ஜலசமாதி - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6352
தன்னைப் பற்றி தெரிந்தவர்கள் இப்போது வெகு சிலரே இருக்கிறார்கள் என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். பி.கே.பி. தான் பாலானந்தன் என்ற உண்மை யாருக்கும் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதுதான் அவனுடைய விருப்பம். தான் இப்போது காவி ஆடை அணிந்திருக்கும் ஒரு ஆள் என்பதுதான் அவனுக்குத் தெரியும். அவன் தன்னைச் சன்னியாசி என்று நினைப்பதில்லை. அதற்கு இனியும் பல படிகளைத் தாண்ட வேண்டும். முன்பு அவன் பலவாகவும் இருந்தான். அந்தக் கதைகள் எதையும் இப்போது யாரும் தெரிய ஆர்வம் காட்டப் போவதில்லை. ரகசியங்கள் முழுவதையும் அவன் காவி ஆடைகளால் மூடியிருக்கிறான். தலையை இப்போதுகூட மொட்டை அடிக்கவில்லை. ஆங்காங்கே நரையோடி வளர்ந்திருக்கும் தாடியை நீக்கவும் இல்லை. பழைய பி.கே.பி.யை யாரும் இனிமேல் பார்க்கக் கூடாது. தனக்கு இனிமேல் இந்த உலகத்தில் எந்த நினைவுச் சின்னமும் எழுப்பப்படப் போவதில்லை என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். அவன் பலருக்கும் வழிவிட்டு பயணம் செய்தவன். கிட்டத்தட்ட இருபத்தைந்து நூல்கள் எழுதிப் புகழை நோக்கிப் போய்க் கொண்டிருப்பதற் கிடையில்தான் இப்படியொரு மாற்றம் உண்டானது. திருமணம் செய்து நிறைய குழந்தைகளைப் பெற்று அவன் வாழ்ந்திருக்க வேண்டியவன். ஆனால் விதி வேறொரு வழியைச் சுட்டிக் காட்டியது.
பி.கே.பி. எழுதிய நூல்களெல்லாம் காலப்போக்கில் மறக்கப்பட்டு மக்களால் தள்ளிவிடப்பட்டு விட்டன. நூலாசிரியர் இல்லாத காலத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிற மாதிரியான நூல்கள் எதையும் பாலானந்தயோகி எழுதவில்லை. இன்று முதல் பாலானந்த யோகிக்கே மதிப்பு. பி.கே.பி. என்றழைக்கப்படும் புத்தன்களத்தில் பாலசந்திரமேனன் மக்கள் கூட்டத்திலிருந்து நிரந்தரமாகக் காணாமல் போய் விடுகிறான். இனி இருக்கக் கூடிய நாட்களில் அவன் ஏதாவது எழுதுவானா என்ற விஷயம் சந்தேகத்திற்கிடமானதுதான். சில நேரங்களில் எழுதக் கூடாது என்றில்லை. சன்னியாசியும் தன்னுடைய கடந்த காலக் கதையை ஏதாவதொரு புனைபெயரில் எழுதக்கூடாது என்றில்லை. ஒரே பிறவியில் இரண்டு மறுபட்ட மனநிலைகளில், தளங்களில் செயல்படுவது என்பது அபூர்வமான விஷயமொன்றுமல்ல.
அவன் இப்போது பாலானந்த சுவாமி. காவி ஆடை அணிந்தவர்களுக்கு மத்தியில் அறிந்துகொள்வதற்காக வைக்கப்பட்ட பெயர் அது. ஊரும் பெயரும் இல்லாத சுவாமிமார்களுக்கு மத்தியில் அவன் ஒரு ஆள் அவ்வளவுதான்.
கடவுளின் தூதனாகவோ பரமஹம்ஸராகவோ அவன் ஆகப்போவதில்லை.
உலக விஷயங்களை அப்படியே வேண்டாம் என்று தூக்கியெறிந்துவிட்டு, சன்னியாசத்தை ஏற்றுக் கொண்ட ‘பரிவ்ராஜகன்’ என்றோ, மனதை முழுமையாக அடக்கி அதில் வெற்றி பெற்ற ‘யதி’ என்றோ தான் அறியப்படுவோம் என்ற நம்பிக்கையும் அவனுக்கு இல்லை.
முந்தைய வாழ்க்கையில் கிடைத்த பாவக்கறை படிந்த வாழ்க்கைச் சுமையை எங்காவது கொண்டுபோய் மூழ்கச் செய்ய வேண்டும். அது கங்கை நதியாக இருந்தால் மிகவும் நல்லது. ஏழு நதிகளில் ஏதாவதொரு நதியில் அது நடந்தாலும் அவனுக்குப் போதும்தான்.
யமுனை, சரஸ்வதி, சிந்து, சரயு, கோமதி, பாகீரதி, எத்தனையோ புண்ணிய நதிகள் இந்த நாட்டின் வழியாக வற்றாமல் ஓடிக் கொண்டுதானே இருக்கின்றன! அவற்றில் ஏதாவதொன்றில் ஜலசமாதி அடைய வேண்டும். அப்படி அடைந்தால் மோட்சம் கிடைக்கும்.
இனி இந்த வாழ்க்கை அதிக நாட்கள் இருக்கப் போவதில்லை. எவ்வளவு நீண்ட ஆயுளைக் கொண்ட மனிதனாக இருந்தாலும் சரி. இதுவரை வாழ்ந்த காலம் அளவிற்கு இனி அவன் வாழப் போவதில்லை.
ஸ்வரூபானந்த சுவாமி இந்த உண்மையை அவனுக்குக் கூறினார். அவரை அவன் ஹரித்துவாரில் சந்தித்தான். சன்னியாசிகளின், சன்னியாசினிகளின் உலகம்! ஏராளமான மடங்கள், பாதைகள், ஆசிரமங்கள்.
ஸ்ரீராமானந்தா ஆசிரமத்தின் மடாதிபதி அவர். அவர் ஒரு மலையாளி என்பதும், சொந்த ஊர் பாலக்காடு என்பதும் தெரிந்தபோது அவனுக்கு மகிழ்ச்சி தோன்றியது. அது நெருக்கமாகப் பழக உதவியது.
சின்மயானந்தா சுவாமியும் அபேதானந்தனும் புருஷோத்தமானந்தாவும் ஒரு காலத்தில் அங்கு வந்து தங்கியிருந்தவர்கள்தானாம்!
ரிஷிகேஷிற்குச் செல்ல வேண்டும். வானப்ரஸ்த வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் பிரம்மச்சாரிகளின் இடம் அது. பயற்சி அடைய வேண்டியிருக்கிறது. யம, தமநாதிகளைப் பற்றிய அறிவைப் பெற வேண்டும். பிரம்மச்சரியத்தைப் பற்றிய மகத்துவத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். தியானத்தின் மூலமாக உயர் நிலையை அடைய வேண்டும். தியானம் செய்து கொண்டிருக்கும்போது தோன்றும் எண்ணங்களும் உணர்வுகளும் ஆரம்பத்தில் சில கஷ்டங்களைத் தரும். அவற்றை முழுமையாக இல்லாமல் செய்ய வேண்டும். தடைகள் உண்டாகும். அவற்றை கடக்க வேண்டும்.
மனஸா-வாசா-கர்மணா ஒரு உயிரையும் துன்புறுத்தக் கூடாது. அறிந்துகொண்டே ஒரு தவறிலும் போய் தானே விழக்கூடாது. பணிவுள்ளவனாக இருக்கவேண்டும். தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். கட்டுப்படுத்தி கட்டுப்படுத்தி ஆசைகளை முடிந்தவரைக்கும் விலகி நிற்கச் செய்ய வேண்டும். தன்னைத் தானே அறிந்துகொள்ள வேண்டும். தன்னைத்தானே மறக்க வேண்டும். அப்போது எல்லாம் சரியாக இருக்கும். இதெல்லாம் நடைமுறை வாழ்க்கையில் சாத்தியமா? சாத்தியமாகும். அது குறித்து சந்தேகப்பட வேண்டிய அவசியமே இல்லை. ஸ்வரூபானந்த சுவாமி பல படிகளைத் தாண்டியவர். அதே நேரத்தில் அச்சுதானந்தன் அதற்கு நேர் எதிரானவர்.
2
உத்தராயணத்திற்கும தட்சிணாயணத்திற்குமிடையில் இருக்கும் இடைவெளி எவ்வளவு என்பது அவனுக்குப் புரிந்தது. ஸ்வரூபானந்த சுவாமியும் அச்சுதானந்த சுவாமியும் சன்னியாசிமார்கள்தான். ஒருவர் எல்லா படிகளையும் ஏறி முடித்து விட்டார். இன்னொருவர் ஒவ்வொரு படியையும் இனிமேல்தான் ஏற வேண்டும். பாலசந்திரனுடன் அதிகமாக நெருக்கமானது அச்சுதானந்தன்தான். பல விஷயங்களிலும் அவர்களுக்கிடையே ஒரு ஒற்றுமை இருந்தது. இரண்டு பேரும் ஒளிந்து ஓடி வந்தவர்கள். சன்னியாசத்தை மேற்கொண்டு உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற விருப்பம் அவர்கள் இருவருக்கும் இருந்தது.
கெட்ட மனிதர்களின் தொடர்பால்தான் பலரும் வழி தவறிப் போய்விடுகிறார்கள். சூழ்நிலைகளின் ஆக்கிரமிப்பும் அதற்குக் காரணமாக இருக்கும். நல்ல நண்பர்களே சரியான பாதையில் நடக்கச் செய்வார்கள். நல்ல நட்பு மட்டுமே அதற்குத் தேவை. அச்சுதானந்தன் பாலசந்திரனிடம் இந்த விஷயத்தை ஞாபகப்படுத்திக் கொண்டேயிருந்தார். அவர் ஒரு மதச் சொற்பொழிவாளர் என்பதைப் போல் தோன்றியது.
கரையில் ஏற முயற்சிக்க வேண்டும். சேற்றுக்குள் விழுந்திருக்கலாம். தப்பிப்பதற்கான வழிகளை ஆராய வேண்டும். உபாசனை, தியானம், ஆழமான தவம்.
கேள்விப்பட்டிருக்கும் வார்த்தைகள்தான். அதனால் அதில் புதுமை எதையும் பாலசந்திரன் உணரவில்லை.
ஹரித்துவாரில் அவன் முதல் தடவையாகத் தங்குகிறான். வடஇந்தியாவில் பழமையான புண்ணிய ஸ்தலம் அது என்பதைப் பலரும் சொல்லி அவன் கேள்விப்பட்டிருக்கிறான். காசியில் அவன் தங்கியிருக்கிறான்.