ப்ரெய்ஸ் தி லார்ட் - Page 9
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6373
5
ஒரு மோட்டார் சைக்கிளின் ஒலி கேட்டு உறக்கத்தில் இருந்து நான் எழுந்தேன். லேசான நடுக்கத்துடன் எழுந்த நான் தூங்கி விழித்திருந்த ஆன்ஸியிடம் கூறினேன்: "ஆன்ஸி... பிள்ளைங்ககூட போய்ப் படு. நான் போய் யார்னு பாக்குறேன்.”
"வாசலுக்குப் போக வேண்டாம் ஜாய்.” ஆன்ஸி சொன்னாள். நான் துப்பாக்கியை எடுத்து கையில் வைத்துக் கொண்டு ஜன்னலுக்குப் பின்னால் மறைந்து நின்று பார்த்தவாறு கேட்டேன்: "யார் அது?” "நான்தான் ஜாய் அண்ணா, ஜோஸ். சண்ணியோட தம்பி. "மோட்டார் சைக்கிளில் வந்த ஆள் சொன்னான்.
"நீயா...? என்ன ஜோஸ் இந்த நேரத்தில?” என்று கேட்டவாறு கையில் இருந்த துப்பாக்கியை ஒரு ஓரத்தில் வைத்து விட்டு நான் வராந்தாவிற்கு வந்தேன். ஜோஸ் சொன்னான்: "அண்ணன் சொல்லி விட்டாரு. வக்கனும் அவனோட "ஆளுகளும் இந்தப் பக்கம் வந்திருக்கிற மாதிரி ஒரு சந்தேகம் இருக்காம். ஜாய் அண்ணா, நீங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்னு அண்ணன் சொல்லச் சொன்னாரு. டில்லியில் இருந்து வந்த ரெண்டு பேரையும் பத்திரமா பார்த்துக்கச் சொல்லச் சொன்னாரு. என்னை இங்கே அனுப்பிட்டு அண்ணன் சர்க்கிளோட வீட்டுக்குப் போயிருக்காரு. என்னை இங்கேயே அண்ணன் இருக்கச் சொன்னாரு”. நான் சொன்னேன்: "சரி... ஜோஸ், நீ முற்றத்தில் நிற்காம இங்கே வா.” அப்போது மணி இரண்டு அடித்தது. நான் ஆன்ஸியைப் பார்க்கலாம் என்று உள்ளே நடந்தபோது காலில் ஒரு நடுக்கம், உடல் முழுக்க ஒரு தளர்ச்சி. முன்பு மாடத்தக்குன்னில் மரம் இழுக்க வந்த யானை மதம் பிடித்து எனக்கு நேராக ஓடி வந்தபோது, எனக்கு இப்படித்தான் நடுக்கம் உண்டானது. "டேய் ஜாய்... நடுங்குற அளவுக்கு இப்போ என்ன நடந்திருச்சு!” எனக்குள் நான் கூறிக் கொண்டேன். அப்போது என் கையில் தந்தையின் துப்பாக்கி இருந்தது. நான் குழந்தைகளை எழுப்பாமல் ஆன்ஸியை மட்டும் எழுப்பி எனக்கு உடம்பின் நடுக்கத்தைச் சொன்னேன். அவள் சொன்னாள்: "இப்படி தைரியமே இல்லாத ஒரு ஆளு இந்த மாதிரியான ஆபத்தான விஷயங்களுக்கு ஏன் பொறுப்பேத்துக்கணும்? குளப்புரம் வக்கன் என்ன இங்க நுழைஞ்சு எல்லாரையும் கொன்னு தின்னுருவானா? இதென்ன மக்களே வசிக்காத இடமா? நாமளும் காலம் காலமா இங்க வாழ்ந்துக் கிட்டு இருக்கிறவங்கதானே?” நான் சொன்னேன்: "நீ சொல்றது சரிதான். ஆனால், தூங்கிக்கிட்டு இருக்கிற அந்த ஜோடிகளைத் தூக்கிட்டுப் போயிட்டாங்கன்னா, அதற்குப் பிறகு நமக்கு என்ன மரியாதை இருக்கு? அந்தப் பையனுக்கு அடி, உதை கிடைக்கும், பொண்ணோட நிலைமையோ.... சொல்லவே வேண்டாம். பிறகு சண்ணியோட முகத்தை நாம எப்படி பாக்குறது? அவன்கிட்ட நாம என்ன பதில் சொல்றது? அவனோட எவ்வளவு கால லட்சியம் தெரியுமா இந்த பிராஸிக்யூட்டரா ஆகணும்ன்றது! அதனால், நாம் நிச்சயம் ஏதாவது செய்தே ஆகணும். அவுங்க ரெண்டு பேரையும் இப்போதைக்கு அந்தத் தேங்காய் பரண் மேல இருக்க வைப்போம்”. ஆன்ஸி சொன்னாள். "ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் தேங்காய்களை எறக்கிட்டு, பரணைச் சுத்தம் செஞ்சி வச்சிருக்கு. ஆனா, ஏணி பழசா ஆயிருச்சுன்னு, ஆசாரி அதை வெளியல பிரிச்சு போட்டுட்டாரு.” "பரவாயில்ல... ஒரு மேஜைமேல ஸ்டூலைப் போட்டு ஏறினாப் போச்சு...” நான் சொன்னேன்.
ஜோஸ் வராந்தாவில் அமர்ந்து புகைபிடித்துக் கொண்டிருந்தான். ஆன்ஸி சொன்னாள்: "நீங்க போயி அவுங்க ரெண்டு பேரையும் எழுப்புங்க. நானும் ஜோஸும் போய் தேங்காய் பரண்ல ஏறுவதற்கு வசதியா மேஜை போட்டு வைக்கிறோம்”. நான் பையனும் பெண்ணும் படுத்திருந்த அறையை நெருங்கி ஜன்னல் வழியாகப் பார்த்தேன். இரண்டு பேரும் கழுத்து வரை போர்வையால் மூடிக் கொண்டு தங்களை மறந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். பெண் "S” போல சுருண்டு தூங்கிக் கொண்டிருந்தாள். இரண்டு முறை பெயர் சொல்லி அழைத்தவுடன் சாம்குட்டி எழுந்து வந்தான். நான் சொன்னேன்: "சாம்குட்டி, உங்க அப்பா குளப்புரம் வக்கனை உன்னைத் தூக்கிட்டு வர்றதுக்கு இந்தப் பக்க்ம ஏவி விட்டிருக்காரு. ஒருவேளை அவன் கூட உன்னோட அப்பாவும் அண்ணன்மார்களும்கூட வரலாம். உங்க ரெண்டு பேரையும் பத்திரமா ஒளிச்சு வைக்கணும்னு என்கிட்ட சண்ணி சொல்லி இருக்கான். இங்கு எந்தவித பிரச்சினையும் இல்லாம ஒளிஞ்சிக்கிறதுக்கு சரியான இடம் தேங்காய் பரண்தான். தலைமேல இடிச்சிக்கிடாம பாத்துக்கிடனும். அவ்வளவுதான். கொஞ்ச நேரம்தான். அவுங்க வந்துட்டுப் போயிட்டாங்கன்னா, நீங்களும் இறங்கி இங்கே வந்துடலாம். பாயும் தலையணையும் தர்றோம். நீங்க அங்கேயே படுத்தத் தூங்கலாம்.” "அப்பாவும் அண்ணன் மார்களும் வர்றாங்களா அண்ணா? - சாம்குட்டி கேட்டான். "ஒருவேளை வரலாம்.” நான் சொன்னான். மகனைப் பிடித்து வருவதற்கு ஒரு ரவுடியை மட்டும் ஒரு தந்தை அனுப்பி விடுவாரா என்ன? உடனே சாம்குட்டி மேல் நோக்கி பார்த்தவாறு சொன்னான்: "உலகைக் காக்கும் சொர்க்கத்தில் இருக்கும் என் பிதாவே! இந்தப் பானையோட விஷயத்துல எனக்கொரு வெளிச்சத்தை நீதான் காட்டணும்.” துள்ளித் திரியும் ஒரு ஆட்டுக் குட்டியைப்போல இருக்கும் ஒரு இளம் பெண்ணை அவன் பானை என்று சொன்னதைக் கேட்டதும், அவனை அடிக்க வேண்டும் போல் இருந்தது எனக்கு. "ம்... எது எப்படியோ... இந்தப் பானை உனக்குக் கெடைச்சதுக்கு நீ கொடுத்து வச்சிருக்கணும்.” நான் என் மனதிற்குள் கூறினேன். தொடர்ந்து அவனிடம் சொன்னேன்: சீக்கிரம் ஆனியை எழுப்பு. நாம தேங்காய் பரணுக்குப் போவோம்.” அவன் ஆனியைத் தட்டி எழுப்பினான். திடுக்கிட்டு எழுந்த அவள் எங்களையே வெறித்துப் பார்த்தவாறு கட்டிலில் உட்கார்ந்தாள். அவள் குத்துக் காலிட்டு உட்கார்ந்திருந்த முறை, எனக்கு மூச்சை முட்டச் செய்தது. அவள் அணிந்திருந்தது ப்ளாஸ்டிக் பேப்பர் போல உடலின் பாகங்கள் அனைத்தும் வெளியே தெரியும் அளவுக்கு உள்ள ஒரு சிறு ஆடை. அறையில் அதிகம் வெளிச்சம் இல்லை என்றாலும், என்ன காட்சி அது! என் கையில் இருந்த டார்ச் விளக்கை இப்படியும் அப்படியுமாய் ஆட்டிப் பார்க்கலாமா என்று நினைத்தேன். "டும் டும்” என்று என் நெஞ்ச அடித்துக் கொண்டிருந்ததை எங்கே அவர்கள் கேட்டு விடுவார்களோ என்ற அச்சம் எனக்கு. அவன் அவளிடம் விவரத்தைக் கூறிக் கொண்டிருக்கும்போதே அவள் நடந்து போய் விளக்கைப் போட்டாள். நான் அவளையே உற்றுப் பார்த்தேன். அவள் எந்தவித சலனமும் இல்லாமல் சாம்குட்டி கூறியதைக் கேட்டுக் கொண்டிருந்தாள். நான் சாம்குட்டியைப் பார்த்தேன், அவளைப் பார்த்தேன். சுற்றிலும் பார்த்தேன். என் இரண்டு கைகளும் லேசாக நடுங்கின. "ஆன்ஸி இந்த நேரத்தில் இங்கே வந்துவிடக் கூடாதே” என்று மனதிற்குள் நினைத்தேன். இனிமேலும் நம்மால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்ற எல்லைக்கு வந்தவுடன் நானே போய் விளக்கை அணைத்துவிட்டு சொன்னேன்: "விளக்கு வேண்டாம். தேவையில்லாத பிரச்சினை வரும்”. அவள் கைகளைத் தட்டியவாறு துள்ளி குதித்து அந்தப் ப்ளாஸ்டிக் துணியின் கீழே உள்ளதெல்லாம் குலுங்கிற மாதிரி இங்கிலீஷில் பாட்டுப் பாடியவாறே நடனமாடினாள்.