ஜலசமாதி - Page 8
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6352
“அப்படிச் சொல்லாம பின்வாங்கக் கூடாது. நான் பலவற்றையும் தெரிந்து கொள்ள ஆர்வமா இருக்குறவன். தவிர, நான் ஒரு பக்தன், பயணி. ஆச்சார, அனுஷ்டானங்கள் பலவற்றையும் உதறிவிட வேண்டும் என்று அவசியமில்லை. மூட நம்பிக்கைக்கும் ஆச்சாரங்களுக்குமிடையே வித்தியாசம் இருக்கு!”
“அனுஷ்டானங்களையும் ஆச்சாரங்களையும் பின்பற்றக் கூடாதுன்னு இல்ல. சிறிதும் தவறு செய்யாமல் சுத்தமான வாழ்க்கை வாழ்ந்து உன்னத நிலையை அடைந்தவர்கள் எத்தனையோ பேர் இருக்காங்க. குறிப்பா, காசியின் பின்புலத்தில். அதனால் ஒரு இந்து காசியின் கலாச்சாரத்தைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்தான். இந்து, முஸ்லீம், பார்ஸி, பவுத்தம்ன்றது ஒரு பிரச்சினையே இல்ல. மனிதனாக வாழ்வதற்குத் தேவையான ஏதாவதொன்றை இங்கிருந்து பெற முடியுமா என்பதைப் பற்றித்தான் நான் சிந்திக்கிறேன். இந்துக்களும் இந்துக்கள் அல்லாதவர்களும் ஒரே மாதிரி காசி மீது பிரியம் வச்சிருக்காங்க. அந்த பிரியத்துக்கு மதம் ஒரு பிரச்சினையே இல்ல. நூற்றுக்கணக்கான வருடங்களாக இருக்கும் கலாச்சாரம் அதைத்தான் உரத்த குரல்ல சொல்லுது. எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும், ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கும் இங்கு வழிபடுறதுக்கு ஆலயங்கள் இருக்கின்றன. அங்கு எல்லோரும் ஒன்று கூடுறாங்க. அன்புக்காக, நட்புக்காக...”
அதைக்கேட்டு மதம் என்ற முகமூடி அணிந்திருக்கும் அச்சுதானந்தன் ஒரு மாதிரி ஆகிவிட்டார்.
“ராம சரித மானஸத்தை எழுதிய துளசிதாசனைப் பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா?”
“நிறைய கேள்விப்பட்டிருக்கேன். தாய்மொழியில் எழுதப்பட்ட மகாகவி வெண்ணிக்குளம் கோபாலக்குறுப்பின் துளசிதாச இராமாயணத்தை நான் படிச்சிருக்கேன். என் தாயின் வற்புறுத்தல் காரணமாக நான் அதைப் படித்தேன்.”
“துளசிதாசன் இந்த கங்கைக் கரையில் இருக்கும் காசி மகாராஜாவின் அரண்மனைக்குள்ளிருந்துதான் ராம சரித மானஸத்தை ஆரம்பிச்சாரு. கங்கையையும் விஸ்வநாதரையும் அந்தக் காலத்துல அவர் வணங்கினார். கங்கையில் குளித்து, புராணப் பாராயணம் செய்து முடித்த பிறகுதான் காலை நேர உணவையே சாப்பிடுவாருனு அவரைப்பற்றி சொல்லுவாங்க. அவர் இனிமையான குரல்ல பாடுவார். அந்தப் பாட்டுல மயங்காத மனம் என்று அப்போ கங்கைக் கரையில எதுவுமே இல்ல. அவர் பாராயணம் செய்யிறதைக் கேட்பதற்கென்றே ஆண்கள், பெண்கள் என்ற வேறுபாடு இல்லாமல் ஆட்கள் வந்து கூடுவாங்க. ஆரம்ப காலத்துல அவர் ரொம்பவும் சாதாரண ஆளாகத்தான் இருந்திருக்காரு. ஒரு பெண்தான் அவரை வேற மாதிரி மாற்றிவிட்டாள்னு சொல்லுவாங்க. ‘நல்ல புத்தகங்களைப் படிக்கணும். அப்படின்னாத்தான் மனிதனாக முடியும்’னு அந்தப் பெண்தான் அவர்கிட்ட சொன்னாளாம்.”
“நான் நல்லதும் கெட்டதுமான ஏராளமான நூல்களைப் படிச்சிருக்கேன். சமஸ்கிருதம் எனக்குக் கொஞ்சம்கூட தெரியாது. இந்தியில யாராவது பேசினாங்கன்னா நான் புரிஞ்சிக்குவேன். தாய்மொழியும் ஆங்கிலமும் மட்டும்தான் எனக்குத் தெரிஞ்ச மொழிகள். எனக்கு மறுவாழ்க்கை தந்ததில் நூல்களுக்குப் பெரிய பங்கு இருக்கு. ஸ்ரீராமகிருஷ்ண வசனாமிர்தமும் விவேகானந்த சாகித்யமும் என்னை ரொம்பவும் ஈர்த்தன. வழிதவறிப்போன எனக்குச் சரியான பாதையைக் காட்டிய உன்னதமான நூல்களைப் பட்டியல் போட்டுக் கூறுவது சிரமம்.”
“வழி தவறிப் போனதை எப்படிக் கண்டுபிடிச்சீங்க?”
“பிற்காலத்துல நடைபெற்ற சில சம்பவங்கள்... கிடைத்த அனுபவங்கள்...”
“ஆன்மிகப் பாதையைப் பின்தொடர வேண்டும் என்பது தான் இலக்கா?”
“இராமாயணம் ஆறு காண்டங்களையும் படிச்சு முடிச்சிட்டு ராமனுக்குச் சீதை யாருன்னு கேட்குறதுமாதிரி இருக்கு இந்தக் கேள்வி... ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் பரமஹம்சராக ஆகுறதுக்கு முன்னாடி கங்கைக் கரையில உட்கார்ந்து தியானம் செய்வாரு. அவர் யோகவாஸிஷ்டத்தை எப்போதும் படிப்பாரு. இந்த மண்ணுல இப்பவும் உலக இன்பங்களைத் துறந்த துறவிகளைப் பார்க்க முடியும். அவர்களுக்குச் சொந்தமா ஆசிரமங்களோ, மடங்களோ இல்ல. அவர்கள் உலக நன்மைக்காகச் சன்னியாசி கோலத்துல சுற்றிக்கொண்டு இருப்பாங்க.”
“அப்படிப்பட்ட ஒரு ஆளை இங்கேயிருந்து நாம போறதுக்குள்ளே எனக்குக் காட்ட முடியுமா?”
“பார்க்கலாம். ஆள் அரவமில்லாத இடங்கள்லயும் மரம் இருக்குற மூலைகள்லயும் ஆலமரத்துக்குக் கீழேயும் கங்கையின் மனித நடமாட்டமில்லாத கரையிலயும் சுடுகாட்டிலும் அவர்கள் இருப்பார்கள். நாம பார்த்தவுடனே அவர்களை அடையாளம் கண்டுபிடிக்க முடியாதுன்றது வேற விஷயம். அப்படிப்பட்ட மனிதர்களை ஒரு தடவையாவது தரிசனம் செய்திடணும்னு தேடி நடக்குற பணக்காரர்களை நிறைய பார்க்கலாம். இலட்சக்கணக்கான ரூபாய்களை காணிக்கையா வச்சு அவங்க சாஷ்டாங்கமா விழுந்து கும்பிடுவாங்க. ஆனா, அப்படிப்பட்ட பணக்காரர்களைப் பார்த்துட்டாலே துறவிகள் ஓடி ஒளிஞ்சுக்கணும்னு நினைப்பாங்க.”
அச்சுதானந்த சுவாமியுடன் சேர்ந்து பாலசந்திரன் வாரணாஸி முழுவதும் சுற்றித் திரிந்தான். பலதரப்பட்ட மனிதர்கள்... பல்வேறு மொழிகளைப் பேசக் கூடியவர்கள்... பலவகை குணங்களைக் கொண்டவர்கள்... வாழ்க்கையே பல்வேறு வகைப்பட்ட மனிதர்களால் வகுக்கப்பட்ட ஒரு வினோதம்தான் என்ற உண்மை மீண்டும் மீண்டும் புரிபடத் தொடங்கியது.
பிரகாசமாகக் காணப்பட்ட பூந்தோட்டங்களுடன் இருந்த வீடுகள், பிரம்மாண்டமான மாளிகைகள், கல்விக் கூடங்கள், அனாதை இல்லங்கள். தர்ம குணம் கொண்ட வசதி படைத்தவர்கள் கட்டிய தர்ம சாலைகள், சத்திரங்கள், சத்திரங்களுக்கு மத்தியில் ஆசிரமங்கள், மன்னர்களின் பெயரில் இருக்கும் ஆதரவு இல்லங்கள், சன்னியாசிகளுக்கு வாடகை எதுவும் இல்லாமல் தங்குவதற்கான மையங்கள்... பனாரஸ் பல்கலைக் கழகத்தையும் அதைச் சுற்றியுள்ள இடங்களையும் போய் பார்த்தார்கள். சமஸ்கிருத பாடசாலைகள், வேத விற்பன்னர்கள், சமஸ்கிருத பண்டிதர்கள், ஆசிரியர்கள் என்று பலரையும் அவர்கள் சந்தித்தார்கள்.
வருணைக்கும் அஸிக்கும் நடுவில் இருக்கும் வாரணாசியில் கிடைக்காத பொருட்கள் எதுவுமில்லை. பட்டும் இரத்தினமும் விற்கும் உண்டியல் வியாபாரிகள், ருத்திராட்சம், ஸ்படிகம், துளசி ஆகியவற்றைக் கொண்டு உண்டாக்கப்பட்ட மாலைகள், குங்குமம், மஞ்சள், காசி தீர்த்தம், சாளக்கிரமங்கள், மிதியடி, கூடை, துடைப்பம், பிரம்பு, சிலைகள்... வரிசையாகப் பொருட்கள் விற்கப்படும் கடைகள் திறந்திருந்தன. அழகான ஆண்களும் அழகிய பெண்களும் ஒருவரோடு ஒருவர் கைகளைக் கோர்த்துக்கொண்டு அவற்றைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும், இந்தியர்களும் அடங்கிய அவர்களில் பெரும்பாலானவர்கள் சுற்றுலா பயணிகளாக வந்தவர்கள். தேனிலவு கொண்டாடுவதற்காக வந்திருப்பவர்களும் அந்தக் கூட்டத்தில் இருந்தார்கள். மக்கள் வெள்ளத்தால் தெருக்கள் திணறிக் கொண்டிருந்தன. வாகனங்கள் இங்குமங்குமாக ஓடிக் கொண்டிருந்தன. மனிதர்கள் இழுத்துக் கொண்டு ஓடிக் கொண்டிருக்கும் ரிக்ஷா வண்டிகளும் இருந்தன. ரிக்ஷா வண்டிகளில் ஒரு முழு குடும்பமே உட்கார்ந்திருந்தது. வண்டி இழுப்பவன் கண்ணீர் விட்டான். வயிற்றுப் பிழைப்பிற்காகத் தாங்க முடியாத சுமையுடன் வண்டியை இழுத்துக் கொண்டிருந்த ரிக்ஷாக்காரர்களைப் பார்த்தபோது அவர்கள் மீது பரிதாப உணர்ச்சி தோன்றியது. என்ன நாகரிக சமுதாயம்! இன்னொருவனின் கஷ்டமே தெரியாத பணக்காரப் பிண்டங்கள்! பிணங்களிடம் கூட இதை விட அதிக நாகரிகம் இருக்கும்.