ஜலசமாதி - Page 9
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6352
பாவம் செய்ததற்கான தண்டனை... போன பிறவியில் மன்னர்களாக இருந்துகொண்டு மக்களை அடக்கி அவர்கள் ஆண்டிருக்கலாம். சாட்டையால் அடித்தும் பார்வையால் பயமுறுத்தியும் பணம் இருக்கிறது என்ற ஆணவத்தால் தறிகெட்டுப்போய் அவர்கள் வாழ்ந்தும் இருக்கலாம். முழுமையான சுயநலவாதிகளாக அவர்கள் அப்போது இருந்திருக்கலாம். பாலசந்திரன் நடந்து செல்லும்போது பல விஷயங்களையும் நினைத்தான். சில கொடுமையான காட்சிகளைப் பார்த்தபோது அவனுக்குத் தாங்க முடியாத கோபம் வந்தது. காவி ஆடையை விட்டெறிந்து விட்டு மனிதர்களின் நன்மைக்காக களத்தில் இறங்கினால் என்ன என்றுகூட அவன் ஒரு நிமிடம் நினைத்தான்.
வேண்டாம்... வேண்டாம்... இதுவரை அவன் அனுபவித்ததே போதும். இனி வரும் நாட்களிலாவது அவன் மன அமைதியுடன் வாழவேண்டும் என்று நினைத்தான். அநீதியான சம்பவங்கள் பலவற்றையும் அவன் பார்க்க வேண்டியது வரலாம். அதைப் பார்த்துக் கண்களை மூடிக்கொள்வதே நல்லது. எதிர்ப்பு சக்தி கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டே வருகிறது. ஆள்பலமும் அவனுக்கு இப்போது இல்லை.
‘கவலைகளைப் போக்குபவர்’ என்ற பெயரில் அறியப்படும் ஆஞ்சனேயர் கோவிலைப் பாலசந்திரன் பார்த்தான். கவலைகளிலிருந்து விடுபடவேண்டும் என்பதற்காகத்தான் அங்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். ஒவ்வொருவரின் கவலைகளும் அங்கு போன பிறகு நீக்கப்பட்டு விடுகின்றனவா? நானும் கவலையில் ஆழ்ந்திருக்கும் மனிதன்தானே? பிரார்த்தனை செய்ய வேண்டியதுதான். என்னைக் காப்பாற்று என்று’ - இப்படி தனக்குள் எண்ணினான் பாலசந்திரன்.
ஆஞ்சனேயர் ஆலயம் இருக்கும் இடத்தைச் சுற்றி ஏராளமான ஆலமரங்கள் இருந்தன. ஆலும் அரச மரமும் அத்தியும் வேப்பமரங்களும் அங்கு நிறைய வளர்ந்திருந்தன. காய்கள் பழுத்துத் தொங்கிக் கொண்டிருந்தன. கவலைகள் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் குரங்குகள் மரங்களில் ஏராளமாக இருந்தன. பழங்களைத் தின்று கொண்டும், சண்டை போட்டுக் கொண்டும், காதலித்துக் கொண்டும் அவை இருந்தன. எந்தவிதப் பிரச்சினைகளும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் வானரக் கூட்டம் பல இனத்தைச் சேர்ந்தவையாகவும் பல வயதைக் கொண்டவையாகவும் இருந்தன. ஸ்ரீராமனின் பக்தனான அனுமனின் வம்சப் பரம்பரை. அனுமன் முழுமையான பிரம்மச்சாரியாக இருந்தான் என்பதையும் சிரஞ்சீவித் தன்மை உள்ளவன் என்பதையும் பாலசந்திரன் கேள்விப்பட்டிருக்கிறான். வம்சப் பரம்பரை காமத்திற்கும் கோபத்திற்கும் இரையாகி வாழ்க்கை முழுவதும் துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறது. இந்த வம்சப் பரம்பரை கவலைகளிலிருந்து விடுபடாமல் இருப்பதற்கு என்ன காரணம்? இங்கிருந்து ஓடிப் போவது என்பது அவ்வளவு எளிதான ஒரு விஷயமல்ல.
கவலைகள் இல்லாத அந்த வானரக் கூட்டத்திற்குத் தருவதற்காக அவல், மலர், சோளம் ஆகியவற்றை விற்பனை செய்து கொண்டிருக்கும் கடைகள் அங்கு இருந்தன. குரங்குகளின் தொல்லைகளைப் பொறுக்க முடியாமல் இரும்பு வலைகளுக்குள் அமர்ந்து கொண்டுதான் வியாபாரிகள் பொரியையும் பூக்களையும் விற்பனை செய்து கொண்டிருந்தார்கள். அனுமனின் சீடர்கள் கூட்டம் பசியோடு இருக்கக் கூடாது என்பதற்காகச் செய்யும் முக்கியமான வழிபாடுதான் வானர நிவேத்யம். கூட்டம் கூட்டமாக ஓடிவரும் குரங்குகளுக்கு அங்கு வருபவர்கள் பூக்களையும் பொரியையும் எறிகிறார்கள். சிலர் ஆப்பிளையும் கொய்யாப் பழத்தையும் குரங்கின் கையில் கொடுத்து சந்தோஷம் அடைகிறார்கள். பாலசந்திரனும் கொஞ்சம் பொரியை குரங்குகளுக்கு முன்னால் எறிந்தான். குரங்குகளின் ஆர்வமும் ஆரவாரமும் சிறிதும் குறையாமல் இருந்தது. தந்திரசாலிகளும், சாமர்த்தியசாலிகளும், தட்டிப் பறிப்பவர்களும், ஏமாற்றுபவர்களும் அந்தக் குரங்குகளின் கூட்டத்தில் இருக்கவே செய்தார்கள். தாத்தாவும் பாட்டியும், பிள்ளைகளும், பேரப் பிள்ளைகளும்…
அச்சுதானந்தன் ஒரு வயதான குரங்கைப் பார்த்து கையால் அடிப்பதற்காக ஓங்கினான். அடுத்த நிமிடம் அவன் பல்லைக் காட்டி வக்கணைசெய்தான்.
“சுவாமி... பக்கத்துல போகாதீங்க. அவங்க கூட்டமா வந்து நின்னுடுவாங்க. தலைக்கு நேரா கையை ஓங்கியிருக்கீங்கன்றதை ஞாபகத்துல வச்சுக்கங்க. சீடர்கள் சும்மா விட மாட்டாங்க...” வந்திருந்தவர்களில் ஒருவர் அச்சுதானந்தனைப் பார்த்துச் சொன்னார்.
குரங்குகளிடமும் கவலைகளை அகற்றும் அனுமனிடமும் விடைபெற்றுக் கொண்டு மீண்டும் தெருவை நோக்கி அவர்கள் நடந்தார்கள். அடுத்து அவர்கள் சென்றது துர்க்கை கோவிலுக்கு. நடந்து போகக் கூடிய தூரத்தில் அந்தக் கோவில் இருந்தது.
6
துர்க்கை கோவிலின் கோபுரத்தில் ‘ஓம்’ என்று எழுதப்பட்ட பலகை இணைக்கப்பட்டிருந்தது. கொடிமரத்தின் உச்சியில் காவிக் கொடி பறந்து கொண்டிருந்தது. துர்க்கா தேவியின் திருவிழாக் கொண்டாட்டங்களுக்கு முன்னால் செய்ய வேண்டிய மராமத்து வேலைகள் அப்போது நடந்து கொண்டிருந்தன. தச்சர்கள் பெரிய தேரிலிருந்து சிறு சிறு குறைபாடுகளைச் சரி செய்யவும் வேலையில் மூழ்கியிருந்தார்கள். கோவில் அதிகாரிகளில் ஒன்றிரண்டு பேர் சுவருக்குள் நடந்து கொண்டிருந்தார்கள். கோவிலின் சுவர்களும் படிகளும் சரியாக இருக்கின்றனவா என்று அவர்கள் ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். சேறும் எண்ணெயும் ஒட்டிக் கொண்டிருந்ததைத் துணியால் துடைத்து சுத்தம் செய்தார்கள். எல்லா இடங்களிலும் புதுப்பிக்கும் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. வண்ணம் பூசுபவர்களும் சுத்தம் செய்பவர்களும் தங்களின் வேலைகளில் மூழ்கிப் போயிருந்தார்கள். துர்க்காஷ்டமிக்கான ஏற்பாடுகள் துரிதகதியில் அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஒன்பது நாட்கள் நடைபெறும் பூஜை அது.
வியாபாரிகளுக்காகக் கோபுரத்திற்கு முன்னால் கடைகள் உண்டாக்கிக் கொண்டிருந்தார்கள். பெரிய பந்தல் வேலையும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பெண்கள்தான் அங்கு பெரும்பாலும் வரக்கூடியவர்கள் என்பதைப் பார்க்கும்போதே உணர முடிந்தது. நெற்றியிலும் தலை முடிமீதும் திலகமிட்டிருக்கும் பெண்கள் வாய் ஓயாமல் எதையாவது பேசிக் கொண்டிருந்த பெண்கள் நடை திறக்கப் போவதை எதிர்பார்த்து வரிசையில் நின்றிருந்தார்கள். கண்கள் அந்தப் பக்கம் பார்த்தன. வேண்டாம் அதை நினைக்காமல் இருப்பதே நல்லது.
ஒரு விஷப்பாம்பின் குணத்தைக் கொண்ட அழகிய பெண்ணின் விபச்சாரத்தனமான மந்திர வலைக்குள் சிக்கி நடந்து திரிந்த நாட்கள்...
“இல்ல... என் மனசு இப்போ கூட அதை நினைக்க முயலுது”-பாலசந்திரன் தன் மனதிற்குள் மேல்நோக்கி எழுந்த நினைவுகளைக் கடிவாளம் போட்டு நிறுத்த முயற்சித்தான். நன்கு தெரிந்து கொண்டே அவன் எல்லாவற்றையும் மீறி நடந்தான். எதிலும் உறுதியாக அவனுடைய மனம் நிற்கவில்லை. கண்ணில் பார்ப்பது எல்லாமே உண்மை என்று அவன் தவறாக எண்ணினான். மனபலம் என்ற ஒன்று இல்லாமலே இருந்தது. இப்போது அல்ல. அப்போது.
பிடிவாத குணத்தால் அவன் அப்படி எதைச் சம்பாதித்தான்? மனசாட்சியை ஏமாற்றி வாழும் சுக வாழ்க்கை எவ்வளவு நாட்களுக்கு நடக்கும்? அதில் சுகம் என்பது எங்கே இருக்கிறது?
கெட்டவர்களைக் கொடுமையான பாம்பாக நினைத்து தள்ளி வைக்க வேண்டும் என்று அறிவுரை சொன்ன தந்தைக்கு மகனிடமிருந்து கூலியாக என்ன கிடைத்தது?