பப்பு - Page 11
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6528
கல்யாணி லட்சுமியிடம் சொன்னாள் : ‘‘மகளே, மாமாவைச் சாப்பிட வரச் சொல்லு.”
‘‘சாப்பிட வாங்க மாமா” - அவள் பப்புவின் கையைப் பிடித்து இழுத்தாள்.
அவன் மறுக்கவில்லை. பப்புவும் லட்சுமியும் ஒரே தட்டில் சாப்பிட்டார்கள். சாப்பிட்டு முடித்ததும் பப்பு கேட்டான் : ‘‘வயிறு நிறைஞ்சதா?”
‘‘நெறஞ்சிருச்சு. வயிறே வெடிக்கிற மாதிரி இருக்கு” - அவள் சிரித்தாள்.
இனி தினமும் வயிறு நிறைய சாப்பிடணும். தெரியுதா?”
‘‘மாமா, உங்கக்கூட உட்கார்ந்து சாப்பிட்டாதான், என் வயிறே நிறையுது.”
பப்பு அதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை. அவன் ஆழமான சிந்தனையில் மூழ்கினான்.
‘‘மாமா, ராத்திரியும் உங்கக்கூட உட்கார்ந்து நான் சாப்பிடணும்.”
கல்யாணியும் ஆழமான சிந்தனையில் மூழ்கினாள். அவள் குடிசையின் வாசலில் மறைந்து நின்றுகொண்டு பப்புவையே பார்த்தாள். பப்பு அவளிடம் கேட்டான்: ‘‘எனக்கு தினமும் சோறு கிடைக்குமா?”
கல்யாணி அதற்குப் பதிலெதுவும் கூறாமல் அமைதியாக நின்றிருந்தாள்.
‘‘என்ன, பதிலையே காணோம்?”
அவள் முகத்தை உயர்த்தி பப்புவைப் பார்த்துவிட்டு மீண்டும் அமைதியானாள்.
லட்சுமி சொன்னாள்: ‘‘சொல்லுங்க அம்மா... மாமாவுக்குத் தினமும் சோறு தர்றதா சொல்லுங்க. அப்படின்னா நான் தினமும் மாமாகூட உட்கார்ந்து சாப்பிடலாம்ல...”
குடிசையின் வாசற் கதவிடம் கூறுவதைப் போல அவள் சொன்னாள் : ‘‘ஆளுங்க என்ன சொல்லுவாங்க?”
பப்பு அழுத்தமான குரலில் சொன்னான்: ‘‘ஆளுங்க என்ன சொல்லுவாங்க? ஆளுங்க சொல்லாதது என்னதான் இருக்கு?”
‘‘ஆணும் தூணும் இல்லாத இடத்துல ஒரு ஆம்பளை வந்து தங்குறதுன்னா...”
‘‘ம்... தங்கினா என்ன?”
‘‘பெத்த குழந்தைக்குப் பால் கொடுக்காத ஆளுங்க...”
‘‘அதுக்காக பெத்த குழந்தைக்குப் பால் கொடுக்குறது இல்லையா என்ன? சும்மா இருக்கணும். ஆளங்க பேசுவாங்களாம்... அவங்க பேச்சுக்கு மதிப்பே இல்ல...”
அந்த வார்த்தைகளில் அளவுக்கும் அதிகமான வெறுப்பு கலந்திருந்தது. அவன் லட்சுமி இருந்த பக்கம் திரும்பினான். ‘‘கண்ணு. நான் ராத்திரி வருவேன். நீ இனிமேல் தினமும் என்கூட உட்கார்ந்து சாப்பிடலாம். சரியா?” அவன் சொன்னான்.
சொல்லிவிட்டு அவன் சாலையில் இறங்கி ரிக்ஷாவை இழுத்துக் கொண்டு நடந்தான். அன்று சாயங்காலம் ஒரு கூடை நிறைய அரிசியும் சாமான்களும் இருக்க ஒரு சுமை தூக்கும் மனிதன் அங்கு தூக்கிக் கொண்டு வந்தான்.
அன்று இரவு வந்தபோதும் பப்புவின் கையில் ஒரு தாள் பொட்டலம் இருந்தது. கல்யாணி அதை அவிழ்த்துப் பார்த்தாள். ஒரு முண்டும் ஜாக்கெட்டும் பாடீஸூம் இருந்தன.
‘‘என்ன இது?”
‘‘அணியிறதுக்கு...”
அவள் சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு சொன்னாள்: ‘‘எனக்கு இதை உடுத்தத் தகுதி இல்ல...”
‘‘முண்டு உடுத்தறதுக்கு தகுதி வேணுமா என்ன?”
‘‘ஆளுங்க என்ன சொல்லுவாங்க?”
பப்பு அதற்குப் பதில் எதுவும் சொல்லவில்லை.
பப்புவும் லட்சுமியும் இரவுச் சாப்பாடு சாப்பிட உட்கார்ந்தார்கள். கல்யாணி பரிமாறினாள். பப்பு கேட்டான்: ‘‘லட்சுமி, உனக்குப் பள்ளிக்கூடத்துக்குப் போகணும்ன்ற ஆர்வம் இருக்கா?”
‘‘ம்... நான் பள்ளிக்கூடத்துக்குப் போகணும். மாமா, நான் படிக்கணும்.”
தாய் மகளைப் பின் தொடர்ந்து சொன்னாள்: ‘‘படிக்கிறதுல இவளுக்கு ரொம்ப ஆர்வம்.”
‘‘அப்படின்னா நாளைக்கே நான் இவளைப் பள்ளிக்கூடத்துல சேர்த்திடுறேன்.”
‘‘அதுக்குப் பணம் செலவாகுமே!”
‘‘செலவைப் பற்றிய நினைப்பை நீங்க விட்டுடுங்க. எல்லாம் சரியா நடக்கும்.”
மறுநாள் பப்பு லட்சுமியைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்து அவளுக்கு சிலேட்டும் புத்தகங்களும் வாங்கிக் கொடுத்தான்.
6
அந்தக் குடிசைக்குப் பல வளர்ச்சிகள் உண்டாயின. ஓலைக்குப் பதிலாக மூங்கில் பாய் கொண்டு அழகாக மறைக்கப்பட்டது. இரண்டு அறைகளும் ஒரு சமையலறையும் இருந்தன. அவற்றுக்கு இப்போது ஒரு புதுத் தன்மையும் அழகும் வந்து சேர்ந்திருந்தன. தெற்குப் பக்கம் இருந்த அறை பப்புவின் அறை. பப்புவின் தகரப்பெட்டி அங்குதான் வைக்கப்பட்டிருந்தது. லட்சுமியின் பாவாடைகளும் ஜாக்கெட்டுகளும் கொடியில் தொங்கிக் கொண்டிருந்தன. அவளுடைய புத்தகங்கள் பத்திரமாக வைக்கப்பட்டிருப்பதும் அவள் அமர்ந்து பாடம் படிப்பதும் அந்த அறையில்தான். கல்யாணி அந்த அறைக்குள் வருவதேயில்லை.
லட்சுமி உற்சாகமாகப் பாடம் படித்தாள். பாவாடையும் ஜாக்கெட்டும் அணிந்து, கண்ணாடி வளையல்கள் அணிந்து, தலை முடியைப் பின்னி அவள் பள்ளிக்கூடம் செல்வதை பப்புவும் கல்யாணியும் சந்தோஷத்துடன் பார்த்தவாறு நின்றிருப்பார்கள். ஒவ்வொரு நாளும் வேலை முடித்து வரும்போது பப்பு அவளுக்காக ஏதாவது கொண்டு வராமல் இருக்க மாட்டான். பப்பு ஏதாவது கொண்டு வந்து தரவில்லையென்றால் அவளும் சந்தோஷமாக இருக்க மாட்டாள். பப்புவிற்கு அருகில் இருக்கும்போது அவள் ஒரு முழுமையான வாயாடியாக இருந்தாள். பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற சம்பவங்கள், வழியில் பார்த்த காட்சிகள், தன்னுடைய தோழிகளின் குணங்கள், பக்கத்து வீட்டிலுள்ளவர்களைப் பற்றிய தன்னுடைய கருத்துக்கள், தன்னுடைய தேவைகள், ஆசைகள் - இப்படி பல விஷயங்களைப் பற்றியும் அவள் பேசிக் கொண்டிருப்பாள். பப்பு அவள் சொல்லும் எல்லாவற்றையும் மிகவும் அக்கறையுடன் கேட்டுக் கொண்டிருப்பான். அவளுக்கு நன்றாகப் பாடத் தெரியும். பிறவியிலேயே அவளுக்கு அமைந்த ஒரு திறமை அது. அவள் பல பாடல்களையும் பாடுவதற்குத் தெரிந்து வைத்திருந்தாள். அவை ஒவ்வொன்றையும் பப்புவிற்கு முன்னால் அவள் பாடுவாள். அவளுக்கு மனதில் பல கேள்விகள் இருந்தன. இசைத்தட்டிலிருந்து எப்படி பாடல் கேட்கிறது, மோட்டார் வண்டிகள் எப்படி ஓடுகின்றன, எண்ணெயும் திரியும் இல்லாமல் எப்படி தெருவிளக்குகள் எரிகின்றன - இப்படி அவளிடம் எத்தனையோ கேள்விகள். பப்பு தனக்குத் தெரிந்ததை அவளுக்குக் கூறுவான்.
பப்புவும் கல்யாணியும் ஒருவரோடொருவர் அதிகமாகப் பேசிக் கொள்வதில்லை. மிகவும் குறைவான வார்த்தைகளில் வீட்டு விஷயங்களைப் பற்றி அவர்கள் பேசிக் கொள்வார்கள். அவ்வளவுதான். ஆனால் கல்யாணியின் விஷயத்தில் பப்புவிற்கும், பப்புவின் விஷயங்களில் கல்யாணிக்கும் எப்போதும் அக்கறை இருந்தது. அவன் மேலும் இரண்டு மூன்று முண்டுகள் அவளுக்காக வாங்கிக் கொண்டு வந்தான். லட்சுமிக்குப் பாவாடையும் ஜாக்கெட்டும் தைக்கும் போதெல்லாம் கல்யாணிக்கும் ஜாக்கெட் தைப்பது என்பது வழக்கமான ஒன்றாக இருந்தது. அவள் அவை எதையும் அணிவதேயில்லை. பழைய முண்டையும் ஜாக்கெட்டையும் சோப்போ காரமோ போட்டு சலவை செய்து அணிந்து கொள்வாள். புதிய ஆடைகளை அணிய அவளுக்குக் கூச்சமாக இருந்தது.
ஒரு நாள் அவள் கண்ணாடியை எடுத்து தன் முகத்தைப் பார்த்தாள். அவளுடைய முகத்தில் பட்டினியால் உண்டான அடையாளங்களெல்லாம் முழுமையாக மறைந்து போயிருந்தன. எண்ணெய் தேய்க்காததால் செம்மைப் படர்ந்திருந்த தலைமுடி கருப்பு நிறத்தில் மாறிவிட்டிருந்தது. புருவங்களுக்கு ஒரு அடர்த்தியும் கண்களுக்கு முன்பு எப்போதும் இருந்திராத ஒரு பிரகாசமும் வந்து சேர்ந்திருந்தன. அவள் சிறிது நேரம் அப்படியே கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.