ஜலசமாதி - Page 15
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6353
நினைப்பதற்கே கஷ்டமான ஒரு விஷயம்தான்! பி.கே.பி. என்ற எழுத்தாளனின் அடையாளம் ஒவ்வொரு நாளும் அழிந்து கொண்டு வரும் விஷயத்தை அவன் கவனிக்காமலே இருந்து விட்டான். எல்லா நேரங்களிலும் மரணத்தைப் பற்றிய சிந்தனைகள் அவனை ஆக்கிரமித்துக் கொண்டே இருந்தன. தன்னுடைய நாட்கள் எண்ணப்பட்டு விட்டன. இனி தான் இருக்கப் போகும் நாட்களே மிகவும் குறைவுதான் என்று அவனுக்கே தோன்றியது.
சாந்தி தேடி புறப்பட்ட இந்தப் புனிதப் பயணத்திற்கு மத்தியில் அவன் பார்த்த இடங்களும் தங்கிய ஊர்களும் அறிமுகமான மனிதர்களும் அவனுடைய நினைவு மண்டலத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து போய்க் கொண்டிருந்தார்கள். நோட்டுப் புத்தகத்தில் அவை ஒவ்வொன்றையும் அந்தந்த நேரத்தில் எழுதி வைத்திருந்தால் பின்னர் பயன்படுத்திக் கொள்ளலாம். அவற்றை முறைப்படி ஒழுங்குபடுத்தி எழுதுவதற்கு இப்போது நேரமில்லை.
ஏராளமான மடங்களில் அவன் ஏறி இறங்கினான். தர்ம சாலைகளுக்குள் நடக்கும் விஷயங்கள் ஒவ்வொன்றையும் நேரில் பார்த்து அவன் தெரிந்து கொண்டான். அனாதை இல்லங்களில் இரவு நேரங்களில் படுத்து உறங்கினான். பகல் நேரங்களில் சந்நியாச கோலத்தில் அலைந்து திரிந்தான். இலவசமாக உணவு கிடைக்கும் இடங்களுக்குப் போய் காத்துக் கிடந்தான். வரிசையில் அதற்காக உட்கார்ந்திருந்தான். கிடைத்ததில் திருப்தி அடைந்து நாட்களைத் தள்ளிக் கொண்டிருந்தான்.
சிறிதும் எதிர்பார்க்காமல் சுவாமி தயானந்த தீர்த்தாவை ஹரித்துவாரில் அவன் சந்தித்தான். அவர் கேரளத்தைச் சேர்ந்தவர். சொந்த ஊர் திருவல்லா. கோட்டயம் மாவட்டத்தில் அது இருந்தது. தயானந்த தீர்த்தாவிற்கும் சொந்தத்தில் ஒரு மடம் இருந்தது. இரக்க குணமும், மனிதர்களை நேசிக்கும் குணத்தையும் கொண்டிருந்த தயானந்த தீர்த்தாவின் நிழலில்தான் அதற்குப் பின்னாலிருந்த அவனுடைய நாட்களை அவன் நகர்த்தினான். அவனைப் பேணியது. வாழ வைத்தது என்று பார்த்தால் தயானந்த தீர்த்தாவின் முதன்மை சீடனான ராம்கிருபாலைத்தான் சொல்ல வேண்டும். விடுதலை இயக்கத்தில் பங்கெடுத்து சிறையில் இருக்க வேண்டி வந்த ராம்கிருபாலின் கதை... உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த ராம்கிருபால் சர்மா... இந்தியும் மலையாளமும் நன்கு தெரிந்த இளைஞன்... வழிமாறி பயணம் செய்து கடைசியில் ஆசிரமத்தில் வந்து சேர்ந்து விட்டான்.
பலவகைப்பட்ட மனிதர்களுடனும் அறிமுகமாகவும், பழகவும் வாய்ப்பு கிடைத்தது தன்னுடைய வாழ்க்கையில் ஒரு மிகப் பெரிய திருப்பம்தான் என்று பாலானந்த சுவாமி மனப்பூர்வமாக நம்பினான்.
முரண்பாடுகளும் ஆச்சரியங்களும் ஒன்று கலந்த சன்னியாசிகளின் வாழ்க்கை முறை... காவி ஆடைகளுக்குள் மறைந்திருக்கும் பயங்கரமான முகங்கள்... அதே காவி ஆடைகளுக்குள்தான் அவன் உண்மையான துறவிகளையும் பார்த்தான். மிகப் பெரிய தியாகிகளைப் பார்த்தான். எல்லாவற்றையும் வேண்டாமென்று தூக்கியெறிந்து விட்டு வந்த துறவிகளுக்கு மத்தியில்தான் அடிக்கவும் கொல்லவும் தயங்காத பயங்கர மனிதர்களையும் அவன் பார்த்தான். காமத்திற்காகவும், பெண்ணுக்காகவும் எந்த அதர்மச் செயலையும் செய்யத் தயங்காதவர்கள்... கடைசியில் குற்றவாளிகளாகப் பிடிக்கப்பட்டு நீண்ட காலம் சிறைத் தண்டனை அனுபவித்த கிரிமினல்கள்...
யாருக்கும் அங்கு அபயம் கிடைக்கிறது. காவி ஆடை அணிந்திருக்கும்போது, வெளியிலிருந்து பார்த்தால் எல்லோரும் ஒரே மாதிரிதான் இருப்பார்கள். ஆனால், சில முகங்கள் அமைதித் தன்மை நிறைந்ததாகவும் ஒளி பொருந்தியதாகவும் இருக்கும். கருணையே வடிவமான அத்தகைய மனிதர்களைக் கண்டால் நம்மையே அறியாமல் நாம் அவர்களைப் பார்த்து வணங்க ஆரம்பித்து விடுவோம். அதே நேரத்தில் வேறு சிலரின் முகத்தில் குரூரமும், ஆணவமும் நிறைந்திருக்கும். அப்படிப்பட்டவர்களைப் பார்க்கும்போதே நமக்கு அடையாளம் தெரிந்துவிடும்.
‘கீர்த்தியை விரும்பக் கூடிய ஒரு சாது தன்னுடைய புலன்களை அடக்கி, மனதை அமைதியானதாகவும், பிரகாசமானதாகவும் வைத்திருக்க வேண்டும்’- தயானந்த தீர்த்தா பாலசந்திரனிடம் எப்போதும் இதை ஞாபகப்படுத்திக் கொண்டேயிருந்தார்.
பரமார்த்த நிகேதன் மடாதிபதி தயானந்த தீர்த்தாவுடன் உண்டான அறிமுகம் பாலசந்திரனை உயர்ந்த சிந்தனைகளை நோக்கி உயர்த்தின. “கீழ் நோக்கிப் போவது என்பது மிகவும் எளிதானது. மேல் நோக்கி உயர்வதுதான் மிகவும் சிரமமானது. உயரங்களிலிருந்து உயரங்களை நோக்கிப் போய்க்கொண்டே இருக்க வேண்டும். அது எந்தத் துறையாக இருந்தாலும் சரிதான். இலக்கியமாக இருந்தாலும் சரிதான்....ஆன்மிகமானாலும் சரிதான்.... மலையின் உச்சியை அடைவதற்கான முயற்சி இருக்க வேண்டும்... அது ஒன்றே இலக்காக இருக்க வேண்டும்...” தயானந்த தீர்த்தா அவனிடம் சொன்னார். அவனுக்குள் அதற்கான வெறியை உண்டாக்கினார்.
வார்த்தைகளில் செயல்களில் பெரிய மனிதர்களின் சொற்களுக்குப் பஞ்சமே இல்லை. ஆனால், நடைமுறை வாழ்க்கையில் இந்த விஷயங்கள் யாரையும் பொதுவாக சிறிதும் பாதிப்பதில்லை. முழுமையாகத் தேடிச் செல்லும் படிகள் ஒவ்வொன்றிலும் ஏறும்போது தடைகள் வந்து சேர்கின்றன.
“உடல் இன்று இல்லாவிட்டாலும் நாளை அழியப்போவதுதான் என்பது தெரிந்தும் தன்னுடைய சொந்த சுகத்திற்காகவும், நிலைபெற்று நிற்க வேண்டும் என்பதற்காகவும் செய்யக் கூடாத செயல்களை மனிதன் செய்கிறான். தவறான வழிகளில் சென்று அடையக் கூடிய எதுவும் தங்கியிருக்கப் போவதில்லை. கடைசியில் அது தண்டனையாக அளிப்பது சந்தோஷமற்ற ஒரு நிலையைத்தான்.”
“குருஜீ, நான் போதைப் பொருட்களுக்கு அடிமையாகிவிட்ட ஒரு காலம் இருந்தது. இப்போ அந்த விஷயத்தை நினைச்சுப் பார்க்குறப்பவே எனக்கு மனசு கஷ்டமா இருக்கு.”
“அதிலிருந்து தப்பித்தாகி விட்டது அல்லவா? அந்த வகையில் நல்லதுதான். யாரும் புனிதமானவர்கள் இல்லை. ஏதாவது புதுமைத் தன்மை இல்லாதவர்கள் இந்த உலகத்தில் மிகவும் அரிதாகவே இருப்பார்கள். முடிந்தவரையில் மனதிலிருக்கும் அழுக்குகளை இல்லாமல் செய்ய வேண்டும். அதில்தான் நம்முடைய வெற்றி இருக்கிறது.”
“எனக்கு உங்களின் வழிகாட்டுதல் தேவைப்படக் கூடிய நேரத்துலதான் இங்கு வந்து சேர்ந்திருக்கிறேன். எனக்குச் சரியாக வழியை நீங்கதான் காட்டணும்.”
“நான் யாருக்கும் அறிவுரை கூறுவதில்லை. அறிவுரை கூறக் கூடியவனின் மேலாடையை அணிந்து கொள்வது என்பது என்னுடைய விருப்பம் அல்ல. எனினும், சில விஷயங்களை நான் கூறுகிறேன். அவ்வளவுதான்.
புலன்களை அடக்கி மனதை அமைதியான ஒரு தளத்திற்கு இட்டுச் செல்ல வேண்டும். அதற்குத்தான் தியானம் செய்ய வேண்டும் என்று கூறுவது. ஒரே இலக்குடன் இருக்கும் தியானத்தால் மனதிற்குள் மண்டிக் கிடக்கும் எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்த முடியும்.”
எத்தனையோ முறை கேட்ட விஷயம்தான், என்றாலும் பாலசந்திரன் மிகவும் கவனம் செலுத்தி எல்லாவற்றையும் கேட்டான்.
கேள்விகளும் பதில்களும் தொடர்ந்து கொண்டேயிருந்தன.
“பேச்சு நின்றவுடன், உனக்குள் இருக்கும் கேள்விகளுடன் இதற்கு முன்பு நீ சந்தித்திராத ஒரு நிலையை அடைந்தாய். மனதில் ஒருமை நிலையை அப்போது நீ அடைந்தாயா?
துறவு அறிவு உனக்குள் வளர்த்தாயா?
பொறாமை என்ற ஒன்று இல்லாமல் போனதா?