ஜலசமாதி - Page 13
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6352
சன்னியாசினிகளின், சன்னியாசிகளின் கூட்டம்... பாரதத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஒவ்வொரு நாளும் அங்கு ஏராளமான பேர் வந்து குழுமிய வண்ணம் இருக்கிறார்கள். வெளிநாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் இந்தியாவைச் சேர்ந்த பயணிகளும் பக்தர்களும் வந்து அங்கு ஒன்று கூடுகிறார்கள். புதிது புதிதாக முளைத்துக் கொண்டிருக்கும் எண்ணற்ற லாட்ஜ்கள்... கங்கை நதியைப் பார்த்தவாறு இருக்கும் ஃப்ளாட்டுகள்... ஹோட்டல்கள் கங்கை நதியின் இரு கரைகளிலும் இருக்கும் கட்டிடங்கள்... கங்கை நதியில் இறங்கிக் குளிப்பதற்கான கற்படிகள் ஹரித்துவாரில் இருக்கின்றன. வசித்துக் கொண்டிருக்கும் கட்டிடங்களின் மாடியிலிருந்து கீழ் நோக்கி இறங்கக் கூடிய படிகள் கங்கைக் கரையில் வந்து முடிகின்றன. படிகளில் உட்கார்ந்து கொண்டு முழு ஹரித்துவாரையும் பார்க்கலாம். இங்கும் கங்கையின் தோற்றம் தான். மற்ற எதையும்விட குறிப்பிட்டுக் கூறக் கூடிய விசேஷங்கள்... ஆசிரமங்கள், மடங்கள், தர்மச் சாலைகள், பர்ணக்குடில்கள் காசியில் பார்த்ததைப் போலவே ஹரித்துவாரிலும் இருக்கின்றன.
பழமையான புண்ணிய நகரமான ஹரித்துவாரைப் பற்றியுள்ள வரலாற்றுக் கதைகளை பாலசந்திரன் மனப்பாடமாக்கி வைத்திருந்தான். சில விஷயங்கள் அவனுக்கு ஏற்கெனவே நன்கு தெரியும். அச்சுதானந்தன் எல்லாவற்றையும் அவனுக்கு விளக்கிக் கூறியிருந்தார். கபில முனிவர் வாழ்ந்த இடம் ஹரித்துவார். இங்குதான் கபிலரின் ஆசிரமம் இருந்தது.
சகரபுத்திரர்களைக் கபில முனிவர் தன்னுடைய கோபத்திற்கு இரையாக்கியது அந்த நதிக்கரையில்தான்.
தன்னுடைய வம்சம் மோட்சம் அடைய வேண்டும் என்பதற்காக பகீரதன் தவம் செய்த புண்ணிய புராதன சங்கம பூமி இது.
தன்னுடைய அப்பழுக்கற்ற, ஆழமான தவ வலிமையைக் கொண்டு கங்கை அன்னையை பூமியை நோக்கி வர வைத்த பகீரதன்...
பகீரத முயற்சியின் வியர்வை முத்துக்கள் விழுந்து புனிதமும், செழிப்பும் அடைந்த ஹரித்துவாரின் ஆன்மீக அம்சங்கள் கலந்த வளமையான மண்... பாலசந்திரனின் உடல் தெறித்து விடுவதைப் போல் இருந்தது. ரோமங்கள் சிலிர்த்து நின்றன.
8
“நண்பர்களிடமிருந்து விடை பெற்றுக் கொள்ளும்போது நீங்கள் மனதில் வருத்தப்படக்கூடாது. சமதளத்திலிருந்து பார்க்கும்போது மலைகள் மிகவும் தெளிவாகத் தெரிவதைப் போல, ஆத்மாவிற்கு ஆத்ம சந்தோஷம் கிடைப்பதைத் தவிர, வேறு எந்த நோக்கமும் நட்பில் இல்லாமல் இருக்கட்டும்.” - மிகப் பெரிய கவிஞனான கலீல் ஜிப்ரானின் வார்த்தைகளை பாலசந்திரன் அப்போது மனதில் நினைத்தான். ‘எத்தனையோ தடவைகள் நான் அந்த வரிகளை என்னை மறந்து உச்சரித்திருக்கிறேன். உலகத்தை உற்றுநோக்கும் கூர்மையான பார்வை கொண்ட கவிஞனும், தத்துவஞானியுமான லெபனான் நாட்டின் பொக்கிஷம்!’- பாலசந்திரன் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான்.
அச்சுதானந்தனிடம் பாலசந்திரன் எல்லா விஷயங்களையும் மனம் திறந்து சொன்னான். மனதிலிருந்த சுமைகளையெல்லாம் இறக்கி வைத்துவிட்ட நிம்மதி அப்போது அவனுக்கு உண்டானது. பாலசந்திரனின் கடந்த கால வாழ்க்கை அனுபவங்களைக் கேட்ட அச்சுதானந்தனுக்குப் பெரிய அளவில் வருத்தங்கள் எதுவும் உண்டாகவில்லை. இதெல்லாம் வாழ்க்கையில் சர்வ சாதாரணமாக நடக்கக் கூடியவைதான் என்பது மாதிரி அவர் நடந்து கொண்டார்.
காதலும், அது வேண்டாமென்று உதறிவிட்டு வருவதும் புதிய ஒரு விஷயமொன்றும் இல்லையே!
எனினும், பாலசந்திரனைப் பொறுத்தவரையில் முன்பு நடைபெற்ற சம்பவங்களை அவனால் சிறிதுகூட மறக்க முடியவில்லை என்பதே உண்மை. பி.கே.பி. என்ற புனைப் பெயரில் எழுதிக் கொண்டிருந்தபோதும், பாலசந்திரன் என்ற காதலனாக நடந்து திரிந்த போதும், காவி ஆடை அணிந்து பாலானந்த சுவாமியாக மாறியபோதும் அவனின் உள்ளே பிரகாசித்துக் கொண்டிருந்த ஒரு உருவம் இருக்கவே செய்தது. அந்த உருவம் இப்போதும் அவனைப் பின்தொடர்ந்து கொண்டுதானிருந்தது. “நான் அவளை உயிருக்குயிரா காதலிச்சேன். அவளுக்காக நான் மற்ற எல்லாரையும் மறந்தேன். அப்படி நான் மறந்தவர்கள் கூட்டத்தில் என் தாயும், தந்தையும் கூட இருந்தார்கள். அவங்கக்கிட்ட நான் எப்படி நடக்கணுமோ அப்படி நடக்கலைன்ற குற்ற உணர்வு என்னை எப்பவும் அலட்டிக் கொண்டேயிருக்கு. அவளை நான் மறந்து எவ்வளவோ வருடங்களாச்சு! அதற்குப் பிறகும் என் தாய், தந்தை ரெண்டு பேர்கிட்டயும் நான் நடந்து கொண்டது என்னைப் பாடாய்ப்படுத்திக்கிட்டு இருக்கு”- பாலசந்திரன் சொன்னான்.
“எனக்கு எல்லாம் புரியுது. ஆனா அதைப்பற்றி இப்போ திரும்பத் திரும்ப ஞாபகப்படுத்தி எந்தப் பிரயோசனமும் இல்ல. இருக்குற காலம் வரை நல்ல ஒரு மனிதனாக வாழ முயற்சி பண்ணுறதுதான் சரியான விஷயம். கடந்துபோன நாட்கள்ல இனிமேல் நாம வாழ முடியாதுன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்ல! அதனால கடந்த கால ஞாபகங்களை மனசில இருந்து அறுத்து எறியப் பாருங்க. நிகழ் காலத்தில வாழ நினைங்க. நேற்றுகள் நல்லதும் கெட்டதுமான பல அனுபவங்களை உங்களுக்குத் தந்திருக்கலாம். பொதுவாகவே நல்ல நினைவுகளை யாரும் அந்த அளவிற்கு ஞாபகப்படுத்திப் பார்க்குறது இல்ல. கீறல் உண்டாக்கிய சம்பவங்களைப் பற்றியே அதிகமாக எல்லாரும் மனசுல நினைச்சுக்கிட்டு இருப்பாங்க. அது மனதின் ஒரு தனி குணம். எல்லா பிரிவுகளுமே வேதனைத் தரக்கூடியதுதான். நாம ரெண்டு பேரும் கூட இப்போ பிரியத்தான் போறோம். எதைப் பற்றியும் மனதில் பதற்றம் அடையக் கூடாது. பதறினால், நாம முன்னோக்கிப் போக முடியாது”- அச்சுதானந்தன் கூறினார்.
ஹரித்துவார், ரிஷிகேஷ், பத்ரி, கேதார்நாத், பிருந்தாவனம் ஆகிய இடங்களுக்குப் போகும்போது அறிமுகமாகிக் கொள்ள வேண்டிய சிலரின் பெயர்களைத் தாளில் அவர் எழுதித் தந்தார். அவர்களின் முகவரிகளையும்.
மிகப் பெரிய சக்தி படைத்தவர்கள், துறவிகள் ஆகியோரின் பாதங்கள் பட்டு கிளர்ச்சி அடைந்த புண்ணிய இடம்...
ஸ்ரீ மகாதேவரும், ஸ்ரீ பார்வதிதேவியும் உடம்போடு உடம்பு சேர்ந்திருக்கும் மகா சந்நிதி. எத்தனையோ ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் நடைபெற்ற வரலாற்று சம்பவங்கள்! பதிவுகள்! எல்லாம் கண்களுக்கு முன்னால் தெரிவதைப்போல உணர்ந்தான் பாலசந்திரன். ஹரித்துவாரில் இருக்கும் ஒவ்வொரு சிலைக்குப் பின்னாலும் ஒரு வரலாறு இருக்கவே செய்கிறது. புராண வரலாறு கொண்டு அந்தக் கதைகள் சிறகை விரித்துக் கொண்டு அங்கு பறந்து கொண்டிருந்தன. வர்ணனை கொண்டு அதை விளக்க முடியாத கவலையுடன் பாலசந்திரன் சுற்றிலும் கண்களை ஓட்டினான்.
கங்கலுக்குக் கட்டாயம் போகவேண்டும். அங்குதானே ஜலசமாதி! கடைசியாக அவன் விரும்பும் செயல். அது ஒரு வேளை கொடுமையான ஒரு செயலாக இருக்கலாம். தற்கொலை செய்து கொள்வதற்கு இணையான ஒன்று அது. அதற்கான தைரியத்தை அவன் இப்போதே கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறான். அந்தச் செயல் என்று நிறைவேற்றப்படும் என்பது அவனுக்குத் தெரியாது. எல்லாம் கடவுளின் விருப்பப்படி நடக்கட்டும்.