Lekha Books

A+ A A-

ஜலசமாதி - Page 10

jala samaadi

சுயநலம் என்ற குணத்தைக் கொண்ட ஒரு மனிதன் இந்த உலகத்தில் செய்யும் கெட்ட செயல்களுக்கு முடிவு என்று எதுவும் இருக்கிறதா என்ன?

கடவுள் நம்பிக்கை குறைந்து போனதன் காரணமாகத்தான் அவன் பாதை மாறிப் போய் விட்டானா? சூழ்நிலைகளின் ஆக்கிரமிப்பு, மோசமான நண்பர்கள், தாய்-தந்தை இருவரின் அறிவுரைகளையும் உதாசீனப்படுத்தியது, அவற்றை அலட்சியமாக எடுத்துக்கொண்டது… தான் செய்தது அனைத்தும் தப்பு என்று அவன் சொல்ல வேண்டிய நிலை வந்தது. கடைசியில் அவள் அவனை ஏமாற்றினாள். அவன் தோற்றுப்போனான். அவள் வெற்றி பெற்று விட்டாள். பாலசந்திரன் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான்.

“எதையாவது சாப்பிட்டுவிட்டு நாம இந்த இடத்தைவிட்டு கிளம்பலாம்.”

அவர்கள் நீண்ட தூரம் நடந்தார்கள்.

மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் பயணம்.

திலபாண்டேஸ்வர மகாதேவர் ஆலயத்தையும் தசாஸ்வமேதேஸ்வரர் ஆலயத்தையும் அவர்கள் போய் பார்த்தார்கள். கால பைரவாவிற்குச் சென்றபோது, அங்கு நாய்களின் கூட்டத்தைப் பார்த்தார்கள். பைரவனின் வேட்டை மிருகங்கள்… இல்லாவிட்டால், வாகனங்களோ?

கெட்ட நேரங்களைச் சரி செய்ய வேண்டுமென்றால் கால பைரவனை வணங்க வேண்டும். நாய்களுக்கு உணவு தந்தால் பித்ருக்கள் சந்தோஷப்படுவார்களாம்.

பித்ருக்கள் ஆசீர்வதித்தால் எல்லா விஷயங்களும் சரியாகி விடும். அதுவும் ஒரு நம்பிக்கைதான். அங்கு இறந்தவர்களுக்கு ஹோமம் நடத்தினால், விஸ்வநாதர் அருள் செய்வார் என்பது எல்லோரும் நம்பும் ஒரு விஷயம்.

இன்னும் சிறிது தூரம் நடந்து சென்றால் பழமையான ஒரு கோவிலின் கோபுர வாசலில் ஒரு சக்தி படைத்த சித்தர் அமர்ந்திருப்பதைப் பார்க்கலாம். மவுனி பாபா என்று அவர் எல்லோராலும் அழைக்கப்படுகிறார். அவர் முன்பு வித்யாரண்யா ஸ்ரீவாஸ்தவ என்று அழைக்கப்பட்டவர். பிராமண குலத்தைச் சேர்ந்தவர்.

இவ்வளவு தூரம் வந்துவிட்ட பிறகு அவரையும் பார்த்துவிடுவோம் என்ற முடிவுக்கு அவர்கள் வந்துவிட்டார்கள். பாபாவைப் பற்றி எத்தனையோ கதைகள் காசியிலும் காசிக்கு வெளியே இருக்கும் இடங்களிலும் உலாவிக் கொண்டிருந்தன. சில கதைகள் வேண்டுமென்றே கூட உருவாக்கப்பட்டிருக்கலாம்.

அவருக்கு எதன்மீதும் பற்று கிடையாது. எல்லாவற்றையும் விட்டெறிந்து விட்டுவந்த பற்றற்ற மனிதராக அவர் இருந்தார். திகம்பரராக அவர் இருந்தார். உடம்பு முழுவதும் ரோமங்கள் அடர்ந்து காணப்பட்டன. காடுபோல ரோமங்கள் வளர்ந்திருந்தன. உறுதியான தடித்த சாரீரம். ஆஜானுபாகுவான தோற்றத்தைக் கொண்டிருந்த அந்த மனிதர் பெரும்பாலான நேரமும் கண்களை மூடி அமர்ந்து கொண்டு மவுனத்தில் இருந்தார்.

சில நேரங்களில் கண்களைத் திறந்து தன்னைத் தேடி வந்திருப்பவர்களை அவர் பார்ப்பார். யாரையும் அவர் எளிதில் ஆசீர்வதிப்பதில்லை. சில வேளைகளில் எதிர்பாராத சூழ்நிலைகளில் அபூர்வமாகச் சிலருக்கு அவரின் ஆசீர்வாதங்கள் கிடைக்கவும் செய்திருக்கின்றன. மவுனிபாபாவைப் பார்ப்பதற்காக நூற்றுக்கணக்கான மனிதர்கள் தினமும் அங்கு வந்து கொண்டிருந்தார்கள். சில நாட்களில் ஏராளமான ஆட்கள் வரிசை வரிசையாக அவரைப் பார்ப்பதற்காக நின்று கொண்டிருப்பார்கள். யார் அங்கு வந்தாலும் போனாலும் மவுனிபாபா அவர்களைக் கவனிப்பதேயில்லை. சிதிலமடைந்து போயிருந்த அந்தக் கோவிலில் எல்லோரையும் ஈர்க்கக் கூடியது அங்கிருக்கும் சிலைகளோ பூசாரிகளோ அல்ல. கோவிலில் இருக்கும் நடராஜன்தான் எல்லோரையும் கவர்ந்திழுக்கக் கூடிய ஒரே அம்சம். சாட்சாத் நடராஜன்தான் பாபாவாக அவதரித்திருக்கிறார் என்று ஆட்கள் நம்புகிறார்கள்.

பாபாவைப் பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது உண்மையிலேயே ஒரு அதிர்ஷ்டமான விஷயம் என்று பாலசந்திரன் நினைத்தான். அவரைப் பார்த்ததும் பாலசந்திரன் வணங்கினான். கண்களை மூடியிருந்த பாபா அதைப் பார்த்திருக்க வழியில்லை. அச்சுதானந்தன் வணங்காமல் ஒரு ஓரத்தில் நின்றிருந்தார்.

ஆட்கள் சிலர் சுற்றிலும் நின்றிருந்தார்கள். ஆண்களும் பெண்களும் அடங்கிய ஒரு கூட்டம் அங்கு நின்றுகொண்டு கீர்த்தனைகளைப் பாடிக் கொண்டிருந்தார்கள்.

மவுனிபாபா தன் கண்களைத் திறப்பாரா?

கண்களைத் திறப்பார் - வந்திருப்பவர் அதிர்ஷ்டசாலியாக இருந்தால். அங்கு சில நிமிடங்கள் அவர்கள் இருந்தார்கள். காவி ஆடைகள் அணிந்த சன்னியாசிகள் கோவிலைச் சுற்றியிருந்த இடங்களில் துணியை விரித்துப் படுத்திருந்தார்கள். அங்கு அவர்கள் சந்தோஷத்தை அனுபவித்தார்கள். உணவு, தங்குமிடம் எல்லாமே அங்கு இலவசமாகக் கிடைத்தன. அதற்குப் பிறகு ஒரு மனிதன் வாழ்வதற்கு வேறு என்ன வேண்டும்?

பாலசந்திரன் பல விஷயங்களைப் பற்றியும் சிந்தித்துக் கொண்டிருந்தான். கவனத்தைத் திசை திருப்புவது மாதிரியான உரையாடல்கள் நடந்து கொண்டுதானிருந்தன. யோகத்தைப் பற்றியும், போகத்தைப் பற்றியும் அங்கு விவாதித்துக் கொண்டிருந்தார்கள். கடவுளின் சன்னிதானங்களில் கூட மனிதர்கள் விரும்புவது தங்களின் சுகத்தைத்தான். அந்த அளவிற்கு அவர் சுயநலவாதிகளாக இருந்தார்கள்.

தானும் சுயநலவாதிதானே என்று பாலசந்திரன் நினைத்தான். அச்சுதானந்தனையும் சுயநலம் விடவில்லை. சுயநலம் என்று ஒன்று இல்லாமலிருந்தால் இப்படி அலைந்து திரிய வேண்டிய அவசியமே நேர்ந்திருக்காதே! தன்னுடைய சொந்த விஷயத்தைத் தவிர பெரிதாக அவனுக்கு வேறு எதுவும் தோன்றவில்லை. பணமும் புகழும் இருந்தாலும் எதற்காக அவன் இப்படிக் கிளம்பி வரவேண்டும்? தன்னைப் பற்றிய சிந்தனைதான் அவனுக்குள் முழுமையாக ஆக்கிரமித்திருந்தது.

சரணாகதி அடைவதுதான் கடவுள் பக்தி. புலன்களைக் கட்டுப்படுத்த முடியாதவன், ஆசைகளைக் கடக்காதவன் எந்தக் காலத்திலும் சன்னியாசியாக ஆக முடியாது. யாரோ ஒரு ஆள் எழுதி வைத்த வாசகத்தை சுவரில் தொங்க விடப்பட்டிருந்த பலகையில் அச்சுதானந்தன் படித்தான். தேவநாகரியில் அந்த வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தன. அதன்

அர்த்தத்தை விளக்க முயற்சி செய்த அச்சுதானந்தனைத் தேவையில்லை என்று கையால் விலக்கினான் பாலசந்திரன்.

“பாபாவைப் பற்றித்தான் நாம தெரிந்து கொள்ளணும். அவர் யார்? எதற்காக இங்கு அவர் வந்தார்?” அச்சுதானந்தன் பாபாவைப் பற்றிய கதைகளை ஒவ்வொன்றாகக் கூற ஆரம்பித்தார். பாபாவைப் பற்றி மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டவனில்லை. மாறாகத் தானே அவரைக் கண்டறிந்தவன் என்ற மிடுக்குடன் அவர் அந்தக் கதைகளைக் கூறினார்.

“காசிக்கு வந்த காலத்துல பைத்தியக்காரனைப் போல கங்கை நதிக்கரையிலயும் கோவில் வாசல்லயும் ஈரக் கோணியை உடுத்திக்கொண்டு தலைமுடியை ஜடை மாதிரி விட்டுக் கொண்டு அலைஞ்சு திரிஞ்சதைப் பார்த்தவங்க இங்கேயே நிறையபேர் இருக்காங்க. அப்படிப் பார்த்தவங்கள்ல நானும் ஒருத்தன். பாபா மேல போலீஸ்காரர்கள் எத்தனையோ வழக்குகள் பதிவு செஞ்சாங்க. எத்தனையோ குற்றச்சாட்டுகள் அவர் பேர்ல பதிவாச்சு. எல்லாம் சாதாரண வழக்குகள்...”

“அந்தக் காலத்துல அவர் யாரையாவது தொந்தரவு செய்திருக்கிறாரா?”

“இல்ல... உரத்த குரல்ல கடவுள் பெயரைச் சொல்லுறதைத் தவிர, வேற எந்தத் தொந்தரவும் அவரால யாருக்கும் இல்ல.”

“சத்தம் போட்டு கடவுள் பெயரைச் சொல்றது தொந்தரவா?”

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel