பப்பு - Page 9
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6527
‘‘வீடு இல்லையா?” - அவளுக்குச் சிரிப்பு வந்தது. ‘‘அம்மா இருக்காங்களா?”
‘‘இல்ல...”
‘‘அப்பா இருக்காரா?”
‘‘இல்ல...”
‘‘அது பொய்.... அது பொய்...” - அவள் விழுந்து விழுந்து சிரித்தாள். அவனும் சிரித்தான்.
கடைக்காரன் கூடையில் அரிசியை அளந்து போட்டான். அதற்கு மேலே இரண்டு தாளால் கட்டிய பொட்டலங்களை வைத்தான். லட்சுமி தன் கையிலிருந்த பழங்களைக் கூடையில் வைத்துவிட்டு, அதைத் தன் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாள். அவள் கேட்டாள்: ‘‘நான் போகட்டுமா?”
‘‘நீ தனியா போயிடுவியா?”
‘‘போயிடுவேன்.”
‘‘சரி... அப்போ போ.”
அவள் நன்றிப் பெருக்குடன் பப்புவைப் பார்த்தவாறு திரும்பி நடந்தாள். பப்புவும் அவளுடன் சேர்ந்து நடந்தான். அவளுடன் அப்படிச் சேர்ந்து நடப்பதை அவன் விரும்பினான்.
‘‘நீ நாளைக்கு வருவியா?” - அவன் கேட்டான்.
‘‘எதுக்கு?”
‘‘சும்மாதான்...”
‘‘இனி என்னைக் கீழே தள்ளிவிடுவீங்களா?” அவள் சிரித்தாள்.
‘‘இல்ல...” அவனும் சிரித்தான்.
‘‘அப்படின்னா வர்றேன்.”
பப்பு நின்றான். அவள் நடந்து தூரத்தில் மறையும் வரை அவன் அவளையே பார்த்தவாறு நின்றிருந்தான். போய் மறைந்த பிறகுகூட அவள் தனக்கு முன்னால் நின்று கொண்டிருப்பதைப் போலவே அவன் உணர்ந்தான். அந்தக் கள்ளங்கபடமற்ற சிரிப்பும் நன்றியுணர்வு நிறைந்த பார்வையும்!
‘‘நாளை... நாளை...” - அவன் மெதுவான குரலில் முனகினான். அது வரையில் அவனுடைய வாழ்க்கையில் ‘நாளை’ என்பது இல்லவே இல்லை. அன்று முதல் முறையாக அவனுக்கு ஒரு ‘நாளை’ உண்டானது.
‘‘நாளை... நாளை...” என்று முணுமுணுத்தவாறு அவன் திரும்பி நடந்தான்.
5
மறுநாள் மாலை நேரம் வந்தது. சற்று தூரத்திலிருந்த வீட்டைச் சேர்ந்த ஒரு பயணியைக் கொண்டு போய்விட்ட பப்பு பேருந்து நிலையத்திற்குச் செல்லும் சாலை வழியாக ரிக்ஷாவை இழுத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் வந்து கொண்டிருந்தான். வழியில் இரண்டு பயணிகள் நின்றிருந்தார்கள். அவர்களுக்குப் புகை வண்டி நிலையத்திற்குச் செல்ல இரண்டு ரிக்ஷாக்கள் வேண்டும். இன்னொரு ரிக்ஷாக்காரன் நண்பன் வேண்டும் என்பதற்காகச் சாலையைப் பார்த்து ஒரு ரிக்ஷாக்காரன் நின்று கொண்டிருக்கும்போதுதான் பப்பு அங்கே வந்தான். ‘‘பப்பு... பப்பு...” அவன் உரத்த குரலில் அழைத்தான்.
‘‘என்ன?” - பப்பு அவன் அழைத்ததைக் கேட்டானே தவிர ரிக்ஷாவை நிறுத்தவில்லை.
‘‘புகை வண்டி நிலையத்திற்கு ஒரு ஆள் இருக்கு வா... வா...”
‘‘நான் வரலை. நான் ஒரு இடத்துக்குப் போக வேண்டியது இருக்கு” என்று சொல்லிய பப்பு வேகமாக அந்த இடத்தை விட்டு ஓடினான்.
நேற்று அந்தச் சம்பவம் நடைபெற்ற இடம்! அங்கு போய்ச் சேர்ந்ததும் பப்பு நின்றான். ஒரு நீண்ட பெருமூச்சை விட்டான். நன்றாக நிமிர்ந்து நின்று யாரையோ எதிர்பார்த்ததைப் போல சுற்றிலும் பார்த்தான். ரிக்ஷாவின் கைப்பகுதியைக் கீழே வைத்துவிட்டு, அவன் அங்குமிங்குமாய் நகர்ந்து நின்றவாறு பார்த்தான். முந்தைய நாள் பழம் வாங்கிய கடைக்குச் சென்று அங்கும் அந்தப் பகுதியிலும் பார்த்தான். அரிசி வாங்கிய கடைக்குச் சென்றான். அங்கும் பார்த்தான். ரிக்ஷா இருக்கும் இடத்திற்குத் திரும்பி வந்தான். அந்தப் பகுதியெங்கும் பார்த்தவாறு நடந்தான்.
ஒரு கூலிக்காரப் பையன் அவனுக்கு அருகில் வந்து சொன்னான்: ‘‘நேற்று உருண்டு கீழே விழுந்த அந்தப் பொண்ணு இன்னைக்கும் வந்திருந்தா?”
‘‘எங்கே? அவள் எங்கே?”- பப்பு ஆர்வத்துடன் கேட்டான்.
‘‘அவள் என்கிட்ட கேட்டா தன்னைக் கீழே தள்ளிவிட்ட ஆள் எங்கேன்னு. பார்க்கலைன்னு நான் சொன்னேன். அதுக்குப் பிறகு அந்தப் பொண்ணு போயிட்டா.”
‘‘போயி ரொம்ப நேரம் ஆயிடுச்சா?”
‘‘ஆமா...”
அவனுடைய முகத்தில் ஏமாற்றத்தின் நிழல் படிய ஆரம்பித்தது. வாழ்க்கையில் முந்தைய நாள் தோன்றிய ‘நாளை’ இன்று மறைந்து விட்டதாக அவன் நினைத்தான். அவனுடைய இதயத்தில் ஒரு மெல்லிய சோகம் கடந்து சென்றது. சிறிது நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக எங்கோ தூரத்தைப் பார்த்துக் கொண்டிருந்த அவன் ரிக்ஷாவை இழுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.
நாட்களும் வாரங்களும் பல கடந்தன. ஒரு இரவு நேரம் பப்பு நகரத்தின் உட்பகுதியிலிருந்த ஒரு ஒடுகலான ஒற்றையடிப் பாதையின் அருகில் ரிக்ஷாவின் படியில் ஏறி உட்கார்ந்திருந்தான். ரிக்ஷாவில் பயணம் செய்த மனிதன் தன்னுடைய வீட்டிற்குச் சென்றிருந்தான். அவன் திரும்பி வந்த பிறகு, அவனை ஏற்றிக் கொண்டு பப்பு செல்ல வேண்டும்.
‘‘கொஞ்சம் மண்ணெண்ணெய் கிடைக்குமா?” - இருட்டிற்கு மத்தியில் ஒலித்த அந்தக் கேள்வியைக் கேட்டு பப்பு திரும்பிப் பார்த்தான். யாரும் அங்கு இல்லை.
கேள்வி மீண்டும் ஒலித்தது: ‘‘இந்த விளக்குல ஊற்றணும். கொஞ்சம் மண்ணெண்ணெய் தர முடியுமா?”
‘‘யார் அது?” - பப்பு மிடுக்கான குரலில் கேட்டான்.
இருட்டுக்கு மத்தியில் ஒரு சிறுமி பாதையில் இருந்த வெளிச்சத்தில் வந்து கொண்டிருந்தாள். ‘‘இந்த விளக்குல ஊற்றக் கொஞ்சம் மண்ணெண்ணெய் வேணும்” - அவள் ஒரு மண்ணெண்ணெய் விளக்கை நீட்டிக் காட்டினாள்.
‘‘யார் அது? லட்சுமியா?” -பப்பு துள்ளி எழுந்தான். ‘‘லட்சமி என்னைத் தெரியுதா?”
‘‘தெரியுது... தெரியுது...” - அவள் மகிழ்ச்சியடன் ஓடிவந்து பப்புவின் கையைப் பிடித்தாள். ‘‘அன்னைக்கு என்னை வரச்சொன்னீங்கள்ல? நான் அங்கே வந்து பார்த்தப்போ, நீங்க அங்கே இல்லையே!”
‘‘நான் வர்றது வரை நீ நிற்கலாம்ல?”
‘‘நான் ஒரு ஆளுக்கிட்ட கேட்டேன். நீங்க வர மாட்டீங்கன்னு அந்த ஆளு சொன்னாரு.”
‘‘அப்படியா? சரி.... உன் வீடு எங்கே இருக்கு?”
‘‘அதோ அங்கே...” - அவள் இருட்டுக்குள் சுட்டிக் காட்டியவாறு சொன்னாள். ‘‘அம்மா சொன்னாங்க... அம்மா உங்களைப் பார்க்கணுமாம்.”
‘‘நாம அங்கே போகலாம்.”
‘‘அங்கே வெளிச்சம் இல்ல.”
‘‘அந்த விளக்குல மண்ணெண்ணெய் ஊற்றித் தர்றேன்.” - பப்பு அவளுடைய கையிலிருந்து விளக்கை வாங்கி ரிக்ஷாவில் வைத்திருந்த விளக்கிலிருந்து மண்ணெண்ணெய் அதில் ஊற்றி தீப்பெட்டியை உரசி எரிய வைத்து அவளின் கையில் தந்தான். அவள் விளக்கைக் கையில் வைத்துக் கொண்டு முன்னால் நடந்தாள். பப்பு அவளைப் பின் தொடர்ந்து நடந்தான்.
ஒரு இடிந்துபோன குடிசை அது. அவர்கள் திண்ணையில் ஏறினார்கள். குடிசை வாசலில் மறைந்து நின்று கொண்டு கல்யாணி கேட்டாள்: ‘‘அது யாரு மகளே?”
‘‘அன்னைக்கு என்னைக் கீழே தள்ளிவிட்ட ஆளு.”