ஜலசமாதி - Page 17
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6352
அங்கிருந்த சூழலே திடீரென்று மாறியது. சங்கநாதம் காற்றைக் கிழித்துக்கொண்டு ஒலித்தது. சிறிது நேரம் படு அமைதி நிலவியது. குருவின் உடல் குழிக்குள் இறங்கிப் போவதைப் பார்த்து ராம்கிருபாவின் கண்கள் ஈரமாயின. அடக்கிய விம்மல்... அழ ஆரம்பித்த அருமைச் சீடனை யாரோ அமைதிப்படுத்தினார்கள். கவனிக்கப்படாமலே போன ஒரு அற்புத மனிதன்... நேற்றுவரை நம்முடன் வாழ்ந்த ஒரு சாதாரண மனிதன்.
எல்லாவற்றையும் வேண்டாமென்று விட்டெறிந்து விட்டு வந்த ஒரு துறவியாக அவன் இருந்தான்.
“ஓம் அஸதோ மா ஸத்கமய
தமஸோ மா ஜ்யோதிர்கமய
ம்ருத்யோர் மா அம்ருதம்கமய”
வேத மந்திரங்கள்... பிரார்த்தனைகள்...
குழியில் இறங்கிக் கொண்டிருக்கும் இறந்த உடலுக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. தைலாபிஷேகம், நீர் அபிஷேகம், மலர் அபிஷேகம், மலர்களை வைத்துச் செய்யப்படும் மந்திர அர்ச்சனை...
“யத்ஜாக்ரதோ தூரம்
இதைதி தைலம்
தத் ஸுப்தஸ்யததைவேதி தூரம்கமம்”
பூக்களைக் கொண்டு செய்யப்படும் அர்ச்சனை... துளசி இதழ்கள் இறந்த உடலை மூடிக் கொண்டிருந்தன.
கற்பூரமும் வெட்டிவேரும் சேர்ந்து உண்டாக்கிய வாசனை அந்தப் பகுதியெங்கும் கமழ்ந்தது.
சடங்குகள் மிகவும் எளிமையாக இருந்தன. கலசங்களில் நிறைக்கப்பட்ட கங்கை நீர் பரமாத்மாவின் தலையில் வந்து விழுந்து கொண்டிருந்தது.
“மன: சிவ ஸங்கல்ப மஸ்து”
நவதானியங்களைச் சிதறவிட்டார்கள்.
புத்தாடை கொண்டு மூடப்பட்ட பாலானந்தனின் உடலை கங்கையில் அடக்கம் செய்து கொண்டிருந்தார்கள். பாலானந்தன் எல்லோரின் குருவாகவும் ஆகப்போகிறான்.
“ஓம் தர்மாய ஸ்வாஹா
ஓம் அதர்மாய ஸ்வாஹா
ஓம் ஸர்வ பூதேப்ய: ஸ்வாஹா”
பரமாத்மாவுடன் இணையப் போகும் மனிதனுக்கான மந்திரங்கள்,பிரார்த்தனைகள்...
மந்திரங்களால் புனிதமாக்கப்படும் உயிருக்கு முக்தி...
அடக்கம் செய்யப்படும் உயிரின் புகழ் மேலும் மேலும் பெருகட்டும். ஜடப் பொருளான பஞ்ச பூதங்களால் படைக்கப்பட்ட உடல் நல்லதை நோக்கிச் செல்லட்டும்.
கருமேகங்கள் திரண்டிருந்த வானம் தெளிவானது.
வானத்தில் உதித்துக் கொண்டிருந்த சூரியனின் தரிசனம் அங்கு கூடியிருந்த மக்களுக்கு உற்சாகத்தை உண்டாக்கியது. கங்கையின் நீரோட்டத்தை தற்காலிகமாகத் தடுத்து நிறுத்தியிருந்தார்கள். சுவருக்குள் சிக்கிக் கொண்ட பறவை... சிறிது நேரம் இறந்த உடல் இப்போதிருக்கும் இடத்திலேயே இருக்கும். சில நேரங்களில் நீரோட்டத்தின் வேகத்தில் காணாமல் போனாலும் போகலாம்.
‘ஓம்! ஸவாஹா’மந்திரங்கள் அங்கேயே நின்று கொண்டிருக்கவில்லை.
தோல், சதை, குருதி, கொழுப்பு, எலும்பு, நாடி, நரம்புகள், சாம்பல்- இவை எல்லாமே ஒளிமயமான கடவுளுடன் கலந்து பாவமில்லாமல் இருக்கட்டும்! சன்னியாசியின் பூத உடல் இருந்த புண்ணிய பூமி வணங்க வேண்டிய ஆலயமாக மாறட்டும்!
மண், நீர், நெருப்பு, காற்று, வானம் என்ற ஐம்பெரும் பூதங்களுடன் இணையும்படி ஆகட்டும்! சத்தம், ஸ்பரிசம், வடிவம், ரசம், வாசனை- இவை எல்லாம் புனிதத்தன்மையுடன் நீரில் கலக்கட்டும்.
மனம், வாக்கு, உடல் - புண்ணிய நிலையுடன் மனிதர்கள் மத்தியில் நிலைபெற்று நிற்கட்டும். ஒளிரும் வடிவத்துடன் மின்னிக் கொண்டிருக்கட்டும். ஹோமப் பொருட்களை இரு கைகளிலும் வைத்துக் கொண்டு வானத்தை நோக்கி உயர்த்தினார்கள். பூர்ணாஹுதி சமர்ப்பண பவேன மந்திரத்தைச் சொன்னார்கள்.
“ஓம் பூர்ணமதே: பூர்ணமிதம் பூர்ணால் பூர்ணமுதச்யதே
பூர்ணஸ்ய பூர்ணமாதாய, பூர்ண மேவாவசிஷ்யதே”
ஒவ்வொரு வார்த்தையிலும் சுவாசத்திலுமுள்ள உச்சரிப்புடன் சடங்குகள் நடந்து முடிந்தன.
திடீரென்று சூரியன் கரிய மேகங்களால் மூடப்பட்டது.
சுற்றிலும் இருட்டு. ஜலசமாதியில் பங்கெடுத்தவர்கள் ஒவ்வொருவராகப் பிரிந்து போனார்கள். கங்கலைச் சுற்றி மழைத் துளிகள் வந்து விழுந்து கொண்டிருந்தன. மேகம் கர்ஜித்தது. கண்கள் குருடாகிற மாதிரி இடி, மின்னல்கள் உண்டாயின. தொடர்ந்து இடிச்சத்தம்... எந்த நிமிடமும் பெரிய அளவில் மழை பெய்யலாம்.
பரந்த வெளியில் பலமாகக் காற்று வீசியது. கங்கைக் கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்தது. பெரிய ஓட்டத்திற்கு ஆரம்பம் குறிப்பது மாதிரி நீர் வளையங்கள் அலைகளாக வடிவம் எடுப்பதற்கு முன்பாக எல்லோரும் அந்த இடத்தை விட்டு நீங்கினார்கள். சிதறிய மலர்களையும் தர்ப்பைப் புல்லையும் பார்த்தவாறு கற்கள் மீது அமர்ந்துகொண்டு காகங்கள் நடனமாடின. நாராயணக்கிளிகள் “கீச் கீச்” என சத்தம் போட்டுக் கொண்டிருந்தன.