ஜலசமாதி - Page 7
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6352
பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக அங்கு செய்யப்படும் விவேகமற்ற செயல்கள், அக்கிரமங்கள் ஆகியவற்றைப் பற்றி அச்சுதானந்தன் சொன்ன குற்றச்சாட்டுகள் தெளிவான ஒரு விமர்சனமாக இருந்தது. சன்னியாசி கோலம் பூண்ட பிறகும் அவருடைய விமர்சனத்தில் கூர்மை சிறிதும் குறையவில்லை. அச்சுதானந்த சுவாமி சில நேரங்களில் தன்னைத் தானே புகழ்ந்து கொண்டார். தான் ஒரு சாதாரண காவி உடை அணிந்த மனிதன் அல்லவென்றும் அச்சுதானந்த மகாராஜ் என்ற மரியாதைக்குரிய பெயரைப் பெற்ற பெரிய ஒரு மனிதர் என்றும் தன்னைக் காட்டிக் கொள்ள அவர் பெரிதும் முயற்சித்தார்.
காசி விசாலாட்சி கோவிலில் அவர்கள் அமைதியாகச் சிறிது நேரம் உட்கார்ந்திருந்தார்கள். ஹுக்காவில் மருந்து நிறைத்து புகையை பாலசந்திரன் ஊதினான். சுகமாக அங்கேயே படுத்து உறங்கவும் செய்தார்கள்.
அடுத்த நாள் காலையில் மீண்டும் கங்கையில் இறங்கிக் குளித்தார்கள். கோமுகியில் நீர் மொண்டு சுயம்பு விக்கிரகத்தின் மீது அதை ஊற்றி அபிஷேகம் செய்தார்கள். எங்கிருந்தாவது ஒரு கமண்டலத்தைப் பெற வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
“சன்னியாச தீட்சை எடுத்து முடித்த பிறகுதான் புலித்தோல், கமண்டலம், யோகதண்டம் ஆகியவற்றை ஒருவர் வச்சுக்க முடியும். வயிற்றுப் பிழைப்பிற்கு அது ரொம்பவும் பிரயோஜனமா இருக்கும்” - அச்சுதானந்த சுவாமியின் கருத்தைக் கேட்டபோது, தன்னை அறியாமல் பாலசந்திரன் சிரித்து விட்டான்.
“அகமும் புறமும் ஒரே மாதிரி சுத்தமா இருக்குதுன்னு தோணுற நிமிடத்தில் யக்ஞ தீட்சை எடுத்துக்குவேன். அதுவரை இப்படி நடந்து திரியிறதுலதான் எனக்கு விருப்பம்.”
“பிறகு எதற்கு காவி வேடம்? மற்றவர்கள் தப்பா நினைக்கவா?”
“காவி ஆடை அணிபவர்கள் அனைவரும் சன்னியாசிகள் என்று மற்றவர்கள் நினைச்சா நினைச்சிக்கட்டும். நான் இன்னும் சன்னியாசி ஆகல.”
“சன்னியாசிகள் கஞ்சா நிரப்பப்பட்ட ஹுக்கா இழுக்கலாமா? மீன்களையும், மாமிசத்தையும் சாப்பிடக்கூடிய சன்னியாசிகளும் இருக்கத்தானே செய்கிறார்கள்? மது அருந்திவிட்டு வாய்க்கு வந்ததையெல்லாம் உளறிக் கொண்டிருக்கும் மனிதர்களைப் பார்த்திருப்பீங்கள்ல? அணிந்திருக்கும் காவி ஆடையை அவிழ்த்து ஒரு மூலையில் வச்சிட்டு, பெண்ணுடன் சல்லாபம் செய்ய நினைக்கும் காவி ஆடை அணிந்த மனிதர்களும் இருக்காங்கறதை ஞாபகத்துல வச்சுக்கங்க.” அதைச் சொல்லும்போது அச்சுதானந்தனுக்கே என்னவோ போல் இருந்தது. பாலசந்திரனுக்கு அதுவரை தெரியாத, கேள்விப்பட்டிராத, அனுபவித்திராத, பார்த்திராத எத்தனையோ உண்மைகளை அவர் வெளியே காட்டினார்.
“அச்சுதானந்த மகாராஜ், என்கிட்ட இதையெல்லாம் ஏன் நீங்க சொல்லணும்? நான் ஆசை வலைகளில் விழப்போவது இல்லை. ஒரு பெண்ணின் நிர்வாண உடலைப் பார்க்கணும்னு எனக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லை. நான் எந்தப் பெண்ணைக் கண்டாலும் ஒரு ஓரத்துல போய் ஒதுங்கி நிற்கக் கூடியவன். இளம் பெண்களை மட்டுமல்ல, நடுத்தர வயது கொண்ட பெண்களைப் பார்த்துக்கூட நான் பயப்படுறேன்.”
“கிழவிகளைப் பார்த்துமா?”
“அவங்களைப் பார்த்தும் நான் பயப்படுறேன்.”
“அப்படின்னா உங்களுக்குள்ளே ஒரு நோயாளி மறைந்திருக்கான்றது நல்லாவே தெரியுது. அந்த நோயாளியைத்தான் உள்ளேயிருந்து முதல்ல அடிச்சு வெளியே விரட்டணும்.”
“போகிகளுக்கும் தியாகிகளுக்குமிடையே உள்ள வித்தியாசம் உங்களுக்குத் தெரியாதது இல்ல. நான் அதை விளக்கிச் சொல்ல விரும்பல. மேம்போக்கான விஷயங்களைப் பார்த்து யாரையும் மதிப்பிடக்கூடாது...”
விவாதத்திலிருந்து சற்று ஒதுங்கி நின்றுகொண்டு அச்சுதானந்தன் புகை பிடிப்பதில் உள்ள கெடுதல்களைப் பற்றி கூறத் தொடங்கினார்.
“புகை பிடிக்கிறதுக்குப் பதிலா ஆம்லெட் சாப்பிடலாம்ல? அது உடல் நலத்தைக் கொஞ்சமும் கெடுக்காது.”
“சன்னியாசிகளுக்கு ஏற்ற உணவல்ல ஆம்லெட். சைவ உணவைத்தான் அவங்க சாப்பிடணும். நான் தாவர உணவுகளைத்தான் சாப்பிடணும்ன்றதுல உறுதியா இருக்கேன். அப்படின்னா ஹுக்கா இழுத்து, அதை நான் பின்பகுதி மூலமா வெளியே விட்டுடுவேன். இது உடல் நலத்துக்கு நல்லது இல்லைன்னு தெரியாம இல்ல. இது ஒரு பழைய பழக்கம். ஏதாவது சொல்லணும்னு தோணுறப்போ ரெண்டு இழுப்பு இழுத்தால், இது ஒரு சுகமான அனுபவம். எழுதுறப்போதான் இதை அதிகமா நான் புகைப்பேன். இப்போ பேச்சும் எழுத்தும் இல்லாம இருக்குறப்போ புகை பிடிக்கிறதுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கணும்” - பாலசந்திரன் தன்னுடைய கருத்து எதையும் மறைத்து வைக்கவில்லை. எல்லாவற்றையும் மனம் திறந்து கூறுவதுதான் நல்லது என்று அவன் மனதில் நினைத்திருப்பானோ என்னவோ?
“அச்சுதானந்தஜீ, நீங்க எப்போவாவது சரஸ் பயன்படுத்திப் பார்த்திருக்கீங்களா?”
சிறிதும் எதிர்பார்க்காமல் அப்படியொரு கேள்வியை பாலசந்திரன் கேட்டதும், அச்சுதானந்தன் பரிதாபமாக அவனுடைய முகத்தையே பார்த்தவாறு உட்கார்ந்திருந்தார். “நான் ஒரு புனிதமான மனிதன் ஒண்ணுமில்லைன்னு ஏற்கெனவே சொல்லியிருக்கேன்ல! பிறகு எதுக்கு சம்பந்தமே இல்லாம இப்படியொரு கேள்வியைக் கேட்கணும்?”
அச்சுதானந்தனிடமிருந்து பல விஷயங்களையும் தெரிந்துகொள்ள பாலானந்தன் முயற்சி செய்தான். நண்பர்களாக ஆகும்போது எதையும் மறைத்து வைக்கக் கூடாது. மறைத்து வைத்து பேசக் கூடியவன் உண்மையில் நண்பனே அல்ல.
சன்னியாசிகளுக்கிடையில் நண்பர்கள் உண்டா? தங்களின் கடந்த கால அனுபவங்களை அவர்கள் வெளிப்படையாகக் கூறுவார்களா? தங்களைத் தாங்களே ஆராய்ந்து பார்ப்பார்களா? உண்மையைத் தேடிப் போய் திரும்பி வந்தவர்களுக்கிடையில் கோபப்படுவது மாதிரியான சம்பவங்கள் இல்லையா? ஒருவரையொருவர் கெடுக்கும் எண்ணம் அவர்களுக்கிடையிலும் இருக்கிறதா?
கேள்விகளும் பதில்களும் சந்தேகங்களுமாக அவர்கள் ஒரே திசையில் சிறிது காலம் ஒன்றாக வாழ்ந்தார்கள்.
5
“புண்ணியமும், பழமையும் கொண்ட நகரமான காசியின் வரலாறு தெரியுமா? பழைய காசியின் இன்றைய வாரணாசியின் வரலாறு?”
“நான் கொஞ்ச நாட்கள் ஆசிரியராக வேலை பார்த்திருக்கிறேன். வரலாறு படிக்கவும் வரலாற்றைக் கற்றுத் தரவும் எனக்குச் சந்தர்ப்பங்கள் கிடைத்திருக்கின்றன.”
“காசி நகரத்தின் சரித்திரத்தையும், பழமையையும், பெருமையையும் புரிந்து கொண்டால் எந்தக் காலத்திலும் இந்த இடத்தை வெறுக்கவே முடியாது. புனித நதியான கங்கை விஸ்வநாதரின் பாதக் கமலங்களைத் தழுவிக் கொண்டுதான் ஓடிக்கொண்டிருக்கு. எத்தனையோ பெரிய ஆத்மாக்கள், கங்கைக் கரையில் அமர்ந்து தவம் செய்திருக்காங்க. அவர்களில் பலரும் இப்போதும் மகா ஆத்மாக்களாக மக்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டுதான் இருக்காங்க...”
“மிகப் பெரிய ஆத்மாக்கள் என்று கூறுவது மாதிரி யாராவது அந்தக் கூட்டத்துல இருக்காங்களா? இங்கே இருக்குற ஆசிரமங்களில் சாந்தி, சமாதானம் ஆகியவற்றின் உறைவிடமாக இருப்பவை எத்தனை? கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தெரியல. அது ஒரு வரலாற்றுக் கதையாக நிலைபெற்று நிற்கும் என்ற ஆர்வத்தால் அதைப் பற்றி மேலும் விளக்கமாகச் சொல்ல நான் விரும்பல.”