ஜலசமாதி - Page 12
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6352
அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் நீதிபதிக்கு உண்டான மாற்றம் எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தது. மனைவி காது பக்கத்துல வந்து சொன்னாள்ன்றதுக்காக நிரபராதியைத் தூக்குல போடச்சொல்லி தீர்ப்பு சொன்ன விஷயத்திற்காக மனதில் கவலை கொண்ட அவரைப் பற்றியே எல்லாரும் பேசினாங்க. வித்யாரண்ய ஸ்ரீவாத்சாவைப் பற்றி எல்லாருக்குமே பொதுவாகவே எப்பவும் நல்ல அபிப்ராயமே இருந்தது. வக்கீலாக வேலை பார்க்குறப்போ ஏழைகளிடமிருந்து பணமே வாங்காமல் அவர் வழக்கை நடத்தியிருக்காரு. வீடு தேடி வர்ற ஏழைகளை வெறும் கையோட திருப்பி அனுப்பாத தர்மசீலர் அவர். விதவைகளுக்கு மறுமணம் செய்து கொடுப்பதில் ஆர்வமா ஈடுபட்ட மனிதர் அவர். பொருளாதார உதவிகள் செய்யக் கூடியவர். இரக்க குணம் கொண்டவர். நிறைய படித்த பண்டிதர். ஏராளமான நூல்களைப் படித்து அறிவு பெற்ற ஞானி. இப்படிப் பல காரணங்களால் எல்லோருக்கும் மிகவும் பிடித்த ஒரு மனிதரிடம் திடீரென்று உண்டான மாற்றம்.”
மவுனி பாபாவின் கடந்த கால வாழ்க்கையைக் கேட்டு பாலசந்திரன் நிசப்தமாகி விட்டான்.
பாபா இருக்குமிடத்திற்குப் போய் அமர வேண்டும் என்ற விருப்பம் பாலசந்திரனை மீண்டும் அந்தப் பக்கம் பிடித்து இழுத்தது. கண்களைத் திறந்திருக்கும் பாபாவைப் பார்க்க அவன் விரும்பினான். மீண்டும் அந்த ஞானியின் பாதங்களில் சரணடைய வேண்டும் என்று நினைத்த அவன் அங்கு நோக்கி நகர்ந்தான்.
பக்தர்கள் அந்தப் பாதங்களுக்கு அருகில் நாணயங்களை வைத்திருந்தார்கள். பூஜைப் பொருள்களையும் பழங்களையும் வைத்திருந்தார்கள். அவர் அப்படிப்பட்ட விஷயங்கள் எதிலும் தன் கவனத்தையே செலுத்துவதில்லை. நாணயங்கள் வந்து குவிந்து கிடப்பதோ, நோட்டுகள் சுற்றிலும் இறைந்து கிடப்பதோ பாபாவைத் தொடக் கூடிய விஷயங்களல்ல. அதை எடுத்துக்கொண்டு செல்பவர்களும், எண்ணி சரிபண்ணி வைப்பவர்களும் பாபாவுடன் தொடர்புடையவர்கள் அல்ல. அங்கு வரும் யாரும் அனுமதி இல்லாமலே அவற்றை எடுத்துக் கொண்டு போகலாம். எனினும், அவரைச் சுற்றி நின்று கொண்டிருக்கும் சிலர் கணக்கையும், தினசரி வரவு செலவுகளையும் எழுதி வைத்து விட்டு போவார்கள். திருடர்களும் ஏமாற்றுப் பேர்வழிகளும் பாபாவைச் சுற்றி காவல் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவருக்கு அதைப் பற்றியெல்லாம் எதுவும் தெரியாது. அப்படியே தெரிந்தாலும், தெரிந்தது மாதிரி அவர் காட்டிக் கொள்ள மாட்டார்.
யாருக்கும் அங்கு இலவசமாக உணவு கிடைக்கும். மதியம் ஒரு நேரம் மட்டும் பிரசாத ஊட்டு.
பிரசாதத்திற்காக கூட்டமாக நின்றிருந்த பக்தர்களுக்கு மத்தியில் அச்சுதானந்தனும் பாலசந்திரனும்கூட இருந்தார்கள்.
உணவிற்கும், பணத்திற்கும் அங்கு பலவிதப்பட்ட தில்லுமுள்ளுகளும் நடைபெற்றுக் கொண்டுதானிருந்தன.
அங்கு கொடுக்கப்பட்ட பிரசாதத்தைச் சாப்பிட்டு விட்டு மீண்டும் மவுனி பாபாவின் பாதங்களுக்கு அருகில் வந்து அவர்கள் அமர்ந்தனர். பாலசந்திரன் பாபாவின் பாதங்களைத் தொட்டு வணங்கினான். மின்சாரம் தாக்கியதைப் போல ஒரு நிமிடம் அவன் அதிர்ச்சியடைந்தான். திடீரென்று பாபா கண்களைத் திறந்தார். பாலசந்திரனைப் பார்த்து ஒரு மெல்லிய புன்சிரிப்பை அவர் தவழவிட்டார். ஆசீர்வாதத்திற்காகத் தலையைக் குனிந்த பாலசந்திரனின் நெற்றியை பாபா தன் கையால் தொட்டார். அந்த உதடுகளிலிருந்து ஏதோ சில வார்த்தைகள் வெளியே வந்தன. மீண்டும் பாபா தன் கண்களை மூடினார். நன்றிப் பெருக்குடன் பாலசந்திரன் அந்த இடத்திலிருந்து விடைபெற்றான். அச்சுதானந்தனை அவன் பின்பற்றி நடந்தான்.
ஓய்வெடுக்க கிளைகள் இல்லை. படுத்து உறங்கக் கூடுகள் இல்லை. வெயிலும் வெப்பமும் குளிரும் பனியும் மழையும் ஒரு பிரச்சினையே இல்லை. குளிர், வெப்பத்தை வெற்றி பெற வேண்டும். உடல் இரண்டையும் தாங்கக் கூடியதாக மாற வேண்டும். ஒரு நேர உணவு எங்கிருந்து கிடைக்கும் என்ற விஷயத்தில் ஆர்வமாக இருக்கக் கூடாது. உடலைப் பற்றிய அக்கறையை முழுமையாகக் கைவிட வேண்டும். பணமும் புகழும் தேவையே இல்லை. அமைதி மட்டும்தான் வேண்டும். சமாதியுடன் சாந்தி கிடைக்க வேண்டும். ஆமாம்... அவன் அடைய நினைப்பது ஜலசமாதிதான். கங்கை நதியில் ஜலசமாதி. ஆமாம்... அது எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம். கங்கல்தான் அதற்கேற்ற இடம். ஹரித்துவாரிலிருந்து மிகவும் குறைந்த தூரத்திலேயே அந்த இடம் இருக்கிறது. ஆள் அரவமற்ற இடம் போய் பார்க்க வேண்டும். பாலசந்திரன் என்னவோ தீவிரமான சிந்தனையில் மூழ்கிப் போயிருந்தான். அவனுடைய கண்களிலிருந்து நீர் வழிவதை அச்சுதானந்தன் கவனித்தான். இந்தப் பயணத்திற்கு மத்தியில் ஒரு சித்தரையாவது பார்க்க நேர்ந்ததற்காக மனதில் சந்தோஷம் உண்டாகியிருக்கலாம். ஆனந்தக் கண்ணீரின் உறைவிடம் எங்கிருக்கிறது என்பது இப்போது புரிந்து விட்டது.
“இல்ல... அப்படி எதுவும் இல்ல... நான் பழைய சில கதைகளை நினைச்சுப் பார்த்தேன்...”
“வாழ்க்கையைக் குலுங்கச் செய்த எத்தனையோ சம்பவங்கள்... அதையும் இதையும் நினைச்சு மனசைக் கஷ்டப்படுத்திக்காதீங்க. பந்த பாசங்கள் நம்மை விட்டு போகுறதுன்றது அவ்வளவு சாதாரண ஒரு விஷயமல்ல. கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கங்க.”
பாலசந்திரன் ஒரு ஆலமரத்திற்கு அடியிலிருந்த சிமெண்ட் தரையில் போய் உட்கார்ந்து தன் கண்களை மூடினான். கங்கை நதியின் நீரோட்டம் உண்டாக்கிய சத்தம் காதுகளில் வந்து மோதிக் கொண்டிருந்தது. கங்கை நதிக்கரை வழியாகச் சிறிது தூரம் மீண்டும் நடந்து பார்க்க வேண்டுமென்ற விருப்பம் பாலசந்திரனைப் பிடித்து இழுத்தது. எவ்வளவு பார்த்தாலும் போதும் என்ற உணர்வே அவனுக்கு உண்டாகவில்லை. காசி விஸ்வநாதரிடமும் வாரணாஸி நகரத்திடமும் விடை பெற்றுக்கொள்ள வேண்டிய நேரம் மிகவும் நெருங்கி வந்து கொண்டிருந்தது. மவுனி பாபாவின் ஆசீர்வாதம் கிடைக்க வேண்டி இருக்கிறது. முன்னோக்கி வைத்த காலைப் பின்னோக்கி வைக்கிற பிரச்சினையேயில்லை. காசியில் இருந்த ஒரு மாதகால வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாது.
உடல் நலம் நன்றாக ஆகியிருக்கிறது. உடலில் பளபளப்பு உண்டாகியிருக்கிறது.
‘காசி, இமாலய புனித யாத்திரை’ என்றொரு புத்தகத்தை எழுத வேண்டும் என்று அவன் நினைத்தான்.
பார்க்க வேண்டிய எத்தனையோ புண்ணிய இடங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு இடத்திற்கும் அதற்கென்றிருக்கும் சிறப்புகள் இருக்கின்றன என்பதைத் தெரிந்திருக்க வேண்டும். புனிதப் பயணம் வரும் பக்தர்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் என்னென்ன என்பதை அச்சுதானந்தன் அவனுக்குக் கூறினார்.
அச்சுதானந்தனிடமிருந்து கிடைத்த தகவல்கள் பாலசந்திரனுக்குப் பயணத்தில் மிகவும் பயனுள்ளதாக இருந்தன.
பஞ்சதீர்த்தங்களை நோக்கித் தான் மட்டும் தனியே பயணம் செய்தான் பாலசந்திரன்.
ஹரித்துவாரில் புகழ் பெற்ற கோவில்கள்...
புனித நகரமான ஹரித்துவாரில கால் வைத்தபோது உண்டான அனுபவம்... நகரமாக மாறியிருக்கும் புண்ணிய பூமி...