ஜலசமாதி - Page 4
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6352
வெறுப்பு தோன்றச் செய்யும் காட்சிகளும் குறைவாக இல்லை. சிதிலமடைந்த மணிமாளிகையின் சாளரங்களில் தொங்க விடப்பட்டிருந்த திரைச் சீலைகளுக்குப் பின்னால் ஏங்கிக் கொண்டிருந்த கண்களை அவன் பார்த்தான். அழகான விதவைகளின் ஏக்கங்கள் தங்கியிருக்கும் இடம் அது என்பதைப் பின்னர்தான் அவன் தெரிந்து கொண்டான். அவன் அதைத் திரும்பப் பார்க்கவில்லை. எதையும் விசாரிக்கவில்லை. அங்கு அவன் சென்றிருப்பதன் நோக்கம் தர்ப்பணம். அங்கு வேறு எந்தச் சிந்தனைக்கும் இடமில்லை.
காசியும் கங்கையும் எக்காலத்திற்கும் புண்ணியஸ்தலம்தான். ஜாதி, மதம் ஆகியவற்றின் ஆக்கிரமிப்பிற்கு மத்தியிலும் நட்பை ஊட்டி வளர்ப்பதற்குத் தேவையான முயற்சிகள் நடந்து கொண்டுதானிருக்கின்றன. ‘தான் இந்து மதத்தைப் பின்பற்றக் கூடிய ஒரு மனிதன்’- பாலசந்திரன் தன் மனதிற்குள் நம்பிக்கையைப் பலமாக்க முயன்றான்.
கற்படிகளில் ஒன்றில் அமர்ந்துகொண்டு அவன் கங்கை நதியையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். இந்துக்களைப் பொறுத்தவரையில் கங்கை என்பது ஒரு நதி மட்டுமல்ல. அது அவர்களின் ஆத்மா. கங்கையில் தாயின் சாயல் இரண்டறக் கலந்திருக்கிறது. கங்கையின் அஸ்தி மட்டும் நீருடன் கலந்து ஓடவில்லை. தன் தாயின் ஆத்மாவையும் கங்கை நீரில் கலந்து ஓடும்படி அவன் செய்தான்.
கங்கை நதிக்கரையில் உட்கார்ந்து கொண்டு தன் தாயை நினைத்து அவன் அழுதான். தன்னையே அறியாமல் அவன் அழுதான். கண்ணிலிருந்து நீர் தாரை தாரையாக வழிந்து கொண்டிருந்தது.
தாயை அவன் கவலைப்படச் செய்யவில்லையா? வேதனைப்பட வைக்கவில்லையா? செய்திருக்கிறான். ஒரு தடவை அல்ல; பல தடவைகள்.
எல்லாவற்றுக்கும் மூலகாரணமாக இருந்தவள் ஒரே ஒருத்திதான். அவள்-முத்துலட்சுமி. அவளுக்கு மிகப்பெரிய அழகை தெய்வம் கொடுத்திருந்தது. அவளுடைய தோற்றத்திலும் வார்த்தைகளிலும் அவன் தன்னையே இழந்து விட்டான். அவள் தந்த சுகத்திற்குப் பின்னால் அவன் பாய்ந்து ஓடிக் கொண்டிருந்தான். அவளுடைய மணம் இல்லாத இரவு நேரங்கள் பயன்ற்ற ஒன்றாக அவனுக்குத் தோன்றியது.
அவளுக்குக் கீழ்ப்படிந்து அவன் நடந்தான்.
“அவளை வெறுமனே விட்டுடுங்க. அவ அவளோட வழியில போகட்டும். நீங்க உங்க மனதை கட்டுப்படுத்தணும். மனதின் கட்டுப்பாட்டை விட்டால், சமநிலை தவறும்!” - அச்சுதானந்தன் அவனைத் தேற்ற முயற்சித்தான்.
“அவளைப் பற்றி நினைக்கிறப்போ பல நேரங்களில் என் சம நிலை தவறிடுது. திடீர்னு நான் நெருப்பைப் போல கொழுந்துவிட்டு எரிய ஆரம்பிச்சிடுறேன். நீங்க என்னை மன்னிக்கணும். நான் எதையும் மறைச்சு வைக்கல. என்னைப் பல தளங்களில் வச்சுப் பார்க்க முயற்சிக்கிறாங்க. வித்தியாசமில்லாத தனித்துவம் கொண்டவன் நான் என்று ஏற்கெனவே நான் என்னைப் பற்றி சொல்லியிருக்கேன்ல? காமத்தை இதுவரை வெற்றிபெற என்னால் முடியல. நான் இப்பவும் முன்பிருந்த அந்த உணர்ச்சிகள் கொண்ட மனிதன்தான். அதில் பெரிய மாற்றங்கள் எதுவும் உண்டாகிவிடவில்லை. காவி ஆடைகள் அணிந்ததால் மட்டும் நான் சன்னியாசி ஆகிவிட்டதாக நம்பி விடல. என்னை நானே சுத்திகரிக்க வேண்டும் என்ற ஒரே விருப்பம்தான் இப்போ எனக்கு இருக்கு. நல்ல மனிதனாக வாழணும். கடந்து போனவற்றை மறக்க முயற்சிக்கணும். அதற்கான சூழ்நிலைகள் அமையுமா?
3
காசி விஸ்வநாதர் கோவிலை அடைந்தபோது பாலசந்திரனின் மனதிற்குள்ளிருந்த எத்தனையோ கபட விஷயங்கள் அங்கிருந்து கிளம்பி ஓடிப் போய் விட்டதைப் போன்ற ஒரு அனுபவம் அவனுக்கு உண்டானது. அஸ்தியை கங்கை நதியில் கரைத்து ஓடவிட்ட பிறகு அவன் கங்கையில் மூழ்கி, துணிதுவட்டி, தெய்வ சந்நிதியில் போய் நின்றான். அஸ்தியையும் ஜாதகத்தையும் ஒரே நேரத்தில் கங்கையில் ஓடச் செய்ய முடியும் என்று அவன் நினைத்திருக்கவில்லை.
அவனுடைய தாய் ஏற்கெனவே கூறியிருந்தாள் - தான் இறந்த பிறகு காசிக்குச் சென்று அஸ்தியைக் கரைக்க வேண்டுமென்று. அப்படி ஒருவேளை முடியாமல் போய்விட்டால், திருன்னாவாய்க்குப் போயாவது அஸ்தியைக் கரைக்காமல் இருக்கக் கூடாது. இறந்தவர்களின் ஆத்மாவிற்கு சாந்தி கிடைக்கவேண்டுமென்றால், கட்டாயம் அந்தச் சடங்கைச் செய்ய வேண்டும். பிள்ளைகளோ, பிள்ளைகளின் பிள்ளைகளோ யார் செய்தாலும் சரிதான்- எத்தனையோ வருடங்களுக்கு முன்பு நல்ல உடல் நிலையுடன் இருந்த காலத்தில் அவனுடைய அன்னை சொன்ன வார்த்தைகள் இவை.
இப்போது அவை ஒவ்வொன்றாக ஞாபகத்தில் வந்து கொண்டிருக்கிறது. கங்கையின் பிரவாகத்தைப் போல.
‘அம்மா, நீங்க அவ்வளவு சீக்கிரமா சாக மாட்டீங்க. இனியும் பல வருடங்கள் நீங்க வாழ்வீங்க. நான் உங்க பக்கத்திலேயே இருப்பேன். உங்களை நல்லா கவனிச்சு, பத்திரமா பார்த்து, நீங்க சொல்றபடியெல்லாம் கேட்டு நடக்குற நல்ல மகனா நான் இருப்பேன். ‘எதுவும் நடக்கவில்லை. வழி தவறிப் போய்விட்டான். அவனுடைய அன்னை அவனை மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்தாள். கல்வி கற்கச் செய்தாள். எழுதுவதற்கான ஆர்வத்தைப் பல வகைகளிலும் உண்டாக்கி உற்சாகப்படுத்தினாள். அப்படிப்பட்ட அன்னையை அவன் மறந்து விட்டான் - ஏதோ ஒரு நடத்தை கெட்டப் பெண்ணுக்காக.
“எல்லாத்துக்கும் காரணம் நேரம்தான். எவ்வளவு எச்சரிக்கையாக நாம இருந்தாலும், நடக்க வேண்டியது நடந்தேதான் தீரும். பல விஷயங்களும் நாம எதிர்பார்க்காமலே வாழ்க்கையில நடக்கும். அதனால எதையும் பெருசா எடுத்துக்கக் கூடாது.”
“அச்சுதானந்தஜி, எல்லாவற்றையும் முழுசா கேட்ட பிறகு எனக்கு ஆறுதல் சொன்னா போதும். ஆறுதல் சொல்றதுக்கும் கோபிக்கிறதுக்கும் எனக்கு எந்தத் தகுதியும் இல்ல. ஒரு மூத்த சகோதரர்ன்ற முறையில நான் சொல்ற வார்த்தைகளை எடுத்துக்கிட்டா போதும். நாம ரெண்டு பேருமே சம அளவுல தூக்கத்தில் இருப்பவர்கள்தான். என் கதைகள் மூலமா நீங்க தெரிஞ்சுக்குவீங்க. இப்போ அதற்கான சந்தர்ப்பம் இல்ல. காசியைப் பற்றித்தானே நான் சொல்லிக்கொண்டிருந்தேன். அதுக்கு இடையில அம்மாவைப் பற்றி நான் நினைக்க ஆரம்பிச்சிட்டேன்.
ஒரு பக்தனைப் பொறுத்தவரையில் காசி ஒரு புண்ணிய நகரம்தான். காசிக்கு யாத்திரை போன என் பெரிய மாமா திரும்பியே வரல. அறுபது வருடங்களுக்கு முன்னாடி நடந்த சம்பவம் அது. அப்போ என் அத்தை கர்ப்பமா இருந்தாங்க. மாமா எப்படியும் திரும்பி வருவார்ன்ற நம்பிக்கையில அவங்க அவருக்காகக் காத்திருந்தாங்க. ஒரு ஆண் குழந்தையை அவங்கப் பெத்தெடுத்தாங்க. தந்தையைப் பார்க்காமலே அந்தப் பையன் வளர்ந்தான், மாதவன் அத்தான். உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக மாதவன் அத்தான் வேலையில இருந்து ஓய்வு எடுத்தாரு. பாதை மாறிப் போறது மாதிரி தோணுச்சுன்னா சொல்லிடுங்க”