ஜலசமாதி - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6352
அது ஒரு பெண்ணின் உடல் என்பதைப் புரிந்து கொள்வதற்கு அப்படியொன்றும் கஷ்டமாக இல்லை. சிவப்பு நிறத்தில் புடவையும் சிவந்த ரவிக்கையும் அவள் அணிந்திருந்தாள். கை நிறைய கண்ணாடி வளையல்கள் இருந்தன. நீரோட்டத்தோடு சேர்ந்து போய்க்கொண்டிருந்த கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருக்கும் அழகி. நதியில் அது விடப்பட்டு அதிக நேரம் ஆகவில்லை. அருகில் இருக்கும் ஏதோவொரு இடத்திலிருந்து அதை விட்டிருக்கிறார்கள். உடல் அழுகிப்போயிருந்தால் மீன்கள் கண்களையும் மூக்கையும் கொத்தித் தின்றிருக்கும். சிறிதும் கெட்டுப்போகாத உடல். முல்லை மலர்கள் சிதறி விடப்பட்டிருந்த கட்டில். ஒரு பெரிய மலர் வளையமும் கட்டிலில் இருந்தது. இறந்து போன பெண் அகால மரணத்தை அடைந்திருப்பாளோ? இல்லா விட்டால் குணப்படுத்த முடியாத நோயில் சிக்குண்டு உடல் பாதிப்படைந்து இறந்திருப்பாளோ? அவளுக்கு உறவினர்களும், நண்பர்களும் இல்லையா? பிள்ளைகள் இல்லையா? தாய், தந்தை இல்லையா? பாலசந்திரனின் மனதில் எழுந்த கேள்விகளுக்குப் பதில் என்ற முறையில் அச்சுதானந்தன் உணர்ச்சியற்ற குரலில் சொன்னார்:
“இந்த மாதிரி விஷயங்கள் இங்கு அசாதாரணமானவை அல்ல. காசியில் இளம் வயதுல இருக்குற விலைமாதர்கள் இறந்தா, பூ பரப்பப்பட்ட கட்டில்ல படுக்க வச்சு கங்கை மாதாவிற்குச் சமர்ப்பணம் செய்கிற சில இன மக்கள் இருக்காங்க. இது ஒரு பிரார்த்தனைதான். எல்லாவற்றையும் மிகுந்த கருணை கொண்டு ஏற்றுக் கொள்கிறது.”
4
அச்சுதானந்தனுக்குத் தெரியாத விஷயங்கள் எதுவுமே இல்லை. இந்த உலகத்தில் ஒரு சன்னியாசி இதையெல்லாம் எப்படி தெரிந்து கொண்டார்? நேரில் பார்த்தும் மற்றவர்கள் சொன்னதைக் கேட்டும் தெரிந்து கொண்ட விஷயங்களாக அவை இருக்கலாம்.
அந்தக் காசி நகரம் முழுவதையும் சுற்றிப் பார்க்க வேண்டுமென்றால், குறைந்தபட்சம் இரண்டு மாதங்களாவது அங்கு தங்கியிருக்க வேண்டும். அப்போது மட்டுமே அங்குள்ள சில விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடியும்.
“சாயங்காலம் ஆன பிறகு இங்கேயிருந்து கிளம்பினா போதும். அதற்கு மத்தியில் பார்த்தே ஆகணும்னு கட்டாயம் இல்லாத பல விஷயங்களை நான் காண்பிக்கிறேன். அது ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும்.” - அச்சுதானந்தன் உற்சாகமான குரலில் சொன்னார்.
தன்னுடைய குழந்தையின் இறந்த உடலை மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டு கங்கை நீரில் மிதக்க விடுகிற ஒரு தாய்… குழந்தைக்கு இரண்டு வயதுக்குக் குறையாத வயது இருக்கும். புத்தாடைகளை அது அணிந்திருக்கிறது. சிவப்பு நிற நூலால் தைக்கப்பட்ட தொப்பி குழந்தையின் தலையில் இருக்கிறது. கழுத்தில் பூமாலை தொங்கிக் கொண்டிருக்கிறது. உடல் முழுவதும் பட்டுத் துணியால் மூடப்பட்டிருக்கிறது. முகம் மட்டும் வெளியே தெரிகிறது. பாசம் செலுத்தி வளர்க்கப்பட்ட செல்ல மகளாக இருக்கலாம்.
கங்கை நதியின் நீரோட்டத்தில் குழந்தையை மிதக்கவிட்டபோது அந்தத் தாய் அழவில்லை. மரத்துப்போன இதயத்துடன் தன்னுடைய குழந்தையை நீண்டநேரம் மார்போடு சேர்த்து இறுக அணைத்துக் கொண்டு என்னவோ ஆழமான சிந்தனையில் மூழ்கியவாறு கடைசியில் கங்கையின் பரந்த நீரோட்டத்தில் தன்னுடைய செல்லக் குழந்தையை எடுத்து மிதக்கவிடும் அந்த இளம் வயது அன்னையின் முகம் மனதை விட்டு நீங்கவே இல்லை.
நன்றாக இந்தி பேசத் தெரிந்த அச்சுதானந்தனுடன் காசியில் செலவழித்த அந்த நாட்கள்...
கோவில்களின், சிவலிங்கங்களின் ஊர்... தேவி, தேவர்களின் உருவங்கள்... காசி மகாராஜாக்கள் வாழ்ந்த அரண்மனை… அரண்மனையைச் சுற்றி உயர்ந்து நிற்கும் மிகப் பெரிய சுவர்... புகழ்பெற்ற மன்னர்களின் பரம்பரை... மன்னர்களின் பல்லக்குகள், தரங்கள், ஆயுதங்கள், விலைமதிப்புள்ள கிரீடங்கள். ஆடை, அணிகலன்கள், புகழின் உச்சியில் வாழ்ந்த மகாராஜாக்களின் கடந்த காலச் செல்வாக்கைப் பறை சாற்றும் மாதிரிகள். மன்னர்கள் வாழ்ந்த அரண்மனை அருங்காட்சியகமாக மாற்றப்பட்டிருக்கிறது. நுழைவுச்சீட்டு வாங்கினால் மட்டுமே உள்ளே நுழைய முடியும். யானைப் படையையும், குதிரைப் படையையும் நடந்து சென்று பார்த்தார்கள். நூறு யானைகள், ஆயிரம் குதிரைகள், பத்தாயிரம் காலாட்படை, முக்கிய தளபதிகள், அமைச்சர்கள், மகாராணிகள், ராணிகள், அவர்களின் பெயர்கள், வரலாற்றில் அவர்கள் வகித்த பதவிகள் - எல்லாவற்றையும் பார்த்தவாறு இரண்டு மணி நேரம் கோட்டைக்குள் சுற்றிய பிறகும் எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியாத வருத்தத்துடன்தான் வெளியே வர முடிந்தது. எத்தனையோ ஆட்சியாளர்கள் காலத்தில் சுழலில் பட்டு மறைந்து போயிருக்கிறார்கள். கடந்த கால நினைவுகள் பாலசந்திரனின் மனதில் இனம் புரியாத ஒரு இனிய அனுபவத்தை உண்டாக்கின. பழைய பெயரில் இனியும் ஏதாவது எழுதினால் என்ன என்று அவன் நினைத்தான். ஒரு எழுத்தாளன் எந்த வேடத்தை அணிந்தாலும் அவனுக்குள் இருக்கும் உண்மையான வேஷம் அவனை விட்டுப் போகவே போகாது என்பது தான் உண்மை.
அன்னபூர்ணேஸ்வரியையும் காசி விசாலாட்சியையும் பார்த்து வணங்க பாலசந்திரன் மறக்கவில்லை.
காசி விஸ்வநாதனின் பிரிய நாயகியான காசி விசாலாட்சி! சுந்தரமூர்த்தியான சாட்சாத் பரமசிவன். பார்வதி, காசி விசாலாட்சி, அன்னபூர்ணேஸ்வரி- எல்லாம் ஒன்றுதான். அர்த்தநாரீஸ்வரனின் சக்தியாகத் திருவிளையாடல் நடத்துகிறாள்!
“ஓம்! நமச்சிவாய!”
நடராஜரின் விக்கிரகத்தைப் பார்த்தபோது தன்னை மறந்து சொன்னான் பாலசந்திரன். மீண்டும் மீண்டும் ஓம்! நமச்சிவாய! ஹர ஹர முத்திரை மஹாதேவாசம்போ ருத்ர மஹாதேவா!
கோவில் தீபாராதனை நடந்து கொண்டிருந்தது. பிரதான கடவுளும் உப கடவுள்களுக்கும் உள்ள கற்பூர ஆராதனை. ‘சக்திஸ்வரூபிணி, ஜகஜ்ஜனனீ... காப்பாத்தணும்! இந்த அனாதையை ஆசீர்வதிக்கணும்... இருக்க இடம் தரணும்...’ -பாலசந்திரன் கைகள் கூப்பித் தொழுதான்.
விஸ்வநாதர் கோவிலோடு சேர்த்து இருக்கும் அன்னபூர்ணேஸ்வரி கோவில் சந்நிதியில் நின்று கொண்டு சங்கராச்சாரியாரால் பாடப்பட்ட அன்னபூர்ணேஸ்வரி ஸ்தோத்திரங்களை அவன் சொன்னான். தந்தி மகாராஜவிக்னேஸ்வரர் கோவிலுக்குச் சென்று கைகள் கூப்பி பாலசந்திரன் நின்றான். புத்தியும் சித்தியும் தந்து ஆசீர்வதிக்க வேண்டும் என்று பிரார்த்தித்தான். சன்னியாசியாகப் போகிற ஒருவனுக்கு எதற்கு சித்தியும் புத்தியும்? பி.கே.பி. என்ற எழுத்தாளன் என்ற கோணத்தில் பார்த்தால் அவனுக்கு அவையெல்லாம் தேவைதான்.
காசி விஸ்வநாதரின் உண்மையான விக்கிரகம் விழுந்து கிடக்கும் கிணற்றுக்குள் அவன் எட்டிப் பார்த்தான்.
தேவி- தேவர்களின் விக்கிரகங்களை வைத்து பூஜை செய்யப்படும் சிறியதும் பெரியதுமான கோவில்கள்... கோவில்களில் குடியிருக்கும் தெய்வங்களைச் சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதற்காக அவற்றின் முன்னால் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் உண்டியல்கள்… வழிபாடு செய்யும்போது உண்டியல்களில் பணத்தைப் போடாமல் நேராகப் பூசாரிகளிடம் கொடுக்கும்படி தூண்டும் ஆட்கள்... சிவ பக்தர்களுக்கும் வைணவ பக்தர்களுக்குமிடையே காணும் சிறு சிறு சண்டைகள்...