ஜலசமாதி - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6352
ஸ்ரீவிஸ்வநாதரையும் அன்னபூர்ணாவையும் வணங்கியவாறு தினமும் கங்கையில் மூழ்கிக் குளித்து உடலைச் சுத்தமாக்கி கங்கையின் கரையில் சாந்தமான மனதுடன் வாழ்ந்த அந்த நாட்கள் நினைவில் வந்தன.
ஹரித்துவாரில் இயற்கையான அழகிற்கு முன்னால் காசி பல நேரங்களில் பாவி என்ற பாதாளம் போல தோற்றம் தரும். பூமியில் மனிதர்கள் செய்யும் அனைத்துப் பாவங்களையும் கழுவிச் சுத்தப்படுத்தும் புண்ணிய இடம் அது. சரஸ் நிரப்பப்பட்ட குழாயிலிருந்து புகையை உள்ளுக்குள் நிறுத்தி இழுத்த அந்த நாட்கள்... கஞ்சா மீது கொண்ட ஆர்வம் பாலசந்திரனை விட்டு நீங்கவில்லை. காவி ஆடை அணிந்தவனாக இருந்தாலும் அவ்வப்போது புகைக் குழாயில் மருந்தை நிரப்பி, எரிய வைத்து, புகையை அவன் உள்ளே இழுத்தான். புகைச் சுருள்கள் காற்றில் பரவின. வாசனை கொண்ட கஞ்சாவின் புகையுடன் நினைவுகளின் அலைகளும் சேர்ந்து பயணித்துக் கொண்டிருக்கும். பிறந்து ஐந்து வயதிலிருந்து இருக்கும் நினைவுகள்... கங்கையின் நீரோட்டத்தில் தன்னுடைய கடந்த கால நினைவுகளும் சேர்ந்து ஓடுவதைப்போல அவன் உணர்ந்தான். முதல் தடவையாக காசிக்குப் போன சமயத்தில் நிரந்தரமாக பாலசந்திரன் ஹுக்கா இழுப்பான். வெளிநாடுகளில் செய்யப்பட்ட குழாய்களைத் தன்னுடன் எப்போதும் அவன் வைத்திருப்பான். அந்த நாட்களில் பாலசந்திரன் எதற்கும் பயப்படமாட்டான். முழுமையான சுதந்திர மனிதனாக அவன் இருந்தான்.
முத்துலட்சுமியின் காதலனாக இருந்த அந்த வசந்த காலத்தின் ஞாபகங்கள்... கூறுவதற்குக் காரணங்கள் எதுவும் இல்லாமல் அவள் தன்னை வேண்டாமென்று உதறி விட்டுப்போன நாட்களின் ஏமாற்றங்கள்... தாங்க முடியாத வேதனைகள்... தடுப்பதற்குக் கடிவாளம் இல்லாமல் கஞ்சாவிற்கு அடிமையாகிய காலகட்டம்... அதற்குப் பிறகு சிறிது சிறிதாக அவன் அதிலிருந்து தப்பினான். எப்போதாவது ஒரு முறை மட்டும்... மாதத்தில் ஒரு முறை... பிறகு அதை வாரத்தில் ஒரு முறை என்று சுருக்கினான். முத்துலட்சுமி புகழ்பெற்றவளாக ஆனாள். ஒரு நடிகை என்ற நிலையில் அவள் தென்னிந்தியாவின் சிறந்த நடிகைக்கான விருது, கிரீடம் எல்லாவற்றையும் பெற்றாள். லட்சங்கள் சம்பாதித்தாள். கோடீஸ்வரியாக ஆனாள். தினமும் வறுமையில் வாடிக் கொண்டிருந்த தாயையும் மகளையும் உணவளித்துக் காப்பாற்றிய அவனை அவள் மறந்து விட்டாள். பணத்திற்குப் பின்னால் அவள் போய்விட்டாள். புகழ் என்ற பொன் கிரீடத்தை- அவன் தனக்குள் தனியாக உட்கார்ந்து கேட்டுக்கொண்டான். -இன்று இந்த நாடு முழுவதும் புகழின் உச்சியில் ஜொலித்துக் கொண்டிருக்கும் பழைய முத்துலட்சுமி தன்னுடைய காதலியாக ஒரு காலத்தில் இருந்தாள் என்று சொன்னால் யாராவது அதை நம்புவார்களா? தன்னிடமிருந்த எல்லாவற்றையும் அவளுக்கு அவன் காணிக்கை ஆக்கினான். தாய், தந்தை இருவரின் வார்த்தைகளையும் காதிலேயே அவன் போட்டுக் கொள்ளவில்லை. அவர்களின் பிரார்த்தனைகளைப் பற்றி அவன் கவலையே படவில்லை. அவர்களுக்கு இருந்த ஒரே மகன் அவன்தானே! அவனை நல்ல நிலையில் இருப்பதைப் பார்க்க அவர்கள் ஆசைப்பட்டார்கள்.
பல ஆண்களுடனும் சேர்ந்து நடித்து எல்லோருடனும் சுதந்திரமாகப் பழகிய அவனுடைய முத்துலட்சுமி பத்மவிபூஷன் விருதைப் பெற்றவள். பாராளுமன்றத்தில் அவள் உறுப்பினராக ஆனாள். இதையெல்லாம் சொன்னால் இன்று யாராவது அதை நம்புவார்களா? என்னவோ வாய்க்கு வந்ததையெல்லாம் உளறிக்கொண்டிருக்கும் ஒரு பைத்தியம் பிடித்த காவி ஆடை அணிந்த மனிதன் என்றுதான் அவர்கள் அவனைப் பற்றி நினைப்பார்கள். சகோதரா, யாரிடமும் கூறி நம்பச் செய்ய வேண்டும் என்ற அவசியமெல்லாம் இல்லை. தன்னுடைய முந்தைய வாழ்க்கையின் ஒரு பக்கத்தை எடுத்துக் காட்டினான். அவ்வளவுதான். அதற்கு மேல் கூறுவதற்கு எவ்வளவோ இருக்கின்றன.
அச்சுதானந்தன் அவன் சொன்ன எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டான்.
உண்மை எப்போதும் உண்மையாகவே இருக்கும். ஒவ்வொரு சன்னியாசிக்கும் தங்களின் முந்தைய வாழ்க்கையில் இருந்த பலவும் ஞாபகப்படுத்திப் பார்க்கும்படி இருக்கும். ஒவ்வொரு மனிதனும் எவ்வளவோ கதைகளைக் கூற முடியும். அது ஒன்றும் அப்படிப்பட்ட பெரிய விஷயமல்ல. மரணமடையும்போது என்ன நடக்கும் என்பதைத்தான் பார்க்க வேண்டும். அமைதியாக உட்கார்ந்துகொண்டு அச்சுதானந்தன் சர்வ சாதாரணமான சில விஷயங்களை நோக்கி பாலசந்திரனின் கவனத்தைத் திருப்பினார்.
“மரணமடையிற நேரத்துல என்ன நடக்கும் என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கல.”
“எதுவும் நடக்காது. யாருக்கும் யாரையும் நினைத்துப் பார்க்க அங்கே நேரமில்லை.”
“காசி நகரத்தில் இருந்த உங்களுக்கு அங்கே என்ன காரணத்தால் சாந்தி கிடைக்கவில்லை?”
அச்சுதானந்தனின் கேள்வியிலிருந்து தப்பிக்க வேண்டும்போல் இருந்தது பாலசந்திரனுக்கு.
எனினும் காசி நகரமும் கங்கை நதிக்கரையும் தனக்குள் எப்படியெல்லாம் மாற்றங்களை உண்டாக்கின என்பதை விளக்கிக் கூற பாலசந்திரன் மறக்கவில்லை.
மழை பெய்து கொண்டிருந்த காலத்தில்தான் முதல் முறையாக அவன் காசிக்குப் போயிருந்தான். மழைக் காலமாக இருந்ததால் விடாமல் மழை பெய்த வண்ணம் இருந்தது. கங்கை நதிக் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. ஆர்ப்பரிப்புடன் அது ஓடிக்கொண்டிருந்தது. நீரோட்டத்துடன் ஓடிக்கொண்டிருக்கும் படகுகள், கட்டுமரங்கள்...
காசி விஸ்வநாதர் கோவிலுக்குப் போகும் அகலம் குறைவான பாதைகள் வழியாக அவன் நடந்தான். பாதைகள் முழுவதும் சேறாக இருந்தன. கங்கை நதியின் நீரலைகள் கரையைத் தின்று கொண்டிருந்தன. நீருக்குள்ளிருக்கும் சேற்று மண் அலைகளைக் கொண்டு வந்து விட்டுக் கொண்டிருந்தது. சில இடங்களில் நீர் வற்றி விட்டிருந்தது. எனினும் ஈரமும் சேறும் கலந்து பாயசத்தைப் போல பாதைகளில் பரவிக் கிடந்தது. அதன் வழியாகக் காலில் செருப்பு இல்லாமல் அவன் நடந்தான். நிறைய தர்மச் சத்திரங்கள் நீரால் சூழப்பட்டு காட்சியளித்தன. தெருக்களில் நாய்களும் பசுக்களும் ரோந்து சுற்றிக் கொண்டிருந்தன. தோற்றத்தில் பெரிதாக இருக்கும் பசுக்களை அவற்றின் சொந்தக்காரர்கள் அவிழ்த்து விட்டிருக்கிறார்கள். சேற்றில் சாணக் குவியல்கள் இங்குமங்குமாய் கிடந்தன. அகலம் குறைவான தெருக்கள் வழியாகத் தான் மட்டும் தனியே நடந்து சென்றபோது மூச்சு அடைப்பதைப்போல் அவனுக்கு இருந்தது. ஏதோ ஒரு ஒடுகலான சுரங்கப்பாதை வழியாகப் பத்து நிமிடங்கள் அவனுக்கு நடக்க வேண்டி வந்தது.
பிணம் எரிவதால் உண்டான வாசனை மூக்கிற்குள் நுழைந்து கொண்டிருந்தது. இருட்டும், ஈரமும் கலந்த சூழ்நிலை மூச்சுவிட முடியாமல் செய்வதைப்போல் இருந்தது. யாராவது தன்னை அந்தச் சுரங்கத்திற்குள் கொலை செய்து கங்கை நதிக்குள் எறிந்து விடுவார்களோ என்ற பயம் அவனுக்கு அப்போது உண்டானது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு விஸ்வநாதர் ஆலயத்தை நோக்கி அவன் நடந்தான். இனி கோவில் கோபுரத்தை அடைய தூரம் அப்படியொன்றும் அதிகம் இல்லை. பாதையோரத்தில் கண்ட பல காட்சிகளும் இதயத்தை வருத்தம் கொள்ளச் செய்வதாக இருந்தன.