ப்ரெய்ஸ் தி லார்ட் - Page 4
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6373
நீ இதை யாருக்கிட்டேயும் சொல்லக்கூடாது. என் தங்கக்குடமல்லவா நீ? சொன்னால் கேவலமான ஒரு விஷயமாயிற்றே இது!” ஆன்ஸி என்னை பலவந்தமாக அழைத்துக்கொண்டு போய் முற்றத்தில் வக்கச்சன் கடையில் அவள் பார்த்து வைத்திருந்த மூன்று பவுன் வைர நெக்லஸை என் கையால் வாங்க வைத்து அணிந்து கொண்டாள். வெள்ளைக்காரியின் உடல் வனப்பைப் பார்க்கப்போய், கையை விட்டுப்போய்விட்டது பத்தாயிரம் ரூபாய்!
3
நான் சொன்னேன்:”டேய் சண்ணி, காதலன்- காதலியாக இருந்தால், என்னன்னு ஒரு கை பார்த்துடலாம். அவுங்க எப்படித்தான் இருக்காங்கன்னு ஒரு முறை பார்த்திடுவோமே! நீ இதுக்கு முன்னாடி காதல் ஜோடியைப் பார்த்திருக்கியா?” சண்ணி சொன்னான்:”இப்பத்தான் பார்க்கிறேன். பிறகு... உன்னையும் ஆன்ஸியையும் பார்த்திருக்கேன்.” அதற்குப் பதிலாக நான் சொன்னேன்:”நானும் ஆன்ஸியும் நண்பர்களாக வாழ்கிற கணவன்- மனைவி. நான் பகல்ல அவள் பக்கத்துலக்கூட இருக்க முடியல. காதலன்- காதலின்னா அப்படியா? ராத்திரியும் பகல்லயும் ஒரே மாதிரி கட்டிப் பிடிச்சுக்கிட்டே இருப்பாங்க.” சண்ணி சொன்னான்:”உண்மையில் காதல்னா என்னடா? இவங்க ரெண்டு பேரும் டில்லியை விட்டு ஓடி வந்தது இந்தக் காதலால்தானே! அப்படின்னா உனக்கு ஆன்ஸிமேல இருக்கிறதும், எனக்கு கொச்சுராணி மேல இருக்கிறதும் என்ன?” நான் சொன்னேன்: “எனக்குத் தெரியும். நமக்கு விதிக்கப்பட்டது இது. அவ்வளவுதான். சின்ன வயசுல என்ன நடந்துச்சுன்னு யோசிச்சுப் பாரு. புல்வெளிகள்லயும் தோட்டத்துப் பக்கங்கள்லயும் புல் அறுக்க வர்ற பொண்ணுங்க பின்னாடி நாம அலைஞ்சி திரிஞ்சதை மறந்திட முடியுமா? அன்னைக்கி நாம காதலிச்சிருந்தா கதையே வேறதான். சண்ணி சொன்னான்:”நீ சொல்றது சரிதாண்டா... போனது போயிடுச்சு.” நான் சொன்னேன்:”அது கிடக்கட்டும். நீ அவங்க விஷயம் என்னன்னு சீக்கிரமா சொல்லு. ஏதாவது பிரச்சினை உள்ள விஷயமான்னு முதல்ல பார்க்கணும்ல! காரணம் ஆன்ஸிகிட்ட இந்த விஷயத்தைச் சொல்லாம அவுங்களை இங்கு ஒளிச்சு வைக்கிறதுன்றது நடக்காத சமாச்சாரம். அதை ஞாபகத்துல வச்சுக்கோ.” அவன் சொன்னான்: "ஆன்ஸிக்கிட்டே நான் எல்லாத்தையும் தெளிவா சொல்லிர்றேன். இதுல எந்தப் பிரச்சினையும் வரப்போறதில்லை.” நான் கூறினேன்:”அப்படின்னா என்ன நடந்ததுன்னு சீக்கிரமாச் சொல்லு. தற்கொலை அது இதுன்னு எதுவும் இல்லைன்னா நான் ஆதரவு தரத்தயார்.” சண்ணி சொன்னான்: “தற்கொலைப் பிரச்சினை இல்லைடா. இது மனசு சம்பந்தமான பிரச்சினை.”
சண்ணி என்னிடம் கூறியதன் சுருக்கம் என்னவென்றால், அந்தப் பையனும் பெண்ணும் டில்லியில் நண்பர்களாகி இருக்கிறார்கள். அவளுக்கு நல்ல வேலை. அவனுக்கும் நல்ல வேலை. அவள் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே டில்லியில். அவளின் தந்தை பொருளாதார ரீதியாக பெரிதாகக் கூறுவதற்கில்லை. சாதாரண நிலையில் இருப்பவர். கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர். பையன் கரிமண்ணு என்ற ஊரைச்சேர்ந்த வசதியான குடும்பம். அவன் பங்கு என்று மட்டும் இருபத்தேழு ஏக்கர் நிலம் இருக்கிறது. இவர்கள் இரண்டு பேரும் எப்படி ஒன்று சேர்ந்தார்கள் என்றால், டில்லியில் மதசம்பந்தமான ஒரு சொற்பொழிவு கூட்டமோ தியான முகாமோ நடந்திருக்கிறது. பையன் ஆரம்பத்திலிருந்தே ஆன்மிக விஷயங்களில் மிகவும் ஈடுபாடு கொண்டவன். இங்கே இருந்து டில்லிக்குப் போவதற்கு முன்பே அவன் போட்டேலுக்கு ரெகுலராக போய்க் கொண்டிருந்தவன். இந்தப் பெண்ணின் தந்தை- அந்த ஆளுக்கு அங்கு நல்ல வேலை- டில்லியில் கெட்ட நண்பர்கள் கூட்டத்தால் பாதிக்கப்பட்ட தன் மகளை நல்லவள் ஆக்க வேண்டும் என்று தியானத்தில் ஈடுபட வைத்திருக்கிறார். டில்லியில் நண்பர்களைச் சேர்த்துக் கொண்டு இங்கிலீஷ், இந்தி என்று பேசிக் கொண்டு ஹோட்டல்களில் ஏறி, பல இடங்களிலும் ஜாலியாகச் சுற்றித்திரிந்த பெண் அவள் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். எது எப்படியோ, தந்தை சொன்னதைக்கேட்டு அவள் தியான வகுப்பிற்கு ஒழுங்காகப் போய்க் கொண்டிருந்தாள் என்பது உண்மை. அங்கு எல்லாரும் அடுத்தடுத்து நின்று ஆண்- பெண் வித்தியாசம் இல்லாமல் பாட்டு பாடுவதும் கை கொடுப்பதுமாய் இருந்தார்கள். இங்குபோல அங்கு ஆண்- பெண் என்று தனித்தனியாகப் பிரித்துப் பார்ப்பதில்லை. எது எப்படியோ, அந்தப் பையன் பெண்ணின் தலைமேல் தன் கையை வைத்துப் பிரார்த்தனை செய்தான். இப்படித்தான் அவர்கள் நெருக்கமானார்கள். பிறகு... யாருக்குத் தெரியும்? ஒன்றாகச் சேர்ந்து சினிமா பார்க்கப் போயிருப்பார்கள். ஓட்டலுக்குள் நுழைந்து காபி குடித்திருப்பார்கள். பூங்காக்களில் போய் அமர்ந்திருப்பார்கள். வானத்தில் இருந்த நட்சத்திரங்களை எண்ணியிருப்பார்கள். மாறி மாறி காதல் கடிதங்கள் எழுதியிருப்பார்கள். தொலைபேசியில் மணிக்கணக்காகப் பேசி இருப்பார்கள். எப்படியோ அவர்கள் காதலன்- காதலியாக வடிவமெடுத்து விட்டார்கள்.”அப்புறம் என்னடா? கர்ப்பமாயாச்சா? இதுதான் பிரச்சினையா? டேய் சண்ணி! இந்தக் கர்ப்பத்தைக் கலைக்க நான்தான் கெடைச்சேனா?” நான் கேட்டதற்கு சண்ணி பதில் சொன்னான்:”அப்ப முன்னாடி நீ கருப்புப் பூனை குட்டி யம்மாவுக்கு இருநூற்றைம்பது ரூபா எண்ணிக் கொடுத்தியே! அது எதுக்கு? அதை மறந்திட்டியா?” நான் சொன்னேன்:”டேய், மெதுவாகப் பேசு! அவள் என்னை ஏமாத்திட்டா. அவளுக்கு கர்ப்பமும் இல்ல ஒண்ணுமில்ல.” சண்ணி சொன்னான்:”சரிடா, நான் நம்புறேன்.” தொடர்ந்து நான் கேட்டேன்:”அது கிடக்கட்டும். நீ வந்த காரியம் என்னன்னு சொல்லு.” அவன் சொன்னான்:”டேய், கர்ப்பமும் இல்ல ஒண்ணும் இல்ல. நான் இதை ஏற்கனவே விசாரிச்சிட்டேன். நடந்த உண்மை என்னன்னா, இவர்களோட உறவு எப்படியோ பையனோட வீட்ல தெரிஞ்சு போச்சு. கரிமண்ணு குடும்பம்தான் வசதியான பெரிய குடும்பாச்சே! இருபத்தேழு ஏக்கரைப் பங்காக வைத்திருக்கும் தங்களோட பையனை அவ்வளவு சாதாரணமா டில்லிக்காரங்களுக்குத் தாரை வார்த்து அவுங்க கொடுத்துடுவாங்களா என்ன? அது மட்டுமல்ல. பெண்ணோட குடும்பம் அவ்வளவு பெரிசா சொல்றமாதிரி இல்ல. அவுங்களுக்குன்னு பெரிய பாரம்பரியமெல்லாம் ஒண்ணும் இல்ல. அவுங்களோட அம்மா வழியில ஏதோ ஜாதிக்குறைச்சல் சங்கதி வேற இருக்கு.ஆனா, பொண்ணப் பார்த்தா இதெல்லாம் பேசவே மாட்டே. நல்ல மணிக்குட்டி மாதிரி இருப்பா.”அப்படியா?” நான் வாய் பிளந்து கேட்டேன். சண்ணி தொடர்ந்தான். “ஆமாடா, அவள ஒரு முறைப் பார்த்துட்டா, கண்ணையே எடுக்க மாட்டே. அவள் ஒரு சாதாரண ஆளோட மகள்னு சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க. வெளுத்து சிவந்த நீண்ட முகம். தலைமுடியை என்னையும் உன்னையும்போல வெட்டியிருக்கா,” “அய்யோடா...” நான் சொன்னேன். சண்ணி தொடர்ந்தான்: அழகுன்னா என்ன அழகுன்றே! மெலிஞ்ச உடம்பு. சரியான உயரம். நல்ல ஷேப். போடறது ஜீன்ஸூம் ஷர்ட்டும். டேய், இங்கிலீஷ் பத்திரிகைகள்ல நாம பார்ப்போமே மாடலிங் அழகிகளோட புகைப்படங்கள்...