ப்ரெய்ஸ் தி லார்ட் - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6373
போட்டேல் ஆசிரமத்துக்கு தியானத்திற்கு வந்த வழியிலே இங்கே வந்திருக்காங்க”ன்னு அவக்கிட்டே சொல்லி வச்சேன். சொல்லப் போனால் வீட்டுக்குள்ளே கால் வைச்சதிலே இருந்து ரெண்டுபேரும் ஒரே பாட்டும் பிரார்த்தனையும்தான். பொண்ணுக்கு மலையாளம் தெரியாததுனால பிரச்சினை இல்லை. பையன் தன்னை மறந்து ஏதாவது சொல்லிட்டான்னு வச்சுக்கோ, அவ்வளவுதான். பிரச்சினை பெரிசாயிடும்.” நான் சொன்னேன்: "டேய், சண்ணி... நான் ஒரு சாதாரண விவசாயி. நான் இதுக்கு ஒரு வழி சொல்லட்டா?” "சொல்லு!” சண்ணி சொன்னான். நான் சொன்னேன்: "இவுங்க ரெண்டு பேரையும் ஒரு ரெஜிஸ்டர் ஆஃபீஸுக்குக் கூப்பிட்டுட்டுப் போயி கல்யாணம் செஞ்சு வச்சு நம்ம சர்க்கிள் பாலசந்திரன் சார் கிட்டே போய் நிறுத்து. அவருதான் நம்ம ஆளாச்சே! எந்தப் பிரச்சினையும் உண்டாகாது. முன்னாடியே விஷயத்தைச் சொல்லிட்டாப்போதும்.” சண்ணி சொன்னான்: "அங்கேதான்டா பிரச்சினையே! பையன் பதிவு திருமணத்திற்கு நூற்றுக்கு நூறு எதிரா இருக்கான். அவனைப் பொறுத்தவரை போட்டேல் ஆசிரமத்துல வச்சு கடவுளுக்கு முன்னாடி, அவரோட அருளோடு பாட்டுப் பாடி பிரார்த்தனை செய்து கல்யாணம் பண்ணணும். இது தன்னோட ஆத்மா சம்பந்தப்பட்ட விஷயம்- இப்படித்தான் கட்டாயம் நடக்கணும்ன்றான் பையன்.” நான் சொன்னேன்: "அவனுக்கு ஆத்மாவோட பிரச்சினை, உனக்கு உன்னோட வேலை பிரச்சினை. இதுல எது பெரிது?” சண்ணி ஒன்றும் பதில் பேசவில்லை. சிறிது நேரம் கழித்து அவன் சொன்னான்: "பையன் ஒரு விதத்தில பிரச்சினைக்காரன்தான். அப்பா! அண்ணன்மார்கள் கையில் சிக்கிட்டா அவங்களை எதிர்த்து தன்னால ஒண்ணுமே செய்ய முடியாதுன்னும் சொல்றான் அவன். அதுக்காக அவங்களோட மனசு மாறணும்னு பிரார்த்தனை செய்றான் அவன். டேய் ஜாய், நான் பையன் கிட்டே தனியா இருக்கறப்போ கேட்டேன், "சாம்குட்டி, அப்பா அம்மா கையில நீ அகப்பட்டுட்டேன்னு வச்சுக்கோ, அப்ப அவங்க சொல்றதைக் கேட்டுக்கிட்டு இந்தப் பொண்ணை கைகழுவி விட்டிருவியா”ன்னு. அதுக்கு அவன் என்ன சொன்னான் தெரியுமா? "கை கழுவுறதுன்றது சும்மா ஒரு வார்த்தை அவ்வளவுதான். அண்ணா, இது நாமளே உருவாக்கிக் கொண்ட ஒரு வார்த்தை. நான் ஒருவேளை அப்பாவுக்கும், அண்ணன்மார்களுக்கும் அடிபணிய வேண்டிய நிலை உண்டாச்சுன்னா, அது தெய்வத்தோட விருப்பம்னுதான் எடுத்துக்கணும். ஆனி என்னை விட்டுப் பிரிஞ்சு போறதா இருக்குன்னு வச்சுக்கோங்க. அதுகூட தெய்வத்தோட விருப்பம்னுதான் நாம எடுத்துக்கணும். யாரும் யாரையும் விட்டுப் பிரியறது இல்ல. கை கழுவிவிடறதும் இல்ல. எல்லாம் தெய்வத்தோட செயல்... அவனோட விருப்பம்... அவ்வளவுதான்”னு சொல்றான் அவன்.” நான் சொன்னேன்: "பாவம்டா அந்தப் பொண்ணு, "சண்ணி தொடர்ந்தான்: "பொண்ணோட விஷயத்தை எடுத்துக்கிட்டா அதுவும் ஒரு தமாஷாதான் இருக்கு. நான் அவள்கிட்ட கேட்டதற்கு அவள் சொல்றா, அவளுக்கு கொஞ்சம் கூட திருமணத்துல நம்பிக்கை இல்லையாம். அவள் படிச்ச ஜெ.என்.யூ.வில் யாருமே கல்யாணத்தை நம்புறது இல்லையாம். சாம்குட்டியோட பாட்டும், சாந்தமான குணமும், பணிவும்தான் அவளுக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சாம். பிறகு... இந்த தியானம் வேற. முன்னால ரஜனீஷ் ஆசிரமத்துக்குப் போயி தியானமெல்லாம் செஞ்சிருக்கிறா இவ. டான்ஸும் பாட்டும் அவள் சாதாரணமாகவே டிஸ்கோவில செய்யிறதுதானாம். சொல்லப் போனால், இந்த மாதிரியான விஷயங்கள்ல இவளுக்கு ஈடுபாடு ரொம்ப அதிகமாம். அவள் இதைப்பற்றி என்ன சொல்றா தெரியுமா? இது அவளைப் பொறுத்தவரை "ஆத்மீய விநோத யாத்திரை”யாம். அவள் சொன்னதைக் கேட்டு சாம்குட்டிக்கிட்ட கேட்டேன். "பொண்ணுக்குக் கல்யாணத்தில நம்பிக்கையில்ல. அப்ப நீ என்ன செய்யப்போறே?”ன்னு. அதுக்கு சாம்குட்டி என்ன சொல்றான் தெரியுமா? அவளுக்காக அவன் கடவுள்கிட்ட வேண்டிக்கப் போறானாம். போட்டேல் ஆசிரமத்துக்குப் போறதுனால அவளோட மனசுல மாற்றம் உண்டாயிடும்ன்றான் அவன். அவள் சொல்றா, "அண்ணா,என்னோட மனசை நான் கடவுள் முன்னாடி திறந்து வச்சிருக்கேன். எது வேணும்னாலும் நடக்கட்டும்”னு. அவ்வளவுதான்- "ப்ரெய்ஸ் தி லார்ட்”னு சொல்லிக்கிட்டு சாம்குட்டி எழுந்தோடி அவளோட கையைச் சேர்த்துப்பிடிச்சுக்கிட்டு கண்களை மூடிக்கிட்டு டான்ஸ் ஆட ஆரம்பிச்சிட்டான். இப்படித்தான் காரியம் நடந்துக்கிட்டிருக்கு.” "உனக்கு இது பெரிய பிரச்சினை ஆயிடுச்சே!” நான் சொன்னேன். சண்ணி சொன்னான்: " நீ என்ன செய்யிறன்னா... இங்க ரெண்டு நாளு பையனும் பொண்ணும் இருக்கட்டும். நீயும் ஆன்ஸியும் ரெண்டு பேர்கிட்டேயும் பேசிப்பாருங்க. இதுக்கிடையில நான் போலீஸ் பிடியில மாட்டாமல் இவுங்களை போட்டேல் ஆசிரமத்துல கொண்டு போய் எப்படி விடறதுன்னு பார்க்கிறேன். பேசிக்கிட்டு இருக்கிற நிமிஷத்துல நீயும் ஆன்ஸியும் பொண்ணோட மனசை எப்படியாவது கல்யாணத்தை நோக்கித் திருப்பப் பாருங்க.”
"ஆன்ஸிக்கிட்ட நாம என்ன சொல்றது?” நான் கேட்டேன். சண்ணி சொன்னான்: "உள்ளது எதுவோ அதையே சொல்லிவிட வேண்டியதுதான். டேய், நம்மளைப் போலத்தான்டா பொம்பளைங்களும். அவுங்களும் காதலர்களை சினிமாவில் மட்டும்தான் பார்த்திருப்பாங்க. அவர்கள் நேராக வீட்டுக்குள்ளேயே வர்றாங்கன்னா...? ஆன்ஸியை நான் எப்படியாவது சொல்லி சம்மதிக்க வச்சிர்றேன். ஆனா இதுல ஒரு பிரச்சினை இருக்கு. அதையும் நீ கேட்டுகோ.” "சரி... சொல்லு...” நான் சொன்னேன். சண்ணி சொன்னான்: "கரிமண்ணுக்காரங்க குளப்புரத்தைச் சேர்ந்த வக்கனையும் அவன்கூட வேற ரெண்டு ரவுடிகளையும் இவுங்களைத் தேடி ஏவிவிட்டிருக்காங்க. அதனால நாம ரொம்ப கவனமா இருக்கணும்.” "அடக்கடவுளே!” நான் சொன்னேன். "டேய், சண்ணி... ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கும் போல இருக்கேடா...!” அவன் ஒன்றும் பதில் கூறாமல் ஆன்ஸியைத் தேடி அடுக்களைப் பக்கம் போனான்.
4
மணி பத்து அடிப்பது கேட்டபோது ஆன்ஸி சொன்னான்: "இனி அவுங்க வருவாங்கன்னு தோணல.” நாங்கள் பிரார்த்தனை முடித்து, குழந்தைகளை உறங்க வைத்தோம். சண்ணி காதலர்களை அழைத்து வருவதை எதிர்பார்த்து இருட்டில் திண்ணையில் நாங்கள் அமர்ந்திருந்தோம். முற்றத்தில் இருந்த பூச்செடிகளில் மின்மினி பூச்சிகள் கண்சிமிட்டிக் கொண்டிருந்தன. ஒரு அரை நிலாவின் வெளிச்சம் மணல்மேல் தெரிந்தது. இருந்தாலும், கண்ணில் சந்திரன் தென்படவில்லை. "ஏய்... வராம இருக்க மாட்டாங்க.” நான் சொன்னேன். "என்ன இருந்தாலும் கொஞ்ச நேரம் பார்த்துட்டு நாம தூங்குவோம்... சரி... நாளைக்கு நம்ம பசங்க இவங்க யார்னு கேட்டா நாம என்ன பதில் சொல்றது?” அவள் சொன்னாள்: "டில்லியில இருந்து மத்தச்சனோட சொந்தக்காரங்க இவங்க. கேரளத்தைச் சுற்றிப்பார்க்க வந்திருக்காருங்கன்னு சொல்ல வேண்டியதுதான்.” நான் சொன்னேன்: "இந்த விஷயத்தை முன்கூட்டியே அந்தப் பையன்கிட்டயும் பொண்ணுக்கிட்டயும் சொல்லிடணும். இல்லாட்டின்னா நாம ஒண்ணு சொல்லி அவுங்க வேற ஒண்ணு சொன்னாங்கன்னா... பசங்களுக்கு ஒரே குழப்பமாயிடும்.