுமையுடன் ஏற்றுக் கொண்டிருந்தார்கள். அதை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்தார்கள்.
மற்றவர்கள் வாய்க்கு வந்தபடி பேசுவதையும் அடிமைத்தனமாக நடத்துவதையும் எதிர்த்து நிற்க வேண்டுமென்று பப்பு அவர்களிடம் சொன்னான். அவர்களுக்கு அதைப் புரிந்துக் கொள்வது கூட கஷ்டமான ஒரு விஷயமாக இருந்தது. சுமைகளைச் சுமந்து கொண்டு வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கும் வயது குறைந்த பையன்கள் தங்களைவிட வயது அதிகமான மனிதர்களை எதிர்த்து நிற்பதா? அவர்களில் ஒருவன் சொன்னான்: ‘‘அவர்களை எதிர்த்தா, அதற்குப் பிறகு நாம இங்கே நுழையவே முடியாது.”
இன்னொரு ஆள் சொன்னான்: ‘‘அவர்கள் நம்ம தலையை உடைச்சிட்டுதான் வேற வேலையைப் பார்ப்பாங்க.”
‘‘அவர்களை எதிர்த்தா, பசி எடுக்கறப்போ நாம என்ன செய்யிறது?”- இப்படி வேறொருவன் கேட்டான்.
அந்த வகையில் தலைவனுக்கும் அவனைப் பின்பற்றுபவர்களுக்கு மிடையில் கருத்து வேறுபாடு உண்டானது. எனினும், பப்பு அவர்களுக்குக் கூற வேண்டிய அறிவுரைகளைக் கூறிக் கொண்டுதான் இருந்தான். நீண்ட நாட்களாக முயற்சி செய்ததற்குப் பிறகு, அவனுக்கு ஒரு நண்பன் கிடைத்தான். அவன் பெயர் மக்கார். தங்களை யாரும் மரியாதைக் குறைவாக நடத்தினால், பதிலுக்கு அவர்களை மரியாதைக் குறைவாக நாம் நடத்த வேண்டும் என்ற முடிவுக்கு அவர்கள் இருவரும் வந்தனர்.
ஒரு நாள் புகை வண்டி நிலையத்தில் இருந்த வெற்றிலை, பாக்கு கடைக்காரன் கடை வீதியிலிருந்து ஒரு சுமையைத் தூக்கிக் கொண்டு வரும்படி மக்காரிடம் சொன்னான். அதற்குக் கூலி கேட்டதற்கு, அவன் மக்காரிடம் சண்டை போட ஆரம்பித்துவிட்டான். பயணிகளிடம் கூலி கேட்பதை போல, தன்னிடம் கூலி கேட்டது தன்னைக் கேவலப்படுத்தியது மாதிரி ஆகிவிட்டது என்றான் அவன். கடனாக இரண்டு பீடிகள் வாங்கியிருப்பதை கூலிக்குப் பதிலாக வைத்துக்கொள்ள வேண்டுமென்று அவன் சொன்னான். போலீஸ்காரன் ஒரு பீடியை எடுத்துப் பற்ற வைத்தவாறு வெற்றிலை, பாக்குக் கடைக்காரனுக்கு ஆதரவாகப் பேசினான். கூலி வாங்காமல் தான் அந்த இடத்தைவிட்டுப் போவதாக இல்லை என்றான் மக்கார். அவ்வளவுதான்- வெற்றிலை, பாக்குக் கடைக்காரன் அவனை வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்ட ஆரம்பித்துவிட்டான். மக்காரும் பதிலுக்கு வாய்க்கு வந்த வார்த்தைகளையெல்லாம் பேசினான். அப்போது மக்காருக்கு ஆதரவாக அங்கு வந்து சேர்ந்தான் பப்பு. சண்டை பெரிதானது. வெற்றிலை, பாக்குக் கடைக்காரன் மக்காரின் முதுகில் ஓங்கி ஒரு அடி கொடுத்தான். பப்பு அருகில் கிடந்த ஒரு மரத்துண்டை எடுத்து வெற்றிலை, பாக்குக் கடைக்காரரின் முழங்காலில் ஓங்கி ஒரு அடி கொடுத்தான். அந்த ஆள் பப்புவின் பக்கம் திரும்பினான். அந்தத் தருணம் பார்த்து மக்கார் கடைக்குள்ளிருந்து ஒரு இரும்புக் கம்பியை எடுத்துக் கொண்டு வந்து கடைக்காரன் முதுகில் ஓங்கி ஒரு போடு போட்டான். அவ்வளவுதான், அடுத்த நிமிடம் அடி தாங்காமல் வெற்றிலை, பாக்குக் கடைக்காரன் கீழே விழுந்தான். பப்புவும் மக்காரும் அந்த இடத்தை விட்டு ஓடினார்கள்.
மக்கார் நகரத்தில் பிறந்து வளர்ந்தவன். அங்கு அவனுக்கு தெரிந்தவர்கள் இருந்தார்கள். அவனுடைய வாப்பா ஒரு பீடி தொழிலாளியாக இருந்தான். இலை வெட்டவும், பீடி சுற்றவும் அவன் சிறிது தெரிந்து வைத்திருந்தான். அவன் பப்புவையும் அழைத்துக் கொண்டு நகரத்தின் எல்லையிலிருந்த ஒரு பீடிக் கடைக்குச் சென்றான். மக்காரின் வாப்பாவை மனதில் நினைத்து அவனுக்கு வேலை போட்டுத் தருவதாக பீடிக்காரன் சொன்னான். பப்புவிற்கும் சேர்த்து வேலை தரவில்லையென்றால் தனக்கு அந்த வேலை வேண்டவே வேண்டாமென்று மக்கார் பிடிவாதகமாகச் சொல்லிவிட்டான். கடைசியில் பீடிக் கடைக்காரன் பப்புவிற்கும் வேலை கொடுத்தான்.
இரண்டு மாதங்களில் மக்கார் பப்புவிற்கு இலை வெட்டுவதற்கும் பீடி சுற்றுவதற்கும் கற்றுத் தந்தான். நான்கரை மாதங்கள் அவர்கள் இருவரும் அங்கு வேலை பார்த்தார்கள். அதற்குள் பப்புவிற்கு அந்த வேலையில் வெறுப்பு தோன்ற ஆரம்பித்துவிட்டது. எப்போதும் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு பார்க்கும் அந்த வேலை பப்புவிற்குப் பிடிக்காமல் போய்விட்டது.