ஜலசமாதி - Page 5
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6352
“எல்லா விஷயங்களையும் மனம் திறந்து ஒரு ஆள்கிட்ட சொல்றப்போ தோணுற சுகம் உங்க வார்த்தைகள்ல இருக்கு. அதுனால நீங்க சொல்றதைச் சொல்லுங்க. நான் எல்லாத்தையும் கவனமா கேக்குறேன்.”
“கங்கை நதியில் பாவத்தைக் கழுவி விடுறதுக்காகத்தான் எத்தனையோ ஆயிரம் வருடங்களாக மனிதர்கள் காசியைத் தேடிப் போறாங்கன்னு பொதுவாக எல்லாரும் சொல்லுவாங்கள்ல? அது உண்மையா? அசுத்தத்தைக் கழுவி விடுறதுனால அப்படி எல்லாரும் சொல்றாங்கன்னு எடுத்துக்க வேண்டியதுதான்.
ஒண்ணு மட்டும் உண்மை. காசி விஸ்வநாதரைத் தரிசனம் செய்வதும் கங்கையில் குளிக்கிறதும் மனதிற்குச் சந்தோஷம் அளிக்கக் கூடிய விஷயங்கள்ன்றது என்னவோ உண்மை. மணிகர்ணிகா கட்டிலும், ஹரிச்சந்திரக் கட்டிலும் நான் பார்த்த காட்சிகளை மறக்கவே முடியாது.
வாழ்க்கை முடியப் போகிற நேரத்துல காசிக்குப் போயி இறப்பதை இந்துக்கள் புண்ணியம்னு நினைக்கிறாங்க. சுடுகாட்டில் சில காட்சிகளைப் பார்த்தப்போ வாழ்க்கையின் நிலையாமையைப் பற்றி நான் நினைக்க ஆரம்பிச்சிட்டேன். எதுவுமே நிரந்தரம் இல்ல. எல்லாம் ஒரு பிடி சாம்பல்- அவ்வளவுதான்.
மரணத்தின் கைகளில் பட்டுத் துடித்துக் கொண்டிருக்கும் மனிதர்களைப் பார்த்தப்போ, இதயம் பலமாக அடிக்க ஆரம்பிச்சது. இறந்த உடலைச் சுட்டு சாம்பலாக்க முடியாத ஏழைகள்... சுடுகாட்டிலும் பேரம் பேசல்... எத்தனையோ வருடங்களுக்கு முன்னால் உண்மை மட்டுமே பேசிய ஹரிச்சந்திர மஹாராஜாவிற்கு நேர்ந்த அக்னிப் பரீட்சைகள் இன்னும் அப்படியே தொடர்ந்து கொண்டுதான் இருக்கு. சுடுகாட்டில் எரிப்பதற்காகக் கொண்டு வந்த இறந்த உடல்கள் கங்கை நதிக் கரையில் விறைத்துப் போய் கிடக்கின்றன. சில பிணங்கள் கல்லால் ஆன படிகளில் இறுதிச் சடங்கை எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கிறதை நான் பார்த்தேன். பாதி எரிந்து முடிந்த பிணங்களைச் சுற்றி நாய்கள் காவல் காத்து உட்கார்ந்திருக்கின்றன. செத்துப் போன பிணங்களில் சில பிணங்கள் கங்கை நதியில் எறியப்படுகின்றன. எரிந்து முடிந்தவை, முழுமையாக எரியாதவை எல்லாமே அதுல இருக்கு. பிணத்தை எரிப்பவர்கள் வரிசையாக நின்னுக்கிட்டு இருக்காங்க. வாரிசுகள் இல்லாத பிணங்கள்... வாரிசுகள் பிணம் முழுமையாக எரிந்து முடியிறது வரை அங்கே இருக்குறது இல்ல. அவங்களுக்கு அவசரம். சுடுகாட்டுக் காவலாளிகள்கிட்ட பொறுப்பை ஒப்படைச்சிட்டு அவங்க அந்த இடத்தை விட்டு போயிடுவாங்க. இறந்துபோன மனிதனின் உடலை விட விறகின் விலை அதிகம் என்பது புரிந்தது. செத்துப் போன மனிதனின் உடல்ல இருந்து துணிகள் பிடுங்கப்படுது. சிலர் ஆடம்பரத்தோட பிணங்களைத் துணியால மூடியிருப்பாங்க. ஜரிகை போட்ட வேட்டிகளும் பட்டுத்துணிகளும் அங்கு கழற்றப்படும். உடுத்திய புடவைகள் நீக்கப்பட்ட நிர்வாண உடல்களைப் பார்த்தப்போ மூச்சு விடுவதற்கே கஷ்டமாக இருந்தது. ஆண்களும் பெண்களும் இளம் பெண்களும் இளைஞர்களும் வயதானவர்களும் சிறுவர்களும் எல்லோரும் அந்தப் பிணக் கூட்டத்தில் இருந்தார்கள்.
பணத்திற்காக எவ்வளவு கேவலமான காரியத்தையும் செய்யத் தயங்காத மோசமான மனிதர்கள்... மது அருந்தி நிதானத்தை இழந்த பிரச்சினைகள் பண்ணிக் கொண்டிருக்கும் இடைத்தரகர்கள்… நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்... பாதாள உலக நாயகர்கள்…
செய்யத் தகாத செயல்களைச் செய்யக் கூடாதுன்னு சொன்னா கத்தியைக் காட்டி பயமுறுத்தக் கூடியவர்கள். திருவிழா கொண்டாட்டத்துடன் பிணங்களைச் சுற்றி ஓடித் திரிகிறார்கள். பேய்களைப் போல.
கோணிகளில் சுற்றப்பட்ட இறந்த உடல்கள் எரிக்கப்படாமல் கங்கையில் போடப்படும் செயலை நேரிலேயே பார்க்கக் கூடிய சந்தர்ப்பமும் எனக்குக் கிடைச்சது. சுடுகாட்டில் எரிந்து கொண்டிருந்த பிணங்களில் இருந்து வந்த பயங்கரமான வாசனை... நெருப்பும் புகையும் சேர்ந்து உண்டாக்கும் மூச்சை அடைக்கும் சூழல்... உடல்களிலிருந்து வழிந்து கொண்டிருக்கும் நெய்யைப் போன்றிருக்கும் திரவத்தை நக்கிக் குடிப்பதற்காக நேரம் பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் சுடுகாட்டு நாய்கள்... நிசப்தமாக இறந்த மனிதனின் பிரிவை நினைத்து கவலைப்பட்டு கண்களை மூடிக் கிடப்பவர்களும், அறிமுகமில்லாதவர்களைக் கடித்துக் கிழிக்கத் தயாராக நின்றிருக்கும் மனிதர்களும் அந்தச் சுடுகாட்டில் இருக்கத்தான் செய்தார்கள். காசி விஸ்வநாதா, தினந்தோறும் நடந்து கொண்டிருக்கும் இந்த வருத்தம் தரும் காட்சிகளைப் பார்த்து உன்னுடைய இதயமும் மரத்துப்போய் விட்டதோ?
என்னவெல்லாம் கதைகள் அந்தச் சுடுகாட்டைச் சுற்றி ஒவ்வொரு நாளும் நடக்கின்றன.
அச்சுதானந்த சுவாமி, நேரம் அதிகமாயிடுச்சு. இந்த இரவு நேரத்தின் பயங்கரமான இந்தச் சூழலில் நாம ரெண்டு பேரு மட்டும் இங்கே தனியா இருக்கிறது அவ்வளவு நல்ல விஷயமா எனக்குத் தெரியல. நாம இங்கேயிருந்து கிளம்பலாம்...”
மூன்று இரவுகளிலும், மூன்று பகல்களிலும் அவர்கள் கங்கைக் கரையில் இருந்தார்கள். அந்த மூன்று நாட்களில் அவர்களுக்குப் பல்வேறு வகைப்பட்ட அனுபவங்கள் கிடைத்தன. எப்போதும் குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருக்கும் காசி மகாராஜாவின் பழமையான அரண்மனைக்கு எதிரில் இருக்கும் கற்படிகளில் அவர்கள் இடம் பிடித்தார்கள். அங்கிருந்து எல்லாவற்றையும் அவர்கள் பார்க்கலாம். இயற்கையும் பழமையும் ஒன்றோடொன்று கை கோர்த்து காட்சியளிக்கும் இடம் அது.
நீருக்கு மேலே குப்புறப் படுத்துக் கொண்டு, விளையாடும் போது அணியும் முழு காற்சட்டையை அணிந்து, ஒரு மனிதன் போய்க் கொண்டிருப்பதை அவர்கள் பார்த்தார்கள். நீரோட்டத்தில் குளிக்கும் யாரோ ஒரு வித்தைகள் காட்டும் மனிதன் என்றுதான் முதலில் அவர்கள் நினைத்தார்கள். சற்று அருகில் போய் எட்டிப் பார்த்தார்கள். மூங்கிலில் இறுகக் கட்டப்பட்ட ஒரு இறந்த உடல் அது என்பதை அவர்களால் நம்பவே முடியவில்லை.
“என்ன யோசிக்கிறீங்க?”
“இது ஒரு கொலைச் செயல் மாதிரியே தெரியலையா?”
“இறந்துபோன ஆத்மாவின் ஒரு வேண்டுகோளை உறவினர்கள் நிறைவேற்றுகிறார்கள். இப்படி இங்கு பல பிரார்த்தனைகளும் நிறைவேற்றப்படுகின்றன.” காசியுடன் நீண்ட காலமாக உறவு கொண்டிருக்கும் அச்சுதானந்தன் உணர்ச்சியற்ற குரலில் சொன்னான்.
“இதுதான் ஜலசமாதியா?”
“ஜலசமாதின்றது இது இல்ல. அதற்குச் சில சடங்குகள் இருக்கின்றன. மந்திர தீட்சை கொடுத்தவரின் அனுமதி அதற்கு வேணும். மந்திர தீட்சை தந்த குரு உயிரோடு இல்லைன்னா ஏதாவதொரு ஆசிரமத்தின் மடாதிபதியின் அல்லது சத்குருவின் அனுமதி வேணும்.”
“அது எப்படின்னு கொஞ்சம் விளக்கமா சொல்ல முடியுமா?”
“அதை இன்னொரு சூழ்நிலையில நான் விளக்கிச் சொல்றேன். இப்போ அதற்கான நேரம் வரல.”
முழுக்காற்சட்டை அணிந்த மனிதரின் இறந்த உடல் படுவேகமாக நீரோட்டத்தில் சென்றது. கண் இமைக்கக் கூடிய நேரத்தில் அது மறைந்தும் போனது.
மலரலங்காரம் செய்யப்பட்ட ஒரு சிறு கட்டில் கங்கையின் நீரோட்டத்தில் மிதந்து வருவதை அவர்கள் பார்த்தார்கள். கரையை ஒட்டி அந்தக் கட்டில் வந்து கொண்டிருந்தது.