Lekha Books

A+ A A-

ஜலசமாதி - Page 11

jala samaadi

“சில பேருக்கு கடவுள் பெயரைச் சொல்லி கேக்குறது அலர்ஜியான விஷயம். அப்படிப்பட்டவங்க இங்கே இப்பவும் இருக்காங்க. எங்கேயாவது ஒரு இடத்துக்குப் போயிட்டா தானே விருப்பப்படுறது வரை அந்த இடத்தை விட்டு போறதே இல்ல. நீர் கூட குடிக்காம ஒரே இடத்துல உட்கார்ந்து கொண்டிருப்பாரு. தற்கொலை செய்ய முயற்சி பண்ணினார்னு வழக்குப் பதிவு செய்த சம்பவங்கள் கூட நடந்திருக்கு. பாபா எதைப் பற்றியும் அலட்டிக்கிறது இல்ல. விஸ்வநாதர் கோவிலுக்கு முன்னால் மவுன சத்தியாக்கிரகம் அதன் உச்ச நிலையை அடைந்த போது, கோவில் அதிகாரிகள் பாபாவைப் பலவந்தமாகத் தூக்கிக் கொண்டு போனாங்க. கிட்டத்தட்ட பத்து பேர் சேர்ந்து அவரை அலாக்கா தூக்கி ஹரிச்சந்திர கட் சுடுகாட்டில் கொண்டு போய் விட்டாங்க. பாபா அதற்கு எந்தவித எதிர்ப்பையும் காட்டல. அங்கும் அவர் மவுன சத்யாகிரகத்தைத் தொடர்ந்தார். அதிகாரிகள் பாபா மீது வழக்குப் போட்டாங்க. நீதிமன்றத்துல இருந்து குற்றப்பத்திரிகை வந்தது. அதை வாங்குற நிலையில் பாபா இல்ல. வாரண்ட் அனுப்பினாங்க. அதற்கிடையில் பலவகைகளிலும் உடல் ரீதியான தொந்தரவுக்குப் பாபா ஆளானாரு. போலீஸ்காரர்கள் பாபாவைக் கைது பண்ணி, கையில விலங்கு போட்டு நீதிமன்றத்துக்குக் கொண்டு போனாங்க. இந்த விஷயங்கள் எதுவுமே தன்னைப் பாதிக்கவில்லை என்பது மாதிரி அவர் நடந்து கொண்டார். சாம-பேத- தண்டங்கள் எதுவும் பயன்படாதுன்னு தெரிந்தவுடன், போலீஸ்காரர்கள் தங்கள் முயற்சியைக் கைவிட்டுட்டாங்க. அவருக்கு எப்படி தண்டனை தருவதுன்னு தெரியாம அவர்கள் எதுவும் செய்யாம வெறுமனே விட்டுட்டாங்க. வழக்கை விசாரிச்ச நீதிபதிக்கு மூன்று நாட்கள் தூக்கமே வரல. அதோட அவர் வீட்டுல ஏகப்பட்ட பிரச்சினைகள். அவர் வீட்டுல பெரிய அளவுல திருட்டு நடந்திடுச்சு. அவரோட மனைவி குளியலறையில் வழுக்கி விழுந்து அவளுக்குக் கால் ஒடிஞ்சிடுச்சு. தீர்ப்பு சொல்ல வேண்டிய நாள்ல அவரோட ஆடையில நெருப்புப் பிடிச்சது. இப்படி விரும்பத்தகாத எத்தனையோ சம்பவங்கள் உண்டானதும் நீதிபதி பயப்பட ஆரம்பிச்சிட்டாரு. பாபாவுக்குத் துரோகம் செய்ததற்கு தண்டனையாகத்தான் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன என்று நினைச்சு அவர் அந்த நிமிடமே பாபாவின் பக்தனாக மாறிவிட்டார்.

பார்ப்பதற்கும் செய்கையிலும் அசாதாரண ஒரு மனிதராகத் தெரிந்த பாபா சாதாரண ஒர பைத்தியம் பிடிச்ச ஆள் இல்லைன்றதும், நினைச்சுப் பார்க்க முடியாத அற்புதங்கள் செய்யக்கூடிய பெரிய சித்தர் அவர் என்பதும் தெரிஞ்சவுடனே, மக்கள் அவர் பின்னாடி ஓடி வர ஆரம்பிச்சாங்க. வேறவழி இல்லாம அவர் கடைசியில பழைய இந்தக் கோவில்ல வந்து இருக்க ஆரம்பிச்சாரு. ஆள் அரவமில்லாத இந்தப் பகுதியை அந்தக் காலத்துல யாரும் திரும்பிக் கூட பார்க்குறது இல்ல. பாபாவைப் பற்றிய கதைகளைக் கேள்விப்பட்ட மக்கள் அவரைத் தேடி வர ஆரம்பிச்சாங்க,நம்ப முடியாத அந்தக் கதைகள் நாடு முழுவதும் பரவ ஆரம்பிச்சது. இப்போ பாபாவைப் பார்த்து அவர்கிட்ட ஆசீர்வாதம் வாங்க வர்றவங்களோட எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் கூடிக்கொண்டே வருது. அவரின் பக்தர்களும், பார்க்க வருபவர்களும் மட்டுமல்ல- உயர்ந்த நிலையில் இருக்கும் பலரும் இங்கே வந்து பாபாவைப் பார்த்து, திரும்பிப் போறதில் ஆத்ம திருப்தி அடைகிறார்கள்.”

நடராஜர் ஆலயத்தில் பூஜை மணி ஒலித்தது. நேரம் மாலையாகிறது. இரண்டு பேரும் தாங்கள் அமர்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்தார்கள்.

7

“கேசவபாரதியைப் பார்த்தா, மவுனி, பாபாவின் முந்தைய வாழ்க்கையைப் பற்றி நாம தெரிஞ்சுக்கலாம்.”

“யார் அந்த கேசவபாரதி?”

“காசி சமஸ்கிருத பாடசாலையின் பிரின்ஸிபாலாக இருந்து வேலையிலிருந்து ஓய்வு பெற்ற மிகப் பெரிய பண்டிதர் அவர். பிரம்மச்சாரியான கேசவபாரதியைத் தெரியாதவர்கள் காசியில் ரொம்பவும் குறைவாகத்தான் இருப்பாங்க. கேசவபாரதியின் சொந்தக்காரரான வித்யாரண்ய ஸ்ரீவாத்சவா என்ற மவுனி பாபா உத்தரபிரதேசத்திலிருக்குற அலாகாபாத் உயர்நீதிமன்றத்துல நீதிபதியா இருந்தார். தன்னுடைய மனைவியின் பேச்சைக் கேட்டு தவறாகப் புரிந்து கொண்டு குற்றவாளியான மகனைச் சரியான ஆதாரங்கள் இல்லைன்னு சொல்லி விடுதலை செய்துவிட்டு, விடுதலையான மகனின் நிரபராதியான தந்தையைத் தூக்குல போடச்சொல்லி தீர்ப்பு எழுதிய நீதிபதி.”

“மனைவியைச் சுட்டுக் கொன்றது கணவனா? இல்லை கணவனின் தந்தையா?”

“நீதிமன்றத்தில் வாதங்கள் நடைபெற்றன. இரு பக்கங்களிலும் பிரபலமான வக்கீல்கள் ஆஜரானார்கள். சம்பவம் நடைபெற்ற நாளன்று மகன் ஊரிலேயே இல்லை என்றும், மதுராபுரியில் ஏதோ ஒரு லாட்ஜில் அவன் தங்கியிருந்தான் என்றும் பொய்யான ஆதாரம் ஒன்றைக் காட்டியதால், குற்றவாளி தப்பித்துவிட்டான். வாதங்களுக்கு மேல் வாதம் நடந்தது. வசதியான அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பரம்பரைப் பரம்பரையாகவே கொல்வது, கொல்லப்படுவதுன்னு பழக்கப்பட்டவங்க. தந்தையின் பெயர் ருத்ரபிரசாத் சிங். இதற்கு முன்பும் எத்தனையோ வழக்குகளில் அவர் குற்றவாளியாக இருந்தாலும், சட்டத்தின் பார்வையில் அவர் தப்பிச்சிக்கிட்டே வந்திருக்காரு.

தூக்குல போடுறதுக்கு முன்னாடி பேசினப்போ ருத்ர பிரசாத் சொன்னாரு, ‘கடவுள் உண்மையானவரா இருந்தாருன்னா என்னைத் தூக்குல போடச் சொன்ன நீதிபதிக்குக் கட்டாயம் தண்டனை கிடைக்கும். இந்த வழக்குல நான் நிரபராதி அதே நேரத்துல இதற்கு முன்னாடி நடந்த பல வழக்குகள்லயும் நான் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டியவன்’ கொலை செய்தல், பலாத்காரம், திருட்டு... இப்படி எத்தனையோ வழக்குகள்... கடவுளின் தண்டனையும் ஆசீர்வாதமும் எப்போது கிடைக்கும்னு யாருக்கும் தெரியாது. தூக்கில் தொங்கவிடப்பட்ட பிறகு அந்தச் செய்தி அன்றைய பல பத்திரிகைகளில் வந்திருந்தது.

தன்னுடைய மனசாட்சிக்கு நம்பிக்கை உள்ளவனாகத்தான் நடக்கவில்லைன்னு நீதிபதி வித்யாரண்ய ஸ்ரீவாத்சவா மனப்பூர்வமா நினைச்சாரு. அந்த எண்ணம் அவரைப் பாடாய்ப் படுத்திக்கொண்டிருந்தது. அந்த நினைப்பு நாளாக நாளாக வளர்ந்து கொண்டே வந்தது. கடைசியில் அதுவே ஒரு நோய் மாதிரி மாறியது. அந்த நோய் முற்றி அவரை ஒரு எல்லையில கொண்டு போய்விட்டது.

பெரிய அதிகாரத்தைக் கொண்ட தன்னுடைய உயர்நீதிமன்ற நீதிபதி பதவியை அவர் ராஜினாமா செய்தார். ஏதோ ஒரு சமணர்களின் ஆசிரமத்தில் போய் ஒன்றரை ஆண்டுகள் தங்கினார். அரை நிர்வாண கோலத்துடன் இந்தியா முழுவதும் சுற்றினார். கடைசியில் காசிக்கு வந்தார். கடைசியில உடல்ல மீதமிருந்தது ஒரு பச்சை நிறக் கம்பளி மட்டும்தான்னு அதைப் பார்த்தவர்கள் சொன்னாங்க. ஆடை அணிந்திருந்தாலும் இல்லாவிட்டாலும் அவரைப் பொறுத்தவரையில் அது ஒரு பிரச்சினையே இல்லை. அந்த ஆஜானுபாகுவான பருத்த உடலைக் கொண்ட வித்யாரண்ய ஸ்ரீவாத்சாவைப் பார்க்கும் யாரும் அவரையே பார்த்துக்கொண்டு நிற்பாங்க.

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel