ப்ரெய்ஸ் தி லார்ட்
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6373
எனக்கு இப்படி உட்கார்ந்திருப்பதுதான் மிகவும் பிடித்தமான விஷயம்; வராந்தாவில் நாற்காலியை போட்டுக் கொண்டு முற்றத்தைப் பார்த்தவாறு உட்கார்ந்திருப்பது. வேலை செய்பவர்கள் வருவார்கள்- போவார்கள். சில நேரங்களில் அடுக்களையில் இருந்தவாறு ஆன்ஸி ஏதாவது கேட்பாள். முற்றத்தில் இருக்கிற களத்தில் மரவள்ளிக் கிழங்கும் நெல்லும் ஜாதிக்காயும் காய்ந்து கொண்டிருக்கின்றன.
இங்கிருந்து பார்த்தால் மிளகும் ரப்பரும் தென்னையும் கொக்கோவும் யாரும் ஒன்றும் சொல்லாமலே மகிழ்ச்சியாக வளர்ந்து கொண்டிருப்பது தெரியும். சில நேரங்களில் வரி வசூலிப்பவர்கள் யாராவது வருவார்கள். சில நேரங்களில் சர்ச் ஃபாதர் நடந்து போகின்ற வழியில் கொஞ்ச நேரம் வந்து அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார். இடையில் திருமண விஷயமாக கூப்பிடுவதற்கோ, முக்கிய நிகழ்ச்சி அது இது என்று அழைப்பதற்கோ, சொந்தக்காரர்களோ, நண்பர்களோ காரில் வருவார்கள். பிறகு... எனக்கு மதியம் சாப்பிடுவதற்கு முன்பு கொஞ்சம் மது அருந்த வேண்டும். அதை ஆன்ஸி மேஜை அருகில் மறைத்து வைத்திருப்பாள். மாலையில் சப்பாத்தி சாப்பிடுவதற்கு முன்பு இரண்டு பெக் அடிக்க வேண்டும். அதை பிரார்த்தனை முடிந்தபிறகு நானே அலமாரியைத் திறந்து எடுத்துக் கொள்வேன். புகை பிடிப்பதை என்றோ நான் நிறுத்திவிட்டேன். ஆன்ஸிக்கு புகை வாசனை என்றாலே கொஞ்சமும் பிடிக்காததே காரணம். நான் இப்படித்தான் வராந்தாவில் உட்கார்ந்திருப்பேன். முற்றத்தில் மழை பெய்து கொண்டிருக்கிறது. வெயில் வரப்பார்க்கிறது. கோழி ஓடுகிறது. குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இடையில் யாருடைய பசுவோ கயிற்றை அறுத்துக்கொண்டு ஓடி வருகிறது. நாய்கள் இரண்டு ஒன்று சேர்ந்து ஆனந்தத்தில் திளைத்துக் கொண்டிருக்கின்றன. பூச்செடிகள் காற்றில் ஆடிக்கொண்டிருக்கின்றன. எனக்கு இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருப்பதில் மிகமிக திருப்தி. எங்குமே போக வேண்டாம். என் இந்த முப்பத்து ஐந்து வயதில் நான் இன்னொரு வீட்டில்- நல்ல ஞாபகத்தோடு கூறுவது என்றால்- இரவு நேரத்தில் தங்கியதில்லை. சாயங்காலம் வந்துவிட்டால் எனக்கு திண்ணையில் வந்து உட்கார்ந்து விட வேண்டும். சிறு பிள்ளையாய் இருந்தபோது அம்மா இருந்த வீட்டில் படுத்திருக்கிறேன். பிறகு ஆன்ஸியின் வீட்டில் ஏதாவது கல்யாணத்திற்கோ சவ அடக்கத்திற்கோ கால் நாளோ அரை நாளோ போய் படுத்திருக்கிறேன். எனக்கு இந்த திண்ணையும் முற்றமும் போதும். நான் குழந்தைகளைப் பள்ளியில் விடுவதற்காக அந்த மஹேந்திராவை எடுத்துக்கொண்டு போவேன். மாலையில் அவர்கள் பஸ்ஸில் வந்தால் போதும் என்று கூறி இருக்கிறேன். குழந்தைகள் சிறுவயதாக இருக்கிறபோதே இப்படி காரில் மட்டுமே போய் படிக்கக்கூடாது. ஞாயிற்றுக்கிழமை சர்ச்சுக்குப் போவதற்காக மட்டுமே நான் அந்த லேண்ட் மாஸ்டரை எடுப்பேன். என் அருமை தந்தையார் ஆரம்பத்தில் வாங்கிய கார் அது. அதை வாங்கி எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போதும் அதன்மீது ஒரு சிறு கீறலாவது இருக்க வேண்டுமே! என்ஜின் ஓடுவதையே காதைத் தீட்டிக்கொண்டு கேட்டால்தான் தெரியும். என் வயதுதான் இந்த வண்டிக்கும். இதுவரை தேவையில்லாத ஒரு சப்தம் இந்த என்ஜினில் கேட்டிருந்தால்தானே! அதிகாலையில் நான் வெட்டுக்காரர்களுடன் ரப்பர் தோட்டத்திற்குள் நுழைவேன். பிறகு தோட்டத்தில் வேலை செய்பவர்கள் வந்த பிறகே அந்த இடத்தைவிட்டு நான் அகலுவேன். அதற்குப்பிறகு வெயில் நேரத்தில் நான் இன்னொரு முறை செல்வேன். ரப்பர் மரங்களிலிருந்து பால் இறக்குகிற நேரத்தில் பெரும்பாலும் நான் போய்ப் பார்ப்பேன். நாம் இருக்க வேண்டும் என்ற அவசியம்கூட இல்லை. எல்லாம் அதுவாகவே ஒழுங்காக நடக்கும். நாம் ஒரு வழியை மட்டுமே காட்டிவிட்டால் போதும். தேவை இல்லாமல் ஓடித்திரிய வேண்டும் என்ற கட்டாயம் எல்லாம் கிடையாது. நமக்கு பயந்தா செடியும் மரமும் கிழங்கும் வளர்கின்றன. ரப்பர் மரம் பால் தருகிறது? அவை என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து கொண்டிருக்கும். நாம் தொந்தரவு செய்யாமல், அவற்றை சுதந்திரமாக விட்டாலே போதும்.
ஆனால், போன வாரம் அந்த ஒருநாள் இரவில் நடைபெற்ற நிகழ்ச்சியை என்னால் இப்போதுகூட நம்ப முடியவில்லை. இந்த நான்தானா அந்த நான்? ஏதோ ஒருவித பாதிப்பை அந்த நிகழ்ச்சி என்னிடம் உண்டாக்கி விட்டிருப்பது மட்டும் உண்மை. அதற்காக என் மனதில் வருத்தமெல்லாம் கிடையாது. வருத்தப்பட என்ன இருக்கிறது? அதைப்போல ஒரு நிகழ்ச்சி எப்போது வேண்டுமானாலும் நாம் விருப்பப்பட்டால்கூட நடக்குமா? ஒரு கணக்கில் சொல்வதாக இருந்தால் இப்போது இந்த முற்றத்தில் வெளுத்த மணலைப் பார்த்தவாறு உட்கார்ந்து அந்த நிகழ்ச்சியை நினைத்துப் பார்க்கிறபோது சிரிப்புத்தான் வருகிறது. இன்று காலையில் ஆன்ஸி கேட்டே விட்டாள்; "ஜாய், என்ன இப்படி தனியா உட்கார்ந்து சிரிச்சுக்கிட்டு இருக்கீங்க? ஏதாவது கனவு கண்டீங்களா என்ன? கண்ணைத் திறந்து வச்சுக்கிட்டே சிரிக்கிறீங்களே!”என்று, நான் சொன்னேன்: "ஒண்ணுமில்லடி ஆன்ஸி... நான் இந்த முற்றத்துல இருக்கிற மணலோட வெண்மையைப் பார்த்து சிரிச்சேன்”என்று. அவள் உடனே ஓடி வந்து குனிந்து என் முகத்தை முகர்ந்து பார்த்தாள். காலையில் அவளுக்குத் தெரியாமலே குப்பியை எடுத்துக் குடித்திருப்பேனோ என்ற சந்தேகம்தான் அவள் என்னை முகர்ந்து பார்த்ததற்கான காரணம். ஆன்ஸியின் முகத்தில் குட்டிக்குராவின் அருமையான வாசனை. நான் ஒரு கையை அவளின் பின் பக்கத்தில் நீட்டி அவளின் வசீகரமான உட்காரும் பகுதியைப் பிடித்து "பாம்... பாம்...”என்று அமுக்கினேன். அவள் அடுக்களையை நோக்கி ஓடினாள். இதுவல்லவா குடும்ப வாழ்க்கையின் சுகம் என்பது. இந்த உலகம் முழுவதையும் சுற்றிப்பார்க்க வேண்டும் என்பதோ, இப்போது இருப்பதைவிட மிக அதிகமாக சொத்து சம்பாதிக்க வேண்டும் என்ற ஆவலோ என்னிடம் கிடையாது. இருக்கும் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்க நான் ஒன்றுமே பயப்படத் தேவையில்லை. அதற்கு வேண்டிய பணத்தை இந்தத் தோட்டமே கொடுக்கும். அவளுக்கு இப்போது பத்து வயதுதான் நடக்கிறது. அவளுக்கு இளைய பையனுக்கு நடப்பது எட்டு வயது. அவனுக்குத்தானே இந்தத் தோட்டமும், இந்த வீடும், தெய்வம் தந்த எல்லா பொருட்களும். இனியும் ஒன்றோ இரண்டோ குழந்தைகள் இருந்தாலும் எனக்கொன்றும் பிரச்சினை இல்லை. ஆனால் ஆன்ஸிக்கு இந்த விஷயத்தில் கொஞ்சம் விருப்பமில்லைதான். சரி... வேண்டாம் என்றால் வேண்டாம். ஒரு விதத்தில் சிந்தித்துப் பார்த்தால் அவள்தானே இந்தக் குழந்தைகளை பத்து மாதங்கள் சுமப்பதும் பிறகு தோளில்போட்டு, தொட்டிலில் ஆட்டி, பால் குடிக்கவைத்து, உறங்கிக் கீழே விழுந்து விடாமல் பார்த்து...