ப்ரெய்ஸ் தி லார்ட் - Page 10
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6373
சாம்குட்டி சொன்னான். "நாம ஏதோ சாகசக் காரியம் செய்யப் போறோம்னு நெனைச்சுக்கிட்டு ஆனி தெய்வத்தை வேண்டிக்கிறா அண்ணா,” "ப்ரெய்ஸ் தி லார்ட்.” நான் உடனே சொன்னேன். சினிமாவில் பார்ப்பது மாதிரியே ஆனந்தமான சம்பவம்தான். சாம்குட்டி சொன்னான்: "இப்படியொரு அனுபவம் தந்ததற்கு தெய்வத்திற்கு நன்றி சொல்றா ஆனி. இப்படி ஒரு வாய்ப்பை உண்டாக்கிக் கொடுத்ததற்கு அண்ணனுக்கு அவள் நன்றி சொல்றா”. "ப்ரெய்ஸ் தி லார்ட்” நான் சொன்னேன். அவள் ஒரு போர்வையை எடுத்து தன்னைச் சுற்றி வேஷ்டி மாதிரி சுட்டிக் கொண்ட பிறகுதான் நான் இயல்பான நிலைமைக்கே வந்தேன். இரண்டு பேரையும் அழைத்துக் கொண்டு நான் தேங்காய் பரணை அடைந்தபோது ஆன்ஸியும் ஜோஸும் பாயையும் தலையணையையும் எடுக்கப் போய்க் கொண்டிருந்தார்கள். நான் முதலில் சாம்குட்டியை மேஜைமேல் இருந்த ஸ்டூலில் மிதித்து மேலே ஏறச் செய்தேன். "சாம்குட்டி... ஆனி ஏறுகிறப்போ பிடிச்சுக்கோ.” நான் சொன்னேன். ஆனி போர்வையை மூடியவாறு மேஜைமேல் ஏறி மெதுவாக ஸ்டூலில் ஏறி நின்றாள். ஆனால், அங்கிருந்து அவளால் மேலே பிடித்து ஏற முடியவில்லை. சாம்குட்டி அவளின் கையைப் பிடித்து இழுத்தும், அவளால் மேலே போக முடியவில்லை. சாம்குட்டி கேட்டான்: "அண்ணா, கொஞ்சம் உதவ முடியுமா?” நான் அடுத்த நிமிடம் மேஜைமேல் ஏறி அவளின் இடுப்பை என் இரண்டு கைகளாலும் பிடித்து உயர தூக்கினேன். ஆனால், சாம்குட்டி சரியாகப் பிடிக்கவில்லையோ என்னவோ அவள் என் பக்கமே சாய்ந்து சாய்ந்து வந்தாள். நான் அவளின் பின்பாகத்தைப் பிடித்து உயர்த்தினேன். அவள் பெரிதாகச் சிரித்தவாறு கீழ்நோக்கி நழுவி வர, அவள் சுற்றியிருந்த போர்வை என் தலை மீது வந்து விழுந்தது. என்னால் எதையும் காண முடியவில்லை. "என் கடவுளே... ஆன்ஸி இப்போ வந்திடக் கூடாதே!” என்று மனதிற்குள் வேண்டியவாறு, நான் அவளை இரண்டு கைகளாலும் தூக்கி ஸ்டூல் மேல் ஏறி நின்று, மேலே போட்டேன். என் முகத்தை மூடியிருந்த போர்வையை எடுத்து அவளிடம் கொடுத்தேன். "சாரி அண்ணா...”- அவள் என்னைப் பார்த்துச் சொன்னாள்."நோ ப்ராப்ளம்”. நான் சொன்னேன். தொடர்ந்து ஏதோ ஒரு பெரிய ஆபத்திலிருந்து தப்பித்தது போல மூச்சுவிட முடியாமல் நான் மேஜையிலேயே உட்கார்ந்து விட்டேன். என் மூக்கில் அவளின் மணமும் என் நெஞ்சில் அவளின் மார்பும் என் கைகளுக்குள் அவளின் இடுப்பும் இருந்ததை எண்ணி எண்ணி எனக்கு ஒன்றும் பேசக்கூட முடியவில்லை. அப்போது ஆன்ஸியும் ஜோஸும் அங்கு வந்தார்கள். "நானோ ஆன்ஸியோ ஜோஸோ கூப்பிடாமல் நீங்க இறங்கி வரவே கூடாது.” நான் மேலே பார்த்தவாறு சொன்னேன். "சரி அண்ணா.” ஆனிதான் பதில் சொன்னாள். தொடர்ந்து அவளின் வழக்கமான சிரிப்பு. "சிரி பெண்ணே சிரி. இது நீ சிரிக்கக் கூடிய காலம்.” நான் மனதிற்குள் கூறினேன்.
"ஒரு பாய் இங்கே கொடுங்கக்கா. நான் இந்த வராந்தாவிலேயே படுத்துக்கிறேன்.” ஜோஸ் சொன்னான். ஆன்ஸி பாயை எடுப்பதற்காக உள்ளேபோன நேரத்தில், ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு ஜீப்புகள் கேட்டைக் கடந்து வந்தன. விளக்குகள் எரியவில்லை. "ஜோஸ்... யார்னுபாரு.” நான் சொன்னேன். முற்றத்தில் இருந்த விளக்கைப் போட்ட கையோடு நானும் ஜோஸும் வாசலுக்கு வந்தோம். "அவங்கதான்.” ஜோஸ் மெல்லிய குரலில் சொன்னான். துப்பாக்கி பக்கத்தில் இருப்பது என் ஞாபகத்தில் வந்தது. முன்னால் இருந்த ஜீப்பில் இருந்து மெலிந்துபோன தேகத்தைக் கொண்ட- நரம்பு புடைத்து வெளியே தெரிகிற தோற்றத்தைக் கொண்ட- ஒரு தலையில் துண்டு கட்டிய ஒரு மனிதன் முதலில் இறங்கினான். கழுத்தில் தங்கச்சங்கிலி டாலடித்தது. பெரிய அடர்த்தியில்லாத ஒரு முறுக்கு மீசை. வேஷ்டியை மடித்துக் கட்டி இருந்தான். லேசாக அவன் உடல் ஆடியது. நிச்சயம் அவன்தான் குளப்புரம் வக்கன் என்ற கேடியாக இருக்க வேண்டும் என்ற தீர்மானத்திற்கு நான் வந்தேன். ஜுபிலிபெருநாள் நேரத்தில் ஒரு முறை நான் அவனைப் பார்த்திருக்கிறேன். அவனுக்குப் பின்னால் மூன்று நான்கு கைலி, பனியன் அணிந்த ஆட்கள் இறங்கினார்கள். பின்னால் நின்றிருந்த ஜீப்பில் இருந்து வெளுத்து தடித்த ஒரு வழுக்கைத் தலை பெரியவரும், இரண்டு மூன்று இளைஞர்களும் இறங்கினார்கள். பெரியவர் ஒரு தோளில் கிடந்த துண்டை எடுத்து கழுத்தைச் சுற்றி போட்டார். இளைஞர்களின் முகத்தைப் பார்த்தபோது சாம்குட்டியின் அண்ணன்மார்கள் என்று அங்கு எழுதி ஒட்டியிருந்தது. நாங்கள் அவர்களைப் பார்த்தோம். அவர்கள் எங்களைப் பார்த்தார்கள். எனக்குப் பின்னால் ஆன்ஸி வாசலுக்கு வரும் காலடிச் சத்தம் கேட்டது. இவள் இப்போது எதற்கு இங்கு வருகிறாள் என்று நான் நினைத்தேன். இவள் பேசாமல் உள்ளே இருக்க வேண்டியதுதானே! வக்கன் ஒரு பீடியை எடுத்து உதட்டில் வைத்து புகை விட்டான். பிறகு பின் பக்கமாய் திரும்பி பெரியவரைப் பார்த்தான். பெரியவர் உடனே முன்னால் வேகமாக வந்தார். பிறகு கேட்டார்: "இது முல்லத்தாழத்தெ வீடுதானே?” "ஆமா... “ -நான் சொன்னேன். "உங்க பேர் ஜாய்தானே?” அவர் கேட்டார். "ஆமா...” நான் சொன்னேன். "என்ன விஷயம் இந்த ராத்திரி நேரத்துல?”- என் பயத்தை நான் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. "என்னோட இளைய மகன் சாம்குட்டியைக் கடத்திட்டு வந்து இங்க ஒளிச்சு வச்சிருக்கறதா எனக்குத் தெரியவந்தது. அவனைக் கூப்பிட்டுட்டுப் போகுறதுக்காக நான் வந்தேன்.” - பெரியவர் சொன்னார். "நீங்க சொல்றதைக் கேக்குறப்போ எனக்கே ஆச்சரியமா இருக்கு. உங்க பையனை நான் ஏன் கடத்திட்டு வரணும்? நீங்க யார்னே எனக்குத் தெரியாது. ஆமா... நீங்க யாரு?” நான் கேட்டேன். "நான் கரிமண்ணூர் கடுவாக்குன்னேல் குஞ்ஞுகுட்டி. இவங்க என்னோட மகன்கள்.” சாம்குட்டியின் தந்தை கூறினார். "இவங்கெல்லாம் யாரு?” நான் வக்கனையும், அவனுடன் நின்றிருந்தவர்களையும் காட்டி கேட்டேன். "என்னோட நண்பர்கள்” பெரியவர் சொன்னார்: "இவர் யார்னு தெரியலியே!” வக்கன் பீடியை நீட்டி ஜோஸைக் காட்டி கேட்டான். "என் தம்பி” - நான் சொன்னேன். ஆன்ஸி முற்றத்திற்கு வந்து எனக்குப் பக்கத்தில் நிற்பதை கடைக்கண்ணால் நான் கவனித்தேன். நான் ஒன்றும் பேசவில்லை. என் கவனம் முழுவதும் தேங்காய் பரண்மேல் இருந்தது. தந்தையின் குரலைக் கேட்டு சாம்குட்டி மன்னிப்பு கேட்டுக் கொண்டு இறங்கி வந்துவிட்டால்...? என் கதை அதோடு முடிந்தது.