ப்ரெய்ஸ் தி லார்ட் - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6373
இப்படி எல்லாவற்றையும் கவனமாகப் பார்ப்பது! அவள் இனி குழந்தை வேண்டும் என்று கூறட்டும் நான் எப்போதும் தயாராகவே இருக்கிறேன். நான் இதோ இந்த திண்ணையில் தான் உட்கார்ந்திருக்கிறேன். அவள் எப்போது சொன்னாலும் நான் ரெடி. பகல் நேரத்தில் எங்களின் கட்டிலைப் பார்க்கிறபோது என் மனதில் ஒரு ஆசை எழும். என்னவென்றால், இவ்வளவு வருடங்களில் ஒருநாள் கூட நான் தலைகீழாக முயற்சி செய்து பார்த்தும்கூட ஆன்ஸியை என்னால் பகல் நேரத்தில் பிடிக்க முடியவில்லை. கேளுங்கள். இரவில் எந்தவித பிரச்சினையும் இல்லை... எல்லாம் ஓ.கே... ஓ.கே... மற்றொரு விஷயம் மட்டும்... அதாவது குழந்தைகள் விஷயத்தை மட்டும் எப்போதும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுவாள். "குடும்பக் கட்டுப்பாடு விஷயத்தில் நீ கூறுகிறபடி நான் நடக்கட்டுமா ஆன்ஸி”என்று நான் கேட்டால், அவள் "இது கடவுளோட செயல். அப்பாக்கள் இதில் செய்ய என்ன இருக்கு?" என்று பதில் கூறுவாள். இந்தப் பெண்களுக்குத்தான் சில விஷயங்களில் நம்மைவிட என்ன தைரியம்! இரவில் அவளின் ஒரு தெளிவற்ற தோற்றம் எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால், அவள் பகல் நேரத்தில் எப்படி இருப்பாள் என்பதுதான் என் ஒரே சிந்தனை. ஆனால், எங்களின் வீடு கட்டப்பட்டிருக்கும் விதத்தில் பகலில் அடைக்கிற மாதிரி கதவைக்கொண்ட ஒரு அறை இல்லை. ஏதாவது ஒரு வாசல் கதவை அடைப்பது என்பது ஒரு பெரிய பிரச்சினையே. இன்று குழந்தைகள் இரண்டையும் வேலைக்காரியுடன் சினிமா பார்க்க அனுப்பிவிட்டேன். நான் ஆன்ஸியை எப்படியாவது தயார் பண்ணி கட்டிலில் படுக்கவைத்து ஜாலியாக இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த நிமிடத்தில் முற்றத்தில் யாரோ இருமும் சத்தம் கேட்கிறது. அந்தக் கிழக்குப் பக்கம் இருக்கிற வீட்டில் வசிக்கிற ஆசாரிச்சியும் குழந்தைகளும் டி.வி.யில் மலையாளப் படம் பார்க்க வந்திருக்கிறார்கள். காட்டாமல் இருக்க முடியுமா? அவளின் கணவன் ஆசாரி ஆயிற்றே! எப்போது அழைத்தாலும் ஓடி வரக்கூடிய மனிதன் அவன். இந்தக்காலத்தில் அழைத்தால் ஓடி வரக்கூடிய ஆசாரி எங்கு கிடைக்கிறான்? ஆனால்... என்பகல் நேர ஆசை நிறவேறாமலேயே போய்விட்டதே!
2
என்னைப் பொறுத்த வரை டில்லி என்றால், பத்திரிகைகளில் என்ன படித்திருக்கிறேனோ அவ்வளவுதான் அதைப்பற்றித் தெரியும். அங்கு மிகவும் குளிராக இருக்கிறது என்றும் உஷ்ணமாக இருக்கும் என்றும், கிளிண்டனும் கார்ப்பசேவும் வருகிறார்கள் என்றும் பத்திரிகைகளில் படித்திருக்கிறேன். பிறகு... குடியரசு தினத்தன்று நடக்கும் அணிவகுப்பையும் வண்ணக் கோலாகலங்களையும் டி.வி.யில் பார்த்திருக்கிறேன். அதைப் பார்த்துப் பார்த்தே வெறுப்பாகிவிட்டது. இவ்வளவு கோலாகலங்கள் டில்லியில் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் எங்களின் வீட்டில் உதவி கேட்டுவரக் கூடியவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டிருக்கிறதே தவிர, குறைந்ததாகக் காணோம். இந்த டில்லிக்காரர்களின் பந்தாவான இந்திப் பேச்சைக் கேட்கிறபோது பேசாமல் டி.வி.யை ஆஃப் செய்துவிட்டு வராந்தராவில் போய் உட்கார்ந்து விடுவேன். அவன் ஒய்யாரமாக இந்தி பேசுவதைக் கேட்டு இங்குள்ள ஏழைகளுக்கு வயிறு நிரம்பிவிடுமா என்ன? இருந்தாலும், ஆன்ஸிக்கும் குழந்தைகளுக்கும் அது ஒரு பிரச்சினை இல்லை. அவர்கள் அதை எல்லாம் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அந்த டில்லியில் இருந்து இந்த இடத்திற்கு- மூலையில் கிடக்கும் இந்த இடத்திற்கு ஒரு பிரச்சினை தேடிப்பிடித்து வருகிறது என்றால் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். நமது வக்கீல் சண்ணிதான் என்னிடம் தொலைபேசி மூலம் கூறினான், "ஜாய் ஒரு சின்ன பிரச்சினை. நீ ஒரு உதவி செய்யணும். நான் அங்கே வர்றேன்” என்று. நான் வரச்சொன்னேன். நான் இங்குதான் வெறுமனே உட்கார்ந்திருந்தேன். நான் உள்ளே அழைத்து சொன்னேன், "ஆன்ஸி, நம்ப வக்கீல் சார் வர்றார்" என்று. "இப்ப காபியோ வேற ஏதாவதோ ரெடி பண்ணு. அன்னைக்கு உங்க அம்மா கொடுத்துவிட்ட அச்சப்பம் இருக்குல்ல..." என்றேன். அதற்கு ஆன்ஸி, "அன்னைக்கு அச்சப்பம் நல்லாவே இல்லைன்னீங்க. இன்னைக்கு தேவைப் படுதாக்கும்" என்றாள். "சரி... தெரியாம சொல்லிவிட்டேன். போதுமா? " என்றேன் நான். தேவையில்லாமல் எதற்கு பெண்ணுடன் சண்டைபோட வேண்டும்? அவர்களை மட்டும் சந்தோஷப்படுத்தி வைத்திருந்தால் எந்தவித குழப்பமும் உண்டாகவே செய்யாது.
சிறிது நேரத்தில் சண்ணி வந்தான். அவன் எல்லா வக்கீல்களையும் போல எந்த விஷயத்தையும் அளந்து, எடைபோட்டு, அலசிப் பார்த்து பேசுவானே தவிர, உண்மையில் அவன் மிகமிக நல்லவன். பிறகு... அவனுக்கு கேரளா காங்கிரஸின் தொந்தரவு கொஞ்சம் இருக்கிறது.
எப்படியோ அவன் அந்தக் கட்சியில் போய் சிக்கிக் கொண்டான். நான் அதை எந்தக் காலத்திலும் பெரிய ஒரு விஷயமாகவே எடுத்துக் கொள்வதில்லை. நானும் அவனும் முன்பு ஒன்றாகச் சேர்ந்து எத்தனை முறை ஆசை தீர குளித்திருக்கிறோம்! படகோட்டி மகிழ்ந்திருக்கிறோம்! ஆற்றில் வெளுத்த சலவை செய்யும் பெண்களை வலை வீசித் தேடி இருக்கிறோம். ஓ... நல்ல வெளுத்த துணியின் பிரகாசம் இருந்தது தேவகியின் வெள்ளை வெளேர் சிரிப்புக்கு. நாங்கள் சிறிது கண்ஜாடை காட்டிவிட்டால் போதும், வேறொன்றும் நடக்காது. சிறிது நேரத்திற்கு துணி துவைக்கும் சப்தம் கேட்காது. அவ்வளவுதான். தேவகி உடலில் எப்போதும் பார் சோப்பின் வாசனை வெளிப்பட்டுக் கொண்டிருக்கும். ஒருநாள் பில்லாணிக் காட்டுக்குப் பின்னால் நாங்கள் விரித்த துணியில் அமர்ந்திருந்தபோது தேவகி சண்ணியிடம் கூறினாள், "நான் இப்போது துவைத்துக் கொண்டிருந்தது உங்களோட வேஷ்டிதான். சரியான நேரத்துல நீங்க வர்றீங்க!" உடனே சண்ணி சொன்னான்: "அப்படின்னா நீ இங்க இருக்க வேண்டாம். உடனே போ. நாளைக்கு நான் ஒரு கல்யாணத்துக்குப் போகணும். அதுக்குக் கட்டாயம் இந்த வேஷ்டி வேணும். போய் உடனே இதைத் துவைச்சு ரெடி பண்ணு" அவன் வக்கீலாக ஆனதில் ஆச்சரியப்பட ஏதாவது இருக்கிறதா என்ன? எப்படியோ அவன் கேரளா காங்கிரஸில் போய் மாட்டிக் கொண்டான். அதுதான் வருத்தப்பட வேண்டிய விஷயம். என்னை அந்தக் கட்சிக்காரர்களால் பிடிக்க முடியவில்லை. மாணி சார் என்னதான் செய்யட்டும். என் தந்தை வாக்களித்த காங்கிரஸை விட்டு விலகவே மாட்டேன். எந்தக் காலத்திலும் மாற மாட்டேன். யார் என்ன சொன்னாலும் இந்தக் காங்கிரஸ் கட்சிக்கென்று ஒரு பாரம்பரியம் இருக்கிறது. எல்லா பாரம்பரியத்திலும் குற்றச்சாட்டுகள் இருக்கத்தானே செய்யும் என்று மனதைச் சமாதானப்படுத்திக் கொள்வதே சரி. சண்ணி அவனின் மாருதியை முற்றத்தில் இருக்கிற காற்றாடி மரத்திற்குக் கீழே நிறுத்திவிட்டு முகத்தில் ஒரு கம்பீரத்தை வரவழைத்துக் கொண்டு நாற்காலியில் வந்து அமர்ந்தான்.