ஜலசமாதி - Page 14
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6352
பாலசந்திரன் ஹரித்துவாரிலிருந்து கங்கலை நோக்கி நடந்தான். எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும், அங்கு போனால் மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
நீல நிறத்தில் விசாலமாக கங்கை நதி ஓடிக் கொண்டிருக்கும் கங்கல் ஒரு புகழ் பெற்ற புனித இடம்.
சதி, யாக நெருப்பில் குதித்து வாழ்க்கையைத் தியாகம் செய்த கங்கல் காலை நேரச் சூரியனின் கதிர்கள் பட்டு பிரகாசித்துக் கொண்டிருந்த நேரம். பல நிறங்களிலும் பல வடிவங்களிலும் இருக்கும் சிலைகள் அங்கு சிதறிக் கிடந்தன. அவற்றில் பலவும் சாளக்கிராமங்களாக இருந்தவை. அவற்றைப் பொறுக்கி பைக்குள் போட்டுக் கொண்டு போக வேண்டும் போல் அவனுக்கு இருந்தது. ‘வேண்டாம்... வேண்டாம்... தேவையில்லாத சுமையாக இவை எனக்கு ஆயிடும்...’- அவன் மனதிற்குள் கூறிக் கொண்டான்.
ஆள் அரவமற்ற ஒரு சிலைக்குக் கீழே போய் அவன் உட்கார்ந்தான். தக்ஷப்ரஜாபதியின் யாகம் நடந்த அந்த இடத்தில் ஏராளமான விலை மதிப்புள்ள பொருட்கள் பூமிக்கு அடியிலும் நதியின் அடிப்பகுதியிலும் இப்போதும் கிடக்கவே செய்கின்றன. அதைப் பார்ப்பதற்கான கண் தனக்கு இன்னும் கிடைக்கவில்லை என்பது பாலசந்திரனுக்கு நன்றாகத் தெரியும். ஜீவமுக்தி அடைந்தவர்களை மட்டும் அந்தப் பொருட்கள் கூவிக் கூவி அழைக்கின்றன. சில அதிர்ஷ்டசாலிகளுக்கு அபூர்வமாகச் சில சமயங்களில் அவற்றில் சில கிடைக்கலாம். கங்கை நீர் வற்றிப் போயிருக்கும் சதுப்புகளில் தர்ப்பைப் புற்கள் வளர்ந்திருந்தன. அவை மிகவும் உயரமாக இருந்தன.
கங்கை நதி வழிவிட்டு ஓடியதால் உண்டான மணல் திட்டுகளில் வெயில் விழுந்து கொண்டிருந்தது. மணல் பொன்னைப் போல மின்னியவாறு எல்லோரின் கவனத்தையும் ஈர்த்துக் கொண்டிருந்தது. சற்று தாண்டி வானத்தில் கழுகுகள் வட்டமிட்டுப் பறந்து கொண்டிருந்தன. சற்று அருகில் எங்கோ ஒரு பிணம் அழுகி நாறிவிட்டிருக்க வேண்டும்.
இறந்தது மிருகமா? மனிதனா?
ஆர்வம் குடி கொண்ட பார்வை அந்தப் பக்கமாகச் சென்றது, அரை மைல் தூரம் கிழக்குப் பக்கமாகச் சென்றால் ஒரு குடிசைப் பகுதி இருக்கிறது. அங்கு பல செயல்களும் நடக்கின்றன.
“அந்தப் பக்கம் திரும்பிப் பார்க்காம இருக்குறதே நல்லது. இரவிலும் பகலிலும் ஒரே மாதிரி பயப்பட வேண்டிய இடம் அது.” -யாரோ எச்சரிக்கை செய்தார்கள்.
தனிமை விரும்பிகள் சன்னியாசிகள் ஆகியோரின் இடமான கங்கலிலும் பாவக் கறைகள் படிந்திருக்குமோ?
கங்கை நதியின் ஓரம் வழியாக மீண்டும் ஹரித்துவாருக்கே அவன் திரும்பி நடந்தான்.
பரந்து விரிந்த கங்கையின், எத்தனை முறை பார்த்தாலும் போதும் என்று தோன்றாத இயற்கைக் காட்சிகளின் ஈர்ப்புச் சக்தியில் சிக்கித் தான் இழுக்கப்பட்டுக் கொண்டிருப்பதைப் போல் பாலசந்திரன் உணர்ந்தான்.
வானத்தில் இருந்த நீல நிறம் நதியில் விழுந்தபோது, நீரின் நிறமும் நீலமாக மாறியது.
மாயாதேவி கோவில், பைரவர் கோவில், மகாவிஷ்ணு ஆலயம்- இப்படி எத்தனையோ ஆலயங்கள் நதிக்கரையில் உண்டாக்கப்பட்டிருந்தன. சாதுக்களின் தர்ம சத்திரத்திற்குச் சென்றால் பிச்சை கிடைக்கும். கோடீஸ்வரர்களான தொழிலதிபர்களின் பண உதவியால் நடத்தப்படும் யோகாசிரமங்களும் ஹரித்துவாரில் இருக்கின்றன என்பதை அவன் தெரிந்து கொண்டான். சிறிது காலம் இங்கே தங்க வேண்டும். அதற்குப் பிறகு இமயமலைக்குப் போக வேண்டும். கங்கோத்ரி, யமுனோத்ரி, மானஸகங்கோத்ரி... அவன் போக விரும்பிய இடங்களின் பட்டியல் மிகவும் நீளமானது. அந்த இடங்கள் எல்லாவற்றையும் போய் பார்ப்பதற்கான ஆயுள் தனக்கு இருக்கிறதா? அதற்கேற்ற உடல் நலம் இருக்கிறதா? பணம் இருக்கிறதா? எதுவுமே கையில் இல்லாமல், எல்லாவற்றையும் இழந்து நின்று கொண்டிருக்கும் தனக்கு இந்த இமயமலை அபயம் தருமா? இறுதி ஓய்வு எங்கு இருக்கும்? -இப்படி தனக்குள் எத்தனையோ கேள்விகளை எழுப்பினான் பாலசந்திரன்.
“ஒரு நிச்சயமும் இல்லை... எது பற்றியும். வரும் ஒவ்வொன்றும் வந்ததுபோல போகவும் செய்யும்...”
மாணவனாக இருந்த காலத்தில் படித்த மகாகவி குமாரன் ஆசானின் வரிகள் பாலசந்திரனின் நாக்கு நுனியில் வந்து விளையாடின.
தலை சாய்ப்பதற்கு ஒரு இடத்தைத் தேடி பாலசந்திரன் குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருந்த ஹரித்துவாரின் கங்கை நதிக் கரைக்குத் திரும்பவும் வந்தான்.
9
கஞ்சா புகை வந்து கொண்டிருந்த இடத்தை நோக்கி மாமிசத்தைக் கண்ட நாயைப் போல இப்போதும் பாலசந்திரனின் மனம் சென்று கொண்டிருந்தது. அமைதியற்ற மனதைக் கொண்ட தனக்கு எதிராக சொல்லப்பட்ட எல்லா குற்றச்சாட்டுகளுக்கும் அடிப்படையாக இருந்தது கஞ்சாமீது தான் கொண்ட விருப்பம்தான் என்பது அவனுக்குத் தெரியாதது அல்ல. பல சந்தர்ப்பங்களிலும் அவன் அதிலிருந்து ஒதுங்கியிருக்க முயன்றிருக்கின்றான். எனினும், அதன் மீது கொண்ட வெறுப்பு நீடித்து நிற்கவில்லை. அதைப் புகைத்தால் குளிரிலிருந்து தப்பிக்கலாம் என்று அவன் நினைத்தான். நரம்புகளைக் கடுமையாகக் குளிர் தின்று கொண்டிருந்தது, பற்கள் ஒன்றோடொன்று அடித்துக் கொண்டிருந்தன. உடல் ‘கிடுகிடு’வென நடுங்கிக் கொண்டிருந்தது. தேவையான கம்பளி ஆடைகள் கைவசம் இல்லை. காலில் செருப்பு இல்லை. எந்தச் சன்னியாசியாக இருந்தாலும் அங்கு ஷூ அணிகிறார்கள். கம்பளியால் உடம்பை மூடிக் கொள்கிறார்கள். ஹரித்துவாரில் குளிர் நிறைந்த இரவுகள்...
சிறிது புகைத்தால் குளிர் இருப்பது தெரியாது. புகையை இழுத்துக் கொண்டே இருக்கலாம். அதன் மூலம் தன்னைத் தானே முழுமையாக மறந்துவிட்டு உட்கார்ந்திருக்கலாம். கடந்த காலத்தைப் பற்றிய நினைவுகளில் மூழ்கலாம். நிகழ் காலத்தின் பொருந்தாத விஷயங்களைப் பற்றி நினைக்கலாம். எதிர்காலத்தைப் பற்றி மனதில் கவலை கொள்ளலாம்.
இவ்வளவு காலமாக ஏராளமான அனுபவங்கள் உண்டானாலும், புகை பிடிக்கும் பழக்கத்திலிருந்து முழுமையாக விடுபட முடியவில்லையே! தான் உண்மையிலேயே பலவீனமானவன்தான். அப்போதும் இப்போதும். இந்தப் பலவீனங்களிலிருந்து எப்போது முழுமையான விடுதலை கிடைக்கும்? நாட்கள் கடந்து போய்க் கொண்டிருப்பது தெரியவில்லை. பன்னிரண்டு வருடங்கள் எதுவுமே செய்யாமல் இழக்கப்பட்டுவிட்டன. எந்தவொரு காரியத்தையும் அந்தக் காலத்தில் செய்யவில்லை. கவலைகள், ஏமாற்றங்கள்...
கவலைகளுக்கு அடிமையாகாமல் போயிருந்தால் அந்த நாட்கள் எவ்வளவு அருமையான நாட்களாக இருந்திருக்கும்!
தன்னிடமிருந்து நம்பிக்கையுணர்வு எப்போதிருந்து இல்லாமற் போனது?
என்ன காரணத்தால் தன்னால் ஒரு தைரியசாலியாக இருக்க முடியவில்லை? எதுவுமே செய்யாமல் இருந்தால்கூட பரவாயில்லை.
உண்மையில் தான் ஒரு கோழையாகி விட்டோமே! எல்லா விஷயங்களை விட்டும் ஒளிந்து கொண்டு ஓடுவது... நேரடியாகச் சந்திக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் சந்திக்காமல் பின்வாங்குவது... கடமைகளை மறப்பது... பொறுப்புகளைத் தட்டிக் கழித்து அலட்சியப்படுத்துவது...