ஜலசமாதி - Page 16
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6354
ஆணவம் இல்லாத ஒரு நிலையை நீ அடைந்தாயா?
அதெல்லாம் இருக்கட்டும்.
பணத்தின் மீதும், புகழின் மீதும் கொண்ட ஆசை இல்லாமல் போனதா?
உள்ளும் புறமும் ஒரே மாதிரி சுத்தமாகி விட்டனவா?
பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் நிரந்தரமாக உன்னை விட்டு விலகி விட்டதா?
சுருக்கமாகச் சொல்லப் போனால் ஒரு உண்மையான மனிதன் என்று உன்னை நீ கூறிக் கொள்ள முடியுமா?”
அவன் தனக்குத் தானே பல கேள்விகளைக் கேட்க நேர்ந்தபோது, “இல்லை... இல்லை...” என்றுதான் அவனுடைய மனசாட்சி பதில் கூறிக் கொண்டிருந்தது.
“இந்த உலகத்தில் மனஸா- வாசா- கர்மணா துரோகம் செய்யாமல் யாராவது வாழ முடியுமா? காலம் கலி காலம். மனிதர்கள் மத்தியில் நாட்கள் ஆக ஆக நல்ல விஷயங்கள் குறைந்து கொண்டே வருகின்றன. சன்னியாசிமார்கள் கூட சுயநலம் கொண்டவர்களாக மாறியிருக்கிறார்கள். கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று எல்லாவித கெட்ட செயல்களையும் செய்து விட்டு சன்னியாசி கோலம் பூண்டு என்ன பயன்?”
சில இடங்களில், ஆதரவு இல்லங்களில், கோவில் பகுதிகளில், சந்திக்க நேர்ந்த கேடுகெட்ட மனிதர்களின் கதைகளைக் கேட்டபோது பாலசந்திரனுக்கு அதிர்ச்சிதான் உண்டானது.
கண்ணில் சிறிதுகூட இரக்கமில்லாமல் மனிதர்களிடம் நடந்து, கடைசியில் தீர்க்க முடியாத மிகப் பெரிய நோய்கள் பிடித்து, படுத்த படுக்கையை விட்டு எழுந்திருக்கக் கூட முடியாமல் அங்குலம் அங்குலமாக இறந்து கொண்டிருந்தவர்களைப் பார்த்து அவன் பரிதாபப்பட்டிருக்கிறான். கணக்கற்ற கெட்ட செயல்களுக்கு இறுதியில் தீர்ப்பு உண்டாக்குகிறது வினை! மனிதர்களின் கண்களில் மண்ணைத் தூவ எளிதில் முடியும். கடவுளின் கண்களை ஏமாற்றவே முடியாது. நம்பிக்கை உள்ளவர்கள், நம்பிக்கையற்றவர்கள் எல்லோருமே இந்த உலகத்தில் இருக்கிறார்கள். ஹரித்துவாரில் வானம் சிவந்து கொண்டிருக்கிறது. மாலை நேரம் வந்தது. ஹர்கீபைரில் குளிக்கும் இடத்தை அடைந்தபோது, ஆரத்தி நடக்கப் போகும் நிலையில் இருந்தது. கங்கை நதிக்கரையில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடியிருந்தனர். கங்கை அன்னையின் ஆசீர்வாதத்திற்காக நடத்தப்படும் ஆரத்தியில் பங்கு பெற வேண்டும் என்பதற்காகப் பாலசந்திரன் வேகமாகச் சென்றான். கோவில்களிலிருந்து மணிகள் முழங்கிக் கொண்டிருந்தன. புரோகிதர்கள் கற்பூரம் எரிந்து கொண்டிருந்த பந்தத்தை உயரத் தூக்கிக் காட்டிக் கொண்டிருந்தார்கள். தீப ஒளியில் குளித்த அந்தப் பகுதி முழுவதும் ஒரே ஆர்ப்பரிப்பாக இருந்தது.
10
பாலானந்த சுவாமி சமாதியாகி ஒரு நாள் ஆகிவிட்டது. இன்னும் அவனுடைய இறந்த உடலை அடக்கம் செய்யவில்லை.
அவனுடைய மரணம் இயற்கையான மரணம்தான்.
ஹரித்துவாரின் கங்கை நதிக்கரையிலிருக்கும் குளிக்கும் இடமொன்றின் படியில் கிடந்தபடியே அவன் தன்னுடைய இறுதி மூச்சை விட்டு விட்டான். யோகப் பயிற்சிகள் செய்து கொண்டிருக்கும்போது நிலைகுலைந்து கீழே விழுந்து, உயிர் போய்விட்டது.
இருபத்து நான்கு மணி நேரங்கள் கடந்த பிறகும் இறந்த உடலுக்கு எந்தவொரு மாற்றமும் உண்டாகவில்லை என்பதுதான் அங்கிருந்த எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தது. இறந்த உடலில் கெட்டுப் போனதற்கான அடையாளங்கள் எதுவும் காணப்படாததால் தெய்வீகத் தன்மை கொண்ட துறவி என்று மக்கள் தங்களுக்குத் தாங்களே தீர்மானித்துக் கொண்டார்கள். சன்னியாசியின் சமாதி தரிசனத்திற்காக ஆட்கள் அங்கு வந்து கூடினார்கள். கூடியிருந்தவர்களில் ஒரு பகுதியினர் கங்கைக்கரையில் உடலை எரித்து விடலாம் என்றார்கள். வேறு சிலர் இறந்தவர் விருப்பப்பட்டதைப் போல ஜலசமாதி செய்வததுதான் சரியானது என்றார்கள்.
இறந்தவர்களுக்கு ஜலசமாதி என்பது வழக்கத்தில் இல்லாத ஒன்று. உயிருடன் இருப்பவர்களுக்கு மட்டும்தான் ஜலசமாதி அடையும் தகுதி இருக்கிறது.
விவாதங்கள் தொடர்ந்து கொண்டேயிருந்தன. இருபத்து நான்கு மணி நேரங்கள் முடிந்து நாற்பத்தெட்டாவது மணியை நோக்கி நேரம் கடந்து கொண்டிருந்தது. இரண்டு நாட்கள் ஆன பிறகும் உடலில் சொல்லிக் கொள்கிற மாதிரி கேடுகள் எதுவும் உண்டாகவில்லை.
புரோகிதர்களும் சன்னியாசிமார்களும் இறந்து போன உடலைப் பற்றி பல விவாதங்களைச் செய்து கொண்டிருந்தனர்.
இறந்த மனிதன் எந்தக் கோத்திரத்தைச் சேர்ந்தவன் என்ற கேள்விக்கு அங்கிருந்த யாராலும் ஒரு தெளிவான பதிலைக் கூற முடியவில்லை.
எந்த கோத்திரத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம்.
இறந்துபோன மனிதன் சன்னியாசி பரம்பரையைச் சேர்ந்த ஒரு ஆள் என்றும், சன்னியாசிக்கு ஏற்ற முறைப்படி இறுதிச் சடங்குகளைச் செய்வதுதான் சரி என்றும் எல்லோரும் பொதுவான தீர்மானத்திற்கு வந்தார்கள்.
அதை எப்படிச் செய்வது என்ற விஷயத்தில் மீண்டும் மாறுபட்ட கருத்துக்கள் எழுந்தன. இறுதியில் சீட்டுக் குலுக்கிப் போடுவது என்ற முடிவுக்கு வந்தார்கள்.
இறந்த உடலை எரிப்பதா? ஜலசமாதி அடையும்படி செய்வதா? குலுக்கிப் போட்டு எடுக்கும்போது வந்த முடிவு ஜலசமாதி என்பதுதான்.
பாலானந்தனின் இறந்த உடல் மீது மலர் வளையங்கள் வந்து விழுந்து கொண்டிருந்தன. பக்தர்களும் சன்னியாசிகளும் கூட்டமாகப் பங்கு பெற்ற இறுதி ஊர்வலம் கங்கையை நோக்கி நகர்ந்தது. ஜலசமாதிக்கு முன்னாலிருக்கும் சடங்குகள் ஆரம்பமாயின. பாலானந்தன் எல்லோராலும் புகழப்பட்டான். அவனைச் சப்பணமிட்டு உட்கார வைத்தார்கள். பத்மாசனத்தில் அமர்ந்திருப்பதைப் போல அது இருந்தது. பலகை மீதுதான் அவனை அமரச் செய்திருந்தார்கள். தராசுத் தட்டைப்போல இருந்த மரப்பலகையில் அமர்ந்திருந்த பாலானந்தனின் உடலை நீரை நோக்கித் திறந்தவாறு இருக்கும் குழிக்குள் இறக்கிக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தன. பலகையில் இறுகக் கட்டப்பட்டிருந்த கயிறுகளை மெதுவாகக் கீழ்நோக்கி விட்டுக் கொண்டிருந்தார்கள்.
நான்கு பேர்கள் உதவிக்குத் தட்டைச் சுற்றி நின்று கொண்டிருந்தார்கள். அந்தக் கயிறு நுனியைக் கீழ்நோக்கி இழுத்து இறக்குவதை ஒரு புண்ணியச் செயலாக எண்ணியவர்கள் முன்னோக்கி வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் மந்திரங்களை உச்சரித்தார்கள்.
“நாராயணம் பத்மபுவம் வஸிஷ்டம்
சக்திம் சத்புத்ர பராசரம் ச
வ்யாஸ்ம் சுகம்கௌட பரம்மஹாந்தம்
கோவிந்த யோகீந்த் ரமதாஸ்யசிஷ்யம்.”
குரு பரம்பரையை மனதில் வைத்து சுலோக புஷ்பாஞ்சலியைச் சொன்னார்கள். பிதாவையும் பிதாமகனையும் அவனுடைய மகனையும் வணங்கும் சடங்குகள்... பரம்பரைப் பரம்பரையாக வரும் பிறவிகளின் ஆசீர்வாதத்திற்காக நடக்கும் பிரார்த்தனை... ஜலசமாதி நடக்கும் இடத்தில் மக்கள் கூட்டமாகக் கூடியிருந்தார்கள். சடங்குகளை நேரில் பார்க்கும் ஆர்வத்துடன் அவர்கள் இருந்தார்கள்.
கேமராக்கள் இயங்கின... ஃப்ளாஷ் பல்புகள் பளிச்சிட்டன. வீடியோ கேமராக்கள் சடங்குகளைப் படம் பிடித்தன. படம் பிடித்தவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்களில் பலரும் இத்தகைய ஒரு சடங்கை வாழ்க்கையில் முதல் தடவையாகப் பார்ப்பதாக இருக்கலாம்.